சாதனை விழா! : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா!

ஜூன் 16-30 2019

பட்டிமன்றத்தில் உரை நிகழ்த்தியவர்களுடன் ஆசிரியர்

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு _ அதுவும் 85 ஆண்டு நடைபெறும் புகழுக்குரியது  _ ‘விடுதலை’ நாளேடு ஒன்றே!

பகுத்தறிவு  நாளேடு என்று சொல்லப்பட்டாலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு  காலமாக ஆரியத்தால் ஒடுக்கப்பட்டுக் கிடந்த _ உரிமைப் பறிக்கப்பட்டுக் கிடந்த ஆரியத்தின் வருணாசிரமத்தால் நான்காம் வருணமாக, அய்ந்தாம் வருணமாக _ சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கபட்டுக் கிடந்த ஒரு பெரும் சமுதாயத்திற்குத் தன்மான உணர்வை ஊட்டிய ஏடு. உரிமைக்கு முழக்கமிடச் செய்த ஏடு!

மானமும் _ அறிவும் மனிதற்கழகு என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களின் கொள்கையைப் பரப்பும் திராவிடர் இனத்தின் போர்வாளாக _ கேடயமாகப் பணியாற்றுகிற ஏடு விடுதலையாகும்.

‘விடுதலை’யின் 85ஆம் ஆண்டுப் பெரு விழா _ பல்வேறு அம்சங்கள் பூத்துக் குலுங்கும் அறிவுப் பெருவிழாவாக நடைபெற்றது. ‘விடுதலை’ 85ஆம் ஆண்டு விழா 1.6.2019 அன்று சென்னைப் பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.

‘விடுதலை’ எனும் போர் வாள்!

“‘விடுதலை’ எனும் போர் வாள்!’’ எனும்  தலைப்பில் நடனக் கலை நிகழ்ச்சியாகவும், ஓரங்க நாடகமாகவும் கழகக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் பங்கு கொண்ட கலை நிகழ்ச்சி பார்வையாளர்களின் கை தட்டலைப் பாராட்டைப் பெற்றது. சென்னை மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார்.

மாலை நான்கு மணிக்கு எம்.ஆர். இராதாமன்றம் முழு கொள்ளளவை எட்டியது. பால்கனியிலும் மக்கள் அமர்ந்து ரசித்தனர்.

பரபரப்பான பட்டிமன்றம்

‘விடுதலை’யின் சாதனைகளில் விஞ்சி நிற்பது “சமுக நீதியா? பகுத்தறிவா?” என்ற தலைப்பில் கருத்து செறிந்த பட்டிமன்றம் நடைபெற்றது.

திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்கவுரை ஆற்றினர்.

படிக்கக் கூடாதவர் பஞ்சமர், சூத்திரர் என்று ஆக்கப்பட்ட  சமுதாயத்தில் தந்தை பெரியாரும், ‘விடுதலை’ ஏடும் ஓங்கி ஓங்கிக் குரல் கொடுத்து அந்த உரிமைகளை வாங்கிக் கொடுத்தது.

நிகழ்வில் பங்கேற்ற அறிஞர் பெருமக்கள் மற்றும் கழகத்தினர்

அடக்குமுறைகளை சந்தித்து சந்தித்து அது நடை போட்டு வந்திருக்கிறது. வரப் போகிற காலத்தில் சந்திக்க வேண்டிய சவால்கள் ஏராளம் இருக்கக் கூடும் என்றாலும், அவற்றை ‘விடுதலை’ சந்திக்கும், வெற்றி கொள்ளும் என்று கூறினார்.

ஆசிரியருடன் விடுதலையின் விநியோக பிரிவில் பணியாற்றும் கழகத்தினர்

இது 85ஆம் ஆண்டு தொடக்க விழா என்றாலும் ஆண்டு முழுவதும் வளர்ச்சி விழாவாக இது அமைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பட்டிமன்றத்துக்கு நடுவராகப் பொறுப்பேற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் அனைவருக்கும் ‘விடுதலை’யின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துத் தனது உரையைத் தொடங்கினார்.

“இதழாளர் பெரியார்” என்ற மறைந்த பெரியார் பேருரையாளர் பேராசிரியர் இறையன் அவர்களால் எழுதப் பெற்ற நூல் இறையன் அவர்களை என்றைக்கும்  நினைவு கூரும் என்று நன்றி உணர்வோடு பதிவு செய்தார். 1937_1938களில் இந்தி எதிர்ப்பை முன்னெடுத்தது ‘விடுதலை’ என்றால், இன்று வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது _ இந்தியா முழுவதும் மூன்று மொழி என்ற ஓர் அறிமுகத்தை மத்தியில் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த பிஜேபி அறிவித்துள்ளது. ஆக ‘விடுதலை’க்கு வேலை இருந்து கொண்டே இருக்கிறது என்றும் பதிவு செய்தார். ‘விடுதலையின் சாதனைகளில் விஞ்சி நிற்பது சமுக நீதியே! என்ற அணியில் கவிஞர் நந்தலாலா, எழுத்தாளர் ஓவியா, முனைவர் அதிரடி அன்பழகன் ஆகியோரும், பகுத்தறிவே! என்ற அணியில் முனைவர் துரை. சந்திரசேகரன், வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா, தஞ்சை இரா. பெரியார் செல்வன் ஆகியோரும் சிறப்பாக வாதிட்டனர்.

பகுத்தறிவு, சமூகநீதி இரண்டுக்கும் ‘விடுதலை’ சலிக்காது பாடுபட்டது, சாதித்து இருக்கிறது.  ‘விடுதலை’ என்றாலும், பகுத்தறிவு என்பது ஆயுதம் _  இலக்கு என்பது சமுக நீதி என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.

நடுவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் தனது தீர்ப்பில் கடவுளை மற  _ மனிதனை நினை என்று தந்தை பெரியார் கூறினார். கடவுளை என்கிற போது _ அங்கே பகுத்தறிவு வருகிறது.  மனிதனை என்கிற போது அங்கு சமுகநீதி வருகிறது ஆக பகுத்தறிவு மூலம் _ சமூகநீதி அடைவது என்பது தான் தந்தை பெரியாரின் நிலைப்பாடாகவும் ‘விடுதலை’யின்  செயல்பாடாகவும் உள்ளதால் _ ‘சமுக நீதியே  விடுதலை’யின் சாதனைகளில் விஞ்சி நிற்பது என்று தீர்ப்புக் கூறினார்.

அனைவருக்கும் பயனாடை அணிவித்து இயக்க நூல்களையும் அளித்துப் பாராட்டினார்  ‘விடுதலை’ ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். ‘விடுதலை’யின் பயணம் காணொலி திரையிடப்பட்டது. விடுதலை சந்தித்த அடக்கு முறைகள், சாதனைப் பற்றிய விளக்கமாக அது அமைந்திருந்தது.

‘திராவிட இயக்க இதழியல்’ என்ற பொருளில் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள்

விடுதலை’ ஆசிரியருடன் வாசகர்கள் சந்திப்பு

பார்வையாளர்களின் பகுதிகளிலிருந்து எழுப்பப்பட்ட வினாக்களுக்கு ‘விடுதலை’ ஆசிரியர் விடையளித்தார். திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி, பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாநிலச் செயலாளர் மஞ்சை வசந்தன், புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி ஆகியோர் கேள்விகளை ஒருங்கிணைத்தும், அவர்கள் பங்குக்கும் கேள்விகளை முன்வைத்தும் வாசகர்கள் சந்திப்புப் பகுதியை கலகலப்பாக்கினர்.

தனி  மனித பட்ஜெட்டுக்கும், அரசு பட்ஜெட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் _ வரி விதிப்பது என்பது அவசியமான ஒன்றா? ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பேற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து நடந்த முடியுமா என்ற தயக்கம் தங்களுக்கு ஏற்பட்டதுண்டா? என்பது போன்ற வினாக்களுக்கு ஆசிரியர் விரிவாகவே பதில் அளித்தார்.

‘விடுதலை’யில் வெளிவரும் முக்கிய செய்திகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அவற்றை இணையத்தில் கொண்டு சென்றால் பயன் உடையதாக இருக்கும் என்ற வாசகர் இராமு அவர்களின் யோசனையை ‘விடுதலை’ ஆசிரியர் வரவேற்றார் _ ஆவன செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

‘திராவிட இயக்க இதழியல்’ என்ற பொருளில் கலந்துரையாடல்

இந்த அரங்கிற்கு திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு தலைமை வகித்து விவாத அரங்கத்தைத் தொடங்கி வைத்தார்.

தோழர்கள் கோவி. லெனின் (நக்கீரன்), அ. குமரேசன் (தீக்கதிர்), ஆளூர் ஷா நவாஸ் (ஊடகவியலாளர்), இரா. விஜயசங்கர் (ஃப்ரண்ட் லைன்) ஆகியோர் பங்கேற்ற கலந்துரையாடல் மிகுந்த பலன் அளிப்பதாக இருந்தது.

விடுதலை சிறப்பிதழ் வெளியீடு

விழாவில் விடுதலை 85ஆம் ஆண்டு விழா சிறப்பிதழ் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட   பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன் பெற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் விடுதலை சிறப்பிதழை பெற்றுக்கொண்டனர்.

செய்திப் பிரிவு தோழர்கள் பொறுப்பாசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் மா.சிவக்குமார்.

வே.சீறிதர், ச.பாஸ்கர், மா.கதிரேசன், சிங்காரம் ஆகியோருக்கு ஆசிரியர் தமிழர் தலைவர்

பயணாடை அணிவித்துப் பாராட்டினர்

விடுதலை விருது வழங்கும் விழா

விடுதலை விருது வழங்கும் விழாவில் 96 வயதாகும் பெரியார் பெருந்தொண்டர் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், ‘கவிக்கொண்டல்’ இதழாசிரியர் மா.செங்குட்டுவன், முகம் இதழாசிரியர் ‘முகம்’ மாமணி ஆகியோருக்கு பயனாடை அணிவிக்கப்பட்டு, ‘விடுதலை விருது’ வழங்கி  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்பு செய்தார். விருதாளர்கள்  விடுதலையுடனும், தந்தை பெரியார் அவர்களுடனும், அன்னை மணியம்மையார் அவர்களுடனும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடனும் தங்களின்  சுவையான அனுபவங்களை எடுத்துரைத்தார்கள். விடுதலை பொறுப்பாசிரியர், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்  விடுதலை நாளிதழின் சார்பில் ஆசிரியர் அவர்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து, ‘விடுதலை’ ஏடு கண்ட களங்கள், சந்தித்த சோதனைகள், சாதித்த சாதனைகளை சுருக்கமாகப் பட்டியலிட்டார்.

வாசகர்களின் கேள்விகளை ஒருங்கிணைத்து ஆசிரியரிடம் கேட்கும் வீ.குமரேசன், கோ.கருணாநிதி, மஞ்சைவசந்தன், வீரமர்த்தினி ஆகியோர்

தமிழர் தலைவர் பாராட்டுரை

திராவிடர் வரலாற்று ஆய்வுமய்யத் தலைவரும், அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தருமான பேராசிரியர் அ.இராமசாமி வாழ்த்திப் பேசினார்.

விழா நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார். கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி நன்றி கூறினார். விழா நிகழ்வு முழுவதையும் அனைத்து ஏற்பாடுகளையும் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஒருங்கிணைப்பில், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.

இரண்டு நாள் மாநாட்டு நிகழ்வுகளாக நடத்தப்பட வேண்டிய சான்றோர்களின் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் காலம் கருதி சுருக்கப்பட்டு, ‘விடுதலை’ நாளிதழின் 85ஆம் ஆண்டு விழா மாபெரும் வெற்றி பெருமிதத்துடனும், அடுத்து எடுத்து வைக்கின்ற அடிகள் அனைத்தும் தந்தை பெரியார்தம் கொள்கை வீச்சுடன் வெற்றி பெறும் உறுதியுடனும் அமைந்தது. பார்வையாளர்கள் மிகவும் மனநிறைவுடன் பிரிய மனமின்றி விடைபெற்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *