கொத்தடிமை அரசின் இரட்டை வேடம்
கே: புயல் வெள்ளச் சேதங்களைப் பார்வையிடுவதும், பரிந்துரை செய்வதும் வெறும் நாடகம்தானா? உரிய நிவாரணம் மத்திய அரசிடம் பெற என்ன செய்ய வேண்டும்?
– சங்ககிரி, கோவை
ப: யானைப் பசிக்கு சோளப்பொறி என்பதாக ஏதோ “பிச்சை போடுவது போல்’’ கிள்ளித் தருகிறது மத்திய அரசு.
இதுவரை
1) “கானே” புயல் 2011 (வட தமிழகம்)
2) “வார்தா” புயல் 2016 (சென்னை நகரம்)
3) “ஒக்கி” புயல் -2017 (தென் தமிழகம்)
4) “கஜா” புயல் -2018 (காவிரி டெல்டா)
5) “நிவார்” புயல் -2020 (வட தமிழகம்)
கேட்டதும் கொடுத்ததும் ..-
தமிழ்நாட்டில் வீசிய நிவர் புயல் சேதத்துக்காக தமிழ்நாடு அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கேட்ட தொகை ரூ.3,759 கோடியே 38 லட்சம், மத்திய அரசு கொடுத்ததோ ரூ.63 புள்ளி 14 கோடி மட்டுமே!
புரெவி புயல் சேதத்துக்காகக் கேட்கப்பட்ட தொகையோ ரூ.1514 கோடி; மத்திய பா.ஜ.க. அரசு போட்ட பிச்சைக் காசோ ரூ.223 புள்ளி 77 கோடியாகும்.
ஆமாம், அரசு சொல்லுகிறது _ மத்திய பா.ஜ.க. அரசின் எல்லாத் திட்டங்களுக்கும் ஒத்துழைப்புக் கெ(£)டுக்குமாம்!
கே: பாண்டிச்சேரியில் பா.ஜ.க. தனது சித்து விளையாட்டைத் தொடங்கிவிட்டதே! அதை எதிர்கொள்ள மதசார்பற்ற கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?
– தாமஸ், புதுவை
ப: புதுச்சேரியில் பா.ஜ.க. ஆட்சியை கொல்லைப்புறமாக நுழைக்க, வருமானவரித்துறை மற்றும் தங்கள் கையில் உள்ள அரசு ஆயுதங்களைப் பயன்படுத்தி காங்கிரசு _- தி.மு.க. கூட்டணி அரசை பதவி விலகும் நிலைக்கு ஆளாக்கியுள்ளனர் _ மூன்று நியமன உறுப்பினர்கள்.
ஜனநாயகப் படுகொலை நடக்கிறது! விரைவில் வரவிருக்கும் தேர்தலில் பாடம் கற்பிக்க மக்களின் எழுச்சியைத் திரட்ட வேண்டிய கூட்டுப் பொறுப்பு அனைத்து முற்போக்கு ஜனநாயகவாதிகளின் முன்னுரிமைப் பணியாகும்.
கே: பெங்களூரு இளம் பெண்ணை கருத்துப் பகிர்வுக்காக டில்லி போலீஸ் நேரடியாகக் கைது செய்ததும், தேச விரோதக் குற்றம் சாட்டியதும் கொடுஞ்செயல் என்பதால் நீதிமன்றத்தில் உடனடித் தீர்வு பெற முடியுமா?
– வெங்கடேசன், சென்னை
ப: மக்களின் மகத்தான குரல் எதிரொலிக்கும் நிலையில், நீதி நியாயம் கிடைக்க சற்று தாமதம் ஆனாலும், நீதி வெல்லும்! நிரபராதியைக் குற்றவாளியாக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வரும்! காலம் கடுந்தண்டனை தர வேண்டும்.
கே: மோடியை எதிர்கொள்ளப் பொருத்தமான பிரதமர் வேட்பாளர் மம்தா பானர்ஜி என்ற கருத்தைப் பற்றி தங்கள் கருத்து என்ன?
– மாரியப்பன், புழல்
ப: மேற்கு வங்கத்திற்கு இது பொருந்தும். பா.ஜ.க.வின் அடாவடித்தன அரசை சரியான வழியில் எதிர்கொள்ள அவர் சரியான போட்டியாளர் என்பதில் அய்யமில்லை.
கே: பஞ்சாப் தேர்தல் முடிவுகள் -_ விவசாயிகள் போராட்டம் பி.ஜே.பி.க்கு முடிவு கட்டும் என்பதற்கான அடையாளமாகக் கொள்ளலாமா?
– தங்கமணி, காஞ்சி
ப: இது துவக்கம். தோல்விப் படலம் தொடரும். 2019க்கு பிறகு பிகாரைத் தவிர, வேறு எந்தத் தேர்தலிலும், பா.ஜ.க. தோல்வி முகத்தோடுதான் காட்சியளிக்கிறது!
கே: அண்ணா பல்கலையில் எம்.டெக்., படிப்புக்கு மத்திய இடஒதுக்கீட்டை ஏற்பதாகத் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்பது நீதிமன்றத்தில் அம்பலமாகிவிட்டதே! தமிழ்நாடு அரசின் துரோகம் பற்றி தங்கள் கருத்து என்ன?
– பவித்ரன், திருப்பூர்
ப: தமிழ்நாட்டு அ.தி.மு.க. அரசின் கொத்தடிமை புத்தியும், இரட்டை வேடமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்குமூலம் உலகுக்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது!
கே: இருக்கின்ற இடஒதுக்கீடுகளை ஒவ்வொன்றாக ஒழிக்கும் பா.ஜ.க.வின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பெண்களுக்கு ஒதுக்கீடு தருவோம் என்று உறுதி கூறுவது உலக மகா மோசடி அல்லவா?
– முத்து, சேலம்
ப: மோசடி மன்னர்கள் இப்படி ‘அள்ளி’ விடுவது அரசியலில் சகஜம் தானே!
கே: தமிழ் தேசியத்தில் சமஸ்கிருதம்தான் தேசிய மொழியா?
– அன்பு, தாம்பரம்
ப: எப்போது பார்ப்பனர்களும் தமிழர்களாக ஒப்புக் கொள்ளப்பட்டு, திராவிட அடையாளத்தை மறுக்க, இன எதிரிகளின் விபீடணத் தனத்தின் கருவியாக ‘போலி தமிழ் தேசியம்’ ஆனதோ, அன்றே கிடைத்த விடைதான் உங்கள் கேள்வியில் உள்ளது! புரிகிறதா?
கே: இதர பிற்படுத்தப்பட்ட (ளிஙிசி) பிரிவினருக்கு வழங்கப்படும் 27 சதவிகித இடஒதுக்கீட்டை நான்கு வகையாகப் பிரித்து உள்ஒதுக்கீடாக வழங்க ரோகிணி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது சரியான அணுகுமுறையா?
– மகிழ், சைதை
ப: தானடித்தமூப்பாக, யாரையும் கலந்து பேசாமல், ஆராயாமல், எந்தப் புள்ளி விவர அடிப்படையுமின்றி, இப்படி வித்தை செய்வது வீணான முயற்சி. -பா.ஜ.க. வித்தைகளில் இதுவும் ஒன்று. சமூகநீதிக்கு எதிரானது. உண்மையான சமூகநீதியாளர்களால் ஒப்புக் கொள்ள முடியாத ஒரு யோசனையாகும்.