“பெரியார் விருது” பெற்ற இயக்குநர் கரு.பழனியப்பன் உரை
நேரம் இல்லை என்பவர்கள் தந்தை பெரியாரையும் – கலைஞரையும் நினைத்துக் கொள்ளுங்கள்
“பெரியார் விருது” பெற்ற இயக்குநர் கரு.பழனியப்பன் உரை:
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 27ஆம் ஆண்டு திராவிடர் திருநாள் விழா 16.1.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. விழாவில் ‘பெரியார் விருது’ பெற்ற இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்கள் உரையாற்றுகையில்,
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ளவர்களைப் பற்றி ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.காரர்கள் புரிந்து கொண்டார்கள்; ஆனால், அவர்களுக்கு விளங்காத ஒன்று தமிழ்நாட்டில் உள்ளவர்களைப் பற்றித்தான். அவ்வளவு பேரும் சாமி கும்பிடுகிறார்கள், அதில் ஒன்றும் குழப்பமில்லை. ஆனால், பெரியாரைப் பற்றி ஏதாவது சொன்னால், கோபப்படுகிறார்களே என்று நினைக்கிறார்கள்.
இந்த இயக்கத்தில்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. பெரியார் என்ன செய்தார் என்று அவர்களுக்குத் தெரியும் _ இத்தனை ஆண்டு காலத்தில்.
திராவிடம் என்ன செய்தது? என்று திரும்பத் திரும்பக் கேட்கிறார்களே, இங்கே துணைத் தலைவர்கூட கேட்டார், திராவிடம் என்ன செய்தது? என்று கேட்கிறார்கள் என்று.
திராவிடம் என்ன செய்தது தெரியுமா? எல்லோரும் மேடையில் அமர்ந்திருக்கும் பொழுது, விருது பெறுபவர்களை ஓரடி முன்பாக நாற்காலியில் அமர வைத்தார்களே, அதுதான் திராவிடம் செய்தது.
இதுபோன்று ஒரு நாளும் சங்கராச்சாரியார் கூட்டங்களில் நடைபெறவே நடைபெறாது. அரை அடி மேலேதான் அமர்ந்திருப்பார் சங்கராச்சாரியார்.
இன்றைக்கு யாரெல்லாம் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்கிறார்களோ, அவர்கள் எல்லோருடைய பெயர்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், அய்ந்தாண்டுகளுக்குப் பிறகு இங்கே வரவில்லை என்றால், என்னைக் கேளுங்கள்.
காரணம், அவர்கள் இன்னும் துரோகத்தைச் சந்திக்கவில்லை. அப்படிச் சந்தித்தால்தான், அவர்களுக்குப் புரியும், ஆகா, நாம் தவறு செய்துவிட்டோமே என்று.
‘பெரியார் விருதி’னை ஆசிரியர் கைகளால் பெறுவது எனக்குப் பெருமகிழ்ச்சி.
போஸ் வெங்கட் அவர்கள், இயல்பாக, ஆசிரியர் மூத்தவர் என்கிற காரணத்தினால், அவர் பொன்னாடை அணிவிக்கும்பொழுது, கொஞ்சம் குனிந்து வாங்கினால், ஆசிரியருக்கு சவுகரியமாக இருக்கும் என்று நினைத்தார். ஆனால், அதைக் கூடப் பொறுக்க முடியாத ஆசிரியர், இல்லை, இல்லை, விருது வாங்கும் நீங்கள் குனியக்கூடாது; நிமிர்ந்து நில்லுங்கள் என்று சொன்னாரே, அதுதான் முக்கியம்.
ஆசிரியரின் கையால் விருது வாங்குவது மகிழ்ச்சி; எம்.ஆர்.இராதா மன்றத்தின் பெயரில் அமைந்திருக்கும் அரங்கத்தில் வாங்குவது மகிழ்ச்சி; பெரியார் திடலில் வாங்குவது மகிழ்ச்சி என்று வரிசையாக மகிழ்ச்சிப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.
எதனால் இவ்வளவு மகிழ்ச்சி என்றால், நான் பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறேன். சிறப்பாக இருக்கிறேன். ஆனாலும், பொங்கலுக்கு ஊருக்குப் போகும்பொழுது _ எப்பொழுதுமே பொங்கலுக்காக அய்ந்து நாள்களுக்கு முன்பே மதுரைக்குச் சென்று விடுவேன். இந்த ஆண்டு நான் ஊருக்குப் போகாததற்குக் காரணம், இந்த விருதை வாங்குவதற்காகத்தான் இங்கே இருக்கிறேன்.
அப்படி நான் பொங்கலுக்கு ஊருக்குப் போகும் பொழுது, என்னுடைய பாட்டி காலில் விழும்பொழுது, 50 ரூபாய் கொடுப்பார். எத்தனை லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கினாலும், பொங்கலுக்கு பாட்டி காலில் விழுந்து 50 ரூபாய் வாங்குவது என்பது பெருமகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று.
அதுபோல, வேறு எங்கு விருதுகளை வாங்கினாலும், பெரியார் திடலில், ஆசிரியர் கைகளால், பெரியார் பெயரால் வாங்கும் விருதுதான் மிகவும் முக்கியமானது.
எந்த எந்தப் பெயரிலோ விருதுகளை அறிவித்து, விருது அளிக்கிறார்கள். ஆனால், அதெல்லாம் விருதாகுமா? பெரியார் விருதுதான், மிகவும் சிறப்பானது.
இந்த விருது எனக்கு அச்சமூட்டுகிறது என்றார் போஸ் வெங்கட். இதற்காக அச்சப்படவேண்டியதில்லை _ செய்கின்ற வேலையை, இன்னும் கொஞ்சம் வேகமாகச் செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். ஆகவே, இது நம்மை உற்சாகமூட்டக் கூடிய விருதுதான். இது நமக்குப் பெரியார் சொல்லிக் கொடுத்தது.
பெரியார், பெரியார் என்று ஏன் நாம் திரும்பத் திரும்பச் சொல்கிறோம் என்றால், இங்கே உரையாற்றும்பொழுதுகூட போஸ் வெங்கட் சொன்னார், ‘‘எங்கப்பா ஊட்டி ஊட்டி வளர்த்தார்; பெரியார், பெரியார் என்று சொல்லி வளர்த்தார்’’ என்று. எனக்கு அதுபோன்று சொல்லியே வளர்க்கவில்லை. என்னுடைய தாத்தாவும், அய்யாவும், நாள்தோறும் விடியற்காலை 4:30 மணிக்கு எழுந்து, அவர்களே காபி போட்டு குடித்துவிட்டு, திருவாசகம் பாடுவார்கள். நான் அவர்களோடு தூங்கும்பொழுது, திருவாசகம் கேட்டுத்தான் எழுந்திருப்பேன். ஒரு நாளும் திருவாசகம் பாடாமல் இருந்ததில்லை அவர்கள்.
ஆனால், எப்பொழுதாவது, எங்கேயாவது, எவராவது வீட்டிற்குள் பெரியாரைப்பற்றி எதிர்க் கருத்து சொன்னால், ‘‘அப்படிப் பேசக்கூடாது; அவரைப்பற்றிப் பேச உனக்குத் தகுதி கிடையாது’’ என்பார்.
என்னுடைய அப்பாவிற்கு திருவாசகம் பாடுவது எவ்வளவு முக்கியமோ _ அதைவிட முக்கியம் பெரியாரை ஒருவன் எதிர்த்துப் பேசினால், அவர்களைக் கண்டிப்பது தான்.
பெரியார் தடித்தனமாகத்தான் பேசுவார்; அது உனக்குப் புரியாது. உனக்குத் தோல் தடித்தனமாக இருக்கிறது, ஆகவே, அவர் தடித்தனமாகப் பேசுகிறார் என்பார்.
இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டுத்தான் நான் வளர்ந்தேன்.
என்னுடைய வாழ்வில் என்னவெல்லாம் நல்லது நடந்தது; நான் என்னென்ன செய்தேன். ஒரு ஜாதி மறுப்புத் திருமணத்தை என்னுடைய குடும்பம் மிக இயல்பாக ஏற்றுக் கொண்டதற்கான காரணம் பெரியாரின் கொள்கைதான்.
