செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர்சவரன்ஸ் என்னும் ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் (19.2.2021) தரையிறக்கியது.
இந்த திட்டத்தில் இந்தியாவில் பிறந்த பெண் விஞ்ஞானி, டாக்டர் சுவாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வு வாகனத்தை அனுப்பும் இந்தத் திட்டம், 2013இல் துவங்கியதில் இருந்தே அதில் ஈடுபட்டு வந்தார் சுவாதி மோகன்.
‘ஜி.என். அண்ட் சி’ எனப்படும் வழி காட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்தார். ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கினார் சுவாதி மோகன். மேலும் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியதிலிருந்து அதன் ஒவ்வொரு செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறார்.
நாசாவின், சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயண திட்டங்களிலும் இவர் ஈடுபட்டு வருகிறார்.
ஸ்வாதி மோகன் ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும் போதே இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிவிட்டார். வடக்கு வெர்ஜீனியா மற்றும் வாஷிங்டன் டி.சி. மெட்ரோ பகுதிகளில்தான் வளர்ந்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பிரிவில் இயந்திரவியல் மற்றும் ஏரோஸ்பேஸ் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். அதன் பின் எம்.அய்.டியில் ஏரோனாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பிரிவில் முதுகலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.
குழந்தை மருத்துவராக வேண்டும் என்றிருந்த விருப்பம்
மார்ஸ் 2020 திட்டத்தில் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்கத்தின் தலைவர் (Guidance & Controls Operation Lead) என்கிற முக்கிய பொறுப்பை ஸ்வாதி மோகன் தலைமை ஏற்று கலிஃபோர்னியாவில் இருக்கும் நாசாவின் ஜெட் ப்ரொபல்சன் ஆய்வகத்தில் பணியாற்றி வருகிறார்.
மருத்துவராக விரும்பிய ஸ்வாதிக்கு விண்வெளி மீது எப்படி ஈர்ப்பு ஏற்பட்டது?
ஸ்வாதி ஒன்பது வயது சிறுமியாக இருக்கும் போது ‘ஸ்டார் டிரெக்‘ என்ற அறிவியல் தொலைக்காட்சி நிகழ்ச்சி வெளியானது. அதில் விரிந்து கிடக்கும் பேரண்டத்தில் புதிய புதிய பகுதிகளைக் கண்டு பிடிப்பார்கள். அதைக் கண்ட போது தான் அவருக்கும் விண்வெளி மீது ஈர்ப்பு ஏற்பட்டது.
“நானும் அது போல செய்ய விரும்பினேன். இந்த பேரண்டத்தில் புதிய, அழகான இடங்களைக் கண்டுபிடிக்க விரும்பினேன். இந்த பரந்து விரிந்து கிடக்கும் விண்வெளி தனக்குள் நிறைய ஞானத்தைப் பொதித்து வைத்திருக்கிறது. நாம் இப்போது தான் அதைக் கற்கத் தொடங்கி இருக்கிறோம்,” என நாசா வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்வாதி மோகன்.
மார்ஸ் 2020 விண்கலம் விண்வெளியில் சரியான திசையில் பயணமாவதை உறுதி செய்வது, மார்ஸ் 2020 விண்கலத்தை தேவையான இடத்துக்குக் கொண்டு செல்வது எல்லாம் இவருடைய பொறுப்பு தான்.குறிப்பாக மார்ஸ் 2020 விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் எல்லைக்குள் நுழையச் செல்வது தொடங்கி தரையிறக்குவது வரை இவரது பங்கு மிகவும் முக்கியமானது.
நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்: செவ்வாயில் தரையிறங்கியது – இது என்ன செய்யும்?
அமெரிக்காவின் நாசா தன் பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance Rover) இயந்திரம் வெற்றிகரமாக ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகை பகுதிக்கு அருகில் ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது.
ஆறு சக்கரங்களைக் கொண்ட இந்த பெர்சவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கோளின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடவிருக்கிறது.
செவ்வாயில் ஜெசெரோ பகுதியில் பில்லியன் கணக்கிலான ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய ஏரி இருந்ததாகவும், அதில் நீர் இருந்ததாகவும் கருதப்படுகிறது. எனவே அப்பகுதியில் உயிரினங்கள் வாழ்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கலாம் எனக் கருதுகிறார்கள்.
பெர்சவரன்ஸ் ரோவர் பிப்ரவரி 18, வியாழக்கிழமை இரவு 20:55 ஜி.எம்.டி நேரப்படி செவ்வாயில் தரையிறங்கியது. இந்த மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதற்குள்ளேயே, குறைந்த ரெசல்யூஷன் கொண்ட பொறியியல் கேமராக்களால் எடுக்கப்பட்ட செவ்வாய் கோளின் இரண்டு படங்களை அனுப்பியது பெர்சவரன்ஸ் ரோவர்.
“இப்போதுவரை ரோவர் சமதளத்தில் தான் இருகிறது. இதுவரை 1.2 டிகிரி தான் சாய்ந்திருக்கிறது” என ரோவரின் தரையிறங்கும் அணியின் தலைவர் ஆலென் சென் குறிப்பிட்டார்.
கடந்த 2012ஆ-ம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவரை, செவ்வாய் கோளின் வேறொரு பள்ளத்தில் நாசா தரையிறக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பெர்சவரன்ஸ் ரோவரின் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள், அடுத்த சில வாரங்களில் ரோவர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பார்கள்.
இனி வருங்காலத்தில், பெர்சவரன்ஸ் ரோவர் நிறைய படங்களை எடுத்து அனுப்பும் என எதிர்பார்க்கலாம்.
பெர்சவரன்ஸ் ரோவர் தன்னோடு ஒரு சிறிய ஹெலிகாப்டரை எடுத்துச் சென்றுள்ளது. விரைவில் செவ்வாய் கோளில் ஹெலிகாப்டர் பறக்க விடும் சோதனை நடைபெறும். இப்படி வேறொரு கோளில் மனிதர்கள் ஹெலிகாப்டரை பறக்கவிட முயற்சிப்பது இதுவே முதல் முறை. அதன் பிறகு தான் பெர்சவரன்ஸ் ரோவரின் முக்கியப் பணிகள் தொடங்கும்.
பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கோளில் உள்ள டெல்டா பகுதிகளில் இருந்து மாதிரிகளைச் சேமிக்கும், அதன் பின், பெரிய பள்ளத்தின் விளிம்பை நோக்கி நகரும். இந்தப் பெரிய பள்ளத்தின் விளிம்பில் தான் கார்பனேட் பாறைகள் இருப்பதாகச் செயற்கைக் கோள்கள் கண்டுபிடித்துள்ளன. இந்த பாறைகளைக் கொண்டு பூமியில் உயிரியல் ரீதியிலான நடவடிக்கைகளைக் கண்டுபிடிக்கலாம்.
பெர்சவரன்ஸ் ரோவரில் இருக்கும் உபகரணங்களை வைத்து, இந்த விவரங்கள் அனைத்தையும் மிக நுண்ணிய அளவு வரை ஆராயும்.
ஏன் ஜெசெரோ பள்ளம்?
45 கிலோமீட்டர் அகலம் கொண்ட செவ்வாயின் பள்ளத்துக்கு ஜெசெரோ எனப் பெயர் வைக்கப்பட்டது. ஜெசெரோ என்றால் ஏரி என்று அர்த்தம். நீர் இருக்கும் இடத்தில் தானே உயிரினங்கள் இருக்கும்? அது தான் இந்த இடத்தைத் தேர்வு செய்யக் காரணம்.
ஜெசெரோ பகுதியில் பல தரப்பட்ட பாறை வகைகள், களி மண் வகைகள், கார்பனேட்டுகள் என உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளைக் காட்டக் கூடிய பொருள்கள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக பாத் டப் ரிங் பகுதி. இந்தப் பகுதி ஏரியின் கரையாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பூமியில் ஸ்ட்ரொமடொலைட்ஸ் (Stromatolites) என்றழைக்கப்படும் ஒரு வகையான நுண்ணுயிரிப் பாறையை, பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாயில் கண்டுபிடிக்கலாம்.
பெர்சவரன்ஸ் ரோவர் சேகரிக்கும் வித்தியாசமான மற்றும் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய பாறை மாதிரிகளை தனியாக சிறிய குழாய்களில், செவ்வாயின் மேற்பரப்பிலேயே வைக்கும். நாசா மற்றும் அய்ரோப்பிய விண்வெளி முகமை இணைந்து, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் அந்த பாறை மாதிரிகள் வைக்கப்படும் சிலிண்டர்களைச் சேகரித்துக் கொண்டுவர, பல பில்லியன் டாலர் மதிப்பீட்டில் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
செவ்வாய் கோள் தொடர்பான ஆராய்ச்சியில், செவ்வாயில் இருந்து மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வருவது தான் அடுத்த சரியான மற்றும் தேவையான நடவடிக்கையாக இருக்கும். இதன் மூலம் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்தனவா? வாழ்கின்றனவா? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அது மட்டுமல்ல. இதன்மூலம் செவ்வாய் கோளும் பூமியைப் போலவே ஒரு கோள் என்பதும் உறுதி செய்யப்படும்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆய்வின் மூலம் விண்கலம் செவ்வாயில் இறங்கியதன் மூலம், செவ்வாய் தோஷம் என்ற மூடநம்பிக்கை முற்றாகத் தகர்க்கப்பட்டுவிட்டது என்பதை நாம் முதன்மையாகக் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தி.
எத்தனையோ பெண்களின் வாழ்வைக் கெடுத்த செவ்வாய் தோஷ நம்பிக்கை ஒரு பெண்ணின் அறிவுத் திறத்தால், ஆய்வுத் திறத்தால், அறவே தகர்க்கப்பட்டது சிறப்புக்குரிய சாதனையாகும்.
– மஞ்சை வசந்தன்