சிதம்பரத்தில் திராவிடர் மாணவர் கழக மாநாடு
கி.வீரமணி
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய “தமிழகம்: நதிநீர்ப் பிரச்சினைகள்’’ என்ற நூல் வெளியீட்டு விழா 25.7.1996 அன்று திருச்சி ஆனந்த் ஓட்டல் வளாக அறையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காவிரி காப்புக்குழு அமைப்பாளர் வழக்கறிஞர் (கரூர்) பி.ஆர்.குப்புசாமி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினார். நூலினை நான் வெளியிட அதைப் பழ.கருப்பையா பெற்றுக் கொண்டார். அந்த நூலினைப் பற்றி விரிவான ஆய்வுரை ஒன்றையும் அங்கு நிகழ்த்தினேன்.
இறுதியாக நூல் ஆசிரியரும், தமிழர் தேசிய இயக்கத் தலைவருமான பழ.நெடுமாறன் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரை நிகழ்த்தினார். திருச்சி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திராவிடர் மாணவர் கழக மாநாட்டில் கலந்து கொள்ள சிதம்பரம் சென்றேன்.
அலங்கார ரதத்தில் ஆசிரியரை அழைத்து வரும் கழகத்தோழர்கள்
சிதம்பரத்தில் வடமண்டல திராவிட மாணவர் கழக எழுச்சி மாநாடு 27.7.1996 அன்று மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. மாநாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகத்திலிருந்தும் ஏராளமான கழக மாணவரணியினர் ஆர்வத்தோடு வந்து கலந்து கொண்டனர்.
காலை 9:00 மணியளவில் வி.கே.ஆர் திருமண மண்டபத்தில் காட்டுமன்னார்குடி மு.செங்குட்டுவன் நினைவு அரங்கில் மாநாடு துவங்கியது. பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.
மாலை 4:00 மணியளவில் சிதம்பரம் ராஜேந்திரன் சிலையிலிருந்து மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் புறப்பட்டு, கப்பல் போன்று வடிவமைக்கப்பட்ட அலங்கார ரதத்தில் என்னுடன் மத்திய நிருவாகக் குழு உறுப்பினர் சிதம்பரம் கு.கிருட்டினசாமியும் அமர்ந்திருக்க நாங்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டோம். 6:30 மணிக்கு கீழ வீதியை அடைந்தது. தெற்கு நத்தம் சித்தார்த்தன் குழுவினரின் வீதி நாடகம் நடைபெற்றது. 7:30 மணிக்கு வழக்காடு மன்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்ட ஏழாவது சர்வாதிகாரி புவனகிரி கே.நமச்சிவாயம், மத்திய நிருவாகக் குழு உறுப்பினர் சிதம்பரம் கு.கிருட்டினசாமி, சிதம்பரம் ரகுபதி, வல்லம்படுகை ராதாகிருஷ்ணன் ஆகியோர்க்கு மாநாட்டுக் குழு சார்பாக சால்வை அணிவித்து கேடயங்களை வழங்கிச் சிறப்பித்தேன். கழகப் பொறுப்பாளர்கள் உரையாற்றிய பின் நிறைவுரையாற்றுகையில்,
மாநாட்டுப் பேரணியில் கலந்து கொண்ட கழகத்தோழர்களின் ஒரு பகுதியினர்
“இந்த மாநாடு மிகவும் சிறப்பானதொரு காலகட்டத்திலே நடைபெறக்கூடிய ஒரு மாநாடாகும். இளைஞர்கள் எங்கோ திசை திரும்பி போய்க் கொண்டிருக்கிறார்கள்; இளைஞர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் நாட்டில் கவலைகள் தோன்றியிருக்கின்ற காலகட்டத்திலே _ அவர்களை ஒருமுகப்படுத்தி, ஓரணியில் நிறுத்தி _ நல்வழிப்படுத்தவே இந்த மாநாடு. தந்தை பெரியார் இளைஞர்களுக்கு கூறிய பத்து நெறிகளை மேடையில் நான் வாசிக்க வந்திருந்த இளைஞர்களும் பொதுமக்களும் அதனைப் பின்தொடர்ந்து கூறினர். இந்த வாழ்வியல் நெறிகளை நாம் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய மிக முக்கியமான பணியினை நாம் அனைவரும் செய்ய வேண்டியது அவசியமானது.
69% இடஒதுக்கீட்டிற்கு எதிராக நீதிபதிகள் எந்த உத்தரவு போட்டாலும் அது அரசியல் சட்டத்திற்கு விரோதமான உத்தரவு என்பதை வழக்கறிஞர் என்ற முறையிலே நான் அரசாங்கத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். எங்கே வேண்டுமானாலும் வந்து வாதாடுவதற்கு தயாராக இருக்கிறேன். அரசாங்கத்தின் காதுகள் இங்கே இருக்கின்றன. அவர்கள் தெளிவாக இதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை சொல்கிறேன். இதிலே வளைந்து _ குழைந்து சமாதானம் சொன்னால் திராவிடர் கழகம் சும்மா இருக்காது. திராவிடர் கழகம் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தும். 69% இடஒதுக்கீட்டினை காப்பாற்ற எங்களை பலிகடா ஆக்கிக் கொள்ளத் தயங்க மாட்டோம். தமிழகத்தில் மதவெறிக் கலவரத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் சக்திகளும், பா.ஜ.க. சக்திகளும் முயலுகின்றன. இதற்கு ஒருபோதும் இடம்தரக் கூடாது என்பன போன்ற பல கருத்துகளை நிறைவுரையில் எடுத்துரைத்தேன். சிதம்பரம் மாநாடு சிறப்பாக நிறைவேறிய மனநிறைவோடு சென்னை திரும்பினேன்.
சிதம்பரம் மாநாட்டில் புவனகிரி நமச்சிவாயம், ரகுபதி, வல்லம்படுகை ராதாகிருட்டினன், கு.கிருட்டினசாமி ஆகியோர்க்கு கேடயம் கொடுத்து பெருமைப் படுத்தும் ஆசிரியர்
சூளை சர்க்கரை செட்டியார் திருமண மண்டபத்தில் சிங்கார நடேசன் எழுதிய, “வடசேரி நாட்டின் வரலாறு’’ என்னும் நூல் வெளியீட்டு விழா 31.7.1996 அன்று நடைபெற்றது. தஞ்சை கூத்தரசன் வரவேற்புரையாற்றினார். கோ.அப்பாவு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் க.இளவழகன், ‘சங்கொலி’ க.திருநாவுக்கரசு, கழகத் தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உரையாற்றினர். எனது உரையில், சிங்கார நடேசனின் பொதுநலத் தொண்டினைப் பாராட்டியும், “வடசேரி நாட்டின் வரலாறு’’ எனும் நூலில் உள்ள பல நல்ல கருத்துகளை எடுத்து விளக்கியும் உரையாற்றினேன். பெரியார் பெருந்தொண்டர் எஸ்.தெட்சணாமூர்த்தி படத்திறப்பில் கலந்து கொள்ள குடந்தை சென்றேன்.
பெரியார் பெருந்தொண்டர் குடந்தை எஸ்.தெட்சிணாமூர்த்தி படத்திறப்பு நிகழ்ச்சி கும்பகோணம் மல்லுகத் தெருவில் உள்ள அவரது வீட்டில் 2.8.1996 அன்று நடைபெற்றது. மாவட்டப் பொறுப்பாளர்கள் பேசிய பின் இறுதியாக இரங்கல் உரையாற்றினேன். இந்நிகழ்சிக்கு கட்சி வேறுபாடின்றி பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும், பொதுமக்களும் பெருமளவு வருகை தந்து கலந்து கொண்டனர். குடந்தை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மறுநாள் நடக்கவிருக்கும் நெல்லை பகுத்தறிவாளர் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றேன்.
நெல்லை பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநாட்டில் உரையாற்றும் நாவலர் உடன் ஆசிரியர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்
தென் மாநிலத்தில் நெல்லையில் ஒரு பகுத்தறிவுத் திருவிழா 3.8.1996 அன்று மாநிலப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற இரண்டாவது மாநில மாநாட்டையொட்டி கருத்தரங்கம், பட்டிமன்றம், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், பொது மாநாடு என சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டில் நாவலர் இரா.நெடுஞ்செழியன் சிறப்புரையாற்றினார். மாநாட்டிற்கு பல்வேறு பகுதியிலிருந்து கழகத் தோழர்கள் வந்திருந்து சிறப்பித்தனர்.
நெல்லைப் புகைவண்டிச் சந்திப்பில் மாலை 6 மணிக்கு மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் அணிவகுத்து நின்றது. ஊர்வலத்தில் ஏராளமான கருஞ்சட்டை இளைஞர்கள் _ மகளிர் _ தோழர்கள் _ பெரியார் பிஞ்சுகள் என்று அணிவகுப்பு நடத்தப்பட்டது.
எத்தனை எத்தனையோ கழக நிகழ்ச்சிகள் நெல்லையில் நடைபெற்று இருக்கின்றன. மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி என்பது இப்பொழுதுதான் இவ்வளவு சிறப்பாக நடைபெறுகிறது என மக்கள் பேசினர்.
அலகு குத்தி அம்பாசிடர் கார் இழுத்து வந்த காட்சி மெய்சிலிர்த்தது. அத்திவெட்டி வீரையன் குழுவைச் சேர்ந்த பாப்பாநாடு சிவசுப்பிரமணியன், அத்திவெட்டி ரமேஷ், மதுரை ஞானமுத்து ஆகியோர் அனாயசமாக அம்பாசிடர் காரை முதுகில் அலகு குத்தி இழுத்து வந்தனர்.
“குடிஅரசு” எழுத்தாளர் சந்திரசேகரப் பாவலர் படத்தை திறந்து வைக்கும் ஆசிரியருடன் நாவலர் இரா.நெடுஞ்செழியன்
இந்தப் பகுதியில் இதுவரை காணாத ஒரு காட்சி பறவைக் காவடியாகும். வேன் ஒன்றில் அமைக்கப்பட்ட வண்டிச் சக்கரத்தைச் சுற்றி மூன்று தோழர்கள் முதுகில் அலகுகளைக் குத்திக் கொண்டு அந்தரத்தில் தொங்கிச் சுழன்று வந்த காட்சியைக் கண்டு மலைக்காத மக்கள் இல்லை. கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று அவர்கள் முழங்கியதைக் கண்டு பார்வையாளர் வரிசையில் நின்ற இளைஞர்கள் வைத்த கண் வாங்காமல் நின்றனர். அவர்கள் சிந்தனையிலே புதிய வெளிச்சம் ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும்.
“தீச்சட்டி இங்கே _ மாரியாத்தாள் எங்கே?’’ என்று குரல் கொடுத்து தோழர்கள், தாய்மார்கள் தீச்சட்டி ஏந்தி வந்த காட்சி இருபுறமும் கூடி நின்று ஊர்வலத்தைப் பார்த்த பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மக்கள் திரளாகக் கூடி நிற்கும் இடங்களில் எல்லாம் கரம்பக்குடி முத்து பளபளக்கும் அரிவாள்மீது ஏறி நின்று கடவுள் இல்லை _ இல்லவே இல்லை _ தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் வீரமணி வாழ்க! என்ற முழக்கமிட்டபோது பலராலும் நம்பவே முடியவில்லை! ‘நெஞ்சழுத்தக்காரர்களப்பா கருப்புச் சட்டைக்காரர்கள்!’ என்று பேசவே செய்தார்கள்.
நாக்கில் சூடம் கொளுத்திக் காட்டினார்கள். தேங்காயைத் தலையில் உடைத்துக் காட்டினார்கள். இவையெல்லாம் கோயில் திருவிழாக்களில் பூசாரிகள் செய்துகாட்டி, கடவுள் சக்தி, பக்தி என்று பொதுமக்களை நம்பச் செய்வார்கள். அவற்றை முறியடிக்கவே தோழர்கள் இந்தச் செயல் விளக்கங்களைச் செய்து காட்டி வந்தார்கள்.
புதுக்கோட்டை திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் ஆசிரியருக்கு எடைக்கு எடை வெள்ளி வழங்கும் காட்சி
நெல்லை மாநாட்டில் ‘குடிஅரசு’ எழுத்தாளர், நூற்றாண்டு விழா நாயகர் “சந்திரசேகரப் பாவலர்” என்னும் இ.மு.சுப்பிரமணியம் அவர்களது படத்தினை நாவலருடன் இணைந்து திறந்து வைத்தோம்.
மாலை 5:00 மணி அளவில் துவங்கிய மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி திருநெல்வேலி சந்திப்பு, த.ம. சாலை, திருவள்ளுவர் மேம்பாலம், எஸ்.என்.நெடுஞ்சாலை, கீழரதவீதி, மேற்கு ரத வீதி வழியாக மாநாட்டு மேடையை வந்தடைந்தது.
ஊர்வலத்தின் இரு பக்கங்களிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நின்று இப்பேரணியைப் பார்த்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
பேரணியை வ.உ.சி. மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தி.ப.பெரியாரடியான் துவக்கி வைத்தார். நெல்லை நகர திராவிடர் கழகத் தலைவர் தி.அ.திருமலை சுந்தரம் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணிப் பொறுப்பாளர்கள் முத்தமிழ், அய்.இராமச்சந்திரன், ச.பெரியார்பித்தன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
பேரணியைப் பார்வையிட்டு மகிழ்ந்த பல்வேறு தரப்பினரும் என்னையும், டாக்டர் நாவலர் அவர்களையும் சந்தித்து, பேரணியைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டார்கள்.
ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உரையாற்றும் ஆசிரியர் மற்றும் கழகத் தோழர்கள்
மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று பாடநூல்களில் அய்யா, அண்ணா, புரட்சிக்கவிஞர் பாடங்களை பள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் வைக்கவும், திருநெல்வேலி ஜங்ஷன் என்ற பெயரை ‘பெரியார் நிலையம்’ என மாற்றவும் முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
10.8.1996 அன்று திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு புதுக்கோட்டையில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. நகரமெங்கும் கழகக் கொடித் தோரணம்கூரையில் பொலிவுடன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி, கர்நாடகம், மராட்டியம், ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் கழகக் குடும்பத்தினர் குவிந்தனர்.
மாநாட்டிற்கு வரவேற்கும் விதமாக புதுக்கோட்டை எல்லையில் 25 மோட்டார் சைக்கிள்களிலும், வேன்களிலும் ஏராளமான கழகத் தோழர்கள் வரவேற்று முழக்கமிட்டனர். மாநாட்டையொட்டி, அறிவியல் கண்காட்சி, புத்தக விற்பனை, கருத்தரங்கு, சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு என விழாக் கோலம் பூண்டது.
புதுக்கோட்டையைக் குலுக்கும் வகையில் சிறப்பான பேரணி நடைபெற்றது. இளைஞரணி அணிவகுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள் என சிறப்பான வகையில் மாவட்டப் பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊர்வலம் _ கீழ ராஜவீதி, அண்ணாசாலை வழியாக வந்து இரவு 8:00 மணிக்கு மாநாட்டுப் பந்தலை அடைந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் என்னை அமர வைத்து கழகத் தோழர்கள் பெரும் ஆரவாரத்துடன் அழைத்துச் சென்றனர்.
மாநாட்டு மேடையில் பெண்களின் அடிமைச் சின்னமெனும் தாலியை நீலமலை மாவட்ட தி.க. செயலாளர் கருணாகரன் அவர்களது துணைவியார் ஜோதி அவர்களும், நீலமலை மாவட்ட தி.க. இளைஞரணி செயலாளர் இரா.தாமோதரன் அவர்களது துணைவியார் மகேஸ்வரி அவர்களும் மேடையிலேயே அகற்றினர்.
மாநாட்டில் நிறைவுரையாற்றுவதற்கு முன்பாக கழகத் தோழர்கள் பெரிய தராசினை மேடையின் மய்யப் பகுதியில் கொண்டு வந்து ஒரு தட்டில் என்னை அமர வைத்து எடைக்கு எடை வெள்ளி வழங்கும் நிகழ்வினை பெரும் மகிழ்ச்சியோடு நிகழ்த்தினர். புது வரலாறு படைத்த மாநாட்டில் உரையாற்றுகையில், “எனக்கு நீங்கள் எடைக்கு எடை வெள்ளி கொடுத்து என்னை பெருமைப்படுத்தினாலும், நான் அமர்ந்திருந்த பொழுது எனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த அய்யா, அம்மா படத்திற்கே அது காணிக்கை என்பதை நன்றியுணர்ச்சியோடு, அடக்கத்தோடு கூறிக் கொள்கிறேன். இங்கு எனக்கு மிகுந்த உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கின்றது.
இந்த இளைஞரணி மாநாட்டை நம்முடைய புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் புட்பநாதன் மற்றும் செயலாளர், இளைஞரணி செயலாளர் என அனைத்து பொறுப்பாளர்களும் மிகச் சிறப்பான அளவுக்குப் பணியாற்றி சிறப்பித்திருப்பதைக் காண முடிகிறது. நம்மைப் பற்றிப் பலர் குற்றம் சொன்ன காலத்திலும், நமது இயக்கம் என்ன சாதித்தது என்று கேட்க வந்த காலத்திலும் நாம் அவர்களை இலட்சியம் செய்து பதில் சொல்லிக் கொண்டிராமல் நமது இலட்சியத்திலேயே கவலை வைத்துக் கொண்டு, ‘நாம் அப்படித்தான் செய்வோம், இஷ்டமிருந்தால் பின்பற்றி வா, இல்லாவிட்டால் உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ! அதன் பேரிலோ நமது கொள்கையின் பேரிலோ, நமது செய்கையின் பேரிலோ ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை! என்று சொல்லிக் கொண்டு வந்த உறுதியான நிலைமையேதான் நல்லதோ, கெடுதியோ நமது இயக்கத்தின் தற்கால நிலைமைக்குக் காரணமாக இருந்து வருகிறது. தந்தை பெரியார் அவர்கள் இதனை தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.
பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களது சீரிய முயற்சியால் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நாம் எப்பொழுதுமே கொள்கை ரீதியாக இருப்போம். கொள்கை ரீதியாக இருந்தால் யாரோடும் இருப்போம். அந்தக் கொள்கையைச் செயல்படுத்தவில்லை என்றால் யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம். இதை எப்பொழுது கையாண்டார்கள் என்பதே பல பேருக்குத் தெரியாது. இதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். நீ பெரியாரா என்று கேட்கலாம். நான் பெரியார் அல்ல; ஆனால், பெரியாருடைய காலடியில் இருந்த மண்ணுக்குரிய புத்திகூட இந்த நாட்டில் உள்ள மிகப் பெரிய அரசியல் தலைவர்களுக்கு அனுபவ சிந்தனை உடையது என்பதைச் சவால் விட்டு என்னால் கூற முடியும். ஆகவேதான், சொல்லுவது, சுட்டிக்காட்டுவது எங்களுடைய கடமை; எங்களுக்குரிய உரிமை. தமிழகத்தில் நாங்கள் எதற்கிருக்கின்றோம்? இந்த இனத்துக்குச் சோதனை வரும்பொழுது, சமூகநீதிக்குக் கேடு வரும்பொழுது, மதச்சார்பின்மைக்கு ஆபத்து வரும்பொழுது தற்கொலைப் பட்டாளமாக மாறுவோம், மாறித்தான் தீருவோம்!
