சிறுகதை : லைலா – மஜ்னு

ஜூலை 16-31 2019

ஏ.வி.பி. ஆசைத்தம்பி

டாண் _ டாண் _ என்று எங்கிருந்தோ பன்னிரண்டு தடவை மணி ஓசை கேட்டது. காலமறியக் கடிகாரமும் இல்லாமல், தூக்கமும் வராமல் புரண்டு கொண்டிருந்தோரெல்லாம் அம்மணியோசை மூலம் நடு இரவு என்பதை உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். எங்கும் நிசப்தம் நிலவியதால் அம் மணி ஓசை பெரிய அலறலைக் கிளப்பியது.

அன்று ஒரே இருட்டு. வானத்தில் “பளிச் பளிச்’’ என்று மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரக் கூட்டங்கள்கூட மேகத்தோடு கோபித்துக் கொண்டு மறைந்துவிட்டன. வானமண்டலம் தோன்றிய காலந்தொட்டு எட்டு மணி நேர நாட்டுக் கடைச் சட்டம் போல, அங்கும் ஒரு சட்டம் இருக்குமோ என்னவோ, அன்று சந்திரன் தன் வேலையை அமாவாசையிடம் ஒப்புவித்துவிட்டு லீவில் சென்று விட்டான்; அமாவாசை ஆட்சி நடக்கும்போது இருட்டுக்குப் பஞ்சமிருக்குமா?

அதிலும் சிறையில்? அப்பப்பா! வாழ்நாள் முழுதும் சிறையாட்சி இருக்கும்போது “இருட்டறையில் உள்ளதடா உலகம்!’’ என்று பாடுவது ஆச்சரியப்படுவதற்கில்லை. பால்போல் ஒளிவீசும் பவுர்ணமி தினத்தில்கூட சிறைச்சாலையில் வெளிச்சம் வெளிவர வெட்கப்படும். ஹும்! சிறைச்சாலை என்ற சிங்கார புருஷனைக் கண்டால்… அரசாங்கச் சட்டம் என்ற வெட்கம் வந்து, வெளிச்சம் என்ற எழிலாளை நாணிக்கோணி ஓடவைத்துவிடாதா என்ன? பாவம், வெளிச்சம் என்ன செய்யும்? அதிலும் அன்றைக்கு அமாவாசை. ஊரைவிட்டே வெளிச்சம் ஓடிவிட்டபோது சிறையிலே கடும் இருட்டைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?

அந்த நடு இரவிலேயும் சிறைச்சாலையில் மாறி மாறிப் “பாரா’’ கொடுத்துக் கொண்டிருந்தனர் போலீசைச் சேர்ந்தவர்கள். உள்ளபடியே அவர்கள் தைரியசாலிகளாகத்தான் இருக்க வேண்டும். சுடுகாட்டில் எரியும் பிணங்களுக்கு இடையே இரவு பூராவும் இருக்கும் காவலாளியைப் போன்றவர்கள்தான் அவர்கள். பிணவாடை மனதைக் குமட்டும். அதிலும் பிணங்கள் எரியும்போது நரம்புகள் முறுக்கேறி சில பிணங்கள் எழுந்துகூட நிற்குமாம்! இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டும் கலங்காதவன் தைரியசாலியில்லாமல் வேறு என்ன? அந்தச் சிறைச்சாலைக்கும் சுடுகாட்டிற்கும் வித்தியாசமே கிடையாது. சிறையில் பிணங்கள் இல்லாவிட்டாலும் பிணமாகப் போகிறவர்கள் சிலர் இருந்தார்கள். குறிப்பிட்ட மனிதனுக்குச் ‘சாவு’ எப்போது என்பதை ஜாதகம் வகுத்த சகாதேவனால்கூட கணிக்க முடியாது. ஆனால், ஜட்ஜுகள் கொலையாளிகளுக்கு என்றைக்கு எத்தனை மணிக்குச் ‘சாவு’ என்பதை சரியாகக் கணித்துவிடுகிறார்கள். மார்க்கண்டனுக்கு 16 வயதுதான் என்ற தீர்மானித்த பிரம்மன் தலையெழுத்தைக்கூட மாற்றிவிடலாம், சிவபெருமான் தோன்றிவிட்டால்! ஆனால் ஜட்ஜுகளின் தீர்ப்பை… மாற்றவே முடியாது. எமன் எதிர்பார்த்துக் கொண்டே இருப்பான்.

எமன் எப்படி இருப்பானோ, என்ன செய்வானோ, என்ன ஆவோமோ? என்று எண்ணி எண்ணி செத்துக் கொண்டிருந்த கைதிகள் சிலர் அந்தச் சிறையிலே இருந்தார்கள். காலை வந்ததும் கயிற்றிலே தொங்க வேண்டும்; நிச்சயமாகத் தூக்கிவிடுவார்கள். இது அவர்களுக்குத் தெரியும். இந்த நிலையில் உள்ள கைதிகள் வாய்விட்டுக் கதறியழும் காட்சி, சுடுகாட்டிலே பிணங்கள் நிற்பதுபோலத் தோன்றின. ஆனால் இதையெல்லாம் கேட்டுக் கேட்டு மறத்துப்போன காதுகள்தான் காவலாளிகளிடம் இருந்தன. அந்தப் பேய்க் கூச்சல்களுக்கு இடையே யாரோ ஒரு கைதி முதலில் முணுமுணுத்தான்; பிறகு புலம்பினான்.

“லைலா! லைலா! லைலா!!’’

இவைதான் அந்தக் கைதியின் புலம்புதலில் எழுந்த வார்த்தைகள். புலம்பல் என்பது மனித உள்ளத்தில் ஏற்படும் அலம்பல்தானா? ஆம்! அவன் உள்ளம் அலம்புகிறது. குடம் அலம்பாமல் நீர் சிதறுமா? அவன் உள்ளத்தில் லைலா நிறைந்திருக்கிறாள். காலம் அவனைச் சிறைக்கு அனுப்பிற்று. லைலாவை நினைத்து வேதனைப்பட்டான். வேதனையில் சிக்குண்ட அவன் மனம் இரவிலே வாய் திறந்து பேசுகிறது.

அவன் யார்? சிறைக்கு ஏன் வந்தான்? இது அவனுக்கே தெரியாது. தபசிகள் எல்லாம் காட்டுக்குப் போகவேண்டியதைப் போல, அரசியல்வாதிகள் அவசியம் சிறைக்குச் செல்ல வேண்டும் போல் தெரிகிறது. இல்லாவிட்டால் அவன் ஏன் சிறைக்கு வருகிறான்? அதிலும் சிறையிலே ஒரு வருஷம் இருந்துவிட்டால். ஒரு வினாடிக்கு முன்பு என்ன செய்தோம் என்பதைக்கூட மனிதன் மறந்துவிடுகிறான். ஆனால், அவன் ஒரு வருடம் சிறையிலிருந்தும் லைலாவை மறக்கவில்லை, மறக்க முடியவில்லை. பகல் பூராவும் லைலாவின் நினைப்பு! கற்பனை இணைப்பு! இரவு பூராவும் கனவு! பின் புலம்பல்!

லைலா யார்? யாராக இருக்க முடியும்? ஆம், லைலா அவன் காதலி! ஒரு வருடம் லைலாவைப் பாராமல் இருந்தும் “ஆசை முகம் மறந்து போச்சே’’ என்று அவன் பாடியதேயில்லை.

“வான் மழையின்றி வாடிடும் பயிர்போல் நான் உனை நினைந்தே வாடுகிறேனே’’ என்று அவன் உள்ளத் துடிப்போடு சேர்ந்து யாரோ பாடிக்கொண்டே இருப்பார்கள். “நித்திரை வரவில்லையே! மறப்பேனோ இறக்கும்வரை மாது அவள் தந்த சுகம்’’… இரவு வெகுநேரம் இப்படியே பாடிக்கொண்டிருப்பான். ஓய்ந்த நேரத்திலே தன் சிறை நண்பர்களிடத்திலே தன் காதல் கதையை முறையிடுவான். அதிலே அவனுக்கு ஓர் ஆறுதல். ஆனால் அவர்கள்? அவனைப் “பைத்தியம்’’ என்றார்கள்.

ஆம், பைத்தியம்! பைத்தியமென்றால் கேவலமா? ஒன்றின் மீது மனதை லயிக்கவிட்டு மற்ற எல்லாவற்றையும் மறப்பதற்குப் பெயர் பைத்தியம்! மனதை எதிலுமே லயிக்கவிடாமல் எல்லாவற்றையும் மறப்பதற்குப் பெயர் தூக்கம்! பைத்தியமும் தூக்கமும் ஒன்று சேராத நேர்க்கோடுகள்! இரண்டிற்கும் இவ்வளவு ஒற்றுமை இருந்தும் பைத்தியக்கார உலகம் தூக்கத்தை வரவேற்கிறது; பைத்தியத்தை வெறுக்கிறது.

முற்றுப்புள்ளி இல்லாத எல்லையற்ற பற்றுதலின் அறிகுறிதானே பைத்தியம்? அந்தப் பைத்தியம், ஆம் பற்றுதல், சதா லைலாமீது மட்டும் இருப்பதைக் கண்டு அவன் எவ்வளவோ ஆனந்தப்பட்டான். அவன் மட்டும் பைத்தியமாக இல்லாதிருந்தால் லைலா மீதுள்ள நினைப்போடு வேறு நினைப்பும் கலந்திருக்கும். பைத்தியம் என்கிறபோது “லைலாவே அவன் _ அவனே லைலா.’’ எப்போதும் இப்படியே பைத்தியமாக இருக்கவே அவன் விரும்பினான். ஊரைப் பற்றியோ, உலகத்தைப் பற்றியோ, சுற்றியிருந்தோரைப் பற்றியோ அவன் கவலைப்படவில்லை. லைலா, லைலா என்றுதான் அலையோசை எழுப்பிய வண்ணம் இருந்தான்.

மறுநாள் அவனின் சிறைச்சாலை நண்பர்கள் எல்லாம் அவன் புலம்பலுக்கும், பைத்தியத்திற்கும் ஒரு முடிவு ஏற்பட்டுவிட்டது என்றுதான் நினைத்தார்கள். அதற்குக் காரணம் அவனுக்குச் சிறைக்கதவு திறந்துவிடப்பட்டது. ஒரு வருடத்திற்குப் பின் விடுதலையானான். இனி லைலாவைப் பார்த்துவிடுவான்; அவன் ஆசை எண்ணமெல்லாம் பூர்த்தியாகும். இப்படி நினைத்தார்கள் அவன்கூட இருந்த கைதிகள். அவன் எல்லோரிடமும் விடை பெற்று வெளியே வந்தான். ஒரு வருஷத்திற்குப் பின் வெளி உலகை அவன் விழிகள் பார்த்தன. எங்கு பார்த்தாலும் “லைலா _ மஜ்னு’’, “லைலா _ மஜ்னு’’ என்று பெரிய பெரிய நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. தன்னுடைய நினைப்புதான் இப்படித் தெரிகிறதா என்ற சந்தேகங்கூட அவனுக்குத் தோன்றியது.

ஆனால், “பானுமதி, நாகேஸ்வரராவ் நடித்த லைலா _மஜ்னு’’ என்று இருந்ததால், அது தன் நினைவு அல்ல. சினிமா என்பதை அவன் உணர்ந்தான். தன் காதலி பெயருள்ள சினிமாவாக இருக்கிறதே.. அதைப் பார்த்துவிட்டு ஊருக்குப் புறப்படலாம் என்று முடிவு கட்டினான். படம் ஆரம்பிப்பதற்கு முன் கதைச் சுருக்கத்தைப் படித்தான். அவனுக்கே ஆச்சரியமாய் இருந்தது.

“மஜ்னு’’ என்றால் பைத்தியமாம். தன்னைப் போல் ஒரு பைத்தியத்தின் கதைதான் என்பதை உணர்ந்தான். அந்தப் பைத்தியத்தின் பெயர் கயஸ். கயஸ் லைலாவைக் காதலித்தான். லைலாவும் கயஸும் பால்யத்திலேயே ஒன்றாக வளர்ந்தவர்கள்; படித்தவர்கள்; பாலைவனத்தில் ஓடி ஆடித் திரிந்த ஜோடிகள். பருவக் காற்றில் மழை பொழிவதைப்போல, காலம் வளரும்போது அவர்கள் வாழ்க்கையில் காதல் மலர்ந்தது.

ஆனால், இவனும் லைலாவும்? ஒன்றாக வளரவில்லை; ஓடி ஆடித் திரியவில்லை. ஒரே ஊரில் பிறந்தார்கள். பருவத்தில் ஒரு நாள் _ பொருட்காட்சி சாலையில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். பார்வை என்ற பணம் கொடுத்தால் வாழ்க்கை என்ற பொருட்காட்சியில் மனதிற்குப் பிடித்தமான பொருளை வாங்க முடியாதா என்ன? முதற் பார்வை நல்ல நிலத்திலே தூவிய விதைதானே! நன்றாகக் கண்காணித்து வந்தால் காலத்திலே முளைத்துவிடாதா? அதைப் போலவே அவர்கள் பார்வை பலநாள் பல இடங்களில் சிரிப்போடு சேர்ந்து விளையாடியது. கவர்ச்சிக்கு பின் கருத்தைப் பரிமாற வேண்டாமா? கடும் இருட்டு அகல சந்திரேதயம் தேவை; கருத்தறிய சந்திப்புத் தேவை. இதற்கு வழி? கண்ணும் கண்ணும் சந்திக்க வழியிருக்கும்போது ஆணும் பெண்ணுமா சந்திக்க முடியாது!

லைலாவே அவனைத் தேடி வந்தாள். ஆனால், அவளால் அவனோடு அதிக நேரம் இருக்க முடிவதில்லை; பேச முடிவதில்லை; ஆம், யாராவது பார்த்துவிட்டால்? லைலா அதனால்தான் பயப்பட்டாள். சந்திக்கும் போதெல்லாம் இருவரும் கடிதம் மாற்றிக் கொள்வார்கள்.

“அன்பே,

உன் காதலைப் பெற நான் பெரிய அதிர்ஷ்டசாலிதான். இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், உன்னை ஏன் பார்த்தேன்? உன்னைப் பார்த்த நாளில் இருந்து சாந்தி என்னை விட்டு எங்கோ ஓடி விட்டாள். எனக்குத் தூக்கத்தைத் தர மறுக்கும் இரவு ஏன் வருகிறது? உயிரே! நாட்டில் பஞ்சமாம், மக்கள் பசியால் வடுகிறார்களாம். ஆனால் நான்? எனக்குப் பசியே எடுப்பதில்லை. உள்ளத்தில் காதல் இருந்தால் பசியே இருக்காதுபோல் தெரிகிறது. நாட்டில் உள்ள பசித்த மக்களுக்கெல்லாம் இப்படி ஒரு காதல் தோன்றிவிட்டால் பசியே இராது; ரேஷன் கவலையும் இராது! ‘உணவை உற்பத்தி செய்’ என்று உயிர் போகக் கத்தும் அரசாங்கம் காதலை உற்பத்தி செய்தால்… கட்டாயம் பஞ்சம் நீங்கிவிடும் என்றுதான் நினைக்கிறேன்! என் பஞ்சமெல்லாம் உன்னை அடிக்கடி பார்க்க முடியவில்லையே என்பதுதான். என் மனக்குறை தீர மார்க்கம் உண்டா?

காதலன்.’’

“சுகுமாரா!

உங்கள் கடிதத்தைப் பார்த்தேன். காதல் என்பது எல்லோருக்கும் பொதுதான். உங்களுக்கு மட்டுந்தான் வேதனையா? இல்லவே இல்லை. அடுப்படியிலே அமர்ந்து நான் வேலை செய்யும்போது உங்களை மறந்து இருப்பேன் என்றா நினைக்கிறீர்கள். அது தவறு. அடுப்பிலே ஜ்வாலை விட்டு எரியும் நெருப்பைப்போல, உங்கள் நினைவு என்னை எந்நேரமும் வாட்டுகிறது. நெருப்பு அணையப் போனால் அதை அணைய விடுவதில்லை அணங்குகள். பற்றி எரிய விறகை வைப்பார்கள். தீ முன்னைவிட நன்றாக எரியும். இப்படியேதான் நீங்கள் என் உள்ளத்தில் அணையாமல் இருக்கிறீர்கள். புத்தகத்தைப் புரட்டினால் அதில் வரும் காதலர்களை ‘நம் இருவர்’ போலவே நினைப்பேன். ரேடியோவைத் திருப்புவேன். ‘காதலெல்லாம் கொள்ளைகொண்ட கண்ணா கண்ணா!’ என்று அது கதறும். அப்போது அந்தக் கண்ணனாக நீங்கள் காட்சியளிப்பீர்கள். எண்ணாத எண்ணமெல்லாம் என் முன் வரும்.

உங்களை எப்போதாவது பார்க்க முடியாவிட்டால், ‘… எங்கும் நிறைந்தாயே, ஏன் என்னை மறந்தாயோ?’ என்று மனமுருகிப் பாடுவேன். இவ்வளவு வேதனை எனக்கு. ஆனால் நான் என்ன செய்வது? அடிக்கடி உங்களை சந்திக்க முடியாத நிலையிலிருக்கிறேன். 15 நாளைக்கு ஒரு தடவைதான் சந்திக்க முடியும். எனக்காக மனதைக் கட்டுப்படுத்துங்கள்.

காதலி.’’

“சுகுமாரி!

காதல் என்ன கடைத்தெருச் சரக்கா… கண்ட்ரோல் விதிக்க? பதினைந்து நாளைக்கு ஒரு தடவை என்றதும் பாதி உயிர் போய்விட்டது. அன்பே! காதல் பயங்கரமானதுதான். ஆனால், அதற்காக பயப்படுவதா? அம்பிகாபதியும் அமராவதியும் அழியாத காதற் களஞ்சியங்கள். அவர்கள் முடிவு சாதல் என்றாலும் அவர்கள் காதலின் சாதலில் சந்தோஷம் இருந்தது. ஆனால், நாம் நரக வேதனைப்படுகிறோம். வீண் பயம் வேண்டாம். பொறாமையே உருவெடுத்த உலகில் எதிரிகள் இருக்கத்தான் செய்வார்கள். காதல் என்ற கேடயம் நம் கையிலிருக்கும்போது எதற்கும் அஞ்ச வேண்டாம்.

காதலன்.’’

கடிதங்கள் இப்படியே வளர்ந்துகொண்டு சென்றன. “நான் உனக்கு! நீ எனக்கு!’’ இது அவர்களின் அசைக்க முடியாத முடிவு.

சினிமாவிலே லைலாவையும் கயசையும் சேரவொட்டாமல் லைலாவின் பெற்றோர்கள் தடுத்தது போலவே, இந்த லைலாவையும் கண்டித்தார்கள். கயசைவிட்டு லைலாவைப் பிரிக்க, சினிமாவில் லைலா தகப்பனால் மெக்காவுக்குப் பயணமாகிறார். ஆனால், இவன் வாழ்க்கையில் லைலா எங்கும் செல்லவில்லை; இவன்தான் ஒரு வருடம் கடுஞ்சிறைக்குச் சென்றான். கயஸ் மெக்காவுக்கு லைலாவைத் தேடி வந்ததைப் போலவே, இவனும் சிறையிலிருந்து விடுதலையாகி ஊர் போய் லைலாவைக் காணத் துடித்து இடையிலே “லைலா_மஜ்னு’’ சினிமா பார்க்கச் சென்றான்.

படம் அவன் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பதாகவே இருந்தது. மெக்காவிலே லைலாவைக் காண கயல் பிச்சைக்காரனாகச் செல்கிறான். அந்தக் காட்சியைக் கண்டதும் அவன் கண்களிலேயிருந்து கண்ணீர்த் துளிகள் சிந்தின. ‘என் லைலா எனக்காக இப்படி ஏங்குவாளா? ஊர் போனதும் லைலாவைக் காண்பேனா? லைலாவைப் பார்க்க முடியாவிட்டால்…? பிச்சைக்காரனாக மாறி லைலா வீட்டுக்குச் சென்றால் என்ன?’ இப்படி எண்ணினான்.

‘கயஸ் பைத்தியம் இல்லை என்று நிரூபித்தால் லைலாவைத் தருகிறேன்.’ இப்படி லைலா தகப்பன் கூறியதும் அவனுக்கு ஒரே ஆனந்தம். தனக்கும் இப்படி ஏதாவது கூறி, கண்டிப்பாய் லைலாவைக் கொடுத்துவிடுவார்கள் என்று அவன் பேதை மனம் நினைத்தது. ஆனால்…

அடுத்த வினாடி ஈராக் பிரபு குறுக்கிட்டான். கயசுக்கு லைலாவைத் தர மறுத்துவிட்டான் அவள் தந்தை. அவன் ஆனந்தக் கோட்டை தவிடு பொடியாகிறது. “லைலா! லைலா!’’ என்று கயஸ் கதறினான், கதவைத் தட்டினான்; முட்டினான். மண்டை உடைந்து இரத்தம் வந்தது. இவனும் இரத்தக் கண்ணீர் வடித்தான். தன் வாழ்க்கையிலும் ஒரு ஈராக் பிரபு வந்து புகுந்து விடுவானோ? லைலா தனக்குக் கிடைக்க மாட்டாளோ? கயஸைப் போல பாலைவனத்தில்தான் வாழ வேண்டுமோ? இப்படி நினைத்துப் பார்க்க அவன் மனம் பதறியது. ஆனால்…

ஓர் ஆறுதல். ஈராக் பிரபு லைலாவை மணந்தாலும் கடைசியிலே விடுதலையளித்து விடுகிறான். ஆனால், நடைமுறை வாழ்க்கையிலே ஈராக் பிரபு இருப்பதில்லை. ஈராக் பிரபுவைப் போல் வாழ்க்கையிலும் இருப்பார்களேயானால் காதல் கைகூடாமல் போகுமா? ஆனால், லட்சத்திற்கு _ ஏன் கோடிக்கு ஒரு ஈராக் பிரபு கூட இன்று கிடையாது. இருக்கவும் முடியாது. ஆனால், கயசும் லைலாவும் ஆயிரமாயிரம் இருக்கிறார்கள்; அல்லல்படுகிறார்கள். அதிலே அவனும் ஓர் அங்கத்தினன்.

அன்று இரவே தன் சொந்த ஊருக்கு இரயில் ஏறினான். மறுநாள் காலை பதினொரு மணிக்கு ஊர்வந்து சேர்ந்தான். இவன் விடுதலை அடைந்துவரும் செய்தி அறிந்த அவன் கூட்டத்தார் அவனை வரவேற்கப் பெருவாரியாக இரயில்வே ஸ்டேஷனில் கூடி “வாழ்க!’’ என்று வரவேற்றனர் மாலையைப் போட்டு; அந்தக் கூட்டத்திலே லைலா இருக்க மாட்டாளா என்று அவன் கண்கள் தேடின.

நன்கு அலங்கரிக்கப்பட்ட குதிரை பூட்டிய “சாரட்’’ வண்டியில் அவன் அமர்த்தப்பட்டான். ஒரே ஆரவாரம்! ஊர்வலம் புறப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் அதில் கலந்து முழக்கம் செய்துகொண்டே வந்தனர். ஊர்வலம் கடைத்தெருவை நெருங்கியதும் ஓரமாகப் போக வேண்டியதாயிற்று. எதிரே கல்யாண ஊர்வலம் வந்து கொண்டிருந்தது.

கல்யாண ஊர்வலத்தில் சென்றவர்கள் எல்லாம் அந்தத் தியாகியை வாழ்த்திச் சென்றனர். இவனைப் போல “சாரட்டில்’’ மணமகளோடு இருந்த மணமகன் கைகூப்பி வணக்கம் செலுத்தினான். இவனும் பதிலுக்கு வணங்கினான்.

தனக்கும் இத்தகைய மணக்கோலம் என்று வரும்? லைலாவோடு இப்படி என்று செல்லுவேன்? கல்யாண ஊர்வலத்தைக் கண்டு அவன் இப்படி எண்ணினான். மேலும் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தது. அந்த மாதம் கல்யாண சீசன் கொண்டதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து கல்யாண ஊர்வலம் வந்துகொண்டே இருக்குமா? ஊர்வலம் ஓரமாகவே போக வேண்டியதாயிற்று. இந்த இடைஞ்சலில் எதிரே சில வண்டிகளும் கார்களும் வந்துவிட்டன. எதிரே வந்த கல்யாண ஊர்வலம் இவன் சென்ற ஊர்வலத்தோடு கலந்து நிற்க வேண்டியதாயிற்று. இரண்டு ‘சாரட்டும்’ ஒன்றை ஒன்று நெருங்கியது. விலக முடியாமல் சில வினாடிகள் எதிரேயே இரண்டும் நின்றன. இவன் மணமக்களை ஏறிட்டுப் பார்த்தான். இவன் தலை சுழன்றது. ஓர் அதிர்ச்சி; அப்புறம் படபடப்பு; அவ்வளவுதான். கீழே சாய்ந்தான். ஊர்வலத்தில் ஒரே பரபரப்பு. ஆனால் காப்பி ஹோட்டல் ரேடியோக்கள் எந்தப் பரபரப்பையும் லட்சியம் செய்யவில்லை. அவை தம் வேலையை செய்து கொண்டேயிருந்தன.

“போகுதே _ உயிர் வேகுதே

பறந்துசெல்லும் பைங்கிளியே!

மறதியாகுமா? _ இது நியாயமா?

உருகுமடி தாரகைகள்

வானிடிந்து நடுங்குதடி

எரியுதே _ உலகமெல்லாம்

இனி நாம் போவதும் எங்கே

வழி _ எங்கே (பறந்து)

விதி எதிர்த்து அழிந்தாலும்

உடல் புகைந்து போனாலும்

எழுகடல் எரிந்தாலும்

உன் நினைவினி மாறாதே _ என் ஜீவனே (பறந்து)’’

இந்தப் பாட்டை ரேடியோக்கள் ஒலிபரப்பின. ஊர்வலத்தில் முழக்கம்போய் கலக்கம் நிலவியது. எங்கும் மௌனம் குடிகொண்டது. “ஆம்! அவன் பிணமான பின்பு மரியாதையின் அறிகுறி மௌனந்தானே! சந்தோஷ ஊர்வலம் சவ ஊர்வலமாகியது.

ஆனால், லைலா?

மாலை அணிந்து மணக்கோலத்தில் சென்று கொண்டிருந்தாள்; இவன் பிணக்கோலத்திலே சென்று கொண்டிருந்தான்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *