தந்தை பெரியார் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தை உயர்த்திப் பிடித்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு முன்னர் விரிவாகப் பதில் அளித்துள்ளோம். தந்தை பெரியார் தமிழில் அறிவியல் வளர வேண்டும், மூடப் புராணங்கள் ஒழிய வேண்டும் என்றே வலியுறுத்தினார் என்பதை விளக்கினோம்.
தமிழ் அறிவியல் மொழியாக வளரவில்லையே என்ற ஆதங்கத்திலே அவர் கூறிய கருத்துகளைத் தான் பெரியாரை எதிர்க்கின்றவர்கள் வெட்டியும் ஒட்டியும் எடுத்துக் கூறி குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், பெரியார் உண்மையில் தமிழை பெரிதும் நேசித்தவர்; தமிழ் அறிவியல் உள்பட பல்துறை அறிவுசார் வளப்பம் உடைய மொழியாக வளர்க்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அது மட்டுமல்ல, தமிழ் பாடமொழியாக வந்து, தமிழக மாணவர்கள் நிறைய வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என்று விரும்பினார் என்பதற்கான ஆதாரத்தை கீழே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.
நமது கடமை!
தமிழ்நாட்டில் வீழ்ச்சி அடைந்த காங்கிரஸ் இயக்கம் தலை எடுக்க, வளர நான் காரணமாக இருந்தேன். காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, சுயமரியாதை இயக்கம் கண்டு, நீதிக்கட்சித் தலைவரானதற்குக் காரணமே பார்ப்பனரல்லாத தமிழர்களின் எதிர்கால வாழ்வை ஒளிமயமாக ஆக்குதற்காகவேயாகும்.
அதற்காகவே அன்றிலிருந்து இன்றுவரை, நான் ஓய்வெடுக்க டாக்டர்கள் கூறியும் ஒரு நிமிடமும் ஓய்வு கொள்ளாமல் பணியாற்றிக் கொண்டுள்ளேன். லட்சியங்களில் வெற்றி பலருக்குக் கிடைத்தது போல், எனக்கு இளமைக் காலத்தில் கிடைக்கா விட்டாலும் எனது முதுமைக் காலத்திலாவது கிடைத்தது என்பதற்கு அடையாளமாகத்தான் என்னோடு இருந்து வளர்ந்தவர்களால் ஆட்சி இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழ் பாடமொழி என்ற யுத்த தளவாடம்
இந்த ஆட்சியினுடைய சாதனைகளில் எந்தவித ஓட்டை உடைசல்களையும் குறிப்பிட்டுக் காட்டி, எதிர்க்க முடியாமல் தமிழ்ப் பாட மொழி பயிற்சியைத் தங்களது யுத்த தளவாடமாக எடுத்துக் கொண்டு, ஆச்சாரியாருடைய சுதந்தராக் கட்சியும், ஆரிய ஏடுகளும் இந்த ஆட்சியைக் கவிழ்க்கக் காரணம் காட்டி, மாணவர்களைத் தூண்டிவிடுகின்றன.
இதற்கு பார்ப்பனரல்லாத இனத்து விபீஷணர்களும் ஆளாகி விட்டிருக்கிறார்கள். ஆச்சாரியாரோடு தி.மு.க. தொடர்பு கொண்ட நேரத்திலும் அது தன்னுடைய கொள்கையை எந்த நேரத்திலும் ஆச்சாரியாருக்கு விட்டுக் கொடுத்ததில்லை.
உதாரணமாக இந்தி எதிர்ப்புக் கொள்கைக்கு ஆச்சாரியாரைத் தன் பக்கம் தி.மு.க. இழுத்து வந்ததே அல்லாமல் சுதந்தரா வழிக்குப் போய்விடவில்லை.
எதிர்காலம் பற்றி மிகவும் அச்சம்
பொதுஉடைமை தத்துவ விஷயங்களிலும் ஆச்சாரியாருக்கு முரண்பட்ட நிலையில்தான் தி.மு.க. நடந்துவருகிறது. தமிழ்ப் பாடமொழி விஷயத்திலும், தான் வகுத்த கொள்கைப்படிதான் உறுதியாக இருந்திருக்கிறதே அல்லாமல், ஆச்சாரியார் கோஷ்டிக்கு கொஞ்சமும் விட்டுக் கொடுக்கவில்லை. இதற்கு ஆதாரம் ஆச்சாரியார் இன்று காங்கிரசுடன் அளவளாவி அதற்குக் கைகொடுப்பதே போதுமானது. அன்றியும் அவர்களது இன்றுள்ள நிலைக்கு எப்படியாவது தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும். 72 தேர்தலில் காங்கிரஸ் ஜெயிக்க வேண்டும்; அது பதவியில் அமரவேண்டும் என்பதேயாகும். மற்றும் காமராஜர் போன்றவர்கள் தாங்கள் முன்பு சொல்லிவந்த சோஷலிசக் கொள்கை, தமிழ்ப் பாட மொழிக் கொள்கை – எல்லாவற்றையும் பார்ப்பனர்களின் காலடியில் வைத்துவிட்டதைப் பார்க்கும்போது எனக்குப் பார்ப்பனரல்லாத மக்களின் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் அச்சம் ஏற்படுகிறது.
தமிழ் மீது எனக்கு தனி வெறுப்பில்லை
தமிழ்மொழி, ஆங்கிலமொழி இரண்டைப் பற்றிய என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆங்கிலம், வளர்ந்த மொழி – விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் – வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம், தமிழ் மொழி – ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ் மீது எனக்குத் தனி வெறுப்பில்லை.
நான் பேசுவதும் எழுதுவதும் தமிழில்தான். தமிழ் எழுத்துகளில் நான் பல சீர்திருத்தங்களை எனது இயக்கப் பத்திரிகையான ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’, ‘உண்மை’ ஆகியவற்றில் புகுத்தியிருக்கின்றேன்.
இதில் புதிய செயல் எதுவும் இல்லை
இன்றுள்ள தி.மு.க. அரசு நெடுநாளைக்கு முன்பு காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது தமிழ் பாடமொழித் திட்டமாக ஆக வேண்டும் என்று எடுத்த முடிவைத் துரிதப்படுத்துகிறதே ஒழிய, இதில் புதிய செயல் ஏதுமில்லை. ஆகவேதான், அதற்கான புதிய சொற்களை, விஞ்ஞான பகுத்தறிவுச் சொற்களைக் கொண்ட புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.
தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையைப் போக்க, சமீபத்தில் அரசாங்க அலுவல்களில் தமிழில் படித்தவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் என முதலமைச்சர் தந்துள்ள உத்தரவாதம் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தமிழ்நாட்டு அரசாங்க அலுவல்களில் நிறைய இடம் கிடைக்கும் என்பதற்கான முன் அறிவிப்பாகும்.
டில்லியில் பார்ப்பன ஆதிக்கம்
ஆங்கிலம் படித்தவர்களுக்கு வெளிமாநில வேலைக்குச் செல்ல முடியும் என்று சொல்லுகிற விதத்தில் பசை இருப்பதுபோல் தோன்றினாலும் அந்த வேலை வாய்ப்புகளை இதுவரை பெற்றிருப்பவர்கள் யார்? இனிமேல் பெறக் கூடியவர்கள் யார்? எப்படியாவது, எதைப் படித்தாலாவது வேலை கிடைக்குமா? என்று பார்த்தால் 100க்கு 90 பேர் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தானே வேலை கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். எப்படி எனில் டெல்லியில் ஆண்டு கொண்டிருக்கின்ற அதிகாரிகளில் பலபேர் பார்ப்பனர்கள்தான். அங்கு, முருகன் கோவிலையும் கட்டி, அதற்கு நமது முதலமைச்சர் கலைஞர் அவர்களையும் அழைத்துக் கொண்டு போய்க் காட்டுகிற அளவுக்கு டெல்லியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள். தமிழ்நாடு அரசாங்க அலுவலகங்களிலும் அவர்கள்தான் நிரம்பியிருக்கிறார்கள்.
நாட்டுக்குப் பெரிய அபாயமாகும்
பொல்லாத வாய்ப்பால் ஆச்சாரியார் கனவு காண்பதுபோல் காங்கிரஸ் பார்ப்பனர் கூட்டணியுடன் ஆட்சிபீடமேற்பட வாய்ப்பு ஏற்பட்டுவிட்டால், பார்ப்பனரல்லாத பிள்ளைகள் என்ன படித்தாலும், என்ன தகுதி இருந்தாலும் பார்ப்பனப் பிள்ளைகளுக்குத்தான் முதல் உரிமை இருக்குமே தவிர, பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு வாய்ப்பு எப்படி இருக்க முடியும்?
இதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாமல் மனதில் வைத்துத்தான் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு நன்மைகள் செய்யும் நோக்கத்தோடு தமிழ்ப் பாடமொழித் திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது என்று கருதுகிறேன்.
இந்த நோக்கத்திற்கு இடையூறாகக் காமராஜர் போன்றவர்கள் வெறும் அரசியல் காரணங்களுக்காகத் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு, மறைமுகமாகப் பார்ப்பனர்களுக்குத் துணை போவது நாட்டுக்குப் பெரிய அபாயமாகும். இதைப் பார்ப்பனரல்லாத மாணவர்கள் நல்ல வண்ணம் சிந்தித்து நடந்துகொள்ள வேண்டுகிறேன்.
( தந்தை பெரியார், ‘விடுதலை’, 1-.12.1970)
(தொடரும்…)