உணவு என்பதே உடல் வாழ அடிப்படை. உயிர் வாழ மட்டுமன்றி, உடல் நலம், உடல் கேடு இவற்றிற்கும் அதுவே அடிப்படை. எந்த உணவுகளை உண்ணவேண்டும், எவற்றை விலக்க வேண்டும், எந்த அளவு உண்ண வேண்டும் என்பவை மிகவும் முதன்மையானவை.
உடலுக்கு பல்வேறு சத்துகள் வேண்டும். எனவே, உணவும் பல்வேறு சத்துகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதற்கு அரிசி உணவை எடுத்துக்கொள்வது போலவே, சிறுதானியங்களையும் தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், கீரை வகைகள் பழங்கள் அதிக அளவில் உண்ண வேண்டும். இவற்றை அதிக விலை கொடுத்து வாங்கித்தான் உண்ண வேண்டும் என்பதல்ல. மலிவான காய்கறி, கீரை, பழங்கள் நிறைய உள்ளன. அவற்றை குறைந்த செலவில் உண்டு நிறைய பயன்களைப் பெறலாம்.
செயற்கையான உணவுகளைவிட இயற்கையான உணவுகளே மிகச் சிறந்தவை. பதப்படுத்தப்பட்ட உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். வறுத்த, பொரித்த உணவுகளை அளவோடு உண்ண வேண்டும். முடிந்த மட்டும் தவிர்ப்பது நல்லது.
பிராய்லர் கோழிக்கறி, பரோட்டா, பர்கர், பீஸா போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். சாக்லட், அய்ஸ்கிரீம் போன்றவற்றை விலக்க வேண்டும்.
நமது பாரம்பரிய கடலை உருண்டை, எள்ளுருண்டை, முறுக்கு, அதிரசம், கொழுக்கட்டை, வடை, பாயசம், பொரி உருண்டை போன்றவை உடலுக்கு மிகவும் பயன்தரக் கூடியவை. நவீன கவர்ச்சி (Fast food) உணவுகளைத் தவிர்த்து இப்படிப்பட்ட உணவுகளை குழந்தைகள் முதல் எல்லோரும் உண்பது உடல் நலத்திற்கு உகந்தது.
பழங்களை உணவு உண்டவுடன் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து உண்ண வேண்டும். கீரை, தயிர் போன்றவற்றை இரவில் உண்ணக் கூடாது. மீன் சாப்பிட்ட பின் தேன் சாப்பிடக் கூடாது. கீரை சாப்பிட்ட பின் தயிர் சாப்பிடக் கூடாது.
உணவு உண்டவுடன் டீ, காபி குடிக்கக் கூடாது. அய்ஸ்கிரீம் சாப்பிடக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. சாப்பிட்டு இரண்டு மணி நேரங்கழித்தே உறங்க வேண்டும். உண்டவுடன் உறங்கக் கூடாது, நடக்கக் கூடாது, உடற்பயிற்சி செய்யக் கூடாது.
உண்ணும்போது இடையிடையே நீர் அருந்தக் கூடாது. சாப்பிட்ட பின் சிறிதளவும், ஒரு மணி நேரம் கழித்து தேவையான அளவும் அருந்த வேண்டும். நின்று கொண்டு சாப்பிடக் கூடாது. இறுக்கமாக இடுப்பில் பெல்ட் கட்டி உண்ணக் கூடாது.
உப்பு, புளிப்பு, காரம்(கார்ப்பு) அளவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிகம் சேர்ப்பது நோய் உண்டாக்கும்.
முருங்கைக் கீரையும், காயும் உடலுக்கு வலுவைத் தரும் மலிவான உணவுகள். உணவுகளை நன்றாக மென்று விழுங்க வேண்டும். பதற்றத்தோடு, விரைந்து உண்ணக் கூடாது. செரித்த பின், பசித்த பின்னே உண்ண வேண்டும். இடையிடையே உண்ணக் கூடாது.
பழங்களை சாறு பிழிந்து குடிப்பதற்குப் பதில் மென்று சுவைத்துத் தின்னுவதே மிகவும் நலம் பயக்கும்.
Leave a Reply