கவிஞர் கலி.பூங்குன்றம்
எந்த விலை கொடுத்தேனும் தி.மு.க.வைத் தோற்கடித்தே தீருவது என்பதில் அடேயப்பா, பார்ப்பனர்கள் மத்தியில் பீறிட்டு எழுந்த அடங்கா கோபக்கனல் – ஆத்திரத் தீ தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவந்த பிறகும் தணியவில்லை.
தி.மு.க. சரியான தேர்ந்தெடுத்த பாட்டையில் பயணம் செய்கிறது என்பதற்கு இதைவிட சான்றுப் பட்டயம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.
தினமலரான திரிநூல் ஏட்டின் அகழ்வாராய்ச்சி என்ன தெரியுமா? மக்களவைத் தேர்தலைவிட சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்குக் குறைந்த சதவிகிதத்தில்தான் வாக்குகள் கிடைத்திருக்கின்றன என்று எழுதுவதில் ஓர் அற்ப சந்தோஷ குதியாட்டம்!
‘துக்ளக்’கில் குருதி ஓட்டம் என்ன தெரியுமா? வாக்கு எண்ணிக்கையின்போது தி.மு.க.வைவிட அ.தி.மு.க. பல இடங்களில் வாக்குகள் அதிகம் பெற்றிருந்ததாம் – கடைசிவரை இழுபறியில் இருந்துதான் தி.மு.க. வெற்றி பெற்றதாம் – இந்த வெட்கங்கெட்ட வெங்கண்ண பரம்பரையினரை எது கொண்டு சாற்ற?
234 சட்டமன்ற தொகுதிகளில் 133 இடங்கள் அறுதிப் பெரும்பான்மை தி.மு.க.வுக்கு என்ற அட்சரம் கூடத் தெரியாத கணித பு(ளி)லிகளா இதுகள்?
159 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி வாகை சூடியுள்ள நிலையில், அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வென்ற இடங்கள் 75.
தி.மு.க. கூட்டணி பெற்றதைவிட பாதிக்கும் கீழ்தான் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி என்பதை ஒப்புக்கொள்ளும் அறிவு நாணயமில்லை. ஆத்திரமும், துவேஷமும் அலையாகப் புரண்டு கண்களை மறைக்கின்றன!
இப்பொழுது அவாளின் அடிவயிற்றில் பற்றிக்கொண்டு எரிவது எல்லாம் தி.மு.க.விடமிருந்து விலகி நில்லுங்கள் – தி.க. தலைவர் வீரமணியிடம் உள்ள தொடர்பைத் துண்டித்துக் கொள்ளுங்கள் என்று விழுந்து விழுந்து ‘துக்ளக்’குகள் – குருமூர்த்திகள் குப்புறப்படுத்துக்கொண்டு எழுதியதெல்லாம் வீணாய், பழங்கதையாய் போயே போச்சே என்ற புலம்பலும், புகைச்சலும்தான் – அவர்களைப் புரண்டு புரண்டு படுக்க வைத்திருக்கிறது.
எங்கள் கொள்கைப் பயணத்தை நிர்ணயம் செய்வது பெரியார் திடல்தான் என்று தி.மு.க. தலைவர் பிரகடனப்படுத்தியது எல்லாம் – அக்கிரகாரத்தின் ஈரக் குலையை நடுநடுங்கச் செய்கிறது.
‘பிராமண சங்கம்’ வெளிப்படையாக அ.தி.மு.க.வுக்கே ஆதரவு என்று தீர்மானம் வேறு போட்டு விட்டார்கள் அல்லவா! உள்ளுக்குள் அதுதான் உறுதியான நிலை என்றாலும், வெளிப்படையாகத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்க வேண்டுமா என்று பின் புத்தியாக யோசிக்கிறார்கள்.
பார்ப்பானுக்குத்தான் எப்பொழுதும் முன் புத்தி கிடையாதே – அண்ணல் அம்பேத்கர் சொல்லவில்லையா? ‘‘பார்ப்பனர்கள் படித்தவர்களே தவிர, புத்திசாலிகள் இல்லை’’ என்பாரே! (Learned But Not Intelligent) அதை ஒவ்வொரு கட்டத்திலும் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உப்பு தின்ன அளவுக்குத் தண்ணீர்க் குடித்துத்தானே தீரவேண்டும்.
பாரதீய ஜனதா கட்சியைப் பொருத்தவரை அதற்குக் கிடைத்திருக்கிற மரண அடி – படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே நீண்ட காலம் தேவைப்படும்.
செல்வி ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலிருந்து என்னென்ன திட்டமெல்லாம் தீட்டினார்கள். சாணக்கியத்தனம் எல்லாம் செய்து பார்த்தார்கள்.
வெங்கையா நாயுடு அவர்கள் (இன்றைய குடியரசுத் துணைத் தலைவர்) அப்பல்லோ மருத்துவமனையில் அடுகிடையாகக் கிடக்கவில்லையா – ‘மந்திராலோசனை’களை நடத்திடவில்லையா?
சசிகலா முதலமைச்சராகத் தேர்வான நிலையில், ஆட்சி அமைக்கக் கோருவார் என்றபோது – ஆளுநர் சிக்கினாரா?
தங்களின் கை அடக்கமாக உள்ள ஒருவரை முதலமைச்சராக்கி, குதிரைச் சவாரி செய்யலாம் என்று குள்ள நரித்தந்திரங்களில் ஈடுபடவில்லையா?
நினைத்தவை எல்லாம் நிராசையாகி விட்ட நிலையில், அ.இ.அ.தி.மு.க. இரு பிரிவினரையும் கைகளைப் பிடித்து இணைப்பு வேலையைச் செய்யவில்லையா? இதுதான் ஓர் ஆளுநருக்கான ‘சபாஷ், சபாஷ்!’ பணியா?
சரி, தேர்தல் அறிவித்தாகிவிட்டது. அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. எப்படியெல்லாம் சட்டாம் பிள்ளைத்தனம் செய்தது. அதிகப்பிரசங்கித்தனமாக ஆணவ எல்லைக்குச் சென்று ஆடிப்பாடியது.
முதலமைச்சர் யார் என்று நாங்கள்தான் முடிவு செய்வோம் என்கிற அளவுக்கு எகிறினார்களே! அடிமைச் சேவகம் புரிய அ.இ.அ.தி.மு.க. தயாராகி விட்ட பிறகு (மடியில் கனமாயிற்றே!) அவர்கள் காட்டில்தானே அடைமழை!
இப்பொழுதுகூட அ.இ.அ.தி.மு.க. எதிர்க்கட்சிக்குத் தள்ளப்பட்டு விட்டது. பா.ஜ.க.வின் மகளிர் அணியின் தேசிய செயலாளரும், கோவை சட்டப்பேரவை தொகுதியில் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற முறையில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி வானதி சீனிவாசன் செய்தியாளர்களின் சந்திப்பின்போது, ‘எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை பா.ஜ.க. முடிவு செய்யும்?’’ என்கிறாரே!
கழகம் இல்லாத ஆட்சியை அமைப்போம் என்றெல்லாம் கதை விட்டார்களே, கடைசியில், திராவிட முத்திரையைக் குத்திக் கொண்டுள்ள அ.இ.அ.தி.மு.க.வின் வராண்டாவில் நிற்க வேண்டிய நிலைதானே! 20 இடங்களில் பெற்ற இடங்கள் வெறும் நான்கே நான்குதானே!
2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வீம்புக்காக கூட்டணியில்லாமல் தமிழ்நாட்டில் 157 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. பெற்ற இடம் பூஜ்ஜியம்! பூஜ்ஜியம்!! பூஜ்ஜியம்!!! டெபாசிட்டை பெற்ற இடங்களும் பூஜ்ஜியம்! பூஜ்ஜியம்!! பூஜ்ஜியம்!!! தானே!
கடைசியில் நிலைமை என்ன? ‘‘உடும்பு வேண்டாம், கை வந்தால் போதும்’’ என்ற நிலையில்தானே ஒரு கழகத்தின் கண் பார்வை கடாட்சத்திற்காகக் காத்திருந்து காத்திருந்து 20 இடங்களைப் போராடிப் பெற்று, கடைசியில் வென்ற இடங்களோ நான்கே நான்கு!
பிரதமர் நேரில் வந்து முழங்கியும், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கரையேற முடியவில்லை. மேனாள் மத்திய அமைச்சர்
திரு.பொன்.இராதாகிருஷ்ணன் மீண்டும் மீண்டும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தோல்வியைப் பரிசாகப் பெறுகிறார். மேனாள் தேசிய செயலாளர் வாய்த் துடுக்கால் வம்பை விலைக்கு வாங்கும் ஒரு பேர்வழி சொந்தத் தொகுதியிலேயே சோபிக்க முடியவில்லை. இந்தியா முழுவதுமே பா.ஜ.க.வுக்கு எதிரான பேரலை பொங்கி எழுந்துவிட்டது.
ஹிந்துக்கள் என்ற போர்வையில் பெரும்பான்மையினரின் வாக்குகளை வசீகரமாகத் தங்கள் வலைக்குள் சிக்க வைத்துக் கொள்ளலாமே என்ற வஞ்சக வலை கிழித்தெறியப்பட்டு வருகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் ஹிந்துக்கள்தானே! அவர்களின் ஆதார உயிர்ச் சுருதியான கல்வி, வேலை வாய்ப்புகளுக்கான இட ஒதுக்கீட்டை மறுப்பது ஏன்? இந்தியாவில் மக்கள் தொகையில் அதிகம் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றத்திலே கறாராகச் சொல்லுவது ஏன்?
சிறுபான்மை மக்களைச் சீண்டுவதையே தன் அன்றாடத் தொழிலாகச் செய்துகொண்டு இருக்கவில்லையா? பா.ஜ.க. சார்பில் சட்டமன்றமாக இருந்தாலும் சரி, மக்களவையாக இருந்தாலும் சரி அவர்களில் ஒரே ஒருவரைக் கூட பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக நிறுத்த மறுப்பது ஏன்?
குடியுரிமைத் திருத்த சட்டத்தின் பின்னணி என்ன? முஸ்லிம் பெயர்கள் ஊர்ப் பெயர்கள், சாலைகளின் பெயர்களைக் கூட மாற்றி அமைக்கும் வெறி எதைக் காட்டுகிறது?
ஆம். இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் தலித், மக்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், சிறுபான்மையினரும் தானே வெகுமக்கள் – பகுஜனங்கள்! அவர்களுக்கு எதிரான – பார்ப்பன ஆதிக்க வெறியோடு ஆட்சி அதிகார காய்களை நகர்த்தும் பா.ஜ.க.வின் பாசிசத்தைப் புரிந்துகொண்டு வருகின்றனர்.
‘ஹிந்துக்களே ஒன்று சேர்வீர்!’ என்பதெல்லாம் மாய்மால திரை – உண்மையிலேயே ஹிந்துக்களில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு மன ரீதியாகவும், செயல் ரீதியாகவும் வெடிகுண்டு போல எதிரானது பா.ஜ.க. – சங் பரிவார் என்பது பட்டவர்த்தனமாகிவிட்டது!
தந்திரங்களும், வசீகரங்களும், வக்கணைப் பேச்சுகளும், வலை விரிப்புகளும், வஞ்சகங்களும் வேலைக்காகாது என்பது நாளும் நடைபெறும் நிகழ்வுகளும், தகவல்களும் தம்பட்டம் அடித்துப் பறை சாற்றுகின்றன.
உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ.க.வின் உத்தரப்பிரதேசத்தில் அதிலும் குறிப்பாக பிரதமர் மோடியின் வாரணாசிக்கு உட்பட்ட தொகுதியில், இராமன் கோவில் கட்டும் அயோத்தி வட்டாரத்தில் வீழ்ந்துவிட்டனவே – இதன் விளக்கம் என்ன?
அழிவு காலம் நெருங்கிவிட்டது என்ற ‘அலாரம்’ அடிக்கடி ஆரம்பித்துவிட்டது ‘டமாரத்தின்’ சத்தமும் கேட்கத் தொடங்கிவிட்டது.
பா.ஜ.க.வின் பாதந்தாங்கிய கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க. – அதன் வினையை அறுத்துத் தீர்த்துவிட்டது ; தினை விதைத்தால் தினையைத்தானே அறுவடை செய்ய முடியும்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’டுக்கு எதிரான இரு மசோதாக்களுக்குத் தண்ணீர் காட்டிவிட்டதே – அ.இ.அ.தி.மு.க.வின் அதிமுக்கிய கூட்டணியான மத்திய பா.ஜ.க. ஆட்சி.
அந்த மசோதாக்களுக்கான அனுமதியை குடியரசு தலைவர் நிராகரித்த தகவலைக் கூட அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிவிக்காமல் மறைத்துவிட்டதே!
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குரைஞர் கூறிய பிறகுதானே குட்டு வெளிப்பட்டது!
முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்தார்? தமிழ்நாட்டுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெளி மாநிலத்தவர்களும் எழுதலாம்; தமிழ் தெரியாதவர்களும் பங்கு கொள்ளலாம் என்று விதியில் திருத்தம் செய்து தமிழக இளைஞர்களின் எதிர்கால வாழ்வில் இடியைப் போடவில்லையா?
செம்மொழி நிறுவனத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, மத்திய பா.ஜ.க.வோடு ஜோடி சேர்ந்து சிதைத்து முடிக்கவில்லையா?
பட்டியலிட்டால் ஏடு தாங்காது.
எல்லா வகையிலும் பா.ஜ.க.வும் – அ.இ.அ.தி.மு.க.வும் நகமும், சதையுமாக இருந்து தமிழ்நாட்டை கழுதை புரளும் குட்டிச் சுவராக்கிவிட்டனர்.
இதையெல்லாம் கருத்தில் வைத்துதான் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் – உண்மையான சமுதாயக் கொள்கைகளையும் உடைய திராவிட இயக்க அரசியல் கட்சி தி.மு.க. தான் – ஆட்சி நடத்தும் வல்லமை உள்ளவர் தளபதி மு.க.ஸ்டாலின்தான் என்று வாக்குகளை அளித்து ஆட்சிப் பீடத்தில் அமர வைத்துள்ளனர்.
சோதனையான காலகட்டம்தான்; அணிந்திருப்பது முள் கிரீடம்தான். சென்னை பெருநகர மேயராகவிருந்த போதும் சரி, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக இருந்தபோதும் சரி, அவரது நிருவாகத் திறனை ஆளுமைத் திறனை நாடு கண்டதுண்டு.
தமிழ் மண் தந்தை பெரியார் மண் – பார்ப்பனரே இல்லாத சட்டமன்றம் இது என்பதால், பெரியார் மண் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு விட்டது.
இந்தத் திராவிட இயக்க மண்ணில் திராவிட மரபோடு – நல்லாட்சி நல்குவார் என்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் பேரார்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டே இருக்கின்றனர்.
அவர் வெல்வார்!
ஆம் திராவிடம் வெல்லும்!