- அடுப்பில் தூங்கும் பூனை
உழவன் வீட்டில் மிஞ்சியதெல்லாம்
உடைந்த சோற்றுப் பானை
- வாழும் வரைதான் போராட்டம்
தன்னைச் சுற்ற பூமி மறந்தால்
மண்ணில் சாயும் வேரோட்டம்
- தொடரும் மனக் கவலை
அறுபதாமாண்டு விடுதலை நாளிலும்
தொங்கும் இரட்டைக் குவளை
- ஒன்றாய் இருந்தது ஊர்
தெருத்தெருவாய் பிரித்து விட்டது
அம்மன் கோவில் தேர்
- ஆண் ஆளுமை நாடு
பெண் பிள்ளை மட்டும் ஈனுகின்ற
அரசுத் தொட்டில் கேடு
- தொடரும் ஆண்டைகள் ஆட்சி
எத்தனை கட்சிகள் ஆண்டபோதும்
ஏழைக்கு இல்லை மீட்சி.
– புதுவை ம.ஞானசேகரன்,
முத்தரையர்பாளையம்
ஏற்கிறேன்
நான்
ஓவியங்களை விடவும்
தூரிகையை ரசிக்கின்றேன்;
ஏனென்றால்?
அவை ஓவியத்தின்
முகவரியில்
தன்னைத் தொலைத்துவிடுவதால்
நான் மலர்களை விடவும்
காம்புகளை ரசிக்கின்றேன்;
ஏனென்றால்?
அவை மலர்களை
முன்நிறுத்தி
தன்னை மறைத்துக் கொள்வதால்
நான் வெற்றிகளைக் காட்டிலும்
தோல்விகளை ரசிக்கின்றேன்;
ஏனென்றால்?
அவற்றில் முற்றிவிடும்
தலைக்கனம்
ஏதுமில்லை என்பதால்.
நான் இளமையை விடவும்
முதுமையை ரசிக்கின்றேன்;
ஏனென்றால்?
அதனிடம் இழப்பதற்கு ஏதுமில்லை என்பதால்
பற்றுக்கள் அறும்வேளை
பாரங்கள் குறைகிறது
பாரங்கள் விடும்வேளை
பறப்பது சுகமாகிறது
– த. செந்தில் குமார்,
கூத்தப்பாக்கம்
சௌக்கியமா சரஸ்வதியே
சரஸ்வதி பூஜை நாளில்
தன் நிலை அறியாத
நம் நாட்டின் நாற்பது சதவிகித கைநாட்டுகள்…
கேட்கிறார்கள் சௌக்கியமா சரஸ்வதியே
சாமியார்களின் தட்டுக்களில்
குவியட்டும் நோட்டுக்கள்
– கை. பகலவன்,
பன்னீர் தலைமேடு
நாட்டு நடப்பு
தடபுடலாக அரங்கேறியது
ஊடகத்தில் கவர்ச்சி
குடிபெயர்ந்து போனது
விருந்தோம்பல் பண்பாடு
அணிவகுத்து நின்றது
கள்ளத் தொடர்பு
எக்குத்தப்பாகப் போனது
ஓரினச் சேர்க்கை
சூடாகி போனது
பூமிப் பந்து
விழாக்கோலம் பூண்டது
இயற்கைப் பேரழிவு
பந்தயக் குதிரையானது
விலைவாசி ஏற்றம்
தொடர் வெற்றிபெற்றது
லஞ்சலாவண்யம்
புழுவாய்த் துடிக்குது
ஜனநாயகம்
முகவரி தொலைத்தது
மனித நேயம்
நொந்து நூடுல்ஸ் ஆனது
இந்திய தேசம்
– ஆட்டோ கணேசன்,
அருப்புக்கோட்டை
சுரண்டல்
எத்தன் ச()தி
கருவறை சாமிக்கு
காவல் தெய்வங்கள் நாலாபக்கமும்
பாரபட்சமின்றி
அந்தந்தக் கடவுளுக்கொரு அர்ச்சகர்
தேர்ந்த திட்டமிடலோடு தொடர்கிறது
உழைப்புச் சுரண்டல்.
– செழியரசு,
தஞ்சை
அறியாமை
மரங்களை வெட்டி
தீ மூட்டினர்,
மழை வேண்டி
மாரியம்மனுக்குத்
தீ மிதிக்க
இன்றயை நிலை
கழனியெல்லாம்
கட்டிடம் கட்டி
களைத்து மகிழ்ந்தனர்
விலைவாசி
உயர்வைக் கண்டு – இன்று
கவலைப்படுகின்றனர்.
– வெங்கட. இராசா,
ம.பொடையூர்