சிகரம்
‘‘கருணாமூர்த்தியான சூரியன் தன்னைத் துதிப்பவர்களுக்கெல்லாம் அருள் புரியும் தன்மையுடையவராவார். பலவித துக்கங்களினால் அவதிப்பட்டுத் தன்னை அடைக்கலம் அடைபவர்கட்கு அருள் பாலிக்கும் வள்ளல் அவர். அவரது கருணை மழை பொழியும் தன்மையை அசுரர்கள் பல விதமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். கொடிய தவத்தினை மேற்கொள்வதால் தலைசிறந்து விளங்கும் அந்த வம்சத்தினர் பலமுறை கோர தவங்களைப் புரிந்து சூரியனிடம் அதியற்புதமான வரங்களைப் பெற்றுப் பின்னர் அந்த வரங்களின் மமதையினால் தங்களது பகைவர்களான தேவர்களை அடக்கியும், ஒடுக்கியும் மூவுலகங்களையும் வென்று முனிவர்களை இம்சித்துக் கொடுங்கோலாட்சி புரிந்தார்கள். பின்னர் தேவர்கள் பலவித யுக்திகளைக் கடைப்பிடித்து விஷ்ணுவாலும், சிவனாலும், சிவ புத்திரர்களாலும், பராசக்தியாலும் தங்களுடைய கஷ்டங்களைப் போக்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்களும் சூரியனுடைய கிருபையினால்தான் அசுரர்களை அடக்க முடிந்தது. இவ்வாறு நிம்மதியற்ற சூழ்நிலையை மாற்ற சகல தேவர்களும் பிரம்மதேவனிடம் சென்று ஆலோசித்தனர்.
பிரம்மாவும் நன்கு சிந்தித்துப் பார்த்து ஒரு யுக்தியைக் கண்டுபிடித்தார். அதாவது சூரிய பகவானை எளிதில் அசுரர்கள் அடைவதால்தானே அவர்களால் அவரிடமிருந்து மகோன்னத வரங்களைப் பெற முடிகிறது? அப்படி அவர்களை சூரியனை நெருங்க முடியாதபடி நான்கு பக்கங்களிலும் காவல் புரிவதுதான் சரியான வழி என அவர் கூறவே அனைவரும் அதற்கு இசைந்தார்கள். அதன்படி தேவர்களும், மற்றவரும் அவரை ஒவ்வொரு திக்கிலிருந்தும் காவல் புரியும்போது தனிப்பெயர்களுடனும் புதுவித ஆயுதங்களுடனும் செயல்பட்டார்கள்.
மேற்கு முகத்தில் வருணதேவனும் சமுத்திரராசனும் காவல் புரிகின்றனர். வருணனுக்கு சுதாபா எனும் பெயரும் சமுத்திரனுக்க பிராபநுயானன் எனும் பெயரும் ஏற்பட்டது. வடக்குத் திக்கிலே குபேரன், தனதன் என்ற பெயருடனும், விநாயகர் யானை முகத்தோன் என்ற பெயருடனும் காவல் புரிகின்றனர். அவர்களுக்கு முன்னே உருத்திரன் திண்டி என்ற பெயருடனும் சூரிய குமாரனான ரைவதனும் காவல் புரிகின்றனர்.
இவ்வாறு பதினெட்டுப் பேரே சூரியனுக்குப் பரிவார தேவதைகளாக விளங்குகின்றனர். மேலும், இதர தேவதைகளும் பலவித உருவங்களில் பற்பலவித ஆயுதங்களைக் கொண்டு சூரியனைச் சுற்றிக் காவல் புரிகிறார்கள். மந்திர தேவதைகளுடன் நான்கு வேதங்களும் பலவித உருவங்களைத் தரித்து அவரைச் சூழ்ந்து நிற்கின்றனர் என்கிறது இந்து மதம். (சூரிய புராணம்) சூரியனுக்கு காவல்புரிய பல பேர் அமர்த்தப்பட்டார்கள் என்றும், நான்கு வேதங்களும் பல உருவங்களில் காவல் இருந்தன’’ என்கிறது இந்து மதம்.
சூரியன் ஒரு நெருப்புக் கோளம். 9 கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும்போதே அது எப்படி கொளுத்துகிறது என்பதை எல்லோரும் அறிவர். அப்படிப்பட்ட சூரியன் மற்றவர்களுக்கு வரங்கொடுக்கிறது என்றும், அதைத் தடுக்க பல காவலர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்றும் கூறும் இந்து மதத்தைப் போன்ற ஒரு மூடமதத்தை உலகில் காட்ட முடியுமா?
அது மட்டுமல்ல, நான்கு வேதங்கள் காவலர்களாக உருவெடுத்து சூரியனுக்கு காவல் இருந்தார்கள் என்பதைப் போன்ற மூடக் கருத்து வேறு இருக்க முடியுமா? வேதம் என்பது நூல். அதுவும் அக்காலத்தில் அது எழுதப்படாமல் செவிவழியாய்க் கேட்டு மனதில் பதியவைத்து, பரம்பரையாய் மற்றவர்களுக்கு கற்றத் தரப்பட்டது. அப்படிப்பட்ட வேதம் காவலராய் உருவம் எடுத்தது என்பதைப் போன்ற அறிவுக்கு ஒவ்வாத கருத்தைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
உதயகிரியிலிருந்துதான் சூரியன் புறப்படுகிறதா?
‘‘மேரு மலையைச் சுற்றித்தான் பூலோகம் ஏழு பிரிவாக அமைந்திருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு தீவு என்று அழைக்கப்படுகிறது. ஜம்பு, சாகம், குசம், கிரௌஞ்சம், கௌமேதகம், சால்மலி, புட்கரம் என்னம் அந்த ஏழு தீவுகளை உப்பு, பால், தயிர், நீர், நெய், கருப்பஞ்சாறு, தூயநீர் ஆகிய ஏழு சமுத்திரங்கள் சூழ்ந்திருக்கின்றன.
பூமியைக் கொண்ட மானச பர்வதத்தைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எட்டுப் பட்டணங்கள் உள்ளன. இதைத் தவிர, இமயம், ஏமகூடம், நிடதம், நீலம், கவேதம், சிருங்கவான் எனும் மலைகளும் அந்தத் தீவுகளில் அமைந்திருக்கின்றன. இவற்றிற்கு அப்பாலுள்ள மலைக்கு அப்பால் அகண்டபாலமும் அதற்கு அப்பால் இருள்மயமான இடமும் உள்ளன. முட்டை வடிவான அண்டத்தை ஆகாசம், அக்கினி, வாயு மற்றும் பூதாதிகள் சூழ்ந்துள்ளன. அதற்கும் மேலாக பிரகிருதி புருஷனும் அவருக்கும் மேலாக ஈஸ்வரனும் உள்ளனர். பூமிக்குக் கீழே அதலம், சுதலம், பாதாளம், தமச, தாலம், சுசாலம், விசாலம் எனும் உலகங்கள் உள்ளன. ஆக பூமியின் மேல் பகுதியில் மேலுகங்கள் ஏழும் கீழ் பகுதியில் கீழுலகங்கள் ஏழும் உள்ளன. இவற்றுக்கு மத்தியிலுள்ள மேருபர்வதத்தில் ஒவ்வொரு சிகரமும் ஆயிரம் யோசனை பரப்பளவு உள்ள நான்கு பொன்மயமான சிகரங்கள் உள்ளன.
உதயகிரி எனும் பெயரைக் கொண்ட சௌமனசு சிகரத்திலிருந்து தான் சூரியன் உதயமாகி உலகைக் காக்கிறார். அவர் அங்கிருந்து புறப்படும்போது அவருடைய கதிர்களினால் ஏற்படும் பிரகாசம் கிழக்கு மேற்கு புறங்களிலுள்ள கோள்களை பொன்மயமாகவும், தாமிர மயமாகவும் பிரகாசிக்கச் செய்கின்றது. அவ்வாறு அவர் உதயமாகி நாவலந்தீவின் வடக்குத்திக்காக ஒளிர்கிறார்’’, என்கிறது இந்து மதம்.
நாம் முன்னமே சொன்னதுபோல் சூரியன் நெருங்க முடியாத ஒரு நெருப்புக் கோளம். அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு ஒரே இடத்தில் நிலையாக இருப்பது. அது பூமியிலிருந்து 9 கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது. அப்படிப்பட்ட சூரியன் பூமியில் உள்ள ஒரு மலையின் உச்சியிலிருந்துதான் புறப்பட்டு சுற்றிவருகிறது என்பது அறிவியலுக்கு எதிரான கருத்து அல்லவா? இப்படி அறிவியலுக்கு முற்றிலும் எதிரான கருத்துக்களைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா? (சூரிய புராணம்)
(சொடுக்குவோம்…)