மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [29]

மே - 01-15 (2021)

கல்லீரல் அழற்சி

(Hepatitis)

சிறுநீர் சோதனை: சிறுநீரில் “பித்தநீர் உப்புகள்’’ (Bile Salts), பித்த நீர் நிறமிகள் (Bile pigments) அறியும் சோதனை ஆரம்ப நிலை ஆய்வாகும். இயல்பான நிலையில் சிறு நீரில் இவை இருக்காது. ஆனால், பாதிப்படைந்த கல்லீரலில் இவை சிறுநீரில் தெரியும்.

இரத்த ஆய்வுகள்: கல்லீரலின் செயல்பாடுகளை அறிய இரத்தப் பரிசோதனை உதவும். இவை “கல்லீரல் செயல்பாட்டு ஆய்வுகள்’’ (Liver function tests) என்றழைக்கப்படும். இவை SGOT, SGPT, alkaline phosphatase எனப்படும் ஆய்வுகளாகும்.

SGOT (Serum Glutamic Oxaloacetic Transaminase): இது இயல்பாக 8 அலகு முதல் 45 அலகுகள்  (Units) 1 லிட்டர் இரத்தப் புரதத்தில் (serum) இருக்கும். ஆண்களுக்கு இது சற்று அதிகமாக இருக்கும். ஆண்களுக்கு 50 அலகுகளுக்கு மேலும், பெண்களுக்கு 45 அலகுகளுக்கு மேலும் இருந்தால் கல்லீரலின் பாதிப்பை வெளிப்படுத்தும்.

நிழற்படங்கள்:

ஊடுகதிர் நிழற்படம்: (X-Rays): பெரும்பாலும், இந்த ஆய்வில் கல்லீரல் சரியாகத் தெரியாது எனினும், கல்லீரல் வீக்கத்தால் ஏற்படும் மாற்றம் (Liver shadow) நிழல் போல் தெரியும்.

மீள் ஒலி ஆய்வு: (Ultra sound): மீள் ஒலி ஆய்வு, ஈரல் நோய்களை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த ஆய்வு. கல்லீரல் கொழுப்புப் படிவு (Fatty liver), கல்லீரல் அழற்சி  (Hepatitis), கல்லீரல் வீக்கம், மகோதரம் போன்றவற்றை வெளிப்படுத்தும் ஆய்வாகும்.

(HBV. HCV) B வகை, C வகை கல்லீரல் அழற்சிகளை, இரத்த ஆய்வின் மூலம் அறிய முடியும்.

கல்லீரல் திசு ஆய்வு: (Liver Biopsy): ஒரு சிறிய ஊசி மூலம் கல்லீரல் திசு எடுத்து ஆய்வு செய்யப்படும். இதன் மூலம் கல்லீரல் சிதைவு(Liver Damage), மற்றும் கல்லீரல் நோய்களை எளிதில் அறிய முடியும்.

மருத்துவம்: நோய்க்கான மருத்துவம், நோயின் காரணிகளையும், நோயின் தீவிரத் தன்மையை பொறுத்தே அமையும்.

வைரஸ்களால் ஏற்படும் கல்லீரல் அழற்சி: நோயின் அறிகுறிகளுக்கு முதன்மை மருத்துவம் செய்தல் தேவையான ஒன்று. ஙி, சி வகை அழற்சிகளை முழுமையாக குணப்படுத்தும் மருந்துகள் இப்பொழுது கிடைக்கின்றன. ஆனால், நோய் முற்றிய நிலையில் உயிருக்கே உலை வைக்கும் நிலையும் ஏற்படும். வயிறு, குடல் நோய் நிபுணர், கல்லீரல் நோய் நிபுணர்களின் அறிவுரையும், இந்நிலையில் பெற வேண்டியது தேவையாகும். பொதுவாக ஆரம்ப நிலையில் மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவம் செய்ய வேண்டிய தேவைகூட இருக்காது. வீட்டிலிருந்தபடியே மருத்துவர் அறிவுரைப்படி மருந்துகள் சாப்பிட்டால் நோய் முழுமையாக குணமாகிவிடும். ஆனால், உணவு, நீர் உண்ண முடியாத நிலை, குமட்டல், வாந்தி ஏற்பட்டால் மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவம் செய்தல் தேவைப்படும். அதிக அளவில் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, கல்லீரல் சீராக்க முடியாமல் போகும் நிலையில் கல்லீரல் மாற்று அறுவை மருத்துவம் செய்யும் நிலை ஏற்படலாம். இம் மாற்று மருத்துவ முறை பல நோயாளிகளுக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளது. நோயின் காரணியாக வைரஸ்கள் இருக்கும் நிலையில், வருமுன் காத்துக் கொள்ளல் சிறந்த பலனைக் கொடுக்கும்.

