புதிய இனத் தவளைகள்
கல்வியைக் கெடுத்தார்
கனவினைக் கலைத்தார்
காலங்காலமாய் துய்த்த உன் உரிமை பறித்தார்
கண்டு இன்னும் ஏனடா தயக்கம்
கரத்தை உயர்த்தடா களங்கம் துடைக்க!
மொழியைத் திணித்தார்
மும்மொழி என்றார்
முழுதாய் தமிழை அழித்திட நினைத்தார்
முன்கதை அறிந்தும் ஏனடா தயக்கம்
முழங்கிடு முரசை முத்தமிழ் காக்க!
சமுகநீதியை மறுத்தார்
சமத்துவத்தைக் கெடுத்தார்
சமத்துவம் என்றால் திராவிடம் என்று
சங்கொலி முழக்க ஏனடா தயக்கம்
சனாதனம் வீழ்த்த சொடுக்கடா சாட்டை!
உழவினை ஒழித்தார்
உணர்வினை அழித்தார்
உழவினை ஒழிக்க சட்டம் வகுத்தார்
உண்மை அறிந்தும் ஏனடா தயக்கம்
உயர்த்தடா தோளை உழவினைக் காக்க!
கொள்கையைக் கொன்றார்
கூட்டத்தைக் கலைத்தார்
கொடுமையைச் செய்தே குளிர்காய நினைக்கும்
கொடியரை வீழ்த்த ஏனடா தயக்கம்
குறித்திடு நாளை கூர்பகை வெல்ல!
சாதியை வகுத்தார்
நீதியைக் குலைத்தார்
விதியெனக் கூறி வருணம் வகுத்தார்
வீணரைவீழ்த்த ஏனடா தயக்கம்
வீறுகொண்டு எழடா வெற்றிக்கொடி நாட்ட!
மதமெனச் சொன்னார்
மக்களைப் பிரித்தார்
மதத்தின் பெயரால் வேற்றுமை வளர்த்தார்
மனிதா இன்னும் ஏனடா தயக்கம்
மனிதம் தழைத்திட திரட்டடா மக்களை!
மாநில உரிமை பறித்தார்
மத்தியில் குவித்தார்
மாநில அரசை மண்பொம்மை ஆக்கினார்
மதிப்பினை இழந்தபின்னும் ஏனடா தயக்கம்
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி எழுப்படா முழக்கம்!
எஸ்.துரைக்கண்ணு