நூல்: 21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
ஆசிரியர்: யுவால் நோவா ஹராரி
(தமிழில்: நாகலட்சுமி சண்முகம்)
வெளியீடு: 7/32, அன்சாரி சாலை, தர்யாகானி,
புதுடில்லி_ 110 002, இந்தியா
website: www.manjulindia.com
புத்தகங்கள் பல வகைகளில் நமக்கான சாளரங்களைத் திறக்கக் கூடியவை. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு வகையான புதிய வழிகாட்டியாக நம்மை வழி நடத்தக் கூடியது. அப்படிப்பட்ட சிறந்த நூல்களில் ஒன்றுதான் யுவால் நோவா ஹராரி எழுதி, தமிழில் நாகலட்சுமி சண்முகம் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட மேற்கண்ட புத்தகம். இந்த உலகம் இனிவரும் காலங்களில் எவ்வகையான அறிவியல் தொழில்நுட்பத்தினை முன்னெடுக்கும் என்றும், அதனால் மனிதர்களுக்கு ஏற்படப் போகின்ற நன்மை தீமைகளை தொலை தூரப் பார்வையோடு நமக்கு எடுத்துக் கூறியுள்ளது. அறிவியல், அரசியல், தனிமனித உணர்வுகள், போர்த் தந்திரங்கள், அறிவியல் புனைக் கதைகள், மதம், கடவுள், தீவிரவாதம் எனப் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கி விரிவாகவும், எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய சொல்லாக்கத்துடன் மொழிபெயர்ப்பாளரால் சிறப்பான பணியாக தமிழ் மொழியில் கொண்டு வரப்பட்டது.
உலகளவில் இன்று நிகழ்ந்துகொண்டு இருக்கும் மாற்றங்கள் மெல்ல எப்படி பல நாடுகள் அளவிலும், தனி மனிதர்கள் மீது அவர்களின் கரங்களைப் பரப்பி பிடிக்கும் என்பதை வாசிக்கும் யாவரும் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். தரவுகளை எளிமையாக பன்னாட்டு முதலாளிகள் பெற்று அதனை ஓர் அரசியல் மாற்றத்துக்கும் கூட பயன்படுத்தி வெற்றி பெற்று வருவது உலகளவில் அண்மைக் காலத்திய புதிய தொழில்நுட்ப அணுகுமுறையாக மாற்றப்பட்டுள்ளதை தகுந்த ஆதாரங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரு ட்வீட், ஒரு வலைதளப் பதிவு எவ்வாறு ஒருவரை தேச பக்தி மிக்கவராகவும், எதிராக கருத்துப் பதிவு செய்பவரை தேசத் துரோகி என முத்திரையை ஒட்டி சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது என்பதை நம் கண் முன்னே இந்தியாவில் தினந்தோறும் நிகழ்ந்துவரும் அரசியல் கருத்து மாற்றத்தையும் இந்தப் பாடங்களின் வழியாக நுண்ணரசியலை மார்க் சக்கர்பெர்க் (முகநூல் நிறுவனர்) பேசுகிறார்.
பேராசிரியர் யுவால் நோவா ஹராரி (Yual Noah Harari) ஜெருசலம் யூதப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். மனிதர்களின் வரலாற்றைப் புதிய கோணத்தில் ஆய்ந்து முதல் நூலில் எழுதியுள்ளார். இந்த நாவல் தொழில்நுட்ப அறைகூவல்கள், அரசியல் அறைகூவல்கள், நம்பிக்கையின்மையும் நம்பிக்கையும், உண்மை, சித்தம் என்ற அய்ந்து தலைப்புகளில் இவர் எழுதியுள்ள கருத்துகள் வருங்காலத்தை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிவுப்பூர்வமாக தொலைநோக்குப் பார்வையுடன் எழுதியிருப்பது பயன் உள்ள வகையில் இளைய தலைமுறையினருக்கு உதவும். அனைத்துத் தரப்பினரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.
– ச.குமார்