இரா.முல்லைக்கோ
அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் வெளியே புறப்பட்டுக் கொண்டிருக்கையில் செய்தியாளர் நேர்காணலுக்கு வந்து கேட்டுக் கொண்டார். பெரியாரும் கேளுங்கள் என்றார். “பொதுநலம்னா என்னங்கய்யா?’’ என்று கேட்டார். அதற்கு பெரியார் “மழை பெய்கிறதே அது பொதுநலம்’’ என்றார். அப்படின்னா “சுயநலம்?’’ “நீ குடை பிடிக்கிறாயே அதுதான்’’ என்றார் பெரியார். அப்போது வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது.
1947இல் இந்திய ஒன்றியம் நெடிய போராட்டங்களுக்குப் பின் விடுதலைச் சுடர் விட்ட இரவு நேரம். வெளிநாட்டு பத்திரிகை செய்தியாளர் ஒருவர் தலைவர்களிடம் நேர்காணல் நடத்திப் பதிவு செய்து, முன்கூட்டியே அனுமதி பெற்று டெல்லி பெருநகருக்கு வந்துள்ளார். பல்வேறு இடர்களால் பயணம் தாமதப்பட்டு பரபரப்படைந்தார் செய்தியாளர்.
இரவு மணி 11:00 ஆகியதால் முதலில் அண்ணல் காந்தி அவர்களின் இல்லம் சென்றார். இல்லத்தின் விளக்குகள் அணைத்து, கதவு அடைக்கப்பட்டு, இரவுக் காவலர் அனுமதிக்க மறுத்துவிட்டார். கதவின் தாள் திறக்கப்படவில்லை. அதேபோல பண்டிட் ஜவஹர்லால் நேருவின் இல்லத்திற்கும், முகமதலி ஜின்னாவின் இல்லத்திற்கும் சென்றும் பலனளிக்கவில்லை. சோர்ந்து விடாமல் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரை அந்தச் செய்தியாளர் சந்திக்கச் செல்கிறார். வீட்டின் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அனுமதி பெற்று உள்ளே சென்று, அம்பேத்கரைப் பார்த்து, “நாங்கள் காந்தியை, நேருவை, ஜின்னாவை நேர்காணல் செய்திட முடியவில்லை. நேரம் கடந்தமையால் அவர்கள் நள்ளிரவில் அயர்ந்து உறங்கிவிட்டனர். ஆனால், நீங்கள் மட்டும் உறங்காமல் படித்துக் கொண்டிருக்கிறீர்களே!’’ என்று வியப்புடன் கேட்டார்.
அம்பேத்கர் சொல்கிறார், “அவர்கள் எந்த நோக்கத்திற்காகப் பாடுபட்டார்களோ அது நிறைவேறிவிட்டது. அதனால் அவர்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் எந்த எந்த நோக்கங்களுக்காகப் பாடுபட்டேனோ அந்த நோக்கங்கள் நிறைவேறவில்லை. அந்த நோக்கங்களுக்குரிய மக்கள் அனைவரும் இன்னும் தூங்கிக் கொண்டுதான் உள்ளனர். அதனால்தான் அந்த நோக்கங்களின் விடியலுக்காக நான் விழித்துக் கொண்டிருக்கின்றேன்’’ என்று சொன்னதைக் கேட்ட செய்தியாளர்கள் வியப்படைந்தனர்.
1967 பொதுத்தேர்தல் பரப்புரைக்காக அறிஞர் அண்ணா அவர்கள் இரவு 10:30 மணிக்கு சிதம்பரம் சென்றபோது, பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். பல கூட்டங்களில் கலந்து கொண்ட களைப்போடு அண்ணா மேடையேறினார். “மாதமோ சித்திரை, நேரமோ மணி பத்தரை, உங்களுக்கோ நித்திரை. உதயசூரியன் சின்னத்தில் குத்துவீர் முத்திரை! நன்றி, வணக்கம்’’ என்று அடுக்கு மொழி கூறி, ஆரவாரத்திற்கிடையே விடை பெற்றார் அண்ணா. இன்றும் வரலாற்றுச் சுருக்க உரையாகப் பதிவாகியுள்ளது.
முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு ஜூன் 3ஆம் நாள் பிறந்த நாள் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடுவது கழகத்தினரின் செயல்பாடு. ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் கடைப்பிடிப்பார்கள் உடன்பிறப்புகள். மறுநாள் தொடர் வண்டி மூலம் பயணம் செய்து திருவாரூக்கு ஜூன் 5ஆம் நாள் வந்து இறங்கியதும், செய்தியாளர் கழகத் தோழர்களின் திரளான வரவேற்புக்கு இடையே ஒரே ஒரு கேள்வி என திக்குமுக்காடிய பின், உங்களின் இன்றைய பயண நிரல்… என்று கேட்டனர். “காலையில் (திருக்குவளை) அன்னை, மதியம் மன்னை, இரவு சென்னை’’ என்று கூறி, பலத்த கையொலி பெற்று முடித்துக் கொண்டார்.