ஆர்.எஸ்.எஸ்க்கு முன்னோடி ஆரிய பார்ப்பன பாரதி?
நேயன்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 125ஆம் ஆண்டில் அய்ந்து பேரால் உருவாக்கப்பட்டது. ஆனால், பாரதியார் 11.9.1921லே இறந்துவிட்டார். அப்படியிருக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பாரதியின் பங்கு எப்படியிருக்க முடியும் என்று எவரும் எளிதில் எண்ணுவர்!
பாரதி இறந்த பின் 4 ஆண்டுகள் கழித்து ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டாலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படைச் சித்தாந்தங்கள் அனைத்தையும் பாரதி தன் கொள்கையாக முன்னமே அறிவித்துவிட்டார்.
பாரதி ஜாதி ஒழிப்புப் பேசியவர்; பார்ப்பனர்களைச் சாடியவர்; பெண்ணுரிமை பற்றி பாடியவர்; தாழ்த்தப்பட்டவருக்குப் பூணூல் மாட்டிப் புரட்சி செய்தவர். அப்படியிருக்க அவர் எப்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அடித்தளம் இட்டிருக்க முடியும்? ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கு பாரதி எதிரானவர் அல்லவா? என்றே எல்லோரும் கேட்பர்!
இப்படி இவர்கள் கேட்பதற்குக் காரணம், பாரதியைப் பற்றி முழுமையாக அவர்கள் அறியாததே காரணம்.
இந்துத்துவத்தின் முதன்மைக் கொள்கைகள் எவை என்பதை நான் முன்னுரையில் கூறியதை மீண்டும் ஒருமுறை படியுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு, அவை பற்றி பாரதியின் கொள்கைகள் என்ன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை ஒளிரும்!
முதலில் இந்துத்துவாவின் அடிப்படைக் கொள்கையான வர்ணாஸ்ரம தர்மம் பற்றியும், வேத, சாஸ்திரங்களைப் பற்றியும் பாரதியின் கொள்கை என்ன என்பதைப் பார்ப்போம்.
பாரதியும் வர்ணாஸ்ரம தர்மமும்:
“ஜாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று பாடிய பாரதி எப்படி வர்ணாஸ்ரம ஆதரவாளராய் இருக்க முடியும்? என்றே எல்லோரும் எண்ணுவர். பாரதியின் சந்தர்ப்பவாதக் கருத்துகள் சிலவற்றை எடுத்து வைத்துக் கொண்டே சிலர் பாரதியாரை ஒரு சமதர்மக் கவிஞராக, புரட்சிக் கவிஞராகக் காட்டுகின்றனர்.
பாரதியின் கருத்துகள் இருவகைப்படும்.
1. பாரதியின் உள்ளக் கருத்துகள். 2. பாரதியின் கள்ளக் கருத்துகள்.
பாரதி ஓர் கபடவேடதாரி. கபடவேடதாரிகளிடம் எப்போதும் இரட்டை வேடம் இருக்கும். அது பாரதியிடம் அதிகம் இருந்தது. அதை நீங்கள் இந்நூலைப் படிக்கப் படிக்க அறிவீர்கள். பாரதி வர்ணாஸ்ரம தர்மத்தில் தீவிர பற்றும் வெறியுங் கொண்டிருந்தார். சமூகச் சீர்கேடுகளுக்கெல்லாம் காரணம் வர்ணாஸ்ரமம் அழிந்ததுதான் என்கிறார்.
1910இல் பாரதி தனது சுயசரிதைக் “கனவு’’ என்ற தலைப்பில் வெளியிட்டார். அதில் அவருடைய தந்தை வறுமையுற்று வருந்தியதற்குக் காரணம் வர்ணாஸ்ரமம் கெட்டொழிந்ததே யாகும் என்கிறார்.
“பார்ப்பனக் குலம் கெட்டழிவு எய்தியதை
பாழடைந்த கலியுகம். ஆதலால்
வேர்ப்ப வேர்ப்ப பொருள் செய்வதொன்றையே
மேன்மை கொண்ட தொழில் எனக் கொண்டான்’’ என்று கூறுகிறார். (பாரதியார் கவிதைகள்)
பார்ப்பான் உடல் வியர்க்க உழைக்கக் கூடாது என்ற வர்ணாஸ்ரம மற்றும் மனுதர்ம விதியை ஏற்று இக்கருத்தைக் கூறுகிறார்.
மேலும், “சமூகம்’’ என்ற தலைப்பில் வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்திப் பாடுகிறார்.
“வேதம் அறிந்தவன் பார்ப்பான் (பிராமணன்)
நீதிநிலை தவறாமல் _ தண்ட
நேமங்கள் செய்பவன் நாயக்கன் (க்ஷத்ரியன்)
பண்டங்கள் அறிபவன் செட்டி(வைசியன்)
பிறர்பட்டினி தீர்ப்பவன் செட்டி (சூத்திரன்)
நாலு வகுப்புமிங்கு ஒன்றே _ இந்த
நான்கினில் ஒன்றுகுலைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே _ செத்து
வீழ்ந்திடும் மானிடச்சாதி (பாரதியார் கவிதைகள்)
கண்ணன் (கிருஷ்ணன்) என் தந்தை என்ற பாடலில்,
“நாலு குலங்கள் அமைத்தான் _ அதை
நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதர்’’ என்கிறார். (பாரதியார் கவிதைகள்)
ஆரியர்களின் சாஸ்திரங்களை பாரதி மிகவும் உயர்வாக மதித்தார். அவற்றைப் பின்பற்றினால்தான் நன்மை கிடைக்கும் என்றும் வலியுறுத்தினார்.
“வேள்விகள் கோடி செய்தால் _ சதுர்
வேதங்கள் ஆயிரம் முறைபடித்தால்
மூளும் நற்புண்ணியங்கள்தான்’’
(பாரதியார் கவிதைகள்)
“முன்னாளில் அய்யரெல்லாம் வேதம் சொல்வார்
மூன்று மழை பெய்யுமடா மாதம்
இந்நாளில் பொய்மைப் பார்ப்பனர் _ இவர்
ஏதும் செய்தும் காசு பெறப்பார்ப்பார்’’ என்கிறார் பாரதி. (பாரதி புதையல் பெருந்திரட்டு)
பாரதியின் இப்பாடலின் உட்பொருளை மிக நுட்பமாகக் கூர்ந்து பொருள் கொள்ள வேண்டும். இப்பாடலின் மூலம்,
1. வேதம் உயர்ந்தது
2. வேதம் சக்தியுடையது
3. வேதம் உலகை உய்விக்கக் கூடியது
4. வேதம் பிராமணன் மட்டுமே ஓதவேண்டும்
5. வேதம் ஓதுவது வர்ணாஸ்ரம தர்மப்படி பிராமணனுக்குரியது.
6. வர்ணாஸ்ரம தர்மப்படி பிராமணன் வேதம் ஓதும் தொழிலை விட்டுவிட்டு, காசு, பதவி என்று மற்ற தொழில்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டான். இது கண்டிக்கத்தக்கது.
7. வர்ணாஸ்ரம தர்மப்படி அவனவன் தொழிலை அவனவன் செய்தால்தான் சமூகம் வாழும் செய்பவனுக்கும் சிறப்பு.
இதுவே பாரதியின் இப்பாடலின் உட்பொருள்; உண்மையான பொருள். இப்போது சொல்லுங்கள் – பாரதி வர்ணாஸ்ரமத்தை எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டார், மற்றவரும் ஏற்க வலியுறுத்தினார் என்று.
(தொடரும்)