அன்றைக்குக் காதலியாகவும், இன்றைக்கு மனைவியாகவும் இருக்கின்ற அந்தப் பெண்ணிடம் நான் அன்றைக்குப் பேசும்பொழுது ஒரு விஷயத்தை முடிவு செய்தோம். என்னுடைய பெற்றோரும், அவருடைய பெற்றோரும் சம்மதித்தால்தான் எங்களுடைய திருமணத்தைச் செய்து கொள்ளவேண்டும் என்று.
நாங்கள் இருவரும், மாறி மாறி எங்களுடைய வீட்டில் பேசினோம். உரையாடலுக்கான இடம் ஏற்படுத்திக் கொடுத்தது யார் என்றால், பெரியார்தான்.
பெரியாரைப் படிக்காத வீட்டில் இதுபோன்று செய்ய முடியாது. ஒருவன்தான் பேசுவான்; இன்னொருவன் கேட்பான். எவன் வலுவாக இருக்கின்றானோ, எவன் பணம் சம்பாதிக்கின்றவனாக இருக்கின்றானோ அவன்தான் பேசுவான்; இன்னொருவன் கேட்பான்.
அப்படியில்லை. யாராயிருந்தாலும் பேசலாம்; அந்தக் கருத்தை கேட்பது மிகவும் முக்கியம் என்ற கருத்தை தந்தை பெரியார்தான் இந்த நாட்டுக்குச் சொல்லிக் கொடுத்தவர்.
ஒருவர் எவ்வளவுதான் எதிர்க்கருத்தைப் பேசினாலும், பரவாயில்லை, இங்கே வாங்க தம்பி, என்று அருகில் அமர வைத்து, அவனுடைய கருத்தைக் கேட்பார். ஏனென்றால், தந்தை பெரியாரிடம் எல்லாவற்றுக்கும் பதில் இருக்கிறது.
இன்றைக்குப் பதில் இல்லாததினால்தான், எதிர்க்கருத்தைப் பேசாமல் இருக்கிறார்கள். இன்றைக்கு பி.ஜே.பி.க்காரர்கள் எதிர்க்கருத்து பேசாமல், உடனே கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். சோசியல் மீடியாவில் நாம் ஏதாவது சொல்ல ஆரம்பித்தால், அவர்கள் கெட்ட வார்த்தையைப் பதிவு செய்வார்கள் அல்லது ‘பாரத் மாதா கி ஜே’ என்று முடிப்பார்கள். அவனுக்குத் தெரியாது, இரண்டுமே கெட்ட வார்த்தை என்று.
2021 ஜனவரி 14ஆம் அன்றைக்கு ஒரு குருமூர்த்தியால், சாக்கடை என்று பேச முடிகிறது என்றால், இவர்கள் போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பெரியாரையும், அண்ணாவையும் என்ன பாடுபடுத்தி யிருப்பார்கள் என்பதை நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள்.
இன்றைக்கு நம்மாள் பதில் சொல்வதற்குக் கீழே நிற்கிறான். அப்படி பதில் சொல்கின்ற இந்தக் காலகட்டத்திலே, குருமூர்த்தி போன்றவர்கள் இப்படி பேசுகிறார்களே, அன்றைக்கு அப்படி பதில் சொல்கின்றவர்களே இல்லாத பொழுது, எவ்வளவு பாடுபட்டு இருப்பார்கள்; இந்தக் கிழவனார் எவ்வளவு பாடுபட்டு இருப்பார். எனக்கு அதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கும்.
எப்பொழுதாவது, எவராவது எனக்கு நேரமில்லை என்று சொல்பவர்களிடம் நான் சொல்வேன், ‘‘நீங்கள் இரண்டே இரண்டு பேரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; ஒன்று பெரியார், இன்னொருவர் கலைஞர். அவர்களுடைய படங்களை வாங்கிப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். எப்பொழுதாவது உங்களுக்கு நேரம் இல்லை என்று நினைத்தீர்களேயானால், அந்தப் படங்களை எடுத்துப் பாருங்கள்; 95 வயது வரைக்கும் இவர்களுக்கெல்லாம் நேரம் இருந்திருக்கிறது; நமக்கு மட்டும் எப்படி நேரமில்லாமல் போகும்? அதே 24 மணிநேரம்தான்” என்று சொல்வேன்.
இவ்வளவு வேலை பார்த்து, இவ்வளவு சுற்றுப்பயணம் செய்து, இவ்வளவு படித்து, இவ்வளவு எழுதி, அவ்வளவையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றால், அது எப்படி அவர்களால் முடிந்தது?
இயக்குர் ஞானராஜசேகரன் அவர்களிடம் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தபொழுது, ஆசிரியரைப்பற்றி சொன்னார்.
Meticulous Administrator
‘‘அவர் அரசியல், இயக்கம் என்ற பணிக்குச் சென்று விட்டார். அப்படியில்லாமல் இருந்திருந்தால், அவர் அரசுப் பணிக்குச் சென்றிருந்தால், Meticulous Administrator (நுட்பமான நிருவாகத் திறன் கொண்டவராக) மிக பிரமாதமாக வந்திருப்பார்’’ என்றார். எல்லா தகவல்களிலும், எல்லா அறிவிலும், அதற்குள் இருக்கும் நுண்ணறிவைப்பற்றிய அக்கறை செலுத்துவது என்று, ஆசிரியரைப்பற்றி சொன்னார். அப்படி என்றால், ஆசிரியர் எங்கே இருந்து பெற்றார் என்றால், தந்தை பெரியாரிடமிருந்துதான்.
இன்றைக்கு இங்கே வரும்பொழுதே ஒன்றை யோசித்துக் கொண்டு வந்தேன். இங்கே யாரிடமும், பெரியாரின் தனிக் குணங்களை, சிறப்புகளை, அவருடைய வாழ்வில் நடந்ததைப்பற்றி பேசக்கூடாது என்று. ஏனென்றால், போஸ் வெங்கட் உள்பட, என்னைவிடவும் பெரியாரைப் பற்றி அறிந்தவர்கள் நிரம்பியிருக்கின்ற அரங்கத்தில் நாம் அதைப்பற்றிச் சொல்லக்கூடாது; அது அவசியம் இல்லை என்று நான் நினைத்தேன்.
சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது; குருமூர்த்தி பதைபதைப்பதைப் பார்த்தால், உறுதியாக தி.மு.க. வெற்றி பெறும். ஏனென்றால், அவாளுக்கு கரெக்டாக தெரியும். ‘அவாள்’ வெற்றி பெறுவது தெரியுமோ, தெரியாதோ ஆனால், தோல்வி பெறுவது உறுதியாகத் தெரியும்.
அதைத்தான், துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் சொன்னார், எப்படி இந்து சமயம் என்று அச்சடித்த போஸ்டர், அடுத்த நாளே இந்திய சமயமாக மாறியது என்று.
அவாளுக்குக் கரெக்டா தெரியும்; எப்பொழுதெல்லாம் பின்வாங்கவேண்டும்; எப்பொழுதெல்லாம் மறையணும்; எப்பொழுதெல்லாம் பதுங்கவேண்டும் என்று அவாளுக்குத் தெரியும்.
நாம்தான் புரியாமல், எல்லாவற்றிற்கும் ஏறி அடிப்பவர்கள். நாம்தான் எப்பொழுதும் ‘மானமிகு’; அவாள் எப்பொழுதும் அவமானமிகுதான்.
ஒருவராவது ‘மானமிகு’ என்று போட்டு கொள்வார்களா என்று பாருங்கள், போட்டுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், அவாளுக்குக் காரியம்தான் முக்கியம்.
ஒரு மாதம் கொஞ்சம் பின் சென்று யோசித்துப் பாருங்கள், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என்று ஒருவேளை சொல்லியிருந்தால், ‘துக்ளக்’ ஆண்டு விழா எப்படி நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்; சசிகலாவைப்பற்றி ஒரு வரிகூட பேசியிருக்க மாட்டார்கள்; அ.தி.மு.க.வைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசியிருக்க மாட்டார்கள். ரஜினிகாந்த் எம்.ஜி.ஆர். ஆக்கப்பட்டு இருப்பார். அமித்ஷா, மிகப்பெரிய ராஜதந்திரியாக ஆக்கப்பட்டு இருப்பார். விமான நிலையத்திலிருந்து, ‘துக்ளக்’ ஆண்டுவிழா நடைபெறும் அரங்கு வரையிலும், போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கும். மிகப்பெரிய சாதனையைச் செய்ததாக குருமூர்த்தி நடுநாயகமாக அமர்ந்திருப்பார். அப்படி எதுவும் இல்லாமல், ஜே.பி. நட்டாவை அழைத்து ‘துக்ளக்’ ஆண்டு விழாவை நடத்தினார்கள். நட்டா யார் என்று அந்த விழாவிற்கு வந்தவர்களில் பாதி பேருக்குத் தெரியாது, முகத்தைக் காட்டினாலே _ இதில் முகக்கவசம் அணிந்திருந்ததால், சுத்தமாக தெரியவில்லை.
ஆ.இராசா ஊழல் செய்துவிட்டாராம் _ இவர்களை வைத்துக்கொண்டு தி.மு.க. ஊழலைப்பற்றி பேசுகிறதாம்.
ஆனால், யாரை வைத்து தி.மு.க.வை ஜெயிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள் தெரியுமா? ஊழல் குற்றம் செய்ததாக சிறைத்தண்டனை பெற்று, தண்டனை முடிந்து வெளியில் வரும் சசிகலாவை வைத்து ஜெயிக்க வேண்டுமாம்.
அட, மானங்கெட்டவர்களே! என்ன பேசுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிகிறதா?
ஆ.இராசா ஊழல் குற்றம் செய்தார் என்று நிரூபிக்கப்படவில்லை; அவர் ஒவ்வொரு வரையும், விரலைச் சுண்டிச் சுண்டி, வா என்மீது வழக்குத் தொடுங்கள், குற்றத்தை நிரூபியுங்கள் என்று சொல்கிறார். ஆனால், அவர்களால் அது முடியவில்லை.
ஆ.இராசாவை வைத்துக்கொண்டு, தி.மு.க. ஊழலைப் பற்றி பேசுகிறார்களே என்று பேசுகின்ற குருமூர்த்தி, ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்று, தண்டனை முழுமையடைந்து வெளியில் வருகின்ற சசிகலாவை வைத்து, தி.மு.க.வை வீழ்த்தவேண்டுமாம், இதுதான் அதற்கான வாய்ப்பாம்.
பார்ப்பான் என்ன முடிவெடுக்கின்றானோ அதற்கு நேர் எதிராக முடிவு செய்யுங்கள்!
இப்படி பல பேர், பல காலமாய் கிளம்பியிருக்கிறார்கள். பெரியார் சொன்ன ஒன்றை நான் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். எல்லாவற்றையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. எல்லாவற்றிலும் நாம் சரியான முடிவை எடுக்க முடியாது. சில நேரங்களில் தடுமாறுவோம்; குழப்பம் அடைவோம்.
ஆகையால், பெரியார் என்ன சொன்னார் என்றால், பார்ப்பான் என்ன செய்கிறான் என்பதைப் பாருங்கள்; அதற்கு நேர் எதிராக முடிவு செய்யுங்கள்; அதுதான், நமக்கு நல்லது என்பார்.
ஒரே ஒரு பார்முலாதான். அதைக் கடைப்பிடித்தால், நீ வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம். நியாயத்தின் பக்கம் நீ நிற்கவேண்டும் என்றால், அதுதான் சரியான முடிவு. ஏனென்றால், பார்ப்பான், உறுதியாக தீமையின் பக்கம்தான் நிற்பான். அதில் ஒன்றும் உங்களுக்குக் குழப்பம் வேண்டாம்.
குருமூர்த்தி என்ன சொல்லியிருக்கிறார் என்றால், எப்படியாவது தி.மு.க. தோற்க வேண்டும் என்று. ஆகவே, நாமெல்லாம் எந்தப் பக்கம் நிற்கவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இதை அனைவரிடமும் பகிருங்கள்.
(தொடரும்)