எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (77) : பார்ப்பனர் என்பதால் பாரதியை வெறுக்கிறோமா!

ஜூன் 01-15 2021

நேயன்

திராவிடர் கழகத்தின் மீது எதிர்தரப்பார் வைக்கின்ற குற்றச்சாட்டுகளுள் இதுவும் ஒன்று. பார்ப்பனர் ஒருவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கே ஆசான், வழிகாட்டி. அப்படியிருக்க புரட்சிக்கவிஞரை ஏற்றுப் போற்றுவோர், பாரதியாரை வெறுப்பது ஏன்? அவர் பார்ப்பனர் என்பதால்தான் என்று கூறுகின்றனர்.

பார்ப்பனர் என்ற காரணத்திற்காக ஒருவரை வெறுப்பது திராவிடர் கழகத்தின் மரபல்ல. பரிதிமாற்கலைஞரை திராவிடர் இயக்கம் தலைமேல் கொண்டாடி வருவதை உலகம் அறியும். சாஸ்திரங்களை தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்த பார்ப்பனர்களை பெரியாரும் திராவிடர் இயக்கமும் நன்றியுடன் பாராட்டியுள்ளது. அப்படியிருக்க இக்குற்றச்சாட்டு அறியாமையின் அல்லது உள்நோக்கின்பாற்பட்டது.

பாரதி ஜாதியொழிப்புக் கொள்கையுடை யவர்; தமிழ்மீது மிகுந்த பற்றுள்ளவர்; பெண்ணுரிமைக்கு அதிகம் குரல் கொடுத்தவர்; சமதர்ம நோக்குடையவர்; பார்ப்பனர்களையே வெறுத்துப் பேசியவர் என்றே பலராலும் கருத்துக் கூறப்படுகிறது. அப்படியே பலராலும் நம்பவும்படுகிறது.

ஆனால், உண்மையில் பாரதி ஓர் இந்துத்வா சனாதனப் பேர்வழி; ஆர்.எஸ்.எஸ்.ஸின் முன்னோடி; ஆரியப் பற்று அதிகம் உடையவர்; திராவிடத்தை வெறுத்தவர்; தமிழைத் தாழ்த்தி சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடித்தவர்; பெண்ணடிமைத்தனத்தைப் போற்றியவர்; ஜாதிப் பற்றுடையவர்.

இப்படிச் சொல்லும்போது பலருக்கும் வியப்பாகவும் ஏன் அதிர்ச்சியாகவும்கூட இருக்கும். ஆனாலும், அப்பட்டமான உண்மைகள் இவை. இந்த உண்மைகளை ஆதாரபூர்வமாக ஒவ்வொன்றாய் இனிக் காண்போம்.

முதலில் பாரதி ஓர் இந்துத்வா சனாதனவாதி. வர்ணாசிரம தருமத்தை உயர்த்திப் பிடித்து ஆதரித்துப் பேசியவர் என்பதை சான்றுகளோடு பார்ப்போம்.

பாரதியின் இந்துத்வா கொள்கைப் பற்றைப் பார்ப்பதற்கு முன் இந்துத்வ சனாதன முதன்மைக் கொள்கைகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படித் தெரிந்துகொண்டால்தான் அக்கொள்கைகளை எந்த அளவிற்கு பாரதி ஆதரித்தார், அவற்றின் மீது பற்றுக் கொண்டிருந்தார் என்பதை நாம் அறிய முடியும்.

இந்துத்வாவின் முதன்மைக் கொள்கைகள்:

1.            வர்ணாஸ்ரமதர்மம்.

                பிராமணன், -க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற வர்ணப் பிரிவுகள் இருக்க வேண்டும். அவை பிறப்பால் வரும் பிரிவுகள். அவை கடவுளால் செய்யப்பட்டவை.

2.            வர்ணாசிரமதர்மப்படி தங்கள் குலத் தொழிலையே ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

3.            சமஸ்கிருதமே தேவமொழி, உயர்மொழி. சமஸ்கிருதம்தான் இந்தியாவின் ஒரே மொழியாக இருக்க வேண்டும். மற்ற மொழிகள் காலப்போக்கில் அகற்றப்பட்டு வழக்கொழிய வேண்டும்.

4.            இந்தியா முழுக்க இந்து மதம் மட்டுமே இருக்க வேண்டும்; மற்ற மதங்களெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும். இந்து மதத்தை ஏற்காத மற்ற மதத்தார் இந்தியாவை விட்டு வெளியேறிவிட வேண்டும்.

5.            இந்துக்களுக்கு ஒரே கடவுள் இராமன் மட்டுமே. இந்துக்களுக்கான மற்ற கடவுள்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

6.            மனுதர்மமே சட்டம். அதையே பின்பற்ற வேண்டும்.

7.            இந்தியா முழுக்க ஒரே கலாச்சாரம்தான். அது ஆரிய கலாச்சாரம். மற்றவர்களின் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும்.

 இந்தக் கொள்கைகளை அப்படியே முழுமையாக, தீவிரமாக ஆதரித்தவர் பாரதியார்.

பாரதி ஓர் இந்துமத வெறியர்; இந்தியாவெங்கும் சமஸ்கிருதத்தைத் திணிக்க வலியுறுத்தியவர். மற்ற மதத்தவரை வெறுத்துப் பேசியவர்; வேதங்கள்தான் உலகில் உயர்ந்தவை என்று உச்சிமீது வைத்து மெச்சியவர்; உடன்கட்டை ஏறுதலை ஆதரித்தவர்; இந்துக்கள் எண்ணிக்கை குறைவதாகவும்; இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகமாவதாகவும் கவலை கொண்டவர். நால்வருணபேதம் உயர்ந்தது. அது பாதுகாத்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றவர். இந்தியாவை ஆரிய நாடு என்று பார்த்தவர்; இந்து மதத்தைக் காக்கவே இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டும் என்றவர், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையைக் கொண்டிருந்தவர்; அதையே வலியுறுத்தியவர்.

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தமும் இவைதானே? ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவாவதற்கு முன்பே ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடிப்படைச் சித்தாந்தங்கள் அனைத்தையும் வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தவர் பாரதி. அதன்படி பார்த்தால், ஆர்.எஸ்.எஸ்.க்கு அடித்தளம் இட்டவர் பாரதி என்பது மட்டுமல்ல; ஆர்.எஸ்.எஸ் குரு கோல்வால்கருக்கும் குருநாதர் பாரதியே!

நம்ப முடியவில்லையா? பாரதியைப் பற்றி இதுவரை எண்ணியிருந்தவற்றிற்கு இவை எதிராக இருக்கின்றனவா? ஆம். அப்படித்தான் இருக்கும்! காரணம், பாரதியைப் பற்றி ஒரு சிலவற்றை மட்டும் கேள்விப்பட்டு உருவாக்கிக்கொண்ட எண்ணங்கள் இந்நூலைப் படித்தால் தகரும்.

பாரதியாரைப் பற்றி உலகோர் நம்பிக் கொண்டிருப்பதும் பாரதியின் உண்மை இயல்பும், இலக்கும் நேர் எதிரானவை. இதற்குக் காரணம் பாரதிக்கு கள்ளக் கருத்துகள், உள்ளக் கருத்துகள் என்று இருவிதக் கருத்துகள் உண்டு. கள்ளக் கருத்துகள் அவரை நல்லவராகக் காட்டியதுதான், அவரது உள்ளக் கருத்துகள் உலகுக்குத் தெரியாமல் மறைத்தன. “நல்லவர்போல் நடிப்பார் ஞானத்தங்கமே’’ என்பது பாரதிக்கு முழுதும் பொருந்தும்.

இப்படிப்பட்ட பாரதியின் உண்மை இயல்பை, இலக்கை இனி ஆதாரங்களோடு பார்ப்போம்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *