தலையங்கம் : “கரோனா பரவாதிருக்க கோயிலுக்கு வரவேண்டாம்’’ என்பது வரவேற்கத்தக்கது!

மார்ச் 16-31 2020

சர்வ சக்தியுள்ள ‘கடவுள் இல்லை’ என்பது உறுதியானது!

சீனாவில் ஏற்பட்ட ‘கரோனா வைரஸ்’ என்னும் தொற்று நோய், அங்கே லட்சக்கணக்கானவர் களைப் பாதித்ததோடு, மூவாயிரம் பேர்களுக்கு மேல் உயிர்க் கொல்லியாகவும் அமைந்தது _ மனித குலத்திற்கே ஏற்பட்ட மிகப்பெரிய அவலம்; துன்பமும், துயரமும் பொங்குமாங் கடல்போல் வாட்டுகின்றது!

அந்நோய் தொற்றானதால் உலக நாடுகள், சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலும் நுழைந்து, சுற்றுலா,  தொழில், பயணங்கள் இவைகளில் எல்லோரும் அஞ்சி வாழும் கொடுமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

கூட்டமாகக் கூடுவதைத் தவிர்ப்பது, கைகொடுப்பது, தும்மலை அருகிலிருந்து செய்வது, அடிக்கடி கைகளைச் சுத்தமாக கழுவாமை முதலிய பல்வேறு அன்றாட உடல் அசைப்புகளுக்கும் மிகவும் கவனமாக இருக்க மருத்துவர்களின் கட்டளைகளைப் பின்பற்றி ஒழுகவேண்டிய நியதிகள் ஆகும்!

வருமுன்னர் காப்பதே சிறப்பு!

வருமுன்னர் காப்பதே சிறப்பு. எனவே, தகுந்த எச்சரிக்கையை ஏற்று நடப்பது சாலச் சிறந்தது. மத்திய – மாநில அரசுகளும் அவரவர்கள் யுக்தானுசார முறையில் அவசரத் தடுப்பு நடவடிக்கைகளை ஏற்று வருகின்றன. மேலும் தீவிரமாக்குவது – போர்க்கால நடவடிக்கைகளைப் போன்று செய்தல் அவசியம் என்று பலரும் கூறுவது – நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான். எந்த மாச்சரியத்திற்கும் இடந்தரக் கூடாத சூழல் இந்த கரோனா எதிர்ப்பு யுத்த முயற்சிகளும், முன்னெடுப்புகளும் – மனிதாபிமான முறைகளே!

பகுத்தறிவு அடிப்படையில் ஒரு கேள்வி

இந்நேரத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்டுவது – பகுத்தறிவு அடிப்படையில் மிகவும் தேவைப்படும்.

கோவில்கள், திருவிழாக்களுக்கு மக்கள் அதிகம் கூடுவார்கள் என்கிறபோது, அதை தவிர்ப்பது நல்லது என்று கேரள அரசு போன்ற அரசுகள் வெளிப்படையாகக் கூறுகின்றன. அவ்வளவு தூரம் போவானேன்!

‘‘திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் வரவேண்டாம்; அதிலும் குறிப்பாக என்.ஆர்.அய். என்ற வெளிநாட்டிலிருந்து வரும் பக்தர்கள் அறவே அதனைத் தவிருங்கள்’’ என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

 அதுபோலவே சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும் அதிக பக்தர்கள் வரவேண்டாம் என்று கோவில் நிருவாகம் – தேவசம் போர்டு சார்பாக பக்தர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இவை வரவேற்கப்பட வேண்டியவை – கரோனாவின் கொடுமையைக் கருதி.

கடவுளுக்கே முகமூடியா?

வாரணாசியில் ஒரு கடவுள் சிலைக்கே அங்கே உள்ள அர்ச்சகர், நிருவாகிகளால் வாய்க்குக் கவசம் – நோய் தடுக்க மூக்கு, வாயை அடைக்கும் முகமூடி அணிவிக்கப்பட்டுள்ளது எவ்வளவு வேடிக்கை என்பதை பக்தகோடிகள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?

கரோனா – கடவுளையும் தாக்குமாம்! தடுப்பு முறையாம் – இந்த முகபடாம்!

அட, அதிபுத்திசாலி ஆத்திகர்களே! பரிதாபத்திற்குரிய பக்தர்களே  –  கொஞ்சமாவது யோசித்தீர்களா? கரோனா கடவுளைத் தாக்கும் என்றால், ‘‘கடவுள் சக்தி  என்னவாயிற்று?’’ என்று பகுத்தறிவுவாதிகள் கேட்டால், ஏன் கோபம் வர வேண்டும்?

சர்வ சக்தி சாமிக்கு இது தேவையா?

‘‘தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன் – திருப்பதி வெங்கடாசலபதி’’ என்பதால்தான் அதிகாரத்தில் உள்ளவர்கள் பலரும் தங்களையும், தங்களது பதவி சேமிப்புகளையும் பாதுகாக்க அடிக்கொருமுறை குடும்ப சமேதரராய் ‘ஜருகண்டி’ இல்லாமல் வசதியான தரிசனம் செய்து வருகின்றனர்!

அதுபோலவே, அடுத்த பெரு வருவாய் சபரிமலை அய்யப்பனுக்குத்தானே! அவன் இந்தக் கரோனாவைத் தடுத்திருக்க வேண்டாமா? துவம்சம் செய்திருக்க வேண்டாமா? அதை பினராய் விஜயன் தலைமையில் (கம்யூனிஸ்ட் அரசு அல்லவா) செய்யவேண்டியுள்ளது!

கடவுளையும், பக்தர்களையும் பாதுகாப்பதும் மனித சக்தி தானே – அரசுகள்தானே!

‘‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’’ என்பது ‘கரோனா’வுக்குமுன் செல்லுபடியாகாது என்பதால்தானே தகுந்த தடுப்பு ஏற்பாடுகள்!

‘‘கடவுள் கருணையே வடிவானவன்’’ என்று சொல்கிறார்கள் பக்தர்கள்.  அதற்கு நிரூபணம் எங்கே?

கடவுள்களின் முச்சக்தி எங்கே?

‘‘எல்லா மதக் கடவுள்களுக்கும் முப்பெரும் சக்திகள் உண்டு’’ என்று பொதுவாக அனைவரும் கூறி, அதனால் உலக க்ஷேமம் கருதி கடவுளை வணங்கி, பிரார்த்தனை மூலம், காணிக்கை போடுவதன்மூலம் பலனடையலாம் என்று போதிக்கிறார்கள்.

1. சர்வ சக்தி (Omnipotent)

2. சர்வ வியாபி (Omnipresent)

3. சர்வ தயாபரன் (Omniscient)

இம்மூன்றும் இருந்தால், கரோனா, பறவைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சார்ஸ் போன்ற கொள்ளை நோய்கள் மனித குலத்தை அழிக்க வரலாமா? தண்டனை தந்தான் என்றால், அன்பே வடிவமானவன் என்பது பொய் அல்லவா?

அறிவை விரிவு செய்க – பேராபத்தைத் தவிர்த்திடுக!

இப்படிக் கேட்பது நிதர்சனமானது. கண்ணுக்குத் தெரிந்து, கண்மூடிப் பழக்கத்திற்கு அடிமையாகலாமா? குடிப்பவருக்குத் தேவைப்படும் போதை போன்றதுதானே பக்தி!

கடவுளால் ஆகாதது – மருத்துவத்தால் இன்று முடிகிறது. இதுதான் பகுத்தறிவின் விளக்கம்.

எது நடந்தாலும் புத்தியை மட்டுப்படுத்தாமல், கோபத்தைத்தான் பதிலாகத் தர முடியுமே தவிர, அறிவை விரிவு செய்ய இதைவிட அருமையான வாய்ப்பு மனித குலத்திற்கு வேறு கிடைக்குமா?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! சிந்தியுங்கள், தோழர்களே!!!

– கி.வீரமணி,

                                ஆசிரியர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *