வாசகர் மடல்

மே - 01-15 (2021)

வணக்கம்.

‘உண்மை’ ஏப்ரல் 1-15, 2021 படித்தேன். அது பற்றி எழுதுகிறேன்.

‘நீட்’ என்ற கொடுவாள் வெட்டிக் கொன்ற பிள்ளைகள் 15க்கு மேல் ஆன பிறகும் அரசு ஆணவத்தைக் குறைத்து ‘நீட்’டிலிருந்து விலக்கு இல்லவே இல்லை என்னும் கல்வி உரிமையைப் பற்றி எழுதியுள்ள கட்டுரை அருமை.

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து அய்.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காமல் பச்சைத் துரோகம் செய்திருக்கிறது என்பதை முகப்புக் கட்டுரையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது சிறப்பு.

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தின் 37 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் இடம் பெற்றுள்ள தமிழகப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 24 என்கின்ற தகவல்கள் மக்களுக்கு பரப்பப்பட வேண்டியவை. உண்மையின் பக்கங்கள் அத்தனையும் மக்களுக்கு பகுத்தறிவை வளர்க்கக் கூடியது.

– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி


 

கடந்த மார்ச் 16-31 இதழின் முன் அட்டைப் படம் சனாதனவாதிகளை நிலைகுலைய வைத்திருக்கும். உச்சநீதிமன்ற நீதிபதியின் வக்கர புத்திக்கு பெண்கள்தான் புத்தி புகட்ட வேண்டும். பா.ஜ.க. என்பது உயர்ஜாதிப் பார்ப்பனர்களுக்காகவே நடத்தப்படும்  நிறுவனம் என்று ஒரு பக்கக் கட்டுரை எடுத்துக் காட்டுகிறது. ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ – 1995இல் உ.பி. முதல்வர் செல்வி மாயாவதி அம்மையார் அவர்கள் தஞ்சை பெரியார் – மணியம்மை பொறியியல் கல்லூரிக்கு வந்தபோது ரூ.10 லட்சம் வழங்கியது பெரியார் கொள்கையால் ஈர்க்கப்படும் – ஆசிரியரின் அன்புக்குமானது.

1964இல் பெரியார் 86ஆவது பிறந்த நாள் மலருக்காக, ஆசிரியர், கவிஞர் கண்ணதாசனை கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் 24 வரி கொண்ட கவிதை வரிகளை எழுதிக் கொடுத்ததும் அதில் ஒரு திருத்தமாக “அவர் தமக்கே உண்டு’’ என்ற இடத்திலுள்ள ‘தமக்கே’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு அவர் ‘தடிக்கே’ என்று திருத்தி எழுத வைத்ததும் கண்ணதாசன் மறுக்காமல் திருத்தி எழுத அனுமதித்ததும், ஆசிரியரிடம் கொண்ட கொள்கைப் பிடிப்புக்கும் நற்சான்று.

வரலாற்றை (பாதுகாப்போம்) உண்மையை, கொள்கையை மதிப்போம்! அவர்கள் வழி செல்வோம்! கொள்கையைப் பரப்புவோம்! ஆசிரியருக்கும் உண்மைக்கும் வாழ்த்துகள்!

– மு.உலக நம்பி, வாழப்பாடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *