எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (82) :பாரதியின் ஆரிய இனப்பற்று!

ஆகஸ்ட் 16-31,2021

நேயன்

ஆர்.எஸ்.எஸின் முதன்மை இலக்கு ஆரிய இனத்தை ஆதிக்க இனமாகவும், உயர்நிலை வர்ணமாகவும் வைத்து, மற்றவர்களை அவர்களுக்கு அடிமைகளாக வைத்திருப்பதாகும். ஆரியர்கள் தவிர மற்றவர்கள் விலங்குகளுக்குச் சமமானவர்கள் என்பதே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம். ஆர்.எஸ்.எஸின் சித்தாந்த கர்த்தா கோல்வால்கர்,

“நாம் (ஆரியர்கள்) நல்லவர்கள், அறிவுத்திறன் கொண்டவர்கள். இயற்கையின் விதிகளையும், ஆன்ம விதிகளையும் அறிந்தவர்கள் நாம்தான். மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியவற்றையெல்லாம் கொண்டு வந்தவர்களும் நாம்தான். அப்போது நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் இரண்டு கால் பிராணிகளைப் போல் அறிவற்றவர்களாகவே இருந்தனர். எனவே, நமக்கென்று குறிப்பிட்ட பெயர் எதுவும் சூட்டப்படவில்லை. சில நேரங்களில் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் அறிவுத் திறனுடைய ஆரியர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் மிலேச்சர்கள்’’ (இழிமக்கள்) என்று கூறுகிறார்.’’

சங்கராச்சாரிமுன் சுப்ரமணியசாமி நாற்காலியில் அமர, மத்திய மந்திரி பொன்.இராதாகிருஷ்ணன் தரையில் அமர்த்தப்பட்டதற்கு இதுதான் காரணம்.

அது மட்டுமல்ல, இந்த நாட்டையே ஆரிய நாடாகக் கூறுவதும் அவர்களின் வழக்கம். இந்த மண்ணின் உரிமையாளர்கள் தமிழர்கள் _ திராவிடர்கள். இது உறுதி செய்யப்பட்ட வரலாற்று உண்மை. ஆரியர்கள் பிச்சையெடுத்துப் பிழைக்க வந்தவர்கள். பின் மெல்ல மெல்ல தங்களின் சூழ்ச்சியால் ஆதிக்கவாதிகளாக மாறியவர்கள் என்பதும் வரலாற்று உண்மை. இந்திய நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதும் வரலாறு, அகழ்வாய்வு உறுதி செய்த _ செய்து வருகிற உண்மை. ஆனால், வரலாற்றைத் திரித்து _ மறைத்து, பித்தலாட்டம் செய்து, இந்த நாடு ஆரியர்க்கு ரியதாகவும், இந்தியக் கலாச்சாரம் ஆரியக் கலாச்சாரம் என்ப தாகவும் காட்ட தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த வேலையை பாரதியும் அப்போதே செய்துள்ளார். இந்த நாட்டையே ஆரிய நாடாகக் காட்டுவதை அவர் பெருமளவிற்குச் செய்துள்ளார்.

“பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்

ஆரிய நாடு என்று அறி’’

“முன்னை இலங்கை அரக்கர் அழிய

முடித்தவில் யாருடை வில்? – எங்கள்

அன்னை பயங்கரி பாரத தேவிநல்

ஆரிய ராணியின் வில்”

“சித்த மயம் இவ் வுலகம்; உறுதிநம்

சித்தத்தில் ஓங்கி விட்டால் – துன்பம்

அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்ன சொல்

ஆரிய ராணியின் சொல்”

 

– “எம்மை

ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்

ஆரிய தேவி”

 

“வீரிய வடிவம் – என்ன

வீரிய வடிவம் – இந்த

ஆரியன் நெஞ்சம், அயர்ந்ததென் விந்தை!”

 

“எங்கள் ஆரிய பூமி”

 

“ஆரிய பூமியில் நாரிய ரும்நர

சூரிய ரும்சொலும் வீரிய வாசகம்“

 

“உன்னத ஆரிய நாடெங்கள் நாடே

ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே”

 

“ஆதிமறை தோன்றியதால் ஆரியநா டெந்நாளும்

நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு”

எப்படி? பாரதியாருக்கு இது தமிழ் நாடாகவோ இந்தியாவாகவோ படவில்லை. அப்படிப் பட்டாலும் அவருக்குச் சொல்ல விருப்பமில்லை. இந்திய நாடு அனைத்தையும் பாரத நாடு என்று சொல்வதைவிட ஆரிய நாடு என்று சொல்வதில் தான் அவர்க்குப் பெருமையிருந்திருக்கின்றது. உண்மை அப்படியிருந்து அவ்வாறு அவர் சொல்லிப் பெருமைப்பட்டிருந்தாலும் தாழ்வில்லை. அவர் உண்மையைத்தானே சொன்னார்; அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்‘ என்று கேட்கலாம். அவர் உண்மையல்லாத ஒன்றை உண்மைபோல் பலமுறை பன்னிப் பன்னிப் பேசியிருக்கின்றார். இப்படிப் பாடல்களைப் பாடுவதாலும் பலமுறை சொல்வதாலும் வரலாற்று உண்மைகளையே மறைக்க முயற்சி செய்துள்ளார். நாடற்ற ஆரியர்களுக்கு இந்நாடு உரிமையுடையது என்றால் இந்நாட்டையே பிறந்தகமாகக் கொண்ட தமிழர்களுக்கு எந்த நாடு உரிமையுடையது? தமிழ்நாடு என்பதாகவே ஒரு நாடு இருப்பதாக அவர் நினைவு கொள்ளவில்லை. இந்திய நாட்டில் அடங்கிய பத்தொன்பது திரவிட நாட்டுப் பகுதிகளும் ஆரியர்களுடையனவே என்று வல்லடி வழக்கு நடத்தியிருக்கின்றார்.

‘ஆரியர்’ என்பது பெருமைக்காகச் சொல்லப் பெற்றதாகத் தெரியவில்லை. இந்திய நாட்டின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு இந்தியா முழுமைக்கும் ஒரு பெயர் சொல்ல வேண்டுமே என்றுங் கூட அந்தப் பெயரைச் சொன்னதாகத் தெரியவில்லை. உண்மையிலேயே அவர்தம் இனப் பெருமையை நிலைநாட்டவே அவ்வாறு சொல்லியிருக்கின்றார். இந்நாட்டை ஆரிய நாடாகக் கருதியதை, அவர் பொது நோக்கங்கொண்டு சொன்னது என்பது, பித்தலாட்டமும் புரட்டுமாகும். வருங்காலத் தமிழ்க் குமுகாயத்தை இனி இவ்வாறெல்லாம் ஏமாற்ற முடியாது. மேலும் அவர் கூறியதைக் கவனியுங்கள்.

“ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்

சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!”

 

“வீரியம் ஒழிந்து மேன்மையும் ஒழிந்து, நம்

ஆரியர் புலையருக் கடிமைகள் ஆயினர்”

 

“மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்

ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்”

ஆரியரை இந்தியாவுக்கே உரிமையாக்கி, இந்தியாவை ஆரியர்க்கே உரிமையாக்கிப் பேசும் உணர்ச்சி பாரதியாரிடம் நிறைய இருந்திருக்கின்றது. ஆரியர் என்றால் அவர்களிடம் ஒரு தனித்தன்மை, சிறப்பு, எல்லாருக்கும் உயர்வான ஒரு தேவப் பெருமை இவையெல்லாம் இருப்பனவாகக் கற்பனை செய்து கொள்ளும் மனநிலை அவர் பாடல்களில் ஒலிக்கின்றது. இந்தியப் பண்பாடு, நாகரிகம், வீரம், சமயம் முதலிய அனைத்துப் பண்புகளையுமே அவர் ஆரியமாகப் பார்க்கின்றார். அப்பண்புகள் குறைந்தவரை அவர் ஆரியரினும் தாழ்ந்தவராகப் பேசுகின்றார்.

“ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்

யாரிவண் உளர்? அவர் யாண்டேனும் ஒழிக!”

 

“ஆரியர் இருமின் ஆண்களிங் கிருமின்;

வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!”

_ என்று பலவாறாக ஆரியர்களையே _ அல்லது அவரைச் சார்ந்தவர்களையே இந்நாட்டுக் குடிமக்களாக எண்ணிக் கொண்டு அவர் யாக்கும் வரிகள் இங்குள்ள எல்லாப் பிரிவினர்களையும் இழிவு செய்வனவாகும். வரலாற்றடிப்படையில் இந்நாட்டுக்கு உரிமையான ஓரினம் உண்டென்னும் ஒரு கருத்தை அவர் அடியோடு மறுப்பனவாகவே இவ்வரிகள் அமைகின்றன.

தமிழ்மொழியைப் பாராட்டுகையிலும், அஃது ஆரியச் சார்பு உடையதனால்தான் பெருமை கொண்டு விளங்குகின்றது என்னும் பொருள்படவே எழுதுகின்றாரே தவிர, அதன் தனித் தன்மை, பழைமைச் சிறப்பு, தாய்மை நிலை, வளமைக் கொழிப்பு முதலியன நிறைந்திருக்கும் தன்மையை அவர் ஒப்புக்கொள்வதில்லை.

“ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்”

ஆதிசிவன் பெற்ற தமிழை ஆரிய மைந்தன் அகத்தியன்தான் சிறப்புறச் செய்தான் என்பது பாரதியார் கருத்து. ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தது கி.மு. 1500இலிருந்து 2000க்குள் எனக் கூறலாம். அவர் தென்னாடு வந்தது அதற்குப் பின்னர்தான். அக்காலத்திற்கு முன்பே தமிழ் மிகவும் சிறப்புற்று விளங்கியிருந்தது. அவர்கள் தென்னாடு வந்த பின் அஃதாவது கடைக் கழகக் காலத்திற்குப் பின்னர்தான் தமிழ் மொழி, தமிழ் நாகரிகம், தமிழர் பண்பாடு முதலிய யாவும் சிதையத் தொடங்கின. இவர்கள் கூறிப் பெருமைப்படும் சமசுக்கிருத மொழி அதன் பின்னர்தான் செயற்கையாக உருவாக்கப் பெற்றது. இந்த வரலாற்று நிலைகளை யெல்லாம் உணராமல் அல்லது உணர்ந்தும் ஒப்புக்கொள்ளாமல் அல்லது ஒப்புக்கொண்டும் அவற்றை அடியோடு மறைக்கின்ற முயற்சியில் தமிழ்த்தாய் உரைப்பதாகப் பாரதியார் இப்படி எழுதுகிறார்.                   (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *