கவிதை : புரிந்து கொள்வீர்

மே 16-31 (2021)

1. ஆஸ்தீகம் எது? நாஸ்தீகம் எது?

 அறிந்து சொல்வீரே! – நன்றாய்ப்

 புரிந்து கொள்வீரே!

2. சாஸ்திரம் காட்டும் சுயநலமோகம்

 ஆஸ்திகமா? இல்லை நாஸ்திகமா?

 மக்கள்

  சமத்துவங் காட்டும் பொதுநலத் தியாகம்

  நாஸ்திகமா இல்லை ஆஸ்திகமா – இதில் (ஆஸ்தீகம் )

3. காணிக்கை கொடுத்து கற்பூரச் சுடரால்

  கடவுளைக் காண்பது ஆஸ்திகமா? – அது

  கல்லாமையென்பது நாஸ்திகமா?

 காணரும் அன்பால் நாணயமாகக்

 கடமையைப் புரியெனல் நாஸ்திகமா? – அதற்

 குடன்பட மறுப்பது ஆஸ்திகமா? – இதில் (ஆஸ்தீகம் )

4. சம்சாரி உழைத்துச் சந்யாசி கொழுக்கத்

 தருமம் புரியெனல் ஆஸ்திகமா? – அது

 சரியில்லையென்பது நாஸ்திகமா?

 சரி சமமாக எல்லோரும் வாழ்வது

 தகுமெனச் சொல்வது நாஸ்திகமா? – அதில்

 பகைமை கொண்டாலது ஆஸ்திகமா? – இதில் (ஆஸ்தீகம்)

5. கருடனைக் கண்டால் கிருஷ்ணா கிருஷ்ணாவெனக்

 கன்னத்தில் போடுவது ஆஸ்திகமா? – அதைத்தன்

 மதிப்புக் குறைவெனல் நாஸ்திகமா?

 அறிஞனைக் கண்டால் அப்பா அய்யா வென்று

 பெருமை கொண்டாடல் நாஸ்திகமா? – அதில்

 பேதம் பேசுதல் ஆஸ்திகமா? – இதில் (ஆஸ்தீகம்)

6. தோத்திரமாலை கீர்த்தனம்பாடிச்

 சுண்டல் புசிப்பது ஆஸ்திகமா? – அதைக்

 கொண்டாட மறுப்பது நாஸ்திகமா? – வாய்

 வார்த்தையில் கடவுளைப் போற்றாதே! – மாந்தரைத்

 தூற்றாமல் இருஎனல் நாஸ்திகமா? – இது

 தோற்றாமல் இருப்பது ஆஸ்திகமா? – இதில் (ஆஸ்தீகம் )

7. மொட்டைத்தலைகள் ஒட்டுச்சடைமுடி

 சிட்டுக் குடுமிகள் ஆஸ்திகமா? – சுருள்

 வெட்டுத் திருமுடி தொட்டுத் திருகிடும்

 மீசை விலாசம் நாஸ்திகமா?

 கட்டிய காவிகள் ஆஸ்திகமா? – அதைக்

 கவுரவக் குறைவெனல் நாஸ்திகமா?

 பட்டை நாமங்கள் ஆஸ்திகமா? – அதைப்

 பகல் வேஷமெனில் நாஸ்திகமா? – இதில் (ஆஸ்தீகம் )

8.  போட்டி போட்டுச் சீமாட்டிகள் வைத்திடும்

 பொம்மைக் கொலுவுகள் ஆஸ்திகமா? – அது

 வீட்டுவேலைகள் செய்யாதவள் காட்டும்

 வேடிக்கை யென்பது நாஸ்திகமா?

 தேட்டுக்காகப் பிள்ளை தேவையென்று – திவ்ய

 க்ஷேத்திரம் செல்வது ஆஸ்திகமா? – அது

 பூட்டும் ஆபரணப் புடவை காட்டும் செல்வச்

 சேட்டை யென்பது நாஸ்திகமா? – இதில் (ஆஸ்தீகம்)

9. சேவல் மச்சம் சர்ப்பக் காவடித்

 திருக்கொலைக் காட்சிகள் ஆஸ்திகமா? – உயிர்

 செத்தது பிழைப்பது வாஸ்தவமா? – அது

 கோவில் திருடர் ஏவும் கூட்டுக்

 கொள்ளையென்கிறோம் வாஸ்தவமாய் அருள்

 அல்லவென்பது நாஸ்திகமா? – இதில் (ஆஸ்தீகம்)

10. அரிசி கோதுமை உருமாத்தி

  ஆப்பம் தோசை சப்பாத்தி

 அடையும் வடையும் விலாப் புடைக்க

 அடைக்கும் விரதம் ஆஸ்திகமா? – அது

  உருசி கண்டதோர் நாவின் – அந்த

 உணர்ச்சி யென்பதே மேவும் – இதைப்

 பெருமையாகச் சிலர் விரதமென்பதை

  முறையிலை யென்பது நாஸ்திகமா? – இதில் (ஆஸ்தீகம் )

11. பட்டின் உடைகள் பசும்பொன் அணியொடு

 பல்லாக்கு மேனா மேல் வருவார்!

 அஷ்டாச்சரம் பஞ்சாட்சரம் முணங்கலும்

 ஆலயம் தொழுவதும் ஆஸ்திகமா?

 கட்டத்துணியும் கஞ்சியுமின்றிக்

 கண்ணீர் பொழியும் எளியாரைக்

 காக்கும் கடமைக் கடவுளர் அருளினும்

 ஏற்றவை யென்பது நாஸ்திகமா? – இதில் (ஆஸ்தீகம்)

 – உடுமலை நாராயணகவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *