ஆசிரியர் பதில்கள் : பொம்மலாட்டத்தின் புதுவகை இது!

ஆகஸ்ட் 01-15 2019

கே:   கடந்த 30 ஆண்டுகளாக நடந்த மக்களவைத் தேர்தல்களைவிட 2019 மக்களவைத் தேர்தல் மிகவும் மோசமாக நடந்தது என்று மூத்த நீதிபதிகள் உள்பட பலர் கண்டனக் கருத்து தெரிவித்துள்ளது பற்றி தங்களின் கருத்து?

                – பெ.கூத்தன், சிங்கிபுரம்

ப:     என் கருத்தென்ன? 64 ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகளான பெருமக்களின் நீண்ட அறிக்கை, அது பெரிதும் ஊடகங்களில், ஏடுகளில் வராமல் _ பரவாமல் _ விவாதிக்கப்படாமலே இருட்டடிப்பும் செய்யப்பட்டதே! இதுதான் யதார்த்தம் புரிந்துகொள்வீர்!

கே:  பெரியாரியவாதிகள், அம்பேத்கரிய கொள்கையை உயர்த்திப் பிடிக்கிறார்கள். ஆனால், அம்பேத்கரியவாதிகளில் ஒரு சிலர் பெரியாரை விமர்சிப்பதேன்?

                – இரா.பிரபாகரன், சென்னை-4

ப:     ஆழமாக அவ்விரு பெரும் புரட்சியாளர்களைப் பற்றிப் புரியாது நுனிப்புல் மேய்ந்தவர்கள் சிலருக்கு அது ஒரு தொழில் _ லாபம் தரும் தொழில்! அவ்வளவுதான்!

கே:   மற்ற ஆட்சிக் காலங்களில் இல்லாத அளவுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் மதவெறிப் பயிற்சி தரும் ஆர்.எஸ்.எஸ். ‘ஷாகா’ நடத்தப்படுகிறதே! தடுத்திட அரசால் முடியாதா?

                – இள.தேன்மொழி, திருவொற்றியூர்

ப:   தடுக்க வேண்டிய தமிழக அரசு, நெடுஞ்சான்கிடையாக விழுகிறதே; அடிப்படை புரியும் அமைச்சர்களே ஆர்.எஸ்.எஸ். முகாம்களைத் துவக்கிவைத்து, கொள்ளிக் கட்டையில் தலையைச் சொறிந்து கொள்கின்றனர்.

கே:   இந்துத்துவ _ பாசிச மோடி ஆட்சியை ஜனநாயக ரீதியில் வீழ்த்த முடியும் என்று தாங்கள் நம்புகிறீர்களா?

                – இளையராஜா, பிலாக்குறிச்சி

ப:      நெருக்கடி காலத்தில்கூட இப்படி ஓர் அச்சம் இருந்தது. மக்கள் சக்தி இறுதியில் வெல்லும். இடைக்காலத் துன்பம், துயரம் தவிர்க்க இயலாததே! மக்கள் மீது உள்ள நம்பிக்கையை இழக்கக் கூடாது.

கே:    ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு இனி பெற முடியாது என சில வக்கீல்கள் கூறுகின்றனர். தங்கள் அனுபவம் மற்றும் வழக்கறிஞர் என்னும் முறையில் விலக்கு பெறும் வாய்ப்பு தமிழகத்திற்கு உள்ளதா?

– வெற்றிமணி, கோவை

ப:    அதை புதிய கோணத்தில் சட்டப் பரிசீலனை வழக்குமூலம் தீர்வு காண முடியும் என்கிற நம்பிக்கை நமக்கு உண்டு. காரணம், இது அடிப்படையில் அரசமைப்புச் சட்ட விரோத ஏற்பாடு.

கே:    கடவுள் மறுப்புக் கல்வெட்டுடன் கூடிய அய்யா சிலையைத் திறக்கும் நிகழ்வில் குன்றக்குடி அடிகளார் போன்ற நம்பிக்கையாளர்கள் பங்கேற்றுள்ளனரா?

                – மணிகண்டன், வேலூர்

ப:       நினைவு தெரிந்தவரையில் ‘இல்லை’ என்பதே பதில்.

கே:    அறிவியல் மனப்பான்மையைத் தடுத்து, ஆன்மிகத்தின் பெயரால், பார்ப்பனிய பாதுகாப்புப் பணி படு வேகமாக நடைபெற்று வருகிறதே… இதைத் தடுக்க என்ன வழி?

                – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:   பகுத்தறிவுப் பிரச்சார ஊசியைக் கொண்டு அப்பலூனைக் குத்தலாம். வயதான தலைமுறைக்கு உள்ள மூடத்தனம் இளைஞர்களிடையே இல்லை என்பதே ஆறுதல்.

கே:  அத்திவரதருக்கு ஊடக உதவியுடன் திட்டமிட்டு கும்பல் சேர்த்த ஆரிய பார்ப்பனர்கள், தமிழ்நாடு ஆன்மிக பூமியென்று கூறிக்கொள்கிறார்களே?

                – சீனிவாசன், அரக்கோணம்

ப:    பக்தர்களைக் காப்பாற்ற முடியாத அத்திவரதனைத் தரிசிக்க வராதீர் என்று அதிகாரிகளே அறிக்கை விடும் நிலை ஏற்பட்ட பின்பும் _ 4, 5 பேர் (பக்தர்) செத்த பிறகும்கூட புத்தி வரவில்லையே! என்ன செய்ய! பொம்மலாட்டத்தின் புதுவகை இது!

 சந்திராயன் 2

கே: திருப்பதி ஏழுமலையான் இந்தியாவில் ஏவப்படும் ராக்கெட்களுக்கு தலைமை விஞ்ஞானியா?  அல்லது கட்டுப்பாட்டு அதிகாரியா?

                – சின்னதம்பி, சேலம்

திருப்பதி

ப:     அதனால்தான் திட்டமிட்டபடி ராக்கெட்டுகள் பறக்கின்றன! மூடத்தனத்தின் முடைநாற்றம், விஞ்ஞானிகளையும் பக்தி அஞ்ஞானிகளாக்கும் கொடுமையோ கொடுமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *