வீ.குமரேசன்
பெரும்பாலானவர்களுக்கு முதல்நிலைக் கல்வியே தடைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக தொடக்கக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, உயர்கல்வி என கல்வி மறுக்கப்பட்டவர்களும் பலநிலைகளில் படித்து பட்டம் பெற்றிடும் நிலைமைகள் சமுதாயத்தில் உருவாயின. ‘அனைவருக்கும் கல்வி’ எனும் சமத்துவ நோக்குடன் சமுதாயப் பணியினை ஆற்றியவர்களில் மிகப் பலர் பள்ளிக்கல்வியை முழுமையாக முடிக்காதவர்களே.
உயர் கல்வி என்பது, பட்டம் ஒன்றைப் பெறுவதே எனும் நிலையிலிருந்து எந்தப் படிப்பில் பட்டம் பெறுவது என்பது குறித்து பல்வேறு காலக்கட்டங்களில் மனதளவில் தெரிவு செய்து முயற்சி செய்தனர். உயர் கல்வியில் பல்வேறு துறை சார்ந்து, படிப்புகள் நிலவிவரும் தற்காலச் சூழலில் ஒரு பட்டப்படிப்போடு, மேலாண்மையில் முதுகலை பட்டம் (MBA) அல்லது முதுநிலை பட்டயப்படிப்பு (PG. Diploma) பெறுவது, கல்வி கற்றதின் அடிப்படையில் ஒருவருக்குக் கிடைக்கும் பலதரப்பட்ட வேலைகளிலும் பயன் அளிப்பதாக உள்ளது. அதனால் MBA என்பது உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பலரும், பணியில் உள்ள இளைஞர்கள் பலரும் விரும்பிச் சேர நினைக்கும் முதுகலைப் பட்டப்படிப்பாகும்.
படித்த இளைஞர்கள், தாங்கள் பணிபுரியும் பல்வேறு துறைகளிலும், அந்தந்த அலுவலகச் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திடக்கூடிய வகையில் மேலாண்மைக் கல்வி உள்ளது. மனித வளமே சமுதாயத்திற்குக் கிடைத்துள்ள முதன்மை மூலதனம். இருக்கும் மனிதவள ஆற்றலை திறம்படப் பயன்படுத்தி, ஒருங்கிணைத்துச் செய்யக்கூடிய பணியினை முழுமையாக மேற்கொள்ள இளைஞர்கள் பழகிக் கொள்ள வேண்டும்.
மேலாண்மைக் கல்வியை இன்றைய சூழலில் பாடமாகப் படிக்கும் நிலை உருவாகியிருந்தாலும் மேலாண்மைக் கோட்பாடுகள், நடைமுறைகள் – அவைகளைப் பயன்படுத்தி பணிக்களம் காண்பது தமிழ்மண்ணுக்கு புதிது அல்ல. மக்கள் மேம்பாட்டு இலக்கியமான திருக்குறள் தொடங்கி பல்வேறு நூல்களில் மேலாண்மைக் கருத்துகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்த தலைவர்கள், பள்ளிக் கல்வியைக் கூட முழுமையாக முடிக்காத தலைவர்கள் தங்களது பொது வாழ்க்கையில் பயன்படுத்திய மேலாண்மை நடைமுறைகள், அணுகுமுறைகள் படித்துப் பட்டம் பெற்றவரிடம் கூட காணக்கிடைக்காது. அவ்வளவு எளிமையாக, இயல்பாக, போகிற போக்கில் அவைகளை மேலாண்மைக் கோட்பாடுகள் சார்ந்தவை, ஏட்டுப்படிப்பு பின்புலம் கொண்டவை என்பது கூட அறியாமலேயே பயன்படுத்தி வெற்றிகரமாக நிருவாகம் செய்த நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு. அவைகளில் ஒரு நிகழ்ச்சியாக கல்வி வள்ளல் காமராசர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த பொழுது அவர் நேரடியாக பயன்படுத்திய மேலாண்மை அணுகுமுறை பற்றிப் பார்ப்போம்.
காமராசர் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் ஒருவர் தனது கட்டுப்பாட்டில் உள்ள அரசுத் துறையின் உயர்நிலை அதிகாரியை (Director) ஒரு சூழ்நிலையில் வரம்பு மீறி கண்டித்து விட்டார். கண்டிக்கப் பயன்படுத்திய சொற்கள் நாகரிகமானவை அல்ல; கண்டிக்கப்பட்ட அந்த அதிகாரி அமைச்சருக்கு எதிராகப் பேசமுடியாமல், மன உளைச்சல் கொண்டு அரசு முதன்மை செயலாளரிடம்(Chief Secretary) முறையீடு செய்தார். முறையிட்ட அதிகாரி பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து, அதிகாரியை அமைச்சர் நடத்திய விதம் குறித்து முதலமைச்சர் காமராசரிடம் முதன்மைச் செயலாளர் தெரிவிக்கிறார். உண்மை நிலையினை சட்டென்று உணர்ந்து கொண்ட காமராசர், உடனே அந்த அமைச்சரை முதல்வரின் அலுவலக அறைக்கு வரச் சொல்லிப் பணிக்கிறார். உடன் முறையிட்ட உயர்அதிகாரியையும் வரச் சொல்கிறார். தலைமைச் செயலாளர் முன்னிலையில் வந்த அமைச்சரை காமராசர் கேட்கிறார்: “உங்களுக்கு, எனக்கு எல்லாம் ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் கொடுத்த அய்ந்து ஆண்டு காலம்தான்; அதிகாரிகளுக்கு அப்படியல்ல, பணிநிறைவடையும் வரை அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திடும் வாய்ப்பைக் கொண்டவர்கள். உங்களுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு அதிகாரி வேலை செய்யவில்லை என்றாலும் அவரை கண்டிப்பதற்கு வரன்முறை உண்டு. தவறு செய்திடும் பட்சத்தில் தண்டிக்க அமைச்சரான உங்களுக்கு அதிகாரம் உள்ளது; அதை விட்டு விட்டு, அநாகரிகமான சொற்களைப் பயன்படுத்திக் கண்டிப்பது நல்லதல்ல; மக்கள் வழங்கிய அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தவேணுமுண்ணே! உடனே அநாகரிகமாகக் கண்டித்ததற்கு அந்த உயர் அதிகாரியிடம் அமைச்சரான நீங்கள் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்க வேணுண்ணே! என்ற வகையில் காமராசர் அமைச்சருக்கு அறிவுறுத்தினார். முதலமைச்சர் காமராசரே — தனது தலைவரே அறிவுறுத்தியதால் சற்றும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அமைச்சர் மன்னிப்பைத் தெரிவித்தார். அமைச்சரையும் அதிகாரியையும் போகச் சொல்லிவிட்டு உடன் இருந்த தலைமைச் செயலாளரிடம் காமராசர் சொன்னவை உயர்கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படும் மேலாண்மை வழி முறைகளை அவ்வளவு கச்சிதமாக, பொருத்தமாக நடைமுறைப்படுத்தும் வகையில் இருந்தது; இன்றைய இளைஞர்கள் அவைகளை உள்வாங்கி தங்களுக்கு ஏற்றவகையில் பயன்படுத்திடும் வகையில் இருந்தது.
அமைச்சர் தனது கட்டுப்பாட்டில் பணியாற்றும் அதிகாரியிடம் மன்னிப்பு தெரிவித்த நிலையில் இருவரது மனநிலையும் சாதாரண நிலைக்கு திரும்பிட நாளாகும். அந்த நிலை விரைவில் வருவது இருவரது மனப்பக்குவத்தைப் பொறுத்தது. அதுவரை அமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே அந்த உயர் அதிகாரி தொடர்வது அரசு நிருவாகத்திற்கு சரியானதாக இருக்காது. அந்த துறைசார்ந்த நிருவாகப் பணிகளில் ஒரு தொய்வு ஏற்பட்டுவிடும். எனவே, அந்த அதிகாரியின் விருப்பத்தினைக் கேட்டு, அவர் விரும்பும் துறைக்கு அவரை பணியிடமாற்றம் செய்திடுங்கள். அமைச்சரிடம் இந்தத் தகவலைத் தெரிவித்து, அமைச்சரின் விருப்பத்திற்கு ஏற்ப, அவருக்கு உகந்த வகையில் வேறோரு உயர் அதிகாரியை அவரது நேரடி கட்டுப்பாட்டில் அந்த துறையில் பணியாற்றிட உத்தரவு போட்டு விடுங்கள் என்றாராம் காமராசர்.
மேலாண்மை கல்வியின் அங்கங்களுள் ஒன்றான ஆள்வினை (Personnel Management) மேலாண்மையில் நேரிடும் ‘மோதல் களைந்திடுவது’ (Conflict Management) என்பது ஒரு பகுதி. கல்வி நிலையங்களில் விரிவாக பல வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்கு மேலாண்மை நடைமுறை மோதல் களைவதைப் பயிற்றுவிப்பார்கள். அப்படி வகுப்பறைக் கல்வி, கல்லூரிப் பாடம் படிக்காமலேயே காமராசர் வெகு நேர்த்தியாக ஏற்பட்ட ‘மோதலை’, இருவருக்கும் வெற்றியாக (win-win situation) மாற்றியது குறிப்பிடப்பட வேண்டியது.
மருத்துவம், பொறியியல் போன்று மேலாண்மைக் கல்வியும் ஒருவகைத் தொழிற்கல்வியே. ஏட்டுப் படிப்புடன், நடைமுறைப் படிப்பையும் பெருக்கிக் கொள்வதன் மூலம் இளைஞர்கள் தங்களை மேம்படுத்திட, தம் திறனை முழுமையாக வெளிப்படுத்திட முடியும். மேலாண்மைக் கல்வியில் மட்டுமல்லாது பிற துறை சார்ந்து படித்தோரும் தாம் ஏட்டில் படித்ததை, நடைமுறையோடு பார்த்து, படித்ததை மேலும் பொருத்தமாக செய்து காட்டிட முயல வேண்டும். வேளாண்மைக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு விரிவாக்கக் களப்பணி செய்திட முனைந்த பொழுது பாமர விவசாயிகளிடமிருந்து நான் கற்றுக் கொண்டவை ஏராளம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், தேனி மாவட்டம், உத்தம பாளையம் பகுதியில் தோட்டப் பயிர் சாகுபடி செய்திடும் விவசாயிகள், நிலக்கடலைப் பயிர்சாகுபடியில் நீர் மேலாண்மை பற்றிய கருத்துகளை வெகு துல்லியமாக எடுத்துரைத்த விதம், நெஞ்சில் ஆழப்பதிந்து எனது தொழில் சார்ந்த பணிக்கு மெருகு கூடியது. எழுத்தறிவு பெறாத விவசாயிகள் நீர் மேலாண்மை பற்றி பல தலைமுறை தொடர்ந்து அனுபவப் படிப்பில் கற்றுக் கொண்டது கடல் அளவு. கையளவு கற்ற கல்வியுடன் கடல் போன்ற அனுபவ அறிவு சேருகையில் அத்தகைய அறிவு வீச்சின் வேகமும், வெற்றியும் ஒப்பிட முடியாதது.
கற்ற கல்விக்கு தொடர்புடைய பணிகள் கிடைத்திடும் பொழுது அவை தொடர்பான நடைமுறைகளை பொருத்திப் பார்ப்பது எளிது. பெரும்பாலனவர்களுக்கு தாம் கற்ற கல்விக்கு நேரடியான தொடர்புள்ள பணி கிடைக்காத சூழலில், கிடைத்த பணியினை ஏற்றுக் கொள்வதுதான் அறிவார்ந்த அணுகுமுறை. அப்படிப்பட்ட சூழல்களிலும் தாம் கற்ற கல்வியை அடிப்படையாகக் கொண்டு, பணியாற்றிடும் சூழலுக்கு ஏற்றவாறு தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும். அந்தச் சூழ்நிலையைக் கையாளுவதைப் பொருத்தே நிச்சயம் உயர்நிலை பெறுவர். ‘வாய்ப்புகள் எப்போதாவது ஒரு முறைதான் வீட்டுக் கதவைத் தட்டும்’ என்பது நாம் அடிக்கடி கேட்கும் பழைய மொழி. மாறிவரும் காலச் சூழலில், ‘வாய்ப்புகள் நாள்தோறும் நம் வீட்டுக் கதவைத் தட்டுகின்றன’ என்பதுதான் புதுமொழி. தட்டும் வாய்ப்புகளின் தன்மை அறிந்து அவைகளுக்கு ஏற்றவாறு தம்மை பொருத்திக் கொள்வதில்தான் தனிநபரின் சிறப்புகள் ஒளிர்ந்திடும். நம்மை மாற்றிக் கொள்ள முயற்சி எடுத்தாலே அது பாதி வெற்றியை உறுதி செய்திடும்.
‘தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்’
எனும் குறள் நெறி கூறும் மேலாண்மை அணுகுமுறை ஆக்கபூர்வ விளைவுகளை உருவாக்கிடும்.
(தொடரும்…)