பெண்ணால் முடியும்!

செப்டம்பர் 16-30,2021

வறுமையை வென்று பதக்கம்!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவைப் பெருமைப்படுத்திய பதக்க மங்கை லவ்லினா போர்கோஹைன். குத்துச் சண்டைப் பிரிவில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட அனைத்து ஆடவர், பெண்களில் லல்லினா மட்டுமே 2020 ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றுள்ளார்.

“நான் வீட்டில் கடைக்குட்டி. எனக்கு இரண்டு தமக்கைகள். அப்பா ஒரு தேநீர்க் கடையில் வேலை பார்த்து வந்தார். அப்பாவின் மாத வருமானம் 2,500 மட்டுமே. அதை வைத்துக் கொண்டு 5 உயிர்கள் பிழைக்க வேண்டும். பிறந்த மூவரும் பெண்களாகிப் போனதால் தற்காப்புக் கலை படிக்க வேண்டும் என்பது அம்மாவின் முடிவாக இருந்தது. அதற்கான பயிற்சிகளைப் பெற்றோம்.

அசாம் மாநிலத்தில் கோலாகாட் மாவட்டத்தில் ‘பாரோ முகியா’. பள்ளியில் படிக்கும்போதே நான் தற்காப்புக் கலைகள் கற்றேன். சகோதரிகளும் கிக் பாக்சிங் கற்றார்கள். ஆனால், பாதியில் நிறுத்திவிட்டார்கள். நான் கிக் பாக்சிங் கற்று பிறகு குத்துச் சண்டைக்கு மாறினேன். நான் பள்ளியில் மாணவர் மாணவியரைக் காட்டிலும் உயரமாக இருப்பேன். அதனால், உடற்பயிற்சி ஆசிரியர்கள் என்னை விளையாட்டு வீராங்கனையாக மாற ஊக்கம் அளித்தார்கள். பெற்றோர் எங்களுக்கு முழு சுதந்திரம் அளித்திருந்தார்கள். ஜீன்ஸ் போட, தலைமுடியை கிராப் செய்துகொள்ள, சைக்கிள் ஓட்ட அனுமதித்தார்கள்.

20 வயதில் வியட்நாமில் நடந்த ஆசிய குத்துச் சண்டைப் போட்டிகளில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் பெற்றேன். 21ஆவது வயதில் 2018 காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொள்ளத் தேர்வானேன். 2018இல் இந்தியாவில் நடந்த சர்வதேச தர குத்துச் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்தது. சர்வதேசப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பலவற்றை பெற்றுள்ளேன். 2020 ஆகஸ்ட்டில் எனக்கு அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் மூன்று ஆண்டுகளில் பாரீஸில் அடுத்த ஒலிம்பிக் 2024இல் நடக்கும். அதில் பதக்கத்தைத் தங்கமாக மாற்ற கடுமையாக உழைப்பேன்’’ என்கிறார் லவ்லினா.


 

இளம் வயதில் விமானம் இயக்கும் பெண்!

விமானத்தை இயக்கும் பணியானது பலருக்கும் எட்டாக் கனவுதான். அவர்களில் ஒருவரான சோனியா, கனவைத் துரத்திப் பிடித்து, தமிழ்நாட்டில் இளம் வயதிலேயே பயணிகள் விமானத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். கமாண்டர் (கேப்டன்) பொறுப்பில் கலக்கும் சோனியா, சென்னையைச் சேர்ந்தவர். இந்தச் சாதனைக்கான பாதையைப் பற்றி அவர் கூறுகையில்,

“சென்னை ஏர்போர்ட்டில் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் கோர்ஸ் படித்தேன். ரேபரேலியில் பி.எஸ்ஸி ஏவியேஷன் கோர்ஸ் படித்தபோது, கமர்ஷியல் விமானங்களை இயக்குவதற்கான எல்லாப் பயிற்சிகளையும் பெற்றேன். சமூகத்தில் பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால், என் வீட்டில் எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்துதான் வளர்த்தார்கள். 2006இல் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைக்கவே, சென்னைத் தலைமையிடத்தைத் தேர்வு செய்தேன்.’’

இந்தத் துறையில், உயர் பொறுப்பில் எல்லாம் ஆண்கள்தான் அதிகம் இருக்காங்க. கோ-பைலட்டா இருக்கும்போதே, பைலட்டுடன் இணைந்து விமானம் ஓட்ட வேண்டும்.

வெளிநாடுகளுக்கான விமானங்களைத்தான் அதிகம் ஓட்டியிருக்கிறேன். விமான நிலைய ஓடுபாதையில் இருந்து கிளம்பியதும், சென்றடைய வேண்டிய தூரத்தைப் பொறுத்து சராசரியாக 25,000 – 40,000 அடி உயரத்தில் வளிமண்டலப் பரப்பில் விமானத்தைச் சீராக இயக்குவோம். இப்போது உள்நாடு மற்றும் சில வெளிநாடுகளுக்கு ஏர் பஸ் 319, 320, 321 வகை விமானங்களை சராசரியாக 39,000 அடி உயரத்தில் இயக்குகிறேன்’’ என்கிறார்.

கடந்த 15 ஆண்டுகளில் 7,000 மணி நேரத்துக்கும் அதிகமாக விமானத்தை இயக்கியிருப்பவர், சிறந்த பணி சேவைக்காக ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். சிங்கப்பூர், துபாய் உள்பட 20 நாடுகளுக்கு விமானங்களை இயக்கியிருப்பவர், கமாண்டருக்கான பணித்திறனை நிறைவு செய்து, செக் பைலட் பொறுப்புக்கான புரோமோஷனுக்காகக் காத்திருக்கிறார்.

உயரப் பறக்க பெண்கள் கனவு கண்டால் வானமே எல்லைதான்!ஸீ

தகவல் : சந்தோஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *