விபத்துகள்
சாலை விபத்து, ரயில் விபத்து, தீ விபத்து, இடி, மின்னல் தாக்குதல் போன்றவற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையினை ஒவ்வொரு ஆண்டும் புள்ளியியல் துறை மற்றும் தேசிய குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கணக்கெடுத்து வெளியிடுகின்றனர்.
2010ஆம் ஆண்டு நடந்த விபத்துகளில் 3 லட்சத்து 84,649 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் மக்கள் தொகையில் 9.3 சதவிகிதம் கொண்ட மகாராஷ்டிராவில் விபத்து உயிரிழப்பு ஆறில் ஒரு பங்காக 16.7 சதவிகிதம் நடந்துள்ளது. 6.1 சதவிகித மக்கள் தொகை கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 9.3 சதவிகித விபத்து உயிரிழப்புகளும், 5.7 சதவிகித மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 8.4. சதவிகித விபத்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2009ஆம் ஆண்டு மே மாதத்தைவிட 2010ஆம் ஆண்டு மே மாதம் 5.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மாலை 6 மணியிலிருந்து 9 மணி வரை அதிக விபத்துகள் நடந்துள்ளன. சென்ற ஆண்டு மே மாதம் மட்டும் 42,546 பேர் விபத்துகளினால் உயிரிழந்துள்ளனர்.
2009ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து உயிரிழப்பை ஒப்பிடும்போது 2010ஆம் ஆண்டு 7.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஆண் பெண் விகிதம் 78:22. எல்லாவிதமான விபத்துகளிலும் பெண்களைவிட ஆண்களே அதிக அளவில் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் மட்டும் பெண்கள் 66.6 சதவிகிதம் என்று அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.
2010ஆம் ஆண்டு 4 லட்சத்து 61,757 போக்குவரத்து விபத்துகள் நடந்துள்ளன. இதில் சாலை விபத்துகள் 4 லட்சத்து 30,654. ரயில் மற்றும் சாலை விபத்துகள் 2,843. மற்ற ரயில்வே விபத்துகள் 28,260 என்று புள்ளி விவரக் குறிப்பு கூறுகின்றது.
தற்கொலைகள்
உலகம் முழுவதும் தற்கொலையினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. உலக அளவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு பத்தில் ஒரு பங்காக உள்ளது. 39 மணித்துளிகளுக்கு ஒருவர் என்ற அளவில் தற்கொலை செய்துகொள்வதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
2010ஆம் ஆண்டு இந்தியா முழுவதிலும் 1,35,599 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 70-.5 சதவிகிதம் ஆண்கள், 67 சதவிகிதம் திருமணமான பெண்கள். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் அதிகம் பேர் தற்கொலை செய்துள்ளனர். 2009ஆம் ஆண்டு 14,424 பேர்களும், 2010ஆம் ஆண்டு 16,561 பேர்களும் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துள்ளனர்.
இந்தியாவில் 1 மணி நேரத்திற்கு 15 பேர் என்ற அளவில் தற்கொலை செய்துகொள்கின்றனர். பெரும்பாலோர் குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில், 70.5 சதவிகிதம் ஆண்கள் 67 சதவிகிதம் பெண்கள்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் 60 சதவிகிதம் பேர் முதுமை காரணமாகத் தற்கொலை செய்துள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் மூலம் சேகரிக்கப்பட்டு, டில்லியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நட்ட கல்லும் பேசுமோ!
தமிழ்நாட்டில் பழைய பழமொழியொன்று இப்படிக் கூறுகிறது. கோவிலில்லா ஊரில் குடியிருக்காதே, அந்த மொழிக்கேற்ப தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்குக் குடியேறி தமிழர்கள் தங்கள் வசிப்பிடங்களில் பலர் ஒன்றுகூடிக் கோவில்களைக் கட்டிக் கொண்டனர்.
2008ஆம் ஆண்டு அதுவும் மற்றவர்களின் நிலப்பரப்பில் அரசாங்க அனுமதியின்றி கட்டிக் கொண்டதால், அதன் பிறகு, நில உரிமையாளர்கள் நிலத்தைத் திரும்பப் பெறும்போது பிரச்சினைகள் தலைதூக்கி நின்றன.
அதனால் நகராண்மைக் கழக உறுப்பினர்கள், மலேசியாவில் மட்டும் 200 கோவில்களை உடைத்து நொறுக்கித் தள்ளினார்கள். அதுபோன்று சிலாங்கூர் மாநிலத்திலும் 78 கோவில்களை உடைத்து நொறுக்கினார்கள். அதில் எந்தக் கோவிலின் சிலைகளும், ஏன்டா என் சிலையை உடைத்தீர்கள் என்று கேள்வி தொடுக்கவில்லை. ஆனால், பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதிலிருந்து நமக்கு என்ன தெரிய வருகிறது என்றால் நட்ட கல்லும் பேசுமோ என்று ஊர், உலகத்திற்கு அம்பலத்திற்கு வருகிறது.
– ஆலன் மணியன்,
பெட்டாலிங் செயா, மலேசியா
செயற்கை இரத்தம்
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் நோய்களும், விபத்துகளும் அதிகரித்து வருவதைப் போலவே விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் வளர்ந்து வருகின்றன.
அறுவைச் சிகிச்சையின் போதும், விபத்துகளின் போதும் இரத்தம் அதிக அளவில் தேவைப்படும்போது குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த இரத்தம் போதிய அளவில் கிடைப்பதில்லை.
இந்தக் குறையினை நிவர்த்தி செய்ய ஸ்டெம்செல்களில் இருந்து செயற்கை இரத்தத்தை உருவாக்கிச் சாதனை படைத்துள் ளனர் இங்கிலாந்து நாட்டின் எடின்பர்க் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
இவர்கள் கண்டுபிடித்திருக்கும் செயற்கை இரத்தத்தில் எந்தவிதமான தொற்றுநோய்க் கிருமிகளும் இருக்காது என்பதால் யாருக்கு வேண்டுமானாலும் எவ்விதப் பயமுமின்றிச் செலுத்தலாம்.
இன்னும் 2 ஆண்டுகளில் மனிதனுக்குச் சோதனையின் அடிப்படையில் செலுத்தப்பட இருக்கும் இந்தச் செயற்கை இரத்தம் பயன்பாட்டிற்கு வருவதற்கு 10 ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.