குடல்வால் அழற்சி
(APPENTICITIS)
நோயின் அறிகுறிகள்:
அடி வயிற்றில் வலி: குடல்வால் நோய் ஏற்படும்பொழுது முதல் அறிகுறியாக அடிவயிற்றில் வலி ஏற்படும். இந்த வலி மிகவும் கடுமையாக இருக்கும். அடிவயிற்றின் வலது பக்கத்தில் வலி அதிகமாக இருக்கும். அப்பகுதியை தொட்டாலே வலி இருக்கும். வலது அடி வயிற்றில் ஏற்படும் வலி தொப்புளைச் சுற்றி பரவும். நேரம் செல்ல, செல்ல வயிற்றுப் பகுதி முழுதும் பரவும். 6 முதல் 24 மணிவரை கூட இவ்வலி தொடரும் நிலைக்கூட ஏற்படலாம். பல நேரங்களில் வலி மாத்திரைகளுக்குக் கூட கட்டுப்படாத வலியாக இவ்வலி இருக்கும்.
அடிவயிற்றில் வீக்கம்: அடிவயிற்றில் வலியோடு வீக்கமும் ஏற்படும்.
குமட்டல், வாந்தி: வலி, வீக்கம் அடிவயிற்றில் ஏற்படும் நிலையில் குமட்டல் ஏற்படும். வாந்தியும் ஏற்படும்.
குமட்டலும், வாந்தியும் வயிற்றில் ஏற்படும் பல நோய்களிலும் தெரியும் ஒரு பொது அறிகுறியானாலும், அடிவயிற்றில் வலி, வயிற்றில் ஏற்படும் வீக்கத்தோடு கூடிய குமட்டல் ஏற்பட்டால் குடல்வால் அழற்சி என்று சந்தேகிக்கலாம்.
பசியின்மை: பசியின்மை, உணவைக் கண்டாலும், உண்ண வேண்டும் என்று தோன்றாமை போன்றவை ஏற்படும்.
குடலியக்கத் தொல்லை: மலச்சிக்கல் அல்லது வலது அடிவயிறு வலியோடு ஏற்படுதல்.
வயிற்றுப் பிடிப்பு: வலியோடு கூடிய வயிற்றுப் பிடிப்பு ஏற்படும். இந்நிலை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் உயிரையே இழக்க வேண்டிய நிலைகூட ஏற்படும்.
காய்ச்சல்: ஆரம்ப நிலையில் லேசான காய்ச்சல் ஏற்படலாம். மருத்துவம் செய்யப்படாத நிலையில் இரத்த நச்சூட்டம் ஏற்பட்டால் காய்ச்சல் மிக அதிகமாகும். மருந்துகளால்கூட கட்டுப்படாத நிலை ஏற்படும்.
களைப்பு: உடல் களைத்துவிடும்.
சோர்வு: சோர்வு ஏற்படும்.
நீர்மச் சமச்சீரின்மையால் மேற்கூறிய அறிகுறிகள் அதிகமாகும்.
மரணம்: மருத்துவம் சரியான நேரத்தில், சரியாகச் செய்யாவிடில் குடல்வால் வெடித்து, சீழ் வயிற்று உறை உள்புறம் முழுமைக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு மரணம் நிகழும்.
நோயறிதல்: குடல்வால் அழற்சியை அறுதியிட்டு, சோதனைகள் மூலம் அறிதல் மிகவும் கடினம். அறிகுறிகள் வயிற்றில் ஏற்படும் பல நோய்களுக்கான அறிகுறிகளோடு ஒத்து இருப்பதால் அடிப்படையான சோதனைகள் அனைத்தும் செய்ய வேண்டும்.
¨ இரத்தப் பரிசோதனை: இதன்மூலம் இரத்தத்தில் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பின், நோய் தொற்றுக்கான நிலைப்பாட்டினையும், அழற்சியையும் உறுதி செய்யலாம்.
¨ சிறுநீர் சோதனைகள் மூலம், சி-றுநீரில் தொற்று உள்ளதா என அறிவர்.
¨ ஊடுகதிர் நிழற்படம் மூலம் பாதிப்பு மற்ற உறுப்புகளில் உள்ளதா என்பதை அறிய முடியும்.
¨ ஒலி, எதிரொலி ஆய்வு (Ultra sound) மூலம் நோயறியும் வாய்ப்பு ஏற்படும்.
¨ CT ஸ்கேன் மூலம் ஓரளவு நோயறிய முடியும்.
¨ நோய் அறிகுறிகளை வைத்தே பெரும்பாலும் இந்நோயை மருத்துவர்கள் அறிவர்.
¨ சோதனைகள் ஓரளவு உதவும்.
மருத்துவம்: குடல்வால் அழற்சி நோயில் அறுவை மருத்துவத்தால் குடல்வால் முழுமையாக அகற்றப்பட்டுவிடும். ஆபத்து ஏதுமில்லாத அறுவை மருத்துவம் இது. இது “குடல்வால் அகற்றம்’’ (Appendicectomy) என்று அழைக்கப்படுகிறது. நோயின் தன்மையும், வீரியத்தையும் பொறுத்து உடனடியாக அறுவை மருத்துவம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். பெரும்பாலும் “தண்டுவட மரப்பு ஊசி’’ (Spinal-Local Anaesthesia) போட்டே இவ்வறுவை மருத்துவம் செய்யப்படுகிறது. சிறுவர்களுக்கு செய்யும் பொழுது ‘முழு மயக்க மருந்து’ (General Anaesthesia) செலுத்தி செய்யப்படும். அறுவை மருத்துவம் முடிந்து இரண்டு, மூன்று நாள்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்.
தற்பொழுது நவீன மருத்துவ முறையாக “வயிறு உள்நோக்கி’’ (Laproscopy) மூலம் செய்யும் அறுவை மருத்துவம் சிறப்பாகச் செய்யப்படுகிறது. அதிக தொல்லையற்ற மருத்துவமுறை இது. மருத்துவ மனையிலிருக்கும் நாள்களும் மிகக் குறைவு. அதிக ஆபத்தில்லாத, எளிமையான, வெற்றிகரமான மருத்துவ முறை இது. இன்றைய காலக்கட்டத்தில் மிக அதிகமாக இம்மருத்துவம் செய்யப்படுகிறது.
ஆனால், மருத்துவம் நோயின் தொல்லைகளுக்கு ஏற்பவும், உடலின் வீரியத்திற்கும் ஏற்பவும் மாறுபடும்.
வயிற்று உறை அழற்சி, இரத்த நச்சூட்டம், இரத்த நச்சூட்ட அதிர்வு, நீர்மச் சமச்சீரின்மை ஆகியவற்றை முதலில் சீராக்கும் முயற்சியையே மருத்துவர்கள் மேற்கொள்வர். நோயாளி உடல்நிலை சீரான தன்மை அடைந்த பின்பே அறுவை மருத்துவம் செய்ய முடியும்.
ஆரம்ப நிலையில் லேசான அறிகுறிகள் தெரியும்பொழுதே அறுவை மருத்துவம் செய்து கொள்வதே சிறந்த அணுகுமுறை. அதைத் தவிர்த்து, மருந்துக் கடைகளில், மருந்துகள் வாங்கி, மருத்துவர் அறிவுரைகள் இல்லாமல் உட்கொள்வது என்பது தவறான அணுகுமுறை. ஆபத்தான அணுகுமுறையும்கூட!
வயிறு வலியும், குமட்டல், வாந்தி, காய்ச்சல் போன்றவையும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ அறிவுரையைப் பெற வேண்டும்.
(தொடரும்)
‘வயிறு வலி’ என்பது, சரளமாக மக்கள் பயன்படுத்தும் வார்த்தை. வயிறு வலியோடு, வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படும்பொழுது கட்டாயம் மருத்துவ அறிவுரை பெறுதல் வேண்டும்.
சிறுநீரகக் கற்கள், சிறுநீர்க்குழாய் கற்கள், குடல்வால் அழற்சி, பித்தப்பை கற்கள், சிறுகுடல் அழற்சி போன்ற பல நோய்களிலும் மேற்கண்ட அறிகுறிகளே முதலில் தெரியும். சரியான ஆய்வுதான் நோயை உறுதியாக்கும். எனவே, மருத்துவ அறிவுரையை ஒரு கட்டாயத் தேவையாக நினைக்க வேண்டும்.
குடல்வால் அழற்சியில், குடல்வாலில் வீக்கம் ஏற்பட்டு, குடல்வால் வெடித்து, உடல் முழுதும் நோய்க் கிருமிகள் பரவும் ஆபத்தும், அதன் காரணமாய் மரணமும் நிகழும் ஆபத்து உள்ளதால் எச்சரிக்கையோடு ‘வயிறு வலி’யை நாம் அணுக வேண்டும்.
நேரத்தில் செய்யப்படும் மருத்துவம் எளிதானது. நன்மை பயக்க வல்லது. உயிரைக் காக்கக் கூடியது!
-மரு.இரா.கவுதமன்