மூடநம்பிக்கைகள்கூட
சிலருக்குச்
சவுகரியமாய்த் தெரியலாம்
சொந்தமாகச் சிந்திக்கும்
சிரமமில்லையே…
தேங்காய்களைத்
தலைமேல் உடைத்துக்கொள்வது
பக்தர்கள் உரிமை
நம்பிக்கையா? வைத்துக்கொள்ளுங்கள்
சுவரில்
ஆணியடிக்க வேண்டாம்.
புகழ்: ரத்த எழுத்து
வெட்டுகளால் தொடர்வது
அரச பரம்பரை.
பரிசுத்தம் என்றாலும்
நம்ப ஆளில்லை.
தேருக்கு விழா
இழுக்கும் மாந்தரை மறந்து
தாடியளவு ஞானம்.
வானம்
மண்ணிலிருக்கும் மனிதருக்காகவே.
கங்கை புனிதம்தான்
தாகம் தீர்ப்பது கூஜா
பூக்களைத் தூவாதீர் சமாதிகளில்
எலும்புக்கூடுகளுக்கு
நுகர்திறன் இல்லை.
தலைவர் உயரம்
தொண்டர்கள் உபயம்
ஒடிந்த சட்டங்கள்
அவர் வீடு சுற்றி
சுதந்தர தின மிட்டாய்களும்
கசக்கின்றன
சீன இறக்குமதியோ?
சமாதியிலிருந்தும்
கொலை தொடர்கிறார்
தலைவர்
சக்தி வாய்ந்தவர்தாம்!
புவி அதிர்விலும்
நன்மை
சிலை சில
நொறுங்கும்.
உங்கள் அறிவை
நாங்கள் ஏன் சுமக்க வேண்டும்?
கண் இல்லாத இடங்களில்
மெழுகுவத்தி
ஆறு அறிவா?
மிகவும் அதிகம்.
கொடிகளின் கூட்டத்தில் சூரியன் அத்தமனம்.
சில்லரைத் கனத்தில்
புத்தகம் புதைந்தது.
தலைவர்களைத் தவிர கட்சிகளிடை
வித்தியாசம் இருக்கிறதா?
– நீலமணி, செம்பியம்