அன்புள்ள திராவிட மந்திரிமார்களே! நான் யார்?
உங்கள் சொந்த எதிரியா?
உங்கள் இன எதிரியா?
உங்கள் கொள்கை எதிரியா?
உங்கள் உத்தியோகம், பதவி பற்றிப் பொறாமைப்படுகிறவனா?
அல்லது இந்நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுப்பவனா? அப்படிச் செய்தாவது, ஏதாவது பலன் பெறவேண்டும் என்கிற ஆசையிலோ, நிலையிலோ உள்ளவனா? இதுவரை என் பொது வாழ்வின் பயனாக நான் ஏதாவது பலன் பெற்றவனா? அல்லது எனது வாழ்க்கைத் தரத்தையாவது உயர்த்திக் கொண்டவனா?
உண்மையில் நான் பார்ப்பன துவேஷியா?
எந்தப் பார்ப்பனருக்காவது நான் சொந்தத்தில் எதிரியா?
டாக்டர் சி. ராஜகோபாலாச்-சாரியாருக்கு நாளைக்கு கருப்புக் கொடி பிடிக்கச் செய்ய வேண்டியவனாக நான் ஆனாலும் அவரிடத்தில் சொந்தத்தில் சிறிதாவது வெறுப்போ துவேஷமோ அல்லது அன்புக்குறைவோ, மதிப்புக் குறைவோ எனக்கு உண்டு என்று அவராவது, வேறு யாராவது சொல்ல முடியுமா? தவிர, 1911ஆவது வருஷம் வரை நான் மைனர், ஒரு முரடன். 1911இல் என் தகப்பனார் செத்தது முதல், அதாவது 1911 முதல் 1920ஆம் ஆண்டு வரையில் நான்,
1. தேவஸ்தான கமிட்டி பிரசிடெண்ட்
2. ஆனரரி மாஜிஸ்டிரேட்
3. கோ-ஆப்ரேடிவ் அர்பன் பாங்கி செக்ரட்டரி
4. தாலுகா போர்டு மெம்பர்
5. ஜில்லா போர்டு மெம்பர்
6. 1914இல் ஈரோட்டில் நடந்த கோவை ஜில்லா காங்கிரஸ் கான்பிரன்சுக்கு செக்ரட்டரி
7. ஆனரரி வார் ரிக்ரூட்டிங் ஆபீசர்
8. மகாஜன ஸ்கூல் செக்ரட்டரி
9. ஈரோடு ரீடிங் ரூம் செக்ரட்டரி
10. ஈரோடு முனிசிபல் வாட்டர் ஸ்கீம் செக்ரட்டரி
11. வார்கமிட்டி செக்ரட்டரி
12. வார்பண்ட் கலெக்ஷன் கமிட்டி பிரசிடெண்ட்
13. ஓல்ட் பாய்ஸ் அசோசியேஷன் பிரசிடெண்ட்
14. எஸ்.அய்.சேம்பர் ஆப் காமர்ஸ் சப் கமிட்டி மெம்பர்
15. வருஷம், 900ரூ. இன்கம் டாக்ஸ் (1920இல்) அந்தக் காலத்தில் கொடுத்து வந்த வியாபாரி.
16. கடைசியாக முனிசிபல் சேர்மன் ஆகவும் இருந்தவன்.
17. ஈரோடு வாட்டர் வர்க்ஸ் வேலை முடிந்து திறப்பு விழா ஆற்றியதற்கு சர்க்காரில் எனக்கு சர்.பி. ராஜகோபாலாச்சாரியார் சிபாரிசு செய்த ராவ்பகதூர் பட்டத்தை மறுத்துவிட்டு, காங்கிரஸ் சேவைக்கு ஆக என்று இவ்வளவு பதவிகளையும் ராஜினாமா கொடுத்து, சிலவற்றை ஏற்க மறுத்து, சன்யாசி வேஷம் கொண்டு ஆச்சாரியார், வரதராஜுலு நாயுடு விருப்பப்படி காங்கிரசில் சேர்ந்தவன்.
18. இவைகளை ராஜினாமா கொடுத்தபிறகு கூட சர்க்கார் இன்கம் டாக்ஸ் -_ அப்பீல் கமிட்டி மெம்பராக எண்ணை வித்து, கயிறு வியாபாரிகள் அப்பீலுக்கு தனி அப்பீல் அதிகாரியாக நியமித்தார்கள். இதற்கு தினம் 100 ரூபா. படி _- 1லு முதல் வகுப்புப் படி.
19. காங்கிரசுக்கு வந்த உடனே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியானவன்.
20. அடுத்த ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவன் ஆனவன்.
21. தமிழ்நாடு காதி, வஸ்திராலய பவுண்டர் (துவக்கியவன்) ஆகவும், 5 வருசத்துக்குத் தலைவனாகவும் தெரிந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் சுமார் 40 கதர் கடையும், 30 ஆயிரம் முதல் 1,00,000 ரூ. வரை மாதம் கதர் உற்பத்தியும் செய்யும்படி ஏற்பாடு செய்தவன்.
22. 1924இல் நான் பார்ப்பனியம் _ -பார்ப்பன ஆட்சி பிடிக்காமல் காங்கிரசிலிருந்து வெளியேறி 1926 முதல் 1936 வரை ஜஸ்டிஸ் மந்திரிகள் நண்பனாக இருந்தவன். அக்கட்சிக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் பாடுபட்டவன்.
23. இவ்வளவு சம்பந்தத்திலும், ஏற்பாட்டிலும் யாரிடமிருந்தாவது ஒரு சின்னக்காசு வரும்படியோ, பட்டமோ எனக்காவது, எனக்கு வேண்டியவர்களுக்காவது, என் குடும்பத்துக்-காவது ஒரு சிபாரிசோ, பதவி லாபமோ ஏதாவது பெற்றவனா? ஆசைப்பட்டவனா?
24. நான் காங்கிரசிலிருந்து வெளியேறிய பின்பும்கூட காங்கிரஸ் நிர்மாணத் திட்டத்தில் கதரைத் தவிர மற்றவைகளுக்கு ஆக உழைத்தவனே தவிர, எதையாவது எதிர்த்தவனா?
25. இந்தி விஷயத்திலும்கூட இந்தி பள்ளிக்கூடம் தென் இந்தியாவில் 1922இல் முதன்முதல் துவக்கத்திற்கு இலவச இடம், 15 மாணவர்களுக்கு இலவச சாப்பாடு கொடுத்து வந்ததோடு, அதன் பண்டுக்கும் உதவி செய்து பெருந்தொகை வசூலித்துக் கொடுத்து உதவி செய்தவன்.
26. அன்றியும் காங்கிரஸ் திட்டத்தில் பார்ப்பன ஆதிக்கம் தவிர, மற்றபடி நான் எதற்கு விரோதி?
27. இன்றுதானாகட்டும், எனது அரசியல் கொள்கை என்பதுகூட திராவிடநாடு வடநாட்டான் ஆதிக்கத்தில் இருந்து அரசியலிலும், பொருளாதாரத்திலும் பிரிந்து பர்மா, சிலோன் போல ஒரு தனி சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி காங்கிரஸ் அரசியல் கொள்கையில் திட்டத்தில் நான் எதற்கு விரோதி?
28. இந்தத் திட்டத்திலும் என்னிடம் ஏதாவது இரகசியமுறை இருக்கிறதா?
29. திராவிட நாடு தனியாய் பிரிந்தால் மந்திரிமார்களே! பெரிய அரசியல்வாதிகளே!! திராவிட நாட்டுக்கு என்ன கெடுதி ஏற்படக் கூடும்? என்று இதுவரை நீங்களாவது சொன்னீர்களா?
இவை நிற்க, இனி எனது சமுதாயத் திட்டம் தானாகட்டும், வருணாசிரம தர்மமுறை ஒழிய வேண்டுமென்பதும், பார்ப்பன சமுதாயத்துக்கு எந்தத் துறையிலும் அவர்கள் எண்ணிக்கைக்கு மேற்பட்ட பங்கும், எண்ணிக்கைக்கு மேற்பட்ட உரிமையும், சராசரி வாழ்க்கை முறைக்கு மேற்பட்ட தன்மையும் இருக்கும்படியான எவ்வித நடப்பும் வசதியும், சலுகையும் இருக்கக் கூடாது என்பது தானே?
சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டு, பிற்படுத்தப் பட்டு இருக்கும் திராவிட மக்களுக்குத் தனிச் சலுகை கொடுத்து கூடியவரையில் சம சமுதாயமாக்கப்பட வேண்டுமென்பதும் தானே?
சமயத் துறையில் புராணக் கடவுள்கள் பிரசாரமும், விக்கிரக ஆராதனையும் அனுமதிக்கக் கூடாது என்பதோடு, கோவில், மடம், வர்ணமுறை, தர்மம் என்பவைகள் பேரால் பணம் இருப்பு இருப்பதோ, சேர்ப்பதோ, செலவு செய்வதோ கூடாது என்பதும்,
தர்மம் என்பதெல்லாம் மக்கள் வாழ்வில் உயர்வு தாழ்வும், வாழ்க்கைத் தேவையில் பெருமித உயர்வு தாழ்வும் இல்லாமல், நித்திய ஜீவனத்தைப் பொறுத்தவரையிலாவது அடிமை உணர்ச்சி தேவையில்லாத ஆண்மை வாழ்வு வாழ வகை செய்ய வேண்டுமென்பதும்தானே ஒழிய, மற்றபடி எந்தத் துறையில் என்ன கெடுதி ஏற்பட நான் ஆசைப்படுகிறேன்?
கல்வியில் தானாகட்டும், 100க்கு 90 திராவிட மக்கள் கைநாட்டுத் தற்குறிகளாய் இருக்க, இதைச் சரிபடுத்தாமல் (அய்ஸ்கூல், உயர்தரப் பள்ளி காலேஜ், கல்லூரிகள், பல்கலைக்-கழகங்கள், என்னும் பேரால்) பாட்டாளி மக்களின் உழைப்பை வரியாக வாங்கி கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்யக் கூடாது என்பதைத் தவிர, கல்விக்கு நான் எந்த விதத்தில், என்ன கெடுதி செய்கிறேன்?
நமக்கு அரசியலுக்கோ, சமய சமுதாய இயலுக்கோ, வேறு கலை இயலுக்கோ ஆள்கள் வேண்டுமானால் வேண்டிய அளவுக்கு கிராண்டு, ஸ்காலர்ஷிப், ஸ்டைபண்டு கொடுத்து எங்காவது சென்று படித்து வரும்படிச் செய்து வேலை வாங்கலாம் என்றும், ஏராளமான பிரபுக்கள் இருக்கிற நாட்டில் பிரபுக்களுக்கு மாத்திரம் கிடைக்கும்படி கலைகளுக்கு, உயர்ந்த கல்விக்கு ஏழைகள் பணம் ஏன் செலவு செய்யவேண்டும்? என்பவை போன்ற கருத்தன்னியில் மற்றபடி நான் எந்த விதத்தில் நாட்டுக்கு, சமுதாயத்திற்குக் கேடு விளைவிப்பவனாக இருக்கிறேன்? அன்றியும், என்னிடத்தில் எங்காவது எப்போதாவது பலாத்காரத்தைத் தூண்டும் சொல்லையோ, செய்கையையோ, ஜாடையையோ கண்டீர்களா?
அல்லது என் பேச்சால், எழுத்தால், செய்கையால் எங்காவது, என்றாவது பலாத்காரம், கலகம், குழப்பம் ஏற்பட்டதா? சர்க்காரைக் கவிழ்க்கும் ஜாடையைக் கண்டீர்களா? குழப்பம், கலவரம் உண்டாகும் ஜாடையையோ, அனுபவத்தையோ கண்டீர்களா?
ஆதலால், இந்திப் போராட்டத்தை ஒடுக்குவது என்கிற சாக்கை வைத்துக் கொண்டு என் முயற்சியை, என் தொண்டை நீங்கள் அழித்துவிடுவது என்று முடிவு செய்து கொண்டீர்களானால் அதை உங்கள் இஷ்டத்துக்கே விட்டுவிடுகிறேன்.
எனது தொண்டுக்கும், முயற்சிக்கும் இந்தி ஒழிப்பது என்பது மாத்திரமே காரணமல்ல, என்பதை உணர்ந்து அடக்குமுறை துவக்குங்கள். என் முயற்சி, தொண்டு எல்லாமுமே நியாயமானது, அவை வெற்றி பெற வேண்டும் என்பதேயாகும். அதற்கு நீங்கள் எந்தவிதத் தடங்கலும், குந்தகமும் செய்யக் கூடாது என்பதற்கேயாகும்.
உங்கள் எண்ணத்தை, நடத்தையை நீங்கள் பதவிக்கு வந்த இந்த சுமார் ஓர் ஆண்டாக நான் கவனித்து வருகிறேன். என் விஷயத்தில் இதுவரை பார்ப்பன ஆதிக்க மந்திரிகளால் செய்யப்படாத காரியங்களை நீங்கள் செய்தீர்கள். அவர்கள் அனுமதித்து வந்த காரியங்களை நீங்கள் தடுத்தீர்கள். அவர்கள் காட்டிய சலுகையைக்கூட நீங்கள் காட்ட மறுக்கிறீர்கள்.
இதற்குக் காரணம் என்ன? உங்கள் பதவிப்பித்து அல்லது பயங்காளித்தனம் தானே? இல்லாவிட்டால் நான் என்ன அயோக்கியனா? சமுதாயத்துக்கு, அரசியலுக்கு ஆபத்தானவனா? என்னமோ, செய்யுங்கள்!
– குடிஅரசு, 21.08.1948