¨           வைரஸ்கள் பரவும் நிலையுள்ள தொற்றுப் பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

¨           ஓரினச் சேர்க்கையில் வைரஸ்கள் எளிதாகப் பரவும். அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

¨           உடலுறவின் மூலம், நோயுள்ளவரிடமிருந்து, மற்றவர்களுக்குப் எளிதாகப் பரவிவிடும். அதனால் ‘பொதுப் பெண்களிடம்’ உடலுறவை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

¨           போதை மருந்து ஊசிகள் மூலம் நோய் எளிதில் பரவும். போதைப் பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

¨           இரத்தம் மூலம் வைரஸ்கள் எளிதாகப் பரவும். அதனால் இரத்தம் கொடை கொடுப்பவர்களின் இரத்தம் வைரஸ் கிருமிகள் இல்லாத இரத்தமாக இருக்கிறதா என்று பார்த்துப் பெற வேண்டும்.

¨           வெளிநாட்டிலிருந்து வந்தவராக இருப்பின், அவர்இரத்தப் பரிசோதனைக்குத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். (HBV, HCV)

¨           சில நேரங்களில் நம்மையும் அறியாமல் நோய்த் தொற்று உள்ளவரிடம் பழக நேரலாம். அதனால் நோய் தொற்று ஏற்படலாம்.

¨           மிருகக் காட்சிச் சாலையில், மனிதக் குரங்குகளோடு, பழகுபவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

¨           இரத்த உறைவு குறைபாடு நோய் உள்ளவர்களுக்கு, நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

¨           கருவுற்றிருக்கும் பெண்களுக்கும் இந்நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

¨           நோய்த் தொற்று உள்ள தாயிடமிருந்து, வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

¨           ஏற்கெனவே கல்லீரல் நோய்க்கு ஆளானவர்களுக்கு, கல்லீரல் உறுதியின்மையால் வைரஸ்களால் நோய்த் தொற்று எளிதாக ஏற்படும்.

¨           ஏற்கெனவே உறுப்பு மாற்று அறுவை மருத்துவம் செய்து கொண்டவர்கள் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் மருந்துகளை சாப்பிடுவர். அவர்களுக்கு நோய்த் தொற்று எளிதாக ஏற்படும். வைரஸ் நோய்கள் அனைத்தும், எதிர்ப்பாற்றல் பெருகுவதாலேயே குணமாகும். அந்த வாய்ப்பு மேற்கண்ட நோயாளிகளுக்குக் குறைபாடாக உள்ளதால், நோயும் எளிதில் பற்றிக் கொள்ளும். குணமும் அடையாது. எனவே, அந்நோயாளிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இந்நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

¨           ஏற்கெனவே நோய் எதிர்ப்பாற்றல் குறைவு நோயால்  (HIV) பாதிக்கப்பட்டவர்களும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட பிரிவினர் எச்சரிக்கையுடன் இருப்பதோடு, ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தாலே உடனே மருத்துவரின் அறிவுரையைப் பெற்று, மருத்துவம் செய்துகொள்ள வேண்டும்.

பொதுவாக வைரஸ் நோய்களுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளே வைரஸ்களால் ஏற்படும் கல்லீரல் அழற்சி நோய்களுக்கும் பயன்படுத்துவர்.

தன்னுடல் தாக்கு நோய்கள்  (Auto-immune Diseases) தன் உடலில் உள்ள புரதங்களே ஒன்றுக்கொன்று ஒவ்வாமை உண்டாக்கிக் கொள்வதால் இந்நோய் ஏற்படுகிறது. பெரும்பாலும் “ஸ்டீராய்ட்’’ மருந்துகளும், கல்லீரல் சீராக்கும் மருந்துகளும் இந்த வகை அழற்சிக்குப் பயன்படும்.

மதுவால், கல்லீரல் அழற்சி (Alcoholic Hepatitis): இந்நோய்க்கு அடிப்படை மதுப் பழக்கமே! கல்லீரலை பலப்படுத்தும் மருந்துகளோடு, மதுப் பழக்கத்தை அடியோடு நிறுத்தினால் மட்டுமே கல்லீரல் அழற்சி சரியாகும்.

கல்லீரல் அழற்சியில் பின் விளைவுகளுக்கும், மருத்துவர்கள் மருத்துவம் செய்வர்.

பின் விளைவுகள் ஆபத்தான நிலையை ஏற்படுத்துவதால் உயிர் காக்கும் மருத்துவம் முதலில் செய்யப்படும். கூடவே கல்லீரல் பலமாக்கும் மருந்துகளும் கொடுப்பர்.

இவை எல்லாம் தாண்டி கல்லீரல் அதிகளவு சேதமடைந்திருந்தால் கல்லீரல் மாற்று மருத்துவம்  (Liver Transplant) செய்யும் நிலையும் ஏற்படும்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *