Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கவிதை : மூச்சுக்காற்றான “தாய்” நீ!

இப்புவியில் மனிதப்பற் றேயன்றி

                இனமொழிபொருட் பற்றென்னும்

எப்பற்றும் எமக்கில்லை என்றறைந்த

                ஈடற்ற பெரியாரை

முப்பொழுதும் தன்னலத்தைக் கருதாமல்

                முழுத்தொண்டு புரிபவரை

முப்பத்து ஆண்டுகாலம் அகவைநீள

                மூச்சுக்காற் றான‘தாய்’நீ!

 

இருக்குமாஇவ் வியக்கமென எகிறியோர்தம்

                ஏளனத்தைத் துச்சமென்றீர்!

இருக்கின்றேன் நானென்றே இயக்கமதை

                உருக்கரணாய்க் காத்து நின்றீர்!

செருக்குற்றே அகன்றோரால் தாயுன்றன்

                சிறப்புகளைச் செப்ப வைத்தீர்!

அருட்கொடையாய்ப் பெரியாரைச் சேர்ந்தெந்தம்

                அன்னைமணி அம்மையானீர்!

 

அன்னைக்கோர் இலக்கணமாய் எடுத்துக்காட்டாய்

                ஆகியெம்மை அரவணைத்தீர்!

கண்போன்ற கழகத்தைக் காப்பதற்காய்

                தன்னலத்தைத் தூர வைத்தீர்!

தொண்ணூற்றைந் தாண்டுகாலம் பெரியாரை

                தொண்டுசெய வாழவைத்தீர்!

தன்னையே ஈந்துலக வரலாற்றில்

                தனித்துவமாய் நிலைத்துவிட்டீர்!

 

யாமறிந்த அன்னையரில் நும்மைப்போல்

                யாங்கணுமே கண்டதில்லை;

யாருமுமைப் போலுலகில் ஈகஞ்செய

                யாருமினிப் பிறப்பாரில்லை;

யாருக்கும் அஞ்சாத வீறுநின்போல்

                யாரிடத்தும் காண்போமில்லை;

யாமிருக்கும் வரைநின்றன் கட்டளையை

                யேற்றுத்தொண் டாற்றுவமே!

இருக்காதினித் துணிச்சலென எண்ணியோர்முன்

                இராவணலீலா நடத்திட்டீர்!

நெருக்கடிகள் இடர்கள்பல வந்தபோதும்

                நெக்குவிடா இமயமானீர்!

கருவுக்குள் புரோட்டானாம் பெரியாருடன்

                நியூட்ரானாய் இணைந்திட்டீர்!

இருக்கும்வரை எலக்ட்ரான்களாய் நுமைச்சுற்றி

                இயக்கமதைக் காத்திடுவோம்!

 

பெரியார்க்குப் பின்னிந்த இயக்கமதை

                பெருவிழிப்பாய்ப் பேணுதற்கு

பெருஞ்சொத்தாய் பெரியார்க்குக் கிடைத்திட்ட

                அரும்வீர மணியைத்தான்

தெரிந்தெடுத்தீர்! பிள்ளைபோல் வளர்த்திட்டீர்!

                பெரும்பொறுப்பை ஒப்படைத்தீர்!

அரிதான ஆளுமையே! அம்மாநின்

                அருமைதனை உலகறியச் செய்குவமே!

 

ஓவியக்கவிஞர் பெரு.இளங்கோ