“ஹிந்து ராஷ்டிரத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கற்பனையின்படி, அது வெறும் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு வெறும் மூட்டையல்ல. பண்பாடுதான் அதன் சாரமான தத்துவம். நமது தொன்மையான, மாண்புயர்ந்த பண்பாட்டு மூலங்கள் அதன் மூச்சுக் காற்றாகும்.’’
– கோல்வால்கர் (RSS தலைவர், ஞானகங்கை பக்கம் 33-34)
“நமது தேசீய மொழிப் பிரச்னைக்கு வழி காணும் முறையில், சமஸ்கிருதம் அந்த இடத்தைப் பெறும் வரையில், சவுகரியத்தை ஒட்டி, ஹிந்தி மொழிக்கு அந்த இடத்தை நாம் தரவேண்டியிருக்கும். ஹிந்தி மொழியில் எந்தவிதமான அமைப்பு உடைய ஹிந்தியைக் கைக்கொள்ள வேண்டும்? எந்த ஹிந்தி அமைப்பு மற்ற பாரதீய மொழிகளைப்போல சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியுள்ளதோ, வளர்ச்சி பெற்றுள்ளதோ அதைத்தான் இயற்கையாக நாம் விரும்புகிறோம்.’’
– கோல்வால்கள் (ஞானகங்கை பக்கம் 171)
மீண்டும் மத்திய ஆட்சியைப் பிடித்துள்ள பா.ஜ.க. வின்
(ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டும்) மோடி அரசு, ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக, வாக்காளன் ஒரு விரல் மை காயும் முன்னே, அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த புதிய தேசியக் கல்விக் கொள்ளையில், மும்மொழித் திட்டம் என்ற ஒரு ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்புக்கு ஏற்பாடு செய்து, ஆட்சிச் சக்கரத்தை சுழற்றுகிறது!
மேலே கூறியபடி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரின் கொள்கைக்கு செயல்வடிவம் _ சட்டவடிவம் கொடுத்து _ பண்பாட்டுப் படையெடுப்பினை நிகழ்த்த முழு மூச்சுடன் இறங்கிவிட்டது!
எனவே பன்மொழி, பன் மதங்கள், பல பண்பாடுகள், ஆகியவற்றைக் கொண்ட நம் நாட்டில், ஒற்றை மொழி, ஒற்றை மதம், ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றைக் கல்வி முறை, ஒற்றைத் தேர்தல் (இறுதியில் ஜனநாயகத்திற்கே ‘விடை’ கொடுத்துவிட்டு, ஒற்றை அதிபரே வரும் ஆயத்தப் பின்னணியில்) எல்லாம் நடைபெறுகிறது!
கல்வி 1976க்கு முன்பு மாநிலங்களின் உரிமைப் பட்டியலில் இருந்தது. (From state list to) ஒத்திசைவுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப்பட்டதை, ஓசையின்றி இந்த புதிய தேசீயக் கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு ஆக்கிரமித்து “ஜனநாயக ரீதியாகவே’’ செய்ய முனைகிறது.
இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவனையில் உள்ள 22 மொழிகளில் ஒன்றுதான் ஹிந்தி, மற்றொரு மொழிதான் சமஸ்கிருதம்.
“மொழிகள்’’ – Languages என்றுதான் அதன் தலைப்பு. “தேசிய மொழி’’ என்று எந்த மொழிக்கும் அரசியல் சட்ட கர்த்தாக்கள் உரிமை வழங்கவில்லை.
ஆட்சி மொழி (Official Language) என்று அரசியல் சட்டத்தில் குறிப்பிடுகிறபோது(‘Hindi in Devanagari script’) தேவநகரி எழுத்துக்களை உடைய ஹிந்தியை ஆட்சிமொழி என்ற பதிவு செய்தார்கள்.
“தேவபாஷை’’ என்று பார்ப்பனர்களால் அழைக்கப்படும் (செம்மொழியாயினும் தமிழ் நீச்ச பாஷைதான் என்பதால்) சமஸ்கிருதம் பெருமையுறுகிறது _ அரசியல் சட்டத்தாலும்.
அப்படி அவர்கள் குறிப்பிட்டதற்கு முக்கியக் காரணம். காந்தியார் கூறிய ‘ஹிந்தி’ அல்ல _ அரசியல் சட்டம் அங்கீகரிக்காத ‘ஹிந்தி’ _ அவர் கூறியது உருது கலந்த ஹிந்துஸ்தான் என்ற ஹிந்தியையேயாகும். அதை உள்ளே விடாமல் பார்த்துக் கொண்டார்கள்!
புதிய தேசியக் கல்விக் கொள்கையில் வரைவு அறிக்கைப்படி,
ஹிந்தித் தொகுப்பில் 62.83 கோடி. (மொத்த மக்கள் தொகை 136 கோடி மக்கள்) உள்ளனர் என்றாலும், ஹிந்தியைத் தாய்மொழி என்று குறிப்பிட்டிருப்போர் 32.22 கோடி பேர்களே!
பீகாரை எடுத்துக்கொண்டால் பொத்தாம் பொதுவில் அது ஹிந்தி பேசும் மாநிலம் என்று குறிப்பிடப்பட்டாலும்கூட, பீகாரில் மூன்றில் ஒரு பங்கினர் போஜ்பூரியையும், அய்ந்தில் ஒரு பகுதியினர் மஹதியையும் தங்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்!
பெரும்பான்மையோர் ஹிந்தி பேசுவதால் அதை ஆட்சி மொழியாக்குகிறோம். ஆங்கிலம் 16 விழுக்காடுதான் என்று (அதன் விழுமிய பயன் இன்று இந்தியாவை மற்ற ஹிந்தி பேசாத பகுதி மக்களுடன் இணைத்திருப்பதே ஆங்கில மொழிதான் என்பதை வசதியாக மறந்துவிட்டு) வாதிடுகிறார்களே, அப்படியானால், சமஸ்கிருதம் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 136 கோடியில் வெறும் 24,821 பேர்கள்தானே!
வெகு வெகு வெகுச் சிறுபான்மையான மொழிக்கு மட்டும் தனிக்கவனம் -_ சிறப்புத் தகுதி. மூலகாரணம்! ஒரே காரணம் மேலே காட்டிய ஆர்.எஸ்.எஸ். கொள்கைதானே!
மற்ற மொழி வகுப்புகளை கற்றுத் தருவதை 8ஆவது அட்டவணையில் உள்ளவை 8 கோடி மக்கள் பேசும், எழுதும், செம்மொழிக்கு வாய்ப்பு வானொலி, தொலைக்காட்சிகளில் உண்டா?
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் ஆட்சி மொழியாக அந்த அரசுகளால் அங்கீரிக்கப்பட்டிருந்தும்கூட இங்கே _ தமிழ் பிறந்த மண்ணில் ஏன் தரப்படவில்லை?
‘திராவிட இயக்கம்’தானே இந்தக் கேள்வியை அந்நாள் தொட்டு இந்நாள் வரை கேட்டுப் போராடுகிறது!
எனவே, மொழி என்பது பேசும் கருவி, எழுதும் வாய்ப்பு என்பதையும் தாண்டி, ஒரு பண்பாட்டின் ஊற்று என்பதை எவரே மறுக்க முடியும்?
எனவேதான் இதில் கை வைக்க முயன்றால், தேன்கூட்டைக் கலைத்தவர்கள் கதியாக ஹிந்தி _ சமஸ்கிருத திணிப்பாளர்கள் ஆக்கப்படுவார்கள்.
எனவே, பண்பாட்டுப் படையெடுப்பை அது எந்த உருவத்தில் வந்தாலும் ஒன்றுபட்டு முறியடிப்போம் வாரீர்!
திராவிட மண் _ பெரியார் மண் என்பதைப் பற்றி புரியாததுபோல் கேள்வி கேட்கும் புல்லர்கள் இதைப் புரிந்து கொள்ளட்டும்!
– கி.வீரமணி,
ஆசிரியர்.