ஆன்மிகம் – ஆலகால விஷம் : ஆன்மிக குருவா? ஆலகால விஷ குருவா? ஜக்கி வாசுதேவன் முகமுடி!

மே 16-31 (2021)

பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன்

ஆன்மிக முகமூடி அணிந்து கொண்டு துறவி எனக் காவியில்லாமல் தாடி மட்டும் வைத்துக்கொண்டு நேரடியாக எந்தப் பக்கம் _ அதாவது ஆர்.எஸ்.எஸ்., காவிகள், சங்கிகள் பக்கம் சாய்ந்து நடுநிலை பிறழ்கிறார் ஜக்கி வாசுதேவ் என்பது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழக மதுரை மத்திய தொகுதி மக்கள் ஆதரவு பெற்ற பாரம்பரியமிக்க, இறை நம்பிக்கையுடைய பி.டி.ராசன் அவர்களின் பெயரன், சீர்மிகு சட்டப் பேரவைத் தலைவராகப் பணியாற்றிய, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரரின் பக்தர் திருமிகு பி.டி.ஆர்.பழனிவேல்ராசனின் மகன் பி.டிஆர்.ப.தியாகராசன் இயல்பிலேயே அமைதியும், பண்பாட்டுடன் கருத்துகளை எடுத்து வைப்பவர். நாகரிகமான அரசியல் பண்பாளர்.

அப்படிப்பட்ட தியாகராசனே வெளிப்படையாக ஜக்கி வாசுதேவின் இந்துத்துவா நஞ்சு போர்த்திய கருத்துகளை விமர்சிக்க நேர்ந்தபோது பலரின் புருவங்கள் உயர்ந்தன.

அவருடைய விமர்சனம் முழுமையிலும் நியாயம், சரி என்பதாக அமைந்தது. தேர்தல் நடைபெற்ற வேளையில் நான்கைந்து அம்சக் கோரிக்கைகளை முன் நிறுத்த அவற்றிற்கெல்லாம் ஆதரவு அளிக்கும் கட்சிக்கே தனது வாக்கு என அறிவித்தார். அதாவது நேரடியாக பி.ஜே.பி., அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளியுங்கள் என்று கேட்கத் துணிவில்லாமல், ஆன்மிக குரு எனும் ஜக்கி வாசுதேவ் தன் பக்தர்களை மறைமுகமாகக் காவிகளை ஆதரிக்க அறிக்கை விட்டார்.

அவருடைய வேண்டுகோளை மேலெழுந்தவாரியாகப் பார்ப்போர், ஆகா! இவரல்லவா ஆன்மிக ஞானி! சமுதாயம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பூமி, பசுமை போற்றுகிறாரே என்று தோன்றவும் செய்யும்.

ஆனால், தம் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிக்குத்தான் என் வாக்கு என்பது உண்மையில் ஒரு தலைப்பட்சமானது.  விதைக்கும் நஞ்சு விதை. நஞ்சு தடவிய தேன் மிட்டாய். பனையளவு விஷமத் தன்மையது. தினையளவு கூட நியாயத் தராசில் நிற்கத் தகுதியற்றது.

நாம் அவருடைய விஷமத் தன்மையை உணர்ந்து கொள்ளப் பெரிய அறிவியல் உண்மை அறியும் அறிவு கொண்டிருக்க வேண்டாம். சாதாரண அறிவு போதும்.

அவருடைய நான்கு அம்சக் கோரிக்கைகளைக் காண்போம்:

முதல் அம்சம்:

தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் உயிர் நாடியாக இருப்பது காவிரி நதி. இந்த நதிக்குப் புத்துயிர் ஊட்டுவதற்கு யார் உறுதி எடுக்கிறார்களோ அவர்களுக்கே எனது ஓட்டு.

தமிழர்கள் ஏமாளிகள் என்று எண்ணி, எலி இன்று புலி வேடமிடுகிறது. அவரிடம் நாம் தொடுக்கும் அடுக்கடுக்கான கேள்விகள் சில:

காவிரியாற்றை அதன் போக்கில் விடாமல், தமிழ் மக்களை வருத்துமாறு செய்திட யார் தடுத்து வைக்கிறார்கள், யார் தமிழகத்திற்குள் தடையின்றி ஓடவிடாமல் தமிழகத்தை வறட்சிக் காடாக்குகிறார்கள்? யார் சேலம், தர்மபுரி மக்களை குடிக்க நீர் இன்றித் தவிக்க வைக்கிறார்கள்?

யார் மேகதாதுவிலே அணைகட்டுவோம், தமிழகம் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்று கச்சை கட்டிக்கொண்டு களமாடுகிறார்கள்? டெல்ட்டா -_ யாரால் நீர்க்காடாகிப் பயிர்கள் அழிகின்றன?

எந்த மாநிலம்? _ கவனிக்க, கருநாடகம். ஜக்கி வாசுதேவ், இந்த வேதாந்தம் பேசிய மாமனிதர் கருநாடகத்தவர். செல்வாக்கு மிக்கவர். அவர் என்ன செய்திருக்கலாம்? உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய நீரைக் கொடுங்கள் என்று சொல்ல வேண்டியதுதானே? அவ்வாறு சொல்ல எது தடுக்கிறது?

தம் தாய்மண் பாசமா? இல்லை, தமிழர்கள் _ குருஜி, குருஜி என்று தன்னை நம்பும் இளித்தவாயர்கள் எனும் எண்ணமா? எது தடுக்கிறது, யார் தடுக்கின்றனர்? நேர்மையாளர் அதை, அதைத் தானே செய்திருக்க வேண்டும்? செய்தாரா? இல்லையே. செய்யவில்லையே

!

இரண்டாம் கூறு:

இயற்கை விவசாயத்தைத் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல யார் உறுதியளிக்கிறார்களோ அவர்களுக்கே என் ஓட்டு.

இன்று 150 நாள்களாக விவசாயப் பெருங்குடி மக்கள் மழை, வெயில், வசதிக்குறைவு எதையும் பொருட்படுத்தாமல் எத்தனையோ இன்னுயிர்களைப் பலி கொடுத்துப் போராடிக் கொண்டுள்ளனர்.

ஆனால், இவர் திருவாய் மலர்ந்து அருளியது,  “மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்கள் மிகவும் அருமையானவை. உணவுப் பொருள்களை எங்கே வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்க விவசாயிகளுக்கு உரிமை வேண்டும். கார்ப்பரேட்டுகளின் உதவியோடு விவசாயத்தை வளர்க்க வேண்டும். இவ்வாறு கூறி ஒளிவு மறைவு ஏதும் இன்றி சற்றும் கூச்சம், வெட்கமின்றி மோடி அரசு நடவடிக்கைக்குக் கட்டியம் கூறினார்.

‘கார்ப்பரேட்டுகளின் உதவியோடு’ என்கிறாரே விவசாயத்தில் அவர்களின் திருவிடையாடலுக்கும் சான்று உளது. கார்ப்பரேட்டுகள் ஏற்கெனவே குளிர்பதனக் கிட்டங்கிகளைக் கட்டிவிட்டனர். அங்கே வைத்துப் பூட்ட விளைபொருள்களை விவசாயிகள் தாம் விளைவித்திட வேண்டும்.

ஏற்கெனவே இத்தகு திருகுதாளங்களை நாடு சந்தித்து இருக்கிறது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் இது. பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் ஏற்கெனவே கோதுமை விளைவித்துத் தருவதற்கு விவசாயிகளிடம் ஒப்பந்தம் போட்டது. பிறகு தரம் சரியில்லை, நிறம் சரியில்லை, என அவர்களை அலைக்கழித்தது. இதுதான் கார்ப்பரேட்டுகளின் திருவிளையாடல்களுக்குச் சான்று.

மூன்றாவது அம்சம்

அரசுப் பள்ளிகளைவிடத் தனியார் பள்ளிகளே திறம்படச் செயல் புரிகின்றன. சிறந்த கல்விக்குத் தனியார் பள்ளிகளே தீர்வு.

உலகமெங்கிலும் கல்வித் துறையை அநேக நாடுகள் தங்கள் கையில் வைத்துள்ளன. அமெரிக்கா, நியூசிலாந்து, பின்லாந்து, கியூபா, அய்ரோப்பா எனப் பல நாடுகள்!

இந்தியாவிலேயே நீதிக்கட்சி, காமராசர் ஆட்சி, திராவிட இயக்க ஆட்சிகளின் விளைவாக வடஇந்தியாவைவிடத் தமிழகத்தில்தான் கல்விக்கான கட்டுமானம் வலிமையாக இருக்கிறது. கல்வியாளர் மட்டுமல்லாது வடஇந்தியர்களே இதை ஒப்புக்கொள்கின்றனர்.

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மட்டுமல்லாது கலைக் கல்லூரிகளில்  படித்த மாணவர்கள் சோடை போய்விடவில்லை.

இன்று இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய முன்னணி நாடுகளில் பணியாற்றும் தலைசிறந்த மருத்துவர்கள், பொறியியலாளர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களாக விளங்குவோரில்  பெரும்பாலானவர்கள் அரசுக் கல்வி நிலையங்களில் பயின்றவர்கள். கல்வி வாய்ப்பு அளிக்கப் பெறாமல் இருந்து வந்த வசதியற்ற சமூகப் பின்னணியில் இருந்தும் வந்தவர்கள்.

யோகியார் உண்மை நிலை இப்படி இருக்க, கல்வியைத் தனியாரிடம் ஒப்படைக்கச் சொல்கிறார். தனியார்கள் என்றால் பச்சையப்பர் போன்ற அறச்சிந்தனையாளர்கள், கல்வியை வணிகமாகத் தொழிலாகக் கொள்ளாதவர்கள் என்றா கூடப் பரவாயில்லை.

கல்விக் கொள்ளையடித்து ஏழு எட்டுத் தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்து, இனியும் சேர்க்க வழியுண்டா என அலைவோருக்குக் ‘கல்வித் தந்தை’!களுக்கு வக்காலத்து வாங்குகிறார்.

யோகி  உண்மையான அக்கறை உடையவராயிருந்தால் தம் ஆசிரம செல்வத்தை அரசுப் பள்ளிகளுக்கு இருக்கைகள், வகுப்பறைகள், கணினிகள், நூலகம், ஆய்வுக்கூடம், கழிப்பறைகள், உணவு என வழங்கி மேம்படுத்தினாலாவது பாராட்டலாம். சிவராத்திரி என்று பெண்களோடு நடனமாடி விட்டு, வசதியற்ற மாணவர்களுக்குக் குறைந்தது கல்விக் கட்டணமாவது கட்ட முன் வந்திருந்தால் கூட பாராட்டலாம்.

நான்காவது அம்சம்:

நான்காவது அம்சம்தான் யோகியார் பச்சை ஆர்.எஸ்.எஸ்., காவிகளின் ஊதுகுழல் என்பதை வெளியாக்குவது.

கோயில்களை அரசாங்கமே நிருவகிப்பது அவமானம். அனைத்துக் கோயில்களையும் பக்தர்களிடம் கொடுத்து விடவேண்டும். அதற்காகப் புதிய கொள்கைகளை உருவாக்கிச் செயல்படுத்துபவர்களுக்கே எனது ஓட்டு.

1920க்கு முன்னர் கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாக இருந்தன. கோயிற் பெருச்சாளிகள் கோயில் சொத்துகளைக் கபளீகரம் செய்து வந்தனர். “மாடு தின்னும் புலையா உனக்குக் கோயில் ஒரு கேடா” என்று ஏகடியம் பேசி வாரிச் சுருட்டி விட்டு வெளியில் பேசும்போது மட்டும் கோயில் சொத்து குலநாசம் என்று பேசினர்.

நீதிக்கட்சியின் சாதனை என்றால் இன்றும் பேசப் பெறுவதாவது இந்து அறநிலையத் துறைச் சட்டம்தான்.

அரசிடம்கூட அல்ல, ‘இந்து அறநிலையத் துறை’ எனும் துறையின் கீழ் இந்துக்களாலேயே நிருவகிக்கப்படும் துறையே கோயில்களை நிருவகிக்கிறது. அது மட்டுமல்ல, ஆலயங்களில் யார் நுழையத்தகாதவர்கள் என்று தடுக்கப் பெற்ற தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட இந்துக்கள் இன்று ஆலயங்களில் அறங்காவலர்கள். இன்னும் சொல்வதானால் மனித சமுதாயத்தில் பாதியாக உள்ள மகளிர் ஆலயங்களில்

அறங்காவலர், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையாளர், நிருவாக அலுவலர் எனப் பணியாற்றுகின்றனர்.

இதெல்லாம் எச்.ராஜா போன்ற எச்சைகளுக்குக் கண்ணை உறுத்தியது. கோயில்களைத் தனியாரிடம் விட்டுவிட வேண்டும். அதாவது பார்ப்பனிய ஆதிக்கத்தின் கீழ் கொணர வேண்டும் என விடுத்த கோரிக்கையைத்தான் யோகியார் எதிரொலிக்கிறார்.

இந்து அறநிலையத் துறை வரலாற்றைத் தெரிந்து கொண்டால் ஜக்கி வாசுதேவின் இந்த நான்காம் அம்சத்தையே காறி உமிழ்வர்.

எப்போதெல்லாம் ஆலயங்கள் அரசிடம் இல்லாமல் கோயிற் பிணாக்கள் வசமிருந்தனவோ அப்போதெல்லாம் அவற்றின் சொத்துக்கள் களவு போயுள்ளன.

நீதிக்கட்சி அரசு கோயில் கொள்ளையை, வாரிச் சுருட்டலைத் தடுத்துக் காத்திட இந்து அறநிலைய வாரியம் ஒன்றைக் கொணர்ந்தனர். பிறகு அது சீரமைக்கப் பெற்று இந்து அறநிலையத் துறை ஆனது. கோயில்களைச் சுரண்டிக் கொழுத்தவர்கள், ஆதிக்கச் சக்திகள் வாளாயிருக்குமா? எதிர்ப்பைக் கக்கின. சொத்து  ஆவணங்களை மறைத்துத் தனியுடைமை ஆக்கவும் செய்தன.

ஓமந்தூரார், ராஜாஜி, காமராசர், பக்தவத்சலம் ஆகிய முதல்வர்கள் இத்துறையை வலுவாக்குவதிலே கவனம் செலுத்தினர். தீண்டாமையின் தீ நாக்குகள் தனியார் வசமிருந்த கோயில்களில் தலைவிரித்தாடின. அரசு வசம் வந்த பின்னே அனைவரும் ஆலயங்களில் நுழையும் சமத்துவம் வந்தது. ராஜாஜி குறிப்பிட்டார், “என் வாழ்வின் முதன்மைக் குறிக்கோளை நிறைவேற்றினேன்’’ என்றாரே – அனைவரும் ஆலய நுழைவுச் சட்டம் நிறைவேற்றிய பின்.

ஒன்றும் வேண்டாம். இந்த ஓர் எடுத்துக்காட்டு – சமீபத்திய எடுத்துக்காட்டு போதும். ஜக்கியின் கோரிக்கை எவ்வளவு அபத்தம் என்பதற்கு. தனியார்வசம் – தீட்சதர்கள் வசமிருந்ததற்கும் அரசு நிருவாகத்தில் இருந்ததற்கும் இடைப்பட்ட காலத்தில் கோயில் உண்டியல் வருவாய்க் கணக்கு போதும்.

மக்களிடையே வேற்றுமையைக் களைந்து ஒற்றுமை நிலவிட வலியுறுத்தி அதற்கெனக் கருத்துச் செலுத்தாமல் காவிகளின் கொடியை துறவிகள் என்போரும் ஏந்துவது கண்டனத்துக்குரியது.

நல்லவேளையாக தி.மு.கழக அரசு மலர்ந்திருக்கிறது. காவிகளின் எந்த மோசடித் திட்டமும் அரங்கேறாது என உறுதியாக நம்பலாம். சான்று – கடந்த காலக் கழக அரசின் செயல்பாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *