கார்ப்பரேட் கொள்கைக்கு கதவு திறப்பு?
மஞ்சை வசந்தன்
“இந்துக் கோயில்களின் நிருவாகத்தை ஆன்றோர், சான்றோர்களிடம், இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று இப்போது பெயர் சொல்லவே தகுதியற்ற ஆள்களும், மோசடிகளின் மொத்த வடிவமான கபட வேடதாரிகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக, ஈஷா மய்ய சாமியார் ஜக்கி வாசுதேவ் என்பவர் புனிதர் போர்வையில் புதிய தொண்டுகளைப் புரியப் புறப்பட்டிருக்கிறார்.
ஆன்றோர் யார்? சான்றோர் யார்?
தமிழர்கள் யார் என்பதற்கு இப்போது அக்மார்க் முத்திரை குத்த சில தேசியங்கள் புறப்பட்டிருப்பதுபோல, ஆன்றோர் யார்? சான்றோர் யார் என்பதற்கு தரச் சான்று சங்கராச்சாரியும், ஜக்கி வாசுதேவும், ரவிசங்கரும் தரப்போகிறார்களா? அல்லது ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் நேர்காணல் நடத்தி ஆள்களை அமர்த்தப் போகிறதா? ஆன்றோர், சான்றோர் எனத் தீர்மானிப்பது எப்படி?
அடுத்து இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கின்றனர். இப்போது இந்து அறநிலையத் துறையில் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் யார்? இந்துக்கள்தானே! அப்படியிருக்க புதிதாய் எந்த இந்துக்களிடம் ஒப்படைக்கப் போகிறார்கள்? அதற்கும் ஏதாவது முத்திரை அடையாளம் தரப் போகிறார்களா?
சத்திரச் சோத்துக்கு அய்யர் சாட்சியா?
யார் சொத்துக்கு யார் கரிசனம் காட்டுவது? கிராமத்திலே ஒரு பழமொழி சொல்வார்கள், சத்திரத்துச் சோத்துக்கு அய்யர் சாட்சியா? என்பர். அதுபோல், ஒவ்வொரு தமிழனும் கொடுத்த வரிப்பணத்தில், மன்னர்களும், பக்தர்களும் கட்டியதல்லவா கோயில்கள். கோயிலுக்குள்ள சொத்துகள் எல்லாம் தமிழர்கள் கொடுத்ததல்லவா? அப்படியிருக்க அண்டிப் பிழைக்க வந்த ஆரியப் பார்ப்பனர்களுக்கு கோயில் பற்றியும், சொத்துகள் பற்றியும் பேச, உரிமை கொண்டாட என்ன தகுதியிருக்கிறது?
அறநிலையத் துறை ஏன்?
முன்னர் கோயில்களும் சொத்துகளும் ஜமீன்தார்கள், பணக்காரர்கள் போன்ற ஆதிக்கவாதிகளிடம் இருந்தன. அவர்கள் வைத்ததுதான் சட்டம். கேட்க ஆளில்லை என்ற அவலம்.
தேவதாசிகள் பேரில் விபசாரம், சுரண்டல், கொள்ளை. ஒடுக்கப்பட்ட மக்கள் உதாசீனப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட நிலை. கொட்டிக் கொடுத்த பக்தன் எட்டி நிற்கும் அவலம். இதையெல்லாம் அகற்றி, மாற்றி இந்துக்கள் அனைவருக்கும் சமமாக நடத்த, சமஉரிமை அளிக்க உருவாக்கப்பட்டதுதானே இந்து அறநிலையத் துறை? அப்படியிருக்க மீண்டும் பழைய நிலையே வேண்டும் என்று கூப்பாடு போடுவது நயவஞ்சகம் அல்லவா?
குறைகள் களையப்பட வேண்டும்?
சிலைகள் திருட்டுப் போகின்றன. கோயில் சொத்துகள் அபகரிக்கப்படுகின்றன. கோயில் வருவாய் சரியாக வசூலிக்கப்படுவதில்லை என்றே தனிப்பட்ட நிருவாகம் வேண்டும்; இந்து அறநிலையத் துறை வேண்டாம் என்கின்றனர்.
சிலை திருட்டும், கோயில் சொத்துகள் அபகரிப்பும் இந்து அறநிலையத் துறை வந்த பிறகுதான் நடக்கின்றனவா? அது வருவதற்கு முன் நடக்கவில்லையா? அதற்கு முன்தானே நிறைய நடந்தன!
அறநிலையத்துறை நிருவாகத்தில் குறைகள் இருப்பின் அவை சீர்செய்யப்பட வேண்டும், அகற்றப்பட வேண்டும். மாறாக, அறநிலையத் துறையையே அகற்றச் சொல்வதா?
அரசாங்கத்தில்கூடத்தான் குறைகள், கொள்ளைகள், ஊழல்கள் உள்ளன. அதற்காக அரசாங்கமே வேண்டாம் என்று அகற்றிவிட்டு பழையபடி மன்னராட்சியைக் கொண்டுவந்து விடலாமா?
ஏன் இவர்களுக்கு அக்கறை?
ஆர்.எஸ்.எஸ். ஆள்களும், அவர்களின் ஏஜெண்டுகளான ஜக்கி போன்றவர்களும், ஏன் இப்படிக் குதிக்கிறார்கள்? இங்குதான் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
எல்லாவற்றையும் காப்பரேட் மயமாக்கி வரும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. பரிவாரங்கள் கோயில்களையும் காப்பரேட் மயமாக்கி, பழைய ஆரிய பார்ப்பன சனாதனத்தை நிலைநாட்ட விரும்புகிறார்கள். அதற்கு இந்து அறநிலையத் துறை குறுக்கே தடையாக நிற்கிறது. எனவே, அதை அகற்றி விட்டு, இவர்கள் ஆள்களை அமர்த்திவிட்டால் விருப்பப்படி எல்லாம் நடக்கும் என்பதுதான்.
இராணுவம், சி.பி.அய்., துணைவேந்தர்கள் என்று எல்லாவற்றிலும் ஆர்.எஸ்.எஸ். ஆள்கள் அமர்த்தப்பட்டுவிட்டார்கள். கோயில்களிலும் நுழைந்துவிட்டால் குறிக்கோள்கள் முழுமையாக நிறைவேறிவிடும் என்று திட்டமிடுகிறார்கள்.
இந்துக் கோயில் நிருவாகங்கள் குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. எனவே, அதை இந்து அறநிலையத் துறையிடமிருந்து பிடுங்கி, ஆன்றோர், சான்றோர் வசம் ஒப்படைக்கச் சொல்லும் ஜக்கியைப் பார்த்துக் கேட்கிறோம். உமது ஈஷா மய்யத்தின் யோக்கியதை என்ன? ஆயிரக்கணக்கில் புகார் வருகிறதே? அதை அரசுடைமை ஆக்கி விடுவோமா?-
ஆர்.எஸ்.எஸ். ஆதரவில் ஈஷா மய்யம்!
பெரியார் செய்த பெரும்புரட்சியின் விளைவாக தமிழ்நாட்டில் மட்டும் இந்துத்வா பேர்வழிகள் காலூன்ற முடியவில்லை.
இந்த நிலையை மாற்றியே ஆகவேண்டும் என்று இந்துமத ஆதிக்க வெறிகொண்ட ஆர்.எஸ்.எஸ் பல்வேறு வகைகளில் முயன்று வருகிறது. இதன் காரணமாகவே கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக மிகுந்த பொருட்செலவுகளுடன், விளம்பரங்களுடன் தமிழகத்தில் உருவாக்கியிருக்கின்ற வடமாநில தோற்றம் மற்றும் கலாச்சாரம் கொண்ட பல கோயில்கள்! குறிப்பாக வந்தவாசி அருகே தென்னாங்கூர் மற்றும் வேலூர் தங்கக்கோயில் போன்றவை. இந்த வேலைத்திட்டத்தின் தொடர்ச்சிதான் ஈஷா யோக மய்யம் என்பதும். இதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ். யார் இந்த ஜக்கி வாசுதேவ்?
தப்பும் தவறுமாகத் தமிழ் பேசி, பல அறிஞர்கள் கூறியதை தனது ஞானத்தில் உதித்ததுபோல் பேசிக்கொண்டு உலகை ஏமாற்றி வருபவர்.
40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் அமைந்துள்ள ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம் கீழ்ப்புறத்தில் குதிரை வண்டி நிறுத்துமிடமாக பயன்பாட்டில் இருந்த இடத்தில், சில சமூக விரோதிகளுக்கு இவர் கஞ்சா வியாபாரம் செய்ததாகவும், இவருக்கு ரிச்சர்ட் என்ற பிரபல ரவுடி அவரது வியாபாரத்தில் உதவியதாகவும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இவர்களுக்கிடையே ஏற்பட்ட பகையால் பிரிந்து விட்டார்கள் என்றும், அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை என்றும், சில நாள்களில் ரவுடி ரிச்சர்ட்டும் கொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதேபோல ஜக்கியின் மனைவியை இவரே கொலை செய்து விட்டார் என்று வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாகத் தேடப்படும் குற்றவாளி என்று இவர் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இந்த ஜக்கி வாசுதேவ் கோவை மாநகரில், மாநகராட்சிக்குச் சொந்தமான வ.உ.சி. மைதானத்தில் கடந்த 13.12.2011 அன்று ஆனந்த அலை மகா சத்சங் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரவிருப்பதாகவும், இது குறித்து கோவை வெஸ்ட் பிரஸ் வளாகத்தில் அன்று மாலை 5:30 மணியளவில் அனைத்து பத்திரிகையாளர் களையும் நேரில் சந்தித்து விளக்கமளிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பதில் கூற முடியாமல் பத்திரிகையாளரைத் தாக்கினார்.
சுமார் 25 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் மாதம் இரு முறை வெளிவரும் ‘ஆயுதம்’ இதழின் செய்தியாளராகப் பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் எஸ். பூபதி கண்ணன் என்பவர், ஜக்கியைப் பார்த்துக் கீழ் வரும் கேள்விகளை சரமாரியாகக் கேட்டார்.
1. உங்கள் யோகா மய்யத்தில் வெளிநாட்டில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறதே, அது உண்மையா?
2. மேலும் யோகா மய்யத்திற்குள்ளும் உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களிலும் வெளிப்புற மரங்களிலும் இரகசிய கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப் படுவதாகவும் கூறப்படுகிறதே, உண்மையா?
3. உங்கள் பெயரை- ஜாவா வாசுதேவ் என்பதை எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்? இதுவும் உண்மையா?
4. மேலும் 1970ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ்
கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாகக் கூறப்படுகிறதே, உண்மையா? என்று அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்தார்.
ஜக்கியின் முகம் மாறியது; கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் உடனே ஜக்கி செய்தியாளரைப் பார்த்து, உனக்கு மனநிலை பாதிக்கப்பட்டதுபோல உள்ளது. அதனால்தான் கேள்விகளை இப்படிக் கேட்கிறாய் என்று கூற, சக பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைய, மீண்டும் ஜக்கியின் மனைவியின் சாவில் இருக்கும் கேள்விகளைக் கேட்டபோது, அருகில் இருந்த அவருடைய சீடர்களிடம் மவுனமாக ஜாடை காட்ட, 4 குண்டர்கள் செய்தியாளரை வெளியே தூக்கிக் கொண்டு வந்து ஒருவர் அவருடைய வலது கையை முறுக்கிக் கொண்டும், இன்னொருவர் அவருடைய பாக்கெட்டிற்குள் கையைவிட்டு பத்திரிகையில் இவர் பணிபுரியும் அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டும், மற்றும் 2 பேர் தோள் பட்டையில் சரமாரியாகத் தாக்கினார்கள். வலி தாங்க முடியாமல் கத்தியபோது, சக பத்திரிகையாளர்கள் வந்து பார்த்தவுடன் தாக்குதலை நிறுத்திக் கொண்டார்கள்.
பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் – காவல் நிலையத்தில் புகார்
இது சம்பந்தமாக அன்று இரவே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிருவாகிகளுக்கும் தெரியப்படுத்தி மறுநாள் (14.2.2011) அன்று காலை சுமார் 100க்கும் மேற்பட்ட நிருபர்கள் ஈஷா மய்யம் ஜக்கி மீது புகார் கொடுத்தனர்.
புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன் அடிப்படையில் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல்நிலைய ஆய்வாளர் நகல் பிரதியை வழங்கினார். நகலின் பதிவு எண்.433/1808. ஆனால், இன்று வரை கிணற்றில் போட்ட கல்லுப்போல் விசாரணை நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
வழக்கறிஞர் அளித்த புகார்
அதேபோல 2006 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் இவர் மீது புகார் கொடுத்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் பயனில்லை. வழக்குரைஞர் மனைவியையும், மகளையும் இழந்ததுதான் மிச்சம். இதுபோல பல மாவட்டங்களிலிருந்து வந்த 18 வயதிற்குட்பட்ட பெண்களை இவர் யோகாசனம் என்கிற மூளைச் சலவை செய்து தன்வசப்படுத்திக் கொண்டார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். பின்னணி
இப்படிப்பட்ட ஒரு சமூகவிரோதியைக் கொண்டு, தனது பணமூட்டையை விரித்துக்கொட்டி, தென்தமிழகத்தின் கோவையின் அடர்ந்த வனப்பிரதேசமான வெள்ளியங்கிரி மலையில், எழில்மிகு இடங்களில் ஒன்றாகிய அடர்ந்த வனக்காடுகளும் வற்றா நீர்வீழ்ச்சிகளும், மின்மினிப்பூச்சிகளுக்கும் வனவிலங்குகளுக்கும் உறைவிடமான வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷாயோக மய்யம் என்ற பெயரில் தமிழக மக்களை மூளைச்சலவை செய்யும் மய்யத்தை உருவாக்கியது ஆர்.எஸ்.எஸ்.
ஆக்கிரமிப்புகள்
தியான லிங்கக்கோயில், ஈஷா புத்துணர்வு மய்யம், ஈஷா இல்லப் பள்ளி மற்றும் குடியிருப்புகள் என்று இவர் வளைத்துப்போட்டது 150 ஏக்கருக்கும் மேல். இங்கு பணியாற்றுவோர் பெரும்பகுதி, யாரும் நேராகவே பார்க்கமாட்டார்கள். எதையோ பறிகொடுத்தது போன்றே பார்வை இருக்கும். விழிகள் வானத்தில் சஞ்சரிக்கும். அந்த அளவுக்கு மூளைச்சலவை செய்யப் பட்டிருக்கிறார்கள். அங்கு கொடுக்கப்படும் தியானம், சிகிச்சைகள், மூலிகைக்குளியல், எண்ணெய் மசாஜ் இன்னபிற சேவைகளுக்கான கட்டணங்கள் வழிப்பறி போன்ற கொள்ளைக் கட்டணங்கள்தான்!
இது தொடர்பாக நான்கு பொது நல வழக்குகள் தொடரப்பட்டும், அரசு ஈஷா மய்யங்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காக்கிறது.
இப்படி இந்துக் கோயில்களையும் கார்ப்பரேட் மயமாக்கி மக்கள் சொத்துகளை கொள்ளையிட்டு சனாதன தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்த முயற்சிக்கிறார்கள் என்பதை தமிழர் தலைவர் ஆசிரியர் கீழ்க்கண்டவாறு தெளிவுபடுத்தியுள்ளார்.
“கோவைக்கருகில் நமது கிராம விவசாயிகளின் நிலங்களையும் அரசு நிலங்களையும் ஆக்கிரமித்து, ஓர் ஆசிரமத்தை அமைத்து (இது சம்பந்தமான வழக்குகள் _ ரெவின்யூ துறை போட்ட வழக்குகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.) தன்னிடம் உள்ள யோகா பயிற்சி, சில வகையான ஜால வித்தைகளை, பக்தி வேஷத்திற்குப் பலியாகி உள்ள அப்பாவி மக்கள் _ அவர்கள் வெளிநாடுகளிலிருந்தும் கூட _ அவர்களிடம் ஆதரவு பெற்று, நவீன அறிவியல் மின்னணுவியல் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தியும், விதவிதமான வகுப்புகளை நடத்திடும் ‘வித்தையில்’ ஈடுபட்டு, தனது ஆசிரமத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் சேர்த்து வைத்துள்ள அய்டெக். யோககுரு இந்த ஈஷா மய்யத்தில் இவர் மக்களை வசியப்படுத்த நல்ல “மார்க்கெட்டிங் டெக்னிக்குகளை’’ எல்லாம் கையாண்டே பிரபலமானார்.
சிவராத்திரி என்பார்; கடவுளன்பர் கூட்டம் என்று கார்ப்பரேட் செய்துவிட்டு உயர்தர விளம்பரங்களைச் செய்து அப்பாவி மக்களை பக்தி மூலம் ஈர்ப்பார். ஏதோ பொது மனிதர்போல, ‘இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா?’ என்பதுபோல பொதுவான வாழ்வியல் தத்துவம் என்று துவங்கி, தங்களின் சனாதனத்திற்கு மெல்ல இழுத்திடும் தந்திரமான பேச்சுகளைப் பேசி, ஏமாந்த காலத்தில் புலி வேஷம் போட்டு ஆடுபவரைப் போல ஆடி, இப்போது பிரதமர் மோடியை அழைத்து அமர வைத்து, அதன் மூலம் அரசு இயந்திரமே தன் வயம் என்று மிரட்டாமல் மிரட்டிவரும் இவரைப் போலவே, தஞ்சை மாவட்ட பாபநாசத்தின் அக்கிரகாரத்திலிருந்து வீட்டை விட்டு ஓடிப்போன ரவி என்ற பார்ப்பனர், ‘வாழும் கலை’ சர்வதேச நிபுணராக பிரம்மஸ்ரீ ரவிசங்கர்ஜி ஆகிய இவர் பல கோடி சொத்து சேர்த்துவிட்டார். அவரும் ஈஷா சாமியாரைப் போலவே ‘வித்தைகளில்’ கைதேர்ந்தவர். அவருக்கு பசுமைத் தீர்ப்பாயம் விதித்த அபராதம் பல கோடி. இன்னும் அந்தத் தொகை கட்டப்பட்டுவிட்டதா? என்பதே தெரியவில்லை.
இப்படி இந்தச் சாமியார்கள் அரசியலில் _ மத்தியில் காவி ஆட்சி ஏற்பட்டதிலிருந்து தனிக்காட்டு ராஜ்யமே நடத்தி வருகிறார்கள்!
அண்மையில் ஈஷா அய்டெக் சாமியார் ஓர் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராகவே வெளிவந்து விட்டார்.
தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை _ சட்டத்தை ரத்து செய்து, வடபுலத்தில் ஆர்.எஸ்.எஸ். சாமியார்கள் கையில் கோயில் வியாபாரம் செழித்தோங்குவது போலவே, இங்கும் நீதிக்கட்சியில் _ பானகல் அரசரால் நிறைவேற்றப்பட்ட (1925இல்) (Hindu Religious Endowments Bill) இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்துக் கோயில்களில் கணக்கு வழக்குப் பார்க்கப்படும் தணிக்கையும் நிருவாக கட்டுப்பாடும் இருப்பதை அறவே ரத்து செய்து, பார்ப்பனர்கள் பகல் கொள்ளை சுரண்டலுக்குரிய வகையில் ஏகபோகமாக (1925க்கு முந்திய நிலையைப் போல) ஏற்படுத்த திட்டமிட்டு, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பிரச்சாரத்தின் மூலமும், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்ததின் மூலமும் முயற்சித்து வருகிறார்கள்!
தயானந்த சரஸ்வதி என்ற புதுப்பெயர் (குடவாசல் அருகே உள்ள மஞ்சுக்குடி நடராஜ அய்யர்) சூட்டிக் கொண்டு வலம் வந்தவர் வழக்குத் தொடுத்தார். சு.சாமிகளும் மற்ற தமிழ்நாட்டு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் குழுவும் இணைந்து ‘இந்துக் கோயில்களை மீட்போம்’ என்ற ஓர் இயக்கத்தை உருவாக்கி, தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டை ரத்து செய்ய பிரச்சினை _ பெருமுயற்சிகளும் செய்து வருகிறார்கள்.
இதில் இந்த ஈஷா, தான் பெரிய புத்திசாலி என்று கருதி, ஒரு பெரிய கேள்வியாக நினைத்து ஒன்றை எழுப்பியுள்ளார்.
“மதச் சார்பற்ற அரசு என்று கூறிக் கொண்டு இந்துக் கோயில்களை நிர்வகிக்க தமிழ்நாடு அரசு முயல்வது சரிதானா?’’
அட, அதி மேதாவியே, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25, 26ஆவது கூறுகளை (Articles) படித்துப் பார்த்துப் பேசுங்கள் என்பதே நமது பதில்!
கோயில் பெருச்சாளிகள் சுரண்டித் தின்று பலகாலம் கொழுத்ததைத் தடுக்கவே இந்துஅறநிலையச் சட்டம்.
இது ஒரு தணிக்கைத் (Audit) துறைதான். அர்ச்சனை செய்வது, கும்பாபிஷேகம் நடத்துவதுகூட அதன் ஒரிஜினல் வேலை அல்ல.’’ என்று ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கார்ப்பரேட் சாமியார்களின் கபடத்தை முறியடிப்போம்!
ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கும், பி.ஜே.பி. கட்சிக்கும், கார்ப்பரேட் சாமியார்களுக்கும் இந்து மதம் என்பது, கடவுள் என்பதெல்லாம் அவர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான கருவிகள்தானே ஒழிய, உண்மையில் அவற்றின் மீது பற்றும் அக்கறையும் உடையவர்கள் அல்ல அவர்கள்.
மதத்தைக் காட்டி வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்தபின், வாக்களித்த மக்களுக்கே துரோகம் செய்வதைக் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பார்க்கிறோம். அதேநேரத்தில் ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டுவதிலும், சமஸ்கிருதத்தை வளர்த்துத் திணிப்பதிலும், குலக்கல்வியைக் கொண்டு வருவதிலும், சமூகநீதியை ஒழித்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் கல்வி வேலைவாய்ப்பைப் பறிப்பதிலும் முனைப்பாக இருந்து ஒவ்வொன்றாகச் செய்து வருகிறார்கள். ஒடுக்கப்பட்டோரின் கல்வி உதவித் தொகையை நிறுத்திவிட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு கோடிக்கணக்கில் வரிச் சலுகை தருகிறார். ஆக, இவர்கள் மதத்தை, கடவுளைக் காட்டுவது அவர்கள் திட்டத்தை நிறைவேற்ற மட்டுமே. அதேபோல், கோயில்களை கார்ப்பரேட் மயமாக்கி, சனாதனத்தை நடைமுறைப்படுத்தி, உண்மையில் கோயிலுக்கு உரிமையுடைய பக்தர்களை, உரிமையற்றவர்களாக்கி, ஒதுக்கி ஓரங்கட்டவுமே இந்து அறநிலையத்துறையை ஒழிக்கப் பார்க்கிறார்கள்.
இந்து அறநிலையத் துறையை அகற்றி, தனிப்பட்டவர்களிடம் நிருவாகத்தைத் தந்தால் அது, கோயில்கள் கார்ப்பரேட் மயமாக்கப்பட்டு கொள்ளை போகவே வழிவழிக்கும். எனவே, எச்சரிக்கை! இச்சூழ்ச்சியை முறியடிக்க வேண்டியது இந்து மத பக்தர்களின் கடமையாகும்.