முனைவர். வா.நேரு
மே 1 உலகத் தொழிலாளர் நாள்! உலகமெங்கும் இருக்கும் தொழிலாளர்கள் கொண்டாடும் நாள். தந்தை பெரியார் அவர்கள் “சுயமரியாதை வீரர்களே, சமதர்மிகளே, தொழிலாளர்களே, தொழிலாளர்களின் தோழர்களே, இந்த வருஷத்தில் மே தினத்தை மே மாதம் முதல் தேதியில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜில்லாவிலும் உள்ள நகரங்கள் தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர் களைத் திரட்டி வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டுகிறேன். தேசம், மதம், ஜாதி என்கின்ற தேசிய உணர்ச்சிகளை மறந்து, உலகத் தொழிலாளர் எல்லாம் ஒரே சமூகமாய் ஒன்றுபட்டு எல்லா தேச, மத, ஜாதி மக்களுக்கும் வாழ்க்கையில் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் கிடைக்கும்படி கொண்டாட வேண்டும்….” என்று ‘குடிஅரசு’ (28.04.1935) பத்திரிகையில் அறிக்கை விட்டு, மே தினத்தைக் கொண்டாடச் சொல்லி இருக்கின்றார். கடந்த 85 ஆண்டுகளுக்கு மேலாகத் தந்தை பெரியார் இயக்கத்தவரால் கொண்டாடப்படும் நாள்தான் தொழிலாளர் தினமான மே – 1 ஆகும்.
தமிழகத்தில் தொழிலாளர் தினத்தை அறிமுகப்படுத்தியவர்கள் தோழர் ம.சிங்காரவேலரும், தந்தை பெரியாரும் ஆவார்கள். தந்தை பெரியாரைப் பொறுத்த அளவில் தனக்கு ஜாதிப் பற்று, இனப் பற்று, மொழிப் பற்று, தேசப் பற்று போன்ற பற்றுகள் இல்லை, மானுடப் பற்று ஒன்று மட்டுமே உண்டு என அறிவித்தவர். “சர்வ செல்வமும் நிறைந்துள்ள உலகில் பட்டினி, வறுமை, மனக்குறைவு, வாழ்வுக்கே போராட்டம் ஏன் உண்டாக வேண்டும்?” (‘இனிவரும் உலகம்’) என்று தந்தை பெரியார் 90 ஆண்டுகளுக்கு முன்பே கேட்டார். அவருடைய கேள்வி அப்படியே நிற்கிறது. அறிவியலில் கணினி வந்தது, இணையம் வந்தது, செல்போன் வந்தது, வாட்ஸ்அப் வந்தது, முக நூல் வந்தது… இப்படி கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு அறிவியல் புரட்சிகள் நடந்தபோதும், சர்வ செல்வமும் நிறைந்து உள்ள உலகில் பட்டினி, வறுமை, மனக்குறைவு, வாழ்வுக்கான போராட்டம் குறையவில்லையே, ஏன் என்பதனை இந்தத் தொழிலாளர் தினத்தில் நாம் சிந்திக்கலாம்.
பொதுவுடைமை என்றால் என்ன? என்று விளக்கும் புத்தகங்கள் பலவற்றை பெரும்பாலும் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் நாம் படித்திருக்கலாம். சுற்றி வளைத்து, பொதுவுடைமை என்றால் என்னவென்று நமக்குப் புரியவைக்க முயலும் புத்தகங்கள். ஆனாலும் கூட முழுமையான விளக்கம் நமக்குக் கிடைத்ததில்லை. தந்தை பெரியார் ‘பொதுவுடைமை’ என்றால் என்ன? என்பதனை மிக எளிதாக விளங்கும் வண்ணம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்…
“பொதுவுடைமை என்பது ஒரு குடும்பத்திலுள்ள சொத்துகள், வரும்படிகள், தொழில்கள், இலாப நஷ்டங்கள், இன்ப துன்பங்கள், போக போக்கியங்கள், பொறுப்பு கவலைகள் முதலாகியவை எல்லாம் எப்படி அக் குடும்ப மக்களுக்குப் பொதுவோ, அது போல்தான் ஒரு கிராமத்திலோ, ஒரு பட்டணத்திலோ, ஒரு மாகாணத்திலோ, ஒரு தேசத்திலோ, ஒரு கண்டத்திலோ, ஓர் உலகத்திலோ உள்ள மேற்கண்டவைகள் எல்லாம் ஆங்காங்குள்ள அவ்வளவு பேருக்கும் பொதுவானது என்பதாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், பொதுவுடைமைக் கொள்கை கட்சியின் இலட்சியம் -உலகம் பூராவும் ஒரு குடும்பம் ‘உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள்; உலகத்திலுள்ள செல்வம், இன்பம், போக போக்கியம் முதலியவை எல்லாம் அக்குடும்பச் சொத்து, குடும்ப மக்கள் (உலக மக்கள்) எல்லோருக்கும், அக் குடும்பச் சொத்தில் (உலகச் சொத்தில்) சரி பாகம் என்கின்ற கொள்கையேயாகும். ஆகவே பொதுவுடைமை என்பது ஒரு கணக்குப் பிரச்சனை (Mathematical Problem) ஆகும்”.
அய்யா சொல்லியிருக்கும் கருத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள் – எவ்வளவு ஆழமான கருத்தை, நாம் எவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ளும்படி கூறியிருக்கிறார் என்பதை! வியப்பாக இருக்கிறது. ஒரு கிராமத்தில் இருக்கும் சொத்து அந்தக் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானது, சொந்தமானது என்பதாகும். உலக மக்கள் தொகை இன்றைக்கு ஏறத்தாழ 786 கோடியாகும். ஒரு குடும்பத்தின் சொத்து, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எப்படிச் சமமானதோ, அதைப்போல இன்றைக்கு உலகம் முழுவதும் இருக்கும் செல்வம் அனைத்தும் இந்த 786 கோடி மக்களுக்கும் உரியதாகும். இந்த 786 கோடி மக்களும் இந்த உலகத்தில் இருக்கும் செல்வம் அனைத்தையும், வசதிகள் அனைத்தையும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இருக்க வேண்டும், ஏற்பாடு இருக்க வேண்டும். அதுதான் “பொதுவுடைமை” என்று சொல்கின்றார், தந்தை பெரியார். அய்யா பெரியார், “உலகம் பூராவும் ஒரு குடும்பம்; உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள்’’ என்று குறிப்பிடுகின்றார். இன்றைய கணினி உதவியுடன் கூடிய நவீன மரபணு ஆராய்ச்சி, உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் சில தாய்களிலிருந்து உருவானவர்கள் என்பதனைச் சுட்டிக் காட்டுகிறது. உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள் என்பதனை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது. எனவே, உலகில் உள்ள எல்லா செல்வங்களும் எல்லோருக்கும் உரியதாக இருக்க வேண்டும் என்னும் உயர்ந்த கொள்கை பொதுவுடைமை என்பதனைச் சுட்டுகின்றார்.
ஆனால், இப்படிப்பட்ட பொதுவுடைமையை யார் எதிர்க்கிறார்கள்? அய்யா அடுத்துச் சொல்கின்றார் பாருங்கள்… “ஆகவே இப்படிப்பட்ட கருத்துக் கொண்ட பொதுவுடைமைக் கொள்கையை வெறுக்கவோ, எதிர்க்கவோ நியாயமான முறையில் யாதொரு காரணமும் இருப்பதாய் நமக்குத் தோன்றவில்லை. ஆனால், சகோதரனுடைய பங்கை மோசம் செய்து சகோதர துரோகத்தின் மூலம் அதிகப் பங்கை ஆசைப்படுகிற மனப் பான்மை உள்ளவனும், குடும்ப வேலைகளில் தனக்குள்ள சரிபாகப் பொறுப்பை, தான் ஏற்றுக் கொள்ளாமல் மற்ற சகோதரர்களையே அதிகமாக உழைக்கச் செய்து, தான் சோம்பேறியாயிருந்து, அதிகப் பங்கையடைந்து, மற்றவர்களுக்குப் போதுமான அளவு கூலி கொடுக்காமல் வஞ்சித்து, ஏமாற்ற வேண்டும் என்கின்றதான மனப்பான்மை உள்ளவனும் தான் பொதுவுடைமைக் கொள்கையை வெறுக்கவும் எதிர்க்கவும் கூடும்” என்று குறிப்பிடுகின்றார். (‘குடிஅரசு’- 10-9-1933).
தொலைத்தொடர்புத் துறையில் இரண்டாம் தலைமுறை (2G) அலைக்கற்றை, மூன்றாம் தலைமுறை (3G), நான்காம் தலைமுறை (4G) அலைக்கற்றை வரை பார்த்து விட்டோம். 2ஆம் தலைமுறை வரை, செல்பேசியில் பேச மட்டுமே முடியும். 3ஆம், 4ஆம் தலைமுறையில் செல்பேசியில் படம் அனுப்புதல், படம் பார்த்தல், வீடியோ அனுப்புதல் போன்றவை இணைந்து விட்டன. இவையெல்லாம் மனிதர்களை இணைப்பவை. ஒரு கிராமத்தில் 1000 பேர் இருக்கிறார்கள் என்றால், அந்த ஆயிரம் பேரைப் பற்றிய தகவல்கள், 1000 செல்பேசி எண்கள் மூலம் செல்பேசி இணைப்பு கொடுக்கும் நிறுவனத்திடமும், அரசிடமும் இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் 32 இலட்சம் மக்கள் தொகை என்றால், 32 இலட்சம் பேரும் செல்பேசி வைத்திருக்கிறார்கள் என்றால், 32 இலட்சம் பேரைப் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. அதைப்போல தமிழ்நாட்டு மக்களின் தகவல்கள், இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் தகவல்கள் எல்லாம் செல்பேசி நிறுவனங்களிடமும், அரசிடமும் இருக்கின்றன. உலகத்தில் உள்ள அத்தனை மக்களைப் பற்றிய தகவல்களும் ஒரே இடத்தில் கணினிக்குள் இன்றைக்கு இருக்கின்றன.
அடுத்து வரும் 5ஆம் தலைமுறை, 6ஆம் தலைமுறை தொலைத்தொடர்பு அலைக் கற்றைகள் மூலம் உலகத்தில் உள்ள அத்தனை விலங்குகளும் (சிங்கம், புலி, கரடி, ஆடு, மாடு, நாய், பூனை.) அத்தனை செல்வங்களும் (வீடு, மரம், காடு, குளம், குட்டை, ஆறு, சுரங்கம்….) இணைக்கப்படப் போகின்றன. எல்லாவற்றுக்கும் செல்பேசி எண் போல ஓர் அடையாள எண் கொடுக்கப் போகின்றார்கள். அப்படி இணைக்கப்படும்போது உலகத்தில் உள்ள செல்வங்கள் என்னென்ன? எது யாரிடம் இருக்கிறது? எவரிடம் அதிகம் இருக்கிறது? யாரிடம் எதுவும் இல்லை?” என்பன போன்ற தகவல்களை எதிர்காலத்தில் எளிதில் எடுக்க இயலும். அப்படிப்பட்ட வாய்ப்பை இன்றைய தகவல் தொடர்பு கண்டுபிடிப்புகளும், அறிவியல் புரட்சிகளும் சாத்தியமாக்கி இருக்கின்றன. இன்றைக்கு எப்படி குறிப்பிட்ட ஒருவரது செல்பேசி எண்ணை தட்டச்சு செய்தால், அவரைப் பற்றிய விவரங்கள் எல்லாம் கணினியில் வருகின்றதோ, அதனைப் போல மதுரையில் இருக்கும் ஒரு வீட்டின் செல்பேசி போன்று கொடுக்கப்படும் எண்ணை அடித்தால், அந்த வீட்டைப் பற்றிய அத்தனை தகவல்களும் வரும்.
‘அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாவான்’ என்று ஒரு கவிஞர் பாடியதைப் போல அளவுக்கு மேலே பணம் வைத்திருப்பவர்கள் யார்? சொத்து வைத்திருப்பவர்கள் யார்? எல்லோருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டிய பங்கை, அதிகப் பங்கை அடைய வேண்டும் என்ற வகையில் பதுக்கி வைத்திருப்பவர்கள் யார், யார் என்பதை எளிதில் கண்டுபிடிக்க இயலும். இப்போது அல்லது எதிர்காலத்தில் இருக்கும் அறிவியல் கருவிகள் மூலம் அதிகமாக வைத்திருப்பவர்களை எளிதில் அடையாளம் காண இயலும். கணக்குப் பிரச்சினை எளிதில் தீரும். ஒரு குடும்பத்தில் இருக்கும் பெற்றோர், இருக்கிற குடும்பச் சொத்தை பிள்ளைகள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பதுபோல், உலக மக்கள் அனைவரும் ஒரு குடும்பத்துப் பிள்ளைகள்தாம். அவர்களுக்கு உலகத்தில் இருக்கும் சொத்துகள் அனைத்தும் சமமாகப் பிரித்து கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லும் பெற்றோராக தந்தை பெரியார் உயர்ந்து நிற்கின்றார்.
திராவிடத்தின் தத்துவம் என்பது ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிடுவதைப் போல, இந்த ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பது நடைமுறையில் இல்லாமல் இருப்பதற்கான காரணங்கள் என்னென்ன என்பதனை தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதே இந்தத் தொழிலாளர் தினச்செய்தியாக இருக்க முடியும். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பதைச் ஜாதி அமைப்பு தடுக்கிறது. ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பதை மதம் தடுக்கிறது. ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பதை தேசம் என்பது தடுக்கிறது. இந்த உணர்வுகள் எல்லாம் மறைவதற்கான நாளாக ‘மே’ தினத்தைக் கொண்டாடும்படி தந்தை பெரியார் அறிக்கை கொடுத்திருக்கின்றார். மக்களுக்கான சுகாதாரத்திற்கோ, கல்விக்கோ, இந்தியாவும் பாகிஸ்தானும் அதிக நிதி ஒதுக்குவதில்லை. ஆனால், இராணுவத்திற்கு இரண்டு நாடுகளுமே மிகுந்த அளவில் நிதியை ஒதுக்குகின்றன. வெறுப்பை விதைப்பதன் மூலமாக இரண்டு நாடுகளின் அடித்தட்டு மக்கள் தங்களுக்கான உணவும், கல்வியும், சுகாதார வசதிகளும் கிடைக்காமல் திண்டாடுகின்றார்கள். இப்படித்தான் உலகம் முழுவதும்.
உலகத்தில் பிறக்கும் குழந்தைகளில், 5 வினாடிக்கு ஒரு குழந்தை தன்னுடைய 5 வயதிற்குள் உணவு, நீர், மருத்துவம் கிடைக்காமல் இறந்து போகின்றது என்று உலக சுகாதார நிறுவன அறிக்கை கூறுகிறது. எலும்பும் தோலுமாய் பசித்து, கண்களில் குழி விழுந்து கிடக்கும் எத்தியோப்பியா குழந்தைகளைப் பார்க்கின்றபோது நமக்குக் கண்ணீர் வருகின்றது. உலக மக்கள் தொகையில் 10 விழுக்காடு பேர் ஏறத்தாழ 78 கோடிப் பேர் வறுமையில், அடுத்த வேளை உணவுக்கு அல்லாடுகின்றார்கள். அதில் பாதிப்பேர் இந்தியாவிலும் நைஜீரியாவிலும் இருக்கின்றார்கள். ஒரு குடும்பத்தில், ஒருவர் பட்டுச் சட்டை போட்டு அலங்கரித்து இருக்கும்போது, இன்னொருவர் கட்டத் துணியின்றி அம்மணமாக அலைவது போல உலக மக்களின் நிலை இருக்கிறது. ஒரு பக்கத்திலே செல்வத்திலே திளைக்கும் பணக்காரர்கள், இன்னொரு பக்கம் பட்டினியால் சாகும் உழைப்பாளிகள். இதுவாகத்தான் இன்றைய உலகம் இருக்கிறது. இது மாற வேண்டும். இதனை மாற்றுவதற்கு நாமெல்லாம் உழைக்க வேண்டும் என்னும் உறுதி எடுத்துக் கொள்ளும் நாளாக இந்தத் தொழிலாளர் நாளை எடுத்துக்கொள்வோம்.
உலகம் இன்று இணையத்தால் ஒன்றாகி உள்ளது. இணைய வழித் தொடர்பினை நாட்டுச் சுவர்களால் தடுக்க முடியவில்லை; நிறுத்த முடியவில்லை. ஒத்த கருத்துடையவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்தால்கூட இணைய வழியாக ஒன்றிணைகின்றார்கள். தங்கள் உள்ளத்துக்கு ஒத்த கருத்தினை ஒட்டி உரையாற்றுகிறார்கள். திட்டங்கள் தீட்டுகிறார்கள், செயல்படுகிறார்கள். ஆனால், உலகில் பேசப்படும் பட்டினி ஒழிப்பும், வறுமை ஒழிப்பும் ஏட்டளவிலேயே இருக்கின்றனவே? நடைமுறைக்கு வரவில்லையே? ஏன்? இதனைப் பற்றிச் சிந்திக்கும் நாளாக இந்தத் தொழிலாளர் நாளை எடுத்துக்கொள்வோம்.
உலகில் உள்ள ஆணும் பெண்ணும் சம உரிமை படைத்தவர்கள் என்னும் நாளாய், உலகில் வர்க்க பேதம் ஒழிந்து எல்லோரும் சமமானவர்கள் என்று ஆகிவிட்ட ஒரு நாளாய், ஜாதி என்பது முழுவதும் ஒழிந்து, வர்ண பேதம், ஜாதி பேதமே இல்லாத ஒரு நாளாய், மனித நேயம் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுவதும் ஒரே வீடாய், அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்கும் நாளாய் மே நாள் ஒரு நாள் அமையும். அந்தக் கருத்தினைப் பிரச்சாரம் செய்யும் நாளாக இந்த மே நாள் அமையட்டும். அனைவருக்கும், மே முதல் நாள், தொழிலாளர் தின வாழ்த்துகள்.