தலையங்கம் : ஆர்.எஸ்.எஸ். காலூன்ற அத்திவரதர் ஆர்ப்பாட்டமா? அதிகாரிகள் துணைபோகலாமா?

ஆகஸ்ட் 01-15 2019

தமிழ்நாட்டில் காலூன்ற தொடர் முயற்சிகளில்

ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ்.

ஹிந்துத்துவா திணிப்புக்கு ஏதுவாக எங்கெல்லாம் கோவில் திருவிழாக்களோ, அங்கு வலுவில் நுழைந்து வம்பு, சண்டை தூண்டுதல், காவிக் கொடிகளைக் கட்டி வரும் பக்தர்கள் எல்லாம் தங்களுக்கென்று  ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்துவது _ முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஆறுகளில் புஷ்கரணி கொண்டாடுதல், பிள்ளையார் சிலைகளை _ வெறும் சாதாரணமாக நடந்திடும் அந்நிகழ்ச்சியை அப்பாவி ஒடுக்கப்பட்ட மக்களில் சிலரை விலைக்கு வாங்கி _ அவர்களுக்குக் காசு _ பணம் _ கையூட்டு தந்து _ ஒரு பிள்ளையார் சிலைக்கு இவ்வளவு தொகை என்று கொடுத்து, அதனைப்  பெரும் ஆடம்பரப்படுத்தினார்கள்.

கேரளத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபடுவதை உச்சநீதிமன்றம் அனுமதித்தது _ அதனை எதிர்த்து வாக்கு வங்கியை வலுப்படுத்த முயற்சி செய்தனர். (அதில் தோல்வியே கண்டனர்!)

பொம்மை விளையாட்டுப் பக்தி

பகுத்தறிவாளர்களை ஹிந்து விரோதிகள் என்று முத்திரை குத்தி, ஹிந்து வாக்கு வங்கியை உருவாக்க நினைத்து, நடைபெற்ற தேர்தலில் மூக்குடைப்பட்டு, படுதோல்வியை _ தமிழ்நாட்டில் பெற்றதால் _ இப்போது 40 ஆண்டுகள் தண்ணீரில் கிடந்த அத்திவரதரைத் தேடி _ திருவிழா; பொம்மை விளையாட்டுப் பக்தி! இதற்கு தொலைக்காட்சி, ஊடகங்களில் தினமும் விளம்பரம்.

குடியரசு தலைவர், பிரதமர், மத்திய, மாநில அமைச்சர்களை _ ஏன் இங்குள்ள பக்திப் போதையாளர்களையும் இந்த வலையில் சிக்க வைத்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு

இது திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ்.  ஏற்பாடுதான். இந்துப் பண்டிகைகள், திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள் என்ற பெயரிலும், பெண்களை ஈர்க்க _ பக்திப் போதையூட்ட _ திருவிளக்கு பூஜை, தாலிக்குப் பாதுகாப்பு என்றெல்லாம் கூறி, திருமணமான பெண்களுக்கு (மாங்கல்யப் பாதுகாப்பு), திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம்  என்றெல்லாம் ஆசைகாட்டி பக்தி மூடநம்பிக்கைகளைப் பரப்புதல், கிராமப் புறங்களில் ஜாதி, மதக் கலவரங்களை ஏற்படுத்தி, தாங்கள் தமிழ்நாட்டில் காலூன்றலாம் என்று தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 கோவில் திருவிழாக்கள் எங்கே நடந்தாலும், அங்கே ஆர்.எஸ்.எஸ். காவிக் கொடிகளைக் கட்டிவிடுவதும், அங்கே பக்தர்களுக்கு உதவுவதுபோன்று ஊடுருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, கட்சி வளர்ச்சிக்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்!

ஆனால், இதற்கு அரசுகள் _ அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை, செக்குலேர் கொள்கைக்கு முற்றிலும் எதிராக,  இந்துத்துவா கட்சியும், ஆட்சியும் மொத்தத்தில் ஒன்று என்பது போன்ற, கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றி நடந்து கொள்ளலாமா?

அத்தி வரதரை தரிசிக்க வந்தவர்கள் பலி ஆனார்கள். தனது பக்தர்களைக் காப்பாற்ற முடியாத அத்திவரதர்  அருள்பாலிக்கப் போகிறாரா?

எவ்வகையில் மதச்சார்பின்மைக்கு உகந்தது?

அரசமைப்புச் சட்டத்திலுள்ள 51_ஏ(எச்) பிரிவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவியல் மனப்பான்மையை போதிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கடமையை நிறைவேற்ற வேண்டிய அரசும், அதன் தலைமைச் செயலாளரும், மூத்த அதிகாரிகளும் வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது, சட்டம் _ ஒழுங்கு பாதுகாப்பின்கீழ் அவர்களால் நியாயப்படுத்தக் கூடும்.

ஆனால், பால் கொடுக்கிறோம்; பழம் கொடுக்கிறோம்; பிஸ்கெட் கொடுக்கிறோம் என்று அறிவிப்பது எவ்வகையில் மதச்சார் பின்மைக்கு உகந்தது?

மதமற்ற கூட்டத்தினருக்கும் இப்படிக் கொடுப்பார்களா?

நாளைக்கு வேளாங்கண்ணி பக்தர்களுக்கும், நாகூர் தர்காவுக்கு வருபவர்களுக்கும், மதமற்றோர் கூடும் மாபெரும் கூட்டத்தின ருக்கும் இப்படிக் கொடுப்பார்களா? என்ற கேள்வி எழாதா?

எந்தப் பணத்தில் இந்தச் செலவினம் வரும்? மக்கள் வரிப் பணம், அரசுப் பணம் இப்படி இந்துத்துவாவைப் பரப்பச் செலவழிப்பது எவ்வகையில் உகந்தது? அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது அல்லவா?

தலைமைச் செயலாளருக்கும் நல்லதல்ல; தமிழக அரசுக்கும் நல்லதல்ல!

தலைமைச் செயலாளர் நீண்ட அனுபவம் உள்ள ஒரு நேர்மையான அதிகாரி; அவர் இப்படி  ஒரு பக்கம் _ இந்துத்துவா பக்கம் சாய்வதுபோல் தோற்றத்தை உருவாக்குவது, அவருக்கும் நல்லதல்ல; தமிழக அரசுக்கும் நல்லதல்ல.

மதச்சார்பின்மை, அறிவியல் மனப்பான் மையைப் பரப்பும் அடிப்படைக் கடமை களை (51_ஏ(எச்) பிரிவு அரசமைப்புச் சட்டத்தில்) காலில் போட்டு மிதித்து, இப்படி நடந்து கொள்வது கூடாது! போராட்டம் வெடிக்கும் என்பது உறுதி!

மதச்சார்பின்மை என்பதை அரசின் அதிகாரிகள் கேலிக் கூத்தாக்குவதா?

பார்ப்பன அய்.ஏ.எஸ். அதிகாரிகள் புதிதாக பதவி உதவி பெற்ற ஒருவர் முயற்சியால் தினமும்கூடி பிராமணர் சங்க நடவடிக்கைகள், திட்டங்களைத் தீட்டுவதும், லஞ்ச் ஹவர்  (Lunch Hour) மதிய சாப்பாட்டு நேரத்தில், அந்தப் பணிகள் நடைபெறுவதாக ஏடுகள் எழுதுகின்ற தகவல் உண்மையாக இருப்பின், அதனை தமிழக முதல்வரும், அரசும் அனுமதிக்கலாமா?

அரசியலில் எதுவும் நிலையானது, இறுதியானது என்று எண்ணி, கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைச் சொறியும் நிலைக்கு ஆட்சியாளர்கள் ஆளாகக்கூடாது. அதிகாரிகள் ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசிகளாகக்‘ காட்டிக் கொள்வது அவர்களுக்கும் நல்லதல்ல!

– கி.வீரமணி,

ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *