நெருப்பில் துடித்திடும் மக்கட்கெல்லாம் நல்லகாப்பு — நல்கும்
நீதிச்சுயமரி யாதைஎனும் குளிர் தோப்பு — அங்குச்
சுரப்பெதெல்லாம் இன்ப மாகிய வண்புனல் ஓடை — நீவிர்
சுகித்திடவோ அறிவானஇயக்கத்தின் வாடை — இங்கு
விருப்ப மெலாம்விழ லாக்கியவாழ்க்கையின் கோணை — அங்கு
விளையும் கருத்துக்கள் காதிலினித்திடும் வீணை — இங்
கிருப்பதெலாம் ஒருவர்க்கொருவர்செய்யும் சேட்டை — அங்
கெழுப்பி யிருப்பது சமத்துவ மானகற்கோட்டை!
உப்பினைஉண்டு கரிப்புக் கழும்சிறு பிள்ளை — வாழ்வில்
ஊமைக்கடவுள்! எதற்குத்தொட்டீர் அந்த முள்ளை — தேசம்
முப்பத்து முக்கோடி மக்களி னால்பெற்ற பேறு — இங்கு
மூச்சுவிடக்கூட மார்க்கமில்லா மதச்சேறு — மண்ணில்
எப்பக்கங் காணினும் இன்பத்திலேறுமுன் னேற்றம் — இங்
கீன மதப்பலி பீடத்திலேமுடை நாற்றம் — சொல்வீர்
எப்பதம் பெற்றனிர் இந்நாள் வரைக்கும் மண்மேலே — நீர்
எதற்கும் உமக்குள் உதிக்கும் மதக்கொள்கையாலே!
“தாழ்ந்தவர்’’ என்பர் உயர்ந்தவர்க்கிம்மொழி இன்பம் — இந்தச்
சாத்திரத்தால் இந்த நாள்வரைக்கும்துன்பம்! துன்பம்! — மண்ணில்
தாழ்ந்தவ ரென்றொரு சாதியுரைப்பவன் தீயன் — அவன்
தன்னுட லைப்பிறர் சொத்தில்வளர்த்திடும் — பேயன் — நீர்
தாழ்ந்து படிந்து தரைமட்டமாகிய நாட்டில் — இனிச்
சாக்குரு விச்சத்தம் நீக்கிடுவீர்மண வீட்டில் — இன்று
வீழ்ந்தவர் பின்னர் விழிப்பதற்கே அடையாளம் — வாய்
விட்டிசைப்பீர்கள் சுயமரியாதை எக்காளம்!
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்