பிற மொழிகளின் ஆதிக்கத்தால், தமிழ் அழிந்துவிடுமோ என்கிற அச்சம் தமிழர்களிடம் இருக்கிறது. உங்களுடைய பல்வேறு மொழி அனுபவங்களில் நீங்கள் தமிழின் எதிர்காலத்தை எப்படிக் கணிக்கிறீர்கள்?
உங்களுடைய பயம் அவசியமானதுதான். எந்த ஒரு மொழியைப் பேசுபவர்களுக்கும் இந்த அச்சமும் அக்கறையும் அவசியம். ஆனால், தமிழின் எதிர்காலம் மிகச் சிறப்பாகவே இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால், இது மக்களின் பயன்பாட்டில் இருக்கும் மொழி. சமஸ்கிருதம் போன்றோ, லத்தீன் போன்றோ வெறும் நூலகங்களில் உயிர் வாழும் மொழி அல்ல தமிழ். கிட்டத்தட்ட 7 கோடிப் பேர் அன்றாட வாழ்வில் பேசிக் கொண்டு இருக்கும் மொழி. பிறமொழிக் கலப்பு என்பது ஒரு மொழியின் நீண்ட பயணத்தில் அவ்வப்போது நிகழக் கூடியதுதான். ஆகையால், தமிழின் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். ஆனால், தாய்மொழியை ஒரு சமூகம் இரண்டாம் பட்சமாகக் கருதுவது மிக ஆபத்தான போக்காக அமைந்துவிடும்.
– டேவிட் ஷுல்மன்
நன்றி: ஆனந்த விகடன், 9-.11.-2011