பெண்ணால் முடியும் : பின்தங்கிய பகுதியில் கல்வி அறிவினை வளர்க்கும் ஆசிரியை!

மே - 01-15 (2021)

சாதனைகள் என்பது ஒருவருடைய வெற்றியாக மட்டுமே பார்த்து நாம் கொண்டாடும் இந்நாளில், தான் கற்ற கல்வி மூலம் பின்தங்கிய சமுதாயப் பிள்ளைகளின் கல்வியை வளர்க்க அதனை முழுமையாகப் பயன்படுத்தி, எந்தவிதமான பெரிய வசதியும் இல்லாத திருவண்ணாமலை கிராமப் பள்ளிக் கூடத்தினை தனது ஆர்வத்தினால் வளர்த்து, அப்பள்ளியை 400க்கும் மேற்பட்ட புதிய மாணவ – மாணவிகளுக்குக் கல்வி அறிவு பெறச் செய்து, பள்ளியையும் தரம் உயர்த்தி அப்பகுதி மக்களின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் ஆசிரியர் மகாலட்சுமி. அவரது கல்விப் பயணத்தைப் பற்றி அவர் கூறுகையில்,

“ஓர் ஏழ்மையான குடும்பத்தில் வருமானத்துக்காக கஷ்டப்பட்டு சண்டையிட்டுக் கொண்டு வாழ்க்கை நடத்தும் அப்பா, அம்மாவின் மகளாகத்தான் வளர்ந்தேன். ஊரில், எங்க குடும்பத்தை ஜாதி, நிறம்னு மட்டம் தட்டி நடத்தின கொடுமைகள் தனி. என்னை, பள்ளிக்குப் போகவேண்டாம்னு அம்மா சொன்னாங்க. ஆனா, என் அக்கா ரமணி, கூலி வேலை பார்த்தாவது என்னை படிக்க வைப்பேன்னு படிக்க வச்சாங்க. அக்காவின் சம்பாத்தியம் மட்டும்தான். விளக்கு கிடையாது, வெளிச்சம் கிடையாது. வீட்டுக்கு கதவு, ஜன்னல் கூட கிடையாது.

இதையெல்லாம் கடந்து படிச்சுதான் மேலே வந்தேன்… நான் படித்த பள்ளியிலேயே 4 மாதங்கள் பணியாற்றினேன். இந்தச் சமயத்தில்தான் திருவண்ணாமலையை ஒட்டியுள்ள மலைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் இருந்தது என் தோழி மூலம் தெரிய வந்தது.

அங்கே பெண் குழந்தைகள் இடைநிற்றல் அதிக அளவில் இருந்ததால் மத்திய அரசு ‘கஸ்தூரிபாய் காந்தி பாரத வித்யாலயா’ என்று பள்ளிகளைத் தொடங்கியது. ஜவ்வாது மலைப்பகுதியில் தொடங்கவுள்ள 4 பள்ளிகளில் ஒரு பள்ளியில் இடம் கிடைக்கும் என்று தோழி நம்பிக்கை கொடுத்தார். அதே நம்பிக்கையுடன் உணவு, உறைவிட மலைக்கிராமப் பள்ளிக்கு ஆசிரியர் கனவுகள் சூழ சென்றவருக்குக் காத்திருந்ததோ காலியான பள்ளிக் கூடம்தான். ஜமுனாமத்தூரை அடுத்த அரசவள்ளியில் இருந்துச்சு அந்தப் பள்ளி. பள்ளியில் ஒருத்தர் கூட இல்ல. பள்ளி வராண்டால மாடுகளைக் கட்டிப் போட்டு வெச்சிருந்தாங்க. யாருமே இல்ல. சத்துணவு போடுகிற பணியாளர் மட்டும் இருந்தாங்க.

ஒவ்வொரு பிள்ளையின் பெற்றோரிடமும் பேசி மாணவ, மாணவிகளை கூட்டிட்டு வந்து பாடம் நடத்த ஆரம்பிச்சேன். முதன்முறையா சாப்பாடு சாப்பிட குழந்தைங்க எவ்வளவு ஆர்வம் காட்டுவாங்களோ அதே ஆர்வத்தை படிப்பிலும் காட்ட ஆரம்பிச்சாங்க.

10 வயசுக்கு மேல இருந்தவங்களுக்குக் கூட ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை போட்டேன். ரெண்டு பிள்ளைங்க மட்டுமே இருந்த ஸ்கூல், 50 பிள்ளைங்க கொண்ட பள்ளியா மாறிடுச்சு…’’ பள்ளிப் பணியாளர்கள் துவங்கி ஊர் பெரிய தலைகள் வரை பிரச்சினைகள் செய்திருக்கிறார்கள்.

“50 பிள்ளைகளுக்குத்தான் சாப்பாடு போட முடியும்னு சொன்னாங்க. சரி, 50 பேருக்கு மட்டும் போடுங்க. மீதிப் பேருக்கு என் செலவுல சாப்பாடு போடறேன்னு சொன்னேன். அதுக்குப் பிறகு அமைதியானாங்க. மொட்டைப் பெட்டிஷன், தனி விசாரணைன்னு நிறைய கேள்விகள், தடைகள், பிரச்சினைகள். அத்தனைக்கும் ஈடு கொடுத்தேன்.  ஊர் தலைங்ககிட்ட சண்டை போடாம பொறுமையா பேசி எல்லாத்தையும் சமாளிச்சேன்…’’ 

படிப்பை நிறுத்தி தங்கள் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்த பெற்றோர்களைத் தடுத்து கல்வியின் அவசியம் பற்றிப் புரியவைத்தேன். பள்ளி வளரும்போது நாமும் வளரணுமே! தொடர்ந்து படிச்சு பி.எட். முடிச்சேன். நாளைக்கு இங்கே 12ஆம் வகுப்பு கொண்டு வந்தாலும் நான் பாடமெடுக்கத் தயாரா இருக்கேன்!’’ என்கிறார் மகாலட்சுமி. திரையில் மட்டுமே பார்த்து நாம்  கொண்டாடும் ஆளுமை பிம்பங்களைவிட, இவரைப் போன்றவர்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டியது நல்ல பொறுப்புள்ள சமுதாயத்தின் கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *