தந்தை பெரியார் என்றால் மனிதநேயர் என்றே பொருள். மனிதத்தின் மறுபெயர் பெரியார் என்றால் அது மிகச் சரியான கணிப்பாகும்.
மனிதநேயம் என்பது தன்னைப்போலவே பிறரையும் எண்ணுவது. தனக்குள்ள உணர்வுகள் பிறருக்கும் உண்டு என்று உணர்வது. இந்த உணர்வு இருந்தால் மட்டும் போதாது. அதற்கேற்ப நடக்க வேண்டும்; பிறரை நடத்த வேண்டும்.
தந்தை பெரியார் எதிர்ப்பது, ஏற்பது, ஒழிப்பது, ஒதுக்குவது, போராடுவது, கருத்துரைப்பது எல்லாமும் மனிதநேய அடிப்படையிலேதான்.
மனிதநேயம் உள்ளவர் எவரும் ஆதிக்கத்தை எதிர்ப்பர், ஒழிப்பர். ஆதிக்கம் என்பது பலவகையில் மற்றவர் மீது செலுத்தப்படுகிறது. முதலாளி தொழிலாளி மீது; பணக்காரன் ஏழை மீது; ஆண்கள் பெண்கள் மீது; வலியவன் எளியவன் மீது; பெரும்பான்மை சிறுபான்மை மீது; உயர்ஜாதி கீழ்ஜாதி மீது; அதிகாரம் உள்ளவன் இல்லாதவன் மீது; கற்றவன் கல்லாதவன் மீது இப்படிப் பல விதங்களில் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது.
மனிதநேயம் உள்ள எவரும் இப்படி ஆதிக்கங்கள் செலுத்தப்படுவதைக் கண்டு கொதித்தெழுவர். அப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் கொதித்தெழுந்து போராடியதன் விளைவாகத்தான் உலகில் ஆதிக்கத்தின் கொடுமை, கடுமை ஓரளவிற்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி என்ற பலவும் ஆதிக்க ஒழிப்புக்கு நடத்தப்பட்டவையே ஆகும்.
ரஷ்யப் புரட்சி நிகழ்த்தப்பட்ட அதே காலகட்டத்தில் இந்தியாவில் ஆதிக்கவாதிகளுக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடங்கியவர் தந்தை பெரியார்.
உலகில் நடத்தப்பட்ட புரட்சிகள் எல்லாம் முதலாளி_தொழிலாளி, ஆட்சியாளர்_குடிமக்கள் எதிர்எதிர் நின்று நடத்தப்பட்டவை. பாதிக்கப்பட்டவர்கள் ஆதிக்கவாதிகளுக்கு எதிராய் புரட்சிகளைச் செய்து, ஆதிக்கவாதிகளை அழித்து ஆதிக்கம் தகர்த்தனர்.
ஆனால், இந்தியாவில் தந்தை பெரியார் நடத்திய ஆதிக்க எதிர்ப்பு என்பது வேறுபட்டது.
இங்கு பொருளாதாரக் காரணங்களைக் காட்டிலும் சமுதாயக் காரணங்களுக்கான ஆதிக்க எதிர்ப்பு நிகழ்த்த வேண்டியது கட்டாயமாக இருந்தது. இது உலகில் வேறு எங்கும் இல்லாத நிலை.
அது மட்டுமல்ல; உலகில் பொதுவாக பெரும்பான்மை சிறுபான்மை மீது ஆதிக்கம் செலுத்தும், மண்ணுக்குச் சொந்தக்காரன் வந்தேறிகள் மீது ஆதிக்கம் செலுத்துவான். ஆனால், இந்தியாவில், மிகச் சிறுபான்மை இனம் மிகப் பெரும்பான்மை இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் விந்தை நிலை. அதிலும் குறிப்பாக வந்தேறிகள் சொந்த மண்ணின் மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தும் அவல நிலை.
பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள் எல்லாம் பொருளாதார ஆதிக்கவாதிகளை எதிர்ப்பதில் முனைந்து நின்றனர். காங்கிரசார் ஆங்கில _ அந்நிய _ ஆட்சியின் _ ஆதிக்கத்தை அகற்றுவதில் அணிவகுத்தனர்.
ஆனால், தந்தை பெரியார் ஒருவர்தான் இந்தியாவின் ஆதிக்க ஒழிப்பு என்பது பார்ப்பன ஆதிக்க ஒழிப்புதான் முதன்மையாக ஒழிக்கப்பட வேண்டியது என்றார். பார்ப்பன ஆதிக்கம் என்பது _ கடவுள், விதி, மதம், சாஸ்திரம், முதலாளித்துவம், ஆணாதிக்கம், ஜாதி ஆதிக்கம் இவற்றின் அடிப்படையில் அமைந்தது. எனவே, பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்தால் இவை அனைத்தும் ஒழிக்கப்பட்டுவிடும். பார்ப்பன ஆதிக்கத்தின் அடிப்படைகளான கடவுள், மதம், சாஸ்திரம் ஒழிக்கப்படாமல் பொருளாதார சமத்துவத்தையும், ஆண்_பெண் சமத்துவத்தையும் அடைய முடியாது என்பதைத் துல்லியமாக அறிந்து அதனடிப்படையில் தன் போராட்டங்களை, பிரச்சாரங்களை, எதிர்ப்புகளைச் செய்தார்.
ஆண்_பெண் சமத்துவத்தை மதமும் சாஸ்திரமும் எதிர்க்கின்றன. முதலாளி ஆதிக்கத்தை _ ஏழை பணக்காரன் வேறுபாட்டை கடவுள் கோட்பாடு ஆதரிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களிடம் எழுச்சி ஏற்படாமல் விதி நம்பிக்கை தடுக்கிறது என்கிற உண்மைகளை தத்துவார்த்தமாகவும், அறிவு பூர்வமாகவும் அறிந்து ஆதிக்க ஒழிப்பு நடவடிக்கைகளை தந்தை பெரியார் மேற்கொண்டார்.
தந்தை பெரியாரின் அணுகுமுறை எவ்வளவு ஏற்புடையது என்பதை இன்றைக்கு நம்மால் தெளிவாக உணர முடிகிறது. மத்தியில் பார்ப்பன பா.ஜ.க. ஆட்சி பெரும்பான்மை பலத்துடன் வந்ததும் பார்ப்பன ஆதிக்கம் கட்டவிழ்த்து உச்சநிலைக்குச் சென்றுள்ளது. பழைய சனாதன நடைமுறைகள் ஒவ்வொன்றாகத் திணிக்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்டு உரிமைகள் பறிக்கப்படுகின்றன. கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கம் மேலோங்கி அடித்தட்டு மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர்.
சமஸ்கிருதம் திணிக்கப்பட்டு தாய்மொழி புறக்கணிக்கப் படுகிறது. மேல்ஜாதிக் கொடுமைகள் மீண்டும் தலை தூக்குகின்றன. மத மறுப்பு மணங்கள் தடை செய்யப்படுகின்றன. இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு, உயர் ஜாதி ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சமூக நீதிக்கு சவக்குழி வெட்டப்படுகிறது. கல்வி உரிமை சிறுகச் சிறுக தடுக்கப்படுகிறது; பறிக்கப்படுகிறது.
ஆக, பார்ப்பன ஆதிக்கம் வந்தால் இவையெல்லாம் நடக்கும். எனவே, ஆதிக்கம் அழிக்கப்பட பார்ப்பன ஆதிக்க ஒழிப்பே சரியான வழி என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், தந்தை பெரியாரின் ஆதிக்க அழிப்பு முறையே ஏற்புடையது என்பது இப்போது இந்தியா முழுமையும் ஏற்கப்படுகிறது.
ஜாதியின் வேர்களைந்த சமத்துவப் பெரியார்
உலகில் எங்கும் இல்லா பிறவி பேதம் ஜாதி! காரணம் ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் மேன்மைக்கும் ஆதிக்கத்திற்கும், தன்னலத்திற்கும் திட்டமிட்டு உருவாக்கியது ஜாதியென்பதால் இது உலகில் வேறு நாடுகளில் இல்லை.
சிறுபான்மை கூட்டமான ஆரியப் பார்ப்பனர்கள், மண்ணின் மக்களான தமிழர்களின் ஒற்றுமையையும் பெரும் திரளையும் சிதைப்பதற்காகவும், தங்களை உயர்ந்தவர்களாகவும், மற்றவர்களை இழிமக்களாகக் காட்டுவதற்காகவும், தங்கள் ஜாதி மேன்மையின் மூலம் ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் ஜாதிப்படிநிலைகளை உருவாக்கினர். தாங்கள் உருவாக்கிய ஜாதிப் படி நிலைகள் என்றென்றும் நிலைக்க வேண்டும் என்பதற்காக ஜாதியை கடவுளோடு தொடர்புப்படுத்தி, ஜாதியைக் கட்டமைக்க காலந்தோறும் பின்பற்றப்பட சாஸ்திரங்களை, ஸ்மிருதிகளை உருவாக்கினர்.
ஜாதிக் கட்டமைப்பின்படி தாங்களே உயர்ந்தவர்கள், வணங்கத் தக்கவர்கள், மற்றவர்களெல்லாம் தங்களுக்குக் கீழானவர்கள், தீண்டத் தகாதவர்கள். தாங்களே கடவுளை நெருங்கவும், தொடவும், பூஜை செய்யவும் தகுதியுடையவர்கள்; மற்றவர்கள் கடவுளைத் தீண்டவோ பூஜைசெய்யவோ தகுதியற்றவர்கள். தங்கள் மொழி சமஸ்கிருதமே கடவுளை வணங்குவதற்கு, போற்றுதற்குரிய தெய்வமொழி; மற்ற மொழிகளெல்லாம் நீச மொழிகள். தாங்கள் மட்டுமே கற்க வேண்டும்; மற்ற ஜாதியினர் கற்கக்கூடாது, பார்ப்பனர்களுக்குப் பணிவிடை செய்வதே மற்ற ஜாதியினரின் கடமை என்று சாஸ்திரப்படி சட்டம் செய்தனர்.
தங்கள் ஜாதிப் பிரிவையும், அதில் உள்ள சட்டங்களையும் தவறாது பின்பற்ற வேண்டும். மீறினால் கடவுள் தண்டிக்கும் என்று அச்சுறுத்தினர். கடவுள் மீதிருந்த அச்சத்தால் மற்ற மக்கள் ஜாதிய கட்டமைப்பையும், அதன் சட்டதிட்டங்களையும் அப்படியே ஏற்று ஆரியப் பார்ப்பனர்களின் அடிமையாய் வாழ்ந்தனர். கடவுளோடு பார்ப்பனர்கள் நெருங்கியிருந்ததால், பார்ப்பனர்களைக் கண்டு அஞ்சவும் செய்தனர்.
இடையர் (யாதவர்) ஜாதியைச் சேர்ந்த நாங்கள், எங்கள் ஜாதியில் பிறந்த குழந்தைகளை கல்வி கற்க பள்ளிக்கு அனுப்பினால், சரஸ்வதி அவர்களைக் கொன்றுவிடுவாள் என்பதால் எங்கள் ஜாதியினரைப் பெற்றோர் படிக்கவைக்க வில்லை என்று ஆந்திர மாநிலம் உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் அரசியல் துறைத் தலைவர் காஞ்ச அய்லய்யா அவர்கள் இந்து ஆன்மிகமே பாஸிஸம்தான் என்னும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
ஆரியப் பார்ப்பனர் அல்லாதார் படித்தால், நாக்கை வெட்டவேண்டும்; கல்வியை மனப்பாடம் செய்தால் நெஞ்சைப் பிளக்கவேண்டும்; கல்வியைக் காதால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று சாஸ்திரங்களில் எழுதி அப்படியே அதைச் சட்டமாகவும் செயல்படுத்தினர்.
பிறப்பால் பேதம், உரிமை மறுப்பு, இழிவு என்று பெரும்பான்மை மக்களின் சமூக வாழ்வையே அடிமை வாழ்வாய் ஆக்கிய ஜாதியை அறவே அகற்ற வேண்டும் என்று தந்தை பெரியார் தீவிரமாய்ப் போராடினார். ஜாதியை ஒழிக்க ஜாதிக்கு அடிப்படையான கடவுள், மதம், புராணம், சாஸ்திரம் போன்றவற்றையும் அறவே ஒழிக்க முயன்றார்.
தீண்டாமை ஒழிப்பு என்பது பாதிவேலை தான். ஜாதி ஒழிப்பே முழுமையான பணி. ஜாதி ஒழிந்தால் தீண்டாமை தானே மறையும் என்பதே பெரியார் கொள்கை. அந்த அடிப்படையிலே தான் அவர் ஜாதியை ஒழிக்கப் பாடுபட்டார். ஜாதியை, வர்ணாஸ்ரமத்தை ஆதரித்துக் கொண்டே தீண்டாமை ஒழியவேண்டும் என்றவர்களைக் கடுமையாகக் கண்டித்தார்.
ஜாதி ஒழிய ஜாதி மறுப்பு மணம் ஒன்று தான் வழி. திருமண உறவு மூலம் தான் ஜாதியை ஒழிக்க முடியும், கல்வி, வேலை வாய்ப்பு இவை யெல்லாம் ஜாதியை ஒழிக்கத் துணைசெய்யுமே தவிர, இவற்றால் ஜாதி ஒழியாது என்றார்.
ஆரியப் பார்ப்பன சாஸ்திரப்படி பார்ப்பனர் அல்லாதார் யாராயினும், அவர்கள் இஸ்லாமியராய், கிறித்துவராய் இருப்பினும், இந்துக்களிலே ஆரியப் பார்ப்பனர்கள் அல்லாதவர் எல்லோருமே தீண்டத் தகாதவர்களே! இதில் தாழ்த்தப்பட்டோர் மட்டும் தீண்டத் தகாதவர் என்பது அறியாமை. பார்ப்பனர் கொள்கைப் படியும், நடைமுறைப் படியும், பார்ப்பனர் அல்லாதவர் அனைவரும் தீண்டத்தகாதவர் தாம். கோயில் கருவறைக்குள் செல்லும் போதும், கும்பாபிஷேகம் செய்யும் போதும் இந்த உண்மையை எல்லோரும் தெரிந்து கொள்ளலாம் என்று விளக்கி, தங்களை மேல் ஜாதி என்று பெருமை கொண்டிருக்கின்றவர்களின் அறியாமையை விளக்கினார்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பாடுபட்டதைக் காட்டிலும், தாழ்த்தப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், அவர்கள் ஏற்றம் பெறவும் பெரிதும் பாடுபட்டார். அம்பேத்கருடன் இணைந்து ஜாதி ஒழிப்பிற்குப் போராடினார்.
ஜாதியின் கொடுமையால் நாற்றமெடுத்த மலத்தைவிட மனிதன் கேவலப்படுத்தப் படுகிறான். இது உண்மை. வாய்ப் பேச்சுக்காக நான் சொல்லவில்லை. எப்படியெனில், மல உபாதைக்குச் சென்றவன் அந்த பாகத்தை மட்டும் ஒரு செம்பு தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்கிறான். மலத்தைக் காலால் மிதித்து விட்டால் அந்தக் காலை மட்டும் தண்ணீரை விட்டுக் கழுவிவிட்டால் அந்தக் குற்றம் போய்விடுவதாகக் கருதப்படுகிறது.
ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தொட்டுவிட்டால் அவனைத் தொட்டதால் ஏற்பட்ட தோஷம், தன் உடலை உச்சிமுதல் உள்ளங்கால் வரை நனையக் குளித்தால் ஒழியப் போவதில்லை என்கிறார்கள். ஆகவே, மலத்தைவிட மனிதன் எவ்வளவு கேவலமாக மதிக்கப்படுகிறான் என்பதைப் பாருங்கள். மனிதனை மனிதன் தொடுவதால் ஏற்படும் கெடுதல் என்ன? தோஷமென்ன? எதுவுமில்லை. ஆனால், அது தோஷம் எனப்படுகிறது. ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழ்வதற்கே இப்படிக் கூறப்படுகிறது. இதைவிட வேறு இரகசியமில்லை.
(திராவிடன் 05.-10.-1929)
இன்று தீண்டாமை விலக்கு வேலையிலும், ஜாதி வேறுபாடு ஒழிப்பு வேலையிலும் ஈடுபட்டிருப்பவர்களில் 100-க்கு 100பேரும் கீதை, மனுதர்மம், சாத்திரம் ஆகியவற்றை நம்பும், ஆதரிக்கும் மதவாதிகளேயாவார்கள். இவர்கள் எவ்வளவு நாளைக்குப் பாடுபட்டாலும், அடியற்ற ஓட்டைக் குடத்தில் தண்ணீர் இறைப்பது போல் பயனற்றே போகும். ஆகவே, தீண்டாமை ஒழிப்புக்கோ, ஜாதி ஒழிப்புக்கோ நீங்கள் முதலில் உங்கள் மதத்தை ஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க உங்களால் முடியவில்லையானால் மதத்தை விட்டு நீங்களாவது விலகியாக வேண்டும். உங்கள் மதம் போகாமல் ஒரு நாளும் உங்களது தீண்டாமைத் தன்மையோ, பறைத் தன்மையோ ஒழியவே ஒழியாது என்பது கல்லுப் போன்ற உறுதி. உதாரணம் வேண்டுமானால், இது வரையில் தீண்டப்படாதவர்களாய் இருந்து, மனிதச் சமூகத்தில் தீண்டக்கூடியவர்களாக ஆன எவரும் தீண்டப்படாதவர்களாய் இருந்தபோது அவர்களின் மீது சுமத்தப்பட்டிருந்த மதத்தை உதறித் தள்ளிவிட்ட பின்புதான் தீண்டத்தக்கவர்கள் ஆகியிருக்கிறார்கள். ஆதலால், மதத்தைக் காப்பாற்றிக் கொண்டு தீண்டாமையை விலக்கி விடலாம் என்று முயற்சித்து ஏமாற்றமடையாதீர்கள்.
(குடிஅரசு 28.07.1935)
மலம் எடுப்பவன் இல்லாவிட்டால் ஊர் நாறிவிடும். துணி வெளுப்பவன் இல்லாவிட்டால் சுத்தமான துணி கட்ட முடியாது. சிரைப்பவன் இல்லாவிட்டால் முகம் தெரியாது. வீடு கட்டுபவன் இல்லாவிட்டால் குடியிருக்க வீடு இருக்காது. நெசவாளி இல்லாவிட்டால் நிர்வாணம்தான். குடியானவன் இல்லாவிட்டால் மக்கள் பட்டினி கிடக்க வேண்டும். இந்த இன்றியமையாத தொழிலாளிகள் இழி ஜாதிகளாம்; நாட்டுக்குப் பயனற்ற பார்ப்பான் மேல் ஜாதியாம்; இது நியாயந்தானா?
(விடுதலை 23.-06.-1962)
உண்மையிலேயே ஜாதியின் பேரால் இந்தத் தொழிலாளி வர்க்கம் என்பது சிருட்டிக்கப்படவில்லை என்று சொல்லப்படுவது உண்மையானால் கக்கூசு எடுக்கிற தொழிலாளி மக்களிலும் நாலு பார்ப்பனர்கள் இருக்க வேண்டுமே. ஆனால் எந்தப் பார்ப்பானாவது கக்கூசு எடுத்ததாக யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தாழ்த்தப்பட்ட மகன்தானே அந்த வேலையைச் செய்கிறான்!
(விடுதலை 17.-5.-1954)
விடிய விடியத் தெருவில் பன்றியும் கோழியும் என்ன தின்கின்ற தென்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவை வீதியில் தாராளமாக வர அனுமதிக்கிறோம். அவற்றைத் தின்பவர்களுக்குத் தீண்டாமை இல்லை. ஆனால், பச்சைப் புல்லையும் பருத்திக் கொட்டையையும் தின்னும் மாட்டைத் தின்பவர்களுக்குத்தானா தீண்டாமை? பன்றி, கோழி, எருமை வரும் இடத்தில் மனிதர் வரத் தடை ஏன்?
(விடுதலை 20.0-5.-1963)
மக்களின் சுயமரியாதைக்காகத்தான், மக்கள் மானத்தோடு வாழ்வதற்காகத்தான் அரசாங்கமும், தேசியமும் வேண்டுமே ஒழிய, மற்றபடி கேவலம் இவை மனிதன் வயிறு வளர்க்க மாத்திரம் வேண்டியது என்றால், அதற்காக எந்த அரசாங்கமும், அரசியலும், தேசியமும் கண்டிப்பாய் வேண்டியதில்லை என்றே சொல்லுவோம்.
(குடிஅரசு 17.02.1929)
போலீசு உத்தியோகங்களைத் தாழ்த்தப் பட்டவர்களுக்கே கொடுக்க வேண்டும். அவர்களை அக்கிரகாரத்தில் குடியிருக்கச் செய்ய வேண்டும். தீண்டாமை பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாகச் சேரி கட்டி அங்கே அவர்கள் குடியேறுவதை மாற்ற வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரிகள் இருக்ககூடாது.
(95ஆம் ஆண்டு பெரியார் பிறந்தநாள் விடுதலை மலர்)
காரியத்தில் உறுதியாய் நிற்காமல் வாயளவில் தீண்டாமையை ஒழிப்பதாகப் பேசுவதான அயோக்கியத் தனத்தால் ஒருபோதும் நாடு முன்னேற முடியாது. புண்ணில், கண்ணில்பட்டால், அதை (வலியை) உடனே தொலைக்க மருந்து முதலியன போட்டு சிகிச்சை செய்யவில்லையா? (அப்படித்தான் இதுவும்) ஆனால், அது வலிக்கக்கூடாது, எரியக்கூடாது என்று மூடி வைத்துக்கொண்டு வாய்ச்சமாதானம் சொல்வது புழுத்துச் சாவதற்கு வழியாகும்
(குடிஅரசு 17.02.1929)
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள்போல் நடத்தப்படுகிற பாட்டாளி, கூலி, ஏழை மக்கள்தான் எனக்கு கண் வலியாய் இருப்பவர்கள். அவர்களைச் சம மனிதர்களாக ஆக்குவதுதான் எனது கண்நோய்க்குப் பரிகாரம். என்று தாழ்த்தப்பட்டோருக்காக பேசியும், எழுதியும், தனது தொண்டினை புரட்சியாகச் செய்தார் பெரியார். அதில் வெற்றியும் பெற்றார். (விடுதலை 15.10.1967)
ஆணாதிக்க ஒழிப்பு
ஆதிக்க ஒழிப்பில் ஜாதி ஒழிப்பு, ஜாதி ஆதிக்க ஒழிப்புக்கு அடுத்ததாக, பெண்ணடிமை ஒழிப்பு, ஆணாதிக்க ஒழிப்புக்கு முன்னுரிமை அளித்தார் பெரியார்.
அதற்கு பெண்கள் முதலில் கல்வி கற்று விழிப்பு பெற வேண்டும். எனவே, பெண்கள் உயர்கல்வி வரை தடையின்றிக் கற்க வேண்டும். தடைகளைத் தகர்க்க வேண்டும் என்றார். பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் பணியில் சேர வேண்டும் என்றார். வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 50% அளிக்கப்பட வேண்டும் என்றார். பெண்களுக்கு ஆண்களைப் போலவே சொத்துரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார். உடை உடுத்துகையில் ஆண்களைப் போலவே வசதியான உடையை அணிய வேண்டும், சண்டைப் பயிற்சி, உடற்பயிற்சி, சிலம்புப் பயிற்சி போன்றவற்றை பெண்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
திருமணத்தில் பெண்கள் அடிமைப் படுத்தப்படும் நிலையை ஒழிக்க சுயமரியாதைத் திருமணத்தை நடைமுறைப்படுத்தினார். விதவை மணம், மணமுறிவு, மறுமணம் போன்ற உரிமைகள் பெண்களுக்குக் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்.
இடஒதுக்கீடு
உயர்ஜாதி ஆதிக்கம் ஒழிக்க, கல்வி வேலைவாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வண்டும் என்றார். இதற்காக அரசியல் சட்டத்தை முதன்முதலில் திருத்தச் செய்தார்.
நீதித்துறை, மருத்துவம், கல்வி, ஆட்சித்துறை என்று அனைத்துத் துறைகளிலும் அனைத்து ஜாதி மக்களுக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கேற்ப வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று போராடினார்.
வழிபாட்டு உரிமை:
கடவுளை மறுத்துப் பிரச்சாரம் செய்த தந்தை பெரியார், நம்பிக்கையுள்ள மக்களுக்கு வழிபாட்டு உரிமை வேண்டும் என்றார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும், கருவறையுள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜாதியைப் பறித்து எறிய வேண்டும் என்றார். இதன்மூலம் ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தை அகற்ற வேண்டும் என்றார். அதேபோல் சமஸ்கிருத ஆதிக்கத்தையும் எதிர்த்து தாய்மொழியில் வழிபாட்டுரிமை வேண்டும் என்றார்.
உலகிற்கே ஒளிதரும் சுயமரியாதைச் சூரியன் பெரியார்!
தந்தை பெரியார் அவர்களை கடவுள் மறுப்பாளர், ஆரியப் பார்ப்பன எதிர்ப்பாளர் என்ற அளவில் சுருக்கி, குறுக்கிக்காட்டும் செயலைத் தொடர்ந்து செய்து வருகின்றனர் சூழ்ச்சிக்காரர்கள்.
ஆனால், தந்தை பெரியார் அவர்களோ, உலகம் உய்ய உரிய வழிகளைச் சொன்ன ஒப்பற்ற சுயசிந்தனையாளர். அதனால் அவர்தம் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.
அவரின் உலகளாவிய சிந்தனைகள் சிலவற்றைத் தொகுத்து நோக்கின், இவ்வுண்மையை எளிதில் அறியலாம்.
உலக நோக்கில் உயரிய சிந்தனைகள் :
மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனிடத்திலே பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி (அமைதி) வாழ்வுக்கு வகை தேடவேண்டும். இதுதான் எனது ஆசை. (குடிஅரசு 07.08.1938)
நான் உலகமே நாத்திக (பகுத்தறிவு) மயமாக வேண்டும் என்பதற்காகவே உயிர் வாழ்பவன். (விடுதலை, 02.09.1967)
மனிதன், உலகில் தன் சுயமரியாதையை,-தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும். (விடுதலை, 20.9.1962)
மனிதன் மற்ற மிருகங்களைப்போல் அல்லாமல் மக்களோடு கலந்து ஒரு சமுதாயமாக வாழ்கிறான். சமுதாயப் பிராணியாக வாழும்போது மற்றவர்களுக்கு ஏதாவது தொண்டு செய்துதான் வாழவேண்டும், மற்றவனிடமிருந்து தொண்டைப் பெற்றுத்தான் வாழவேண்டும். மனிதன் எந்தவிதத்திலாவது சமுதாயத்துக்குப் பயன்பட்டுத்தான் தீரவேண்டும். அந்த முறையில் என்னால் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யக்கூடுமானால் வாழவேண்டும், அதல்லாமல் ஏதோ ஓர் ஆள் சோற்றுக்குக் கேடாக வாழ்வதென்றால் எதற்காக வாழவேண்டும்?
(விடுதலை, 18.10.1957)
உலகத்தில் மனித சமூகம் தொல்லை இல்லாமல் வாழவேண்டுமானால் பிச்சை கொடுப்பதும், பிச்சை எடுப்பதும் சட்ட விரோதமான காரியமாய்க் கருதப்பட வேண்டும். அப்படியானால்தான் மனிதன் சுயமரியாதையோடு வாழமுடியும்.
(குடிஅரசு 21.4.1945)
வலிவுள்ளவனாகவோ, பணக்காரனாகவோ, தந்திரசாலியாகவோ, அயோக்கியனாகவோ இல்லாதவன் வாழ்வதற்கு இந்த உலகத்தில் இடம் இல்லாமல் போய்விட்டது. இவைகளைச் சீர்திருத்த ஒரு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?
(குடிஅரசு 4.5.1930)
ஆதிக்கப் பயமுறுத்தல் காட்டியதால் எந்தக் காலத்திலும் எந்தச் சீர்திருத்தமும் தடைப்பட்டுப் போனது கிடையாது என்பதை வரலாறு கூறும். சீர்திருத்தங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்; மக்களும் சமுதாயச் சீர்திருத்தம் அடைந்துதான் வருவர்.
(விடுதலை, 16.10.1958)
சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரால் இங்கும் அங்கும் ஏதோ மாறுதல்களைச் செய்வதோ, ஒட்டு வேலை _ – மேல்பூச்சு வேலை _ செய்வதோ பயன்தராது. இன்றையச் சமுதாய அமைப்பையே அடியோடு ஒழித்துவிட்டுப் புதியதொரு சமுதாய அமைப்பை- ஜாதியற்ற, உயர்வு தாழ்வு அற்ற சமுதாய அமைப்பை உருவாக்க வேண்டும். (விடுதலை, 15.5.1962)
உலகில் மனிதன் மற்ற உயிரினங்களைவிடச் சிறந்தவனாகக் கருதப்படுவதற்குக் காரணம், அவன் எல்லையற்ற அறிவுச் சக்தி பெற்றிருப்பதுதான், மற்ற நாட்டு மனிதன் அந்த அறிவைப் பயன்படுத்தி மிக மிக முன்னேறிக்கொண்டு வருகிறான். ஆனால், இந்த நாட்டு மனிதனோ, அந்த அறிவினைப் பயன்படுத்தாத காரணத்தினால் மிக மிகப் பின்னுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். இங்கு நாம், ஞான பூமியென்று சொல்லிக்கொண்டு, கோயில் குளம் கட்டிக்கொண்டு இருக்கிறோம். அங்கோ அண்டவெளியில் பறந்து உலகையே பிரமிக்கச் செய்கிறார்கள்.
(விடுதலை, 22.5.1961)
இன்றைய உலக நிலை- அதாவது மக்களுக்கு உள்ள தொல்லைகள், துயரங்கள், மக்களை மக்கள் ஏய்த்து வஞ்சித்தல் ஆகியன ஒழித்து, மக்களுக்குச் சாந்தியும் திருப்தியும் ஏற்பட வேண்டுமானால், பொதுவுடைமைத் தத்துவ ஆட்சி ஏற்பட்டே ஆக வேண்டும். இதில் ராஜிக்கு (சமாதானத்துக்கு) இடமே இல்லை. ஆனால், நம் முயற்சியில், பாமர மக்களுக்கு இம்சையும், நாச வேலையும் சிறிதும் இல்லாமல் இருக்க வேண்டும்.
(விடுதலை, 5.5.1950)
நிலம் முழுவதும் ஏராளமாக ஒரு மனிதன் வசம் தேக்கப்பட்டிருக்கக் கூடாது. அனைவருக்கும் அவரவர்கள் அளவுக்குப் பிரித்துக் கொடுக்கும் காலம் வரும். அந்தப்படியான காலத்தை விரைவில் ஏற்படுத்த நம்மால் முடியாவிட்டாலும் நாம் வழிகாட்டிகளாயிருக்க வேண்டும்.
(திராவிட விவசாய தொழிலாளர் கழகம் ஏன்? பக்.16)
கவலையற்ற-பேதமற்ற நிலை ஏற்பட வேண்டுமானால், யாவரும் ஒரு நிலையில் இருக்கத்தக்க சமதர்ம நிலை உருவாக வேண்டும். இந்தச் சமதர்ம நிலை உருவாவதற்கு முதலில் சொத்துரிமையை ஒழித்தாக வேண்டும். உடைமைகள் எல்லாம் பொதுவாக ஆக்கப்பட வேண்டும்.
(பெரியார் ஒரு வாழ்க்கை நெறி, 16)
பாட்டாளிகளின் கவலையும் தொல்லையும் தொலைய வேண்டுமானால், முதலாளித்துவம் என்பது அடியோடு ஒழிந்தே தீர வேண்டும். (விடுதலை, 7.4.1950)
பொது உடைமைக் கொள்கையின் கடைசி லட்சியம் _ உலகம் பூராவும் ஒரு குடும்பம், உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள்; -உலகத்தில் உள்ள செல்வம், இன்பம், போக போக்கியம் முதலியவை எல்லாம் அக்குடும்பச் சொத்து;-குடும்ப மக்கள் (உலக மக்கள்) எல்லோருக்கும் அக்குடும்பச் சொத்தில் (உலகச் சொத்தில்) சரி பாகம் என்பதேயாகும்.
(குடிஅரசு 10.9.1933)
ஏழை மக்களுக்கு உதவி செய்வது என்பது, ஏழைத் தன்மையே மனித சமுதாயத்தில் இல்லாதிருக்குமாறு செய்வதேயொழிய, அங்கொருவனுக்கும் இங்கொருவனுக்கும் பிச்சைச் சோறு போட்டுச் சோம்பேறியாக்குவதல்ல.
(விடுதலை, 22.4.1950)
அரசியல் என்பது யார் நம்மை ஆள்வது என்பதைப் பற்றியதல்ல. நமது மக்களுக்கு எந்தமாதிரியான ஆட்சிமுறை இருக்கவேண்டும் என்பதைப் பற்றியதே ஆகும். (குடிஅரசு 26.2.1928)
ஒரு தேசத்தை, அல்லது ஒரு சமூகத்தை ஒருவர் ஆட்சி புரிவது என்பது அந்தத் தேசத்து மக்களின் நன்மைக்காகவே ஒழிய, ஆட்சி புரிவோரின் நன்மைக்காக அல்ல.
மக்களுக்கு நாணயமாக, நடுநிலையாகத் தொண்டாற்றுவதும், தயவு தாட்சண்யம், அனுதாபம், ஆகியவைகளுடன் மக்களிடம் நடந்துகொள்வதும் அதிகாரிகளின் கடமையாகும்.
(விடுதலை, 25.1.1947) என்று அதிகாரிகள் கூட ஆதிக்கப் போக்கின்றி மக்களுக்குப் பணியாற்ற வேண்டுமென்று உணர்த்தியவர் தந்தை பெரியார். ஆதிக்கம் அழிக்க மக்கள் தொண்டாற்ற வருகின்ற இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.
தன்னலமற்ற பொதுத்தொண்டு செய்பவர்கள்-பிரதிபலன் கருதாது உழைக்கக் கூடியவர்கள் எண்ணிக்கை நாட்டில் மேன்மேலும் பெருகவேண்டும். அவர்களின் சீரிய குணங்கள் பொதுமக்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும். மனிதனாகப் பிறந்தவன் பொதுவாழ்வில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதற்கு அவர்களின் வாழ்க்கையே எடுத்துக்காட்டாக இருக்கும்.
(விடுதலை, 17.08.1961)
ஒருவன், தான் விரும்பும் நலன்கள் அனைத்தும் பிறருக்கும் உண்டாகச் செய்வதுதான் நாகரிகம். அதற்கேற்ற வகையில் நமது உழைப்பு பயன்பட வேண்டும்.
(விடுதலை, 04.05.1962)
வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாகபுத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது; நன்மை தீமையை அறியும் குணமும், சாத்தியம் அசாத்தியம் அறியும் குணமும், ஆய்ந்து ஓய்ந்து பார்க்கும் தன்மையும் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக்கூடியவர்கள் ஆவார்கள். (குடிஅரசு, 19.1.1936)
இவ்வாறு தந்தை பெரியார் அவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் ஆதிக்கம் அழிக்கும் அரியச் சிந்தனைகளைக் கூறியுள்ளார். அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, இனிவரும் காலங்களுக்கும் அவரது சிந்தனைகள் ஆதிக்கம் அழிக்கும் ஆயுதங்களாகும். எனவே, தந்தை பெரியார் ஆதிக்கம் அழிக்கும் அணுசக்தி ஆவார்.