கூடியிருக்கும் இளைஞர்களே, நீங்கள் என் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு துரோகம் செய்யாமல் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை இறுதிமூச்சு அடங்குகிறவரை செய்து கொண்டிருப்பேன். உங்களுடைய நம்பிக்கையைப் பாழாக்க மாட்டேன்’’ என பல்வேறு கருத்துகளை இளைஞர்கள் மனத்தில் படும்படி எடுத்துக் கூறினேன். நெல்லையில் இருந்து சென்னை திரும்பி விடுதலையில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டோம்.
திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் சாலைகளுக்கு தலைவர்களின் பெயர் வைக்கும் வழக்கம் தமிழக அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது. இதனை மீறி பிடிவாதமாக சிலர் இன்னமும் தங்கள் விளம்பரங்களிலும் பெயர்ப் பலகைகளிலும் பழைய பெயர்களிலேயே விளம்பரப்படுத்துவதைக் கண்டித்து அறிக்கையொன்றை 14.8.1996 அன்று வெளியிட்டோம். அதில், “சென்னை அண்ணா சாலைக்கு முந்தைய பெயர் ‘மவுண்ட் ரோடு’, அதுபோல், பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று முன்பு அழைக்கப்பட்ட நெடுஞ்சாலை தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி, தமிழக அரசால், “பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ எனப் பெயர் மாற்றப்பட்டது. அண்ணா சாலை என்பது தி.மு.க. ஆட்சியிலும், பெரியார் சாலை என்பது அ.தி.மு.க. ஆட்சியிலும் செய்யப்பட்ட பாராட்டத்தக்க பெயர் மாற்றம். இதனை சிலர் விஷமத்தனத்தினால் பழையபடி எழுதுவதைக் கண்டித்து விரைவில் அறப்போராட்டம் நடைபெறும் என அறிவித்தோம். அதன் விளைவாக முன்தினமே இரு நிறுவனங்களும் பெயர்களை உரிய முறையில் மாற்றம் செய்து புதிதாக எழுதிவிட்டன. சென்னை மாநகரக் காவல் துறை ஆணையர், அலுவலக உதவி ஆணையர் இதனை திராவிடர் கழகத் தலைமை நிலையத்துக்குத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து எல்லா நிறுவன விளம்பரங்களிலும் அய்யா _ அண்ணா அவர்களின் பெயர் இடம்பெறச் செய்ய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அறிக்கையில் குறிப்பிட்டோம். அதன்பின்,
20.8.1996 அன்று ஈழத்தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து இலங்கை தூதர் அலுவலகத்தின் முன்பு திராவிடர் கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான தோழர்கள் காலை முதலே அண்ணாசாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முன்பு வரத் தொடங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கொல்லாதே! கொல்லாதே! ஈழத் தமிழர்களைக் கொல்லாதே! என குரல் எழுப்பி முழக்கமிட்டனர். தமிழ் உணர்வாளர்கள் என பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நண்பகல் வெயிலையும் பொருட்படுத்தாது அங்குக் கூடியிருந்த கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகையில், “நாம் மிகுந்த வேதனையோடும், கனத்த நெஞ்சத்தோடும் சிங்கள அரசை எதிர்த்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திலே ஈடுபட்டிருக்கிறோம். அங்கு தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். தமிழச்சிகளினுடைய கற்பு சூறையாடப்படுகிறது. நம்முடைய தாய்த்திரு நாட்டிற்கு அகதிகளாக வந்தால்தான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கருதி அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக ஓடி வருகிறார்கள். இனப் படுகொலைக்கு எதிராக அய்.நா. சாசனத்திலேயே விதிமுறை இருக்கிறது. இதைக் கேட்க நமக்கு உரிமை இருக்கிறது. ஆகவே, கேட்கின்றோம்’’ என கூடியிருந்த கழகத்தினர் மத்தியில் உரையாற்றினேன்.
(நினைவுகள் நீளும்…)
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:”Times New Roman”;
mso-bidi-theme-font:minor-bidi;}
ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முன்பு கண்டன
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உரையாற்றும் ஆசிரியர் மற்றும் கழகத் தோழர்கள்