தலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை

ஜூன் 16-30 2019

‘‘தேசிய கல்விக் கொள்கை – 2019 வரைவு அறிக்கை என்ற கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை’’ மொத்தம் 484 பக்கங்களை (ஆங்கிலத்தில்) கொண்டதாக உள்ளது.

இம்மாதம் முதல்நாள் இது, பிரதமர் மோடி அவர்களது ஆட்சி (ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சி) பதவியேற்று ஒரு வாரத்திற்குள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுபற்றிக் கருத்துக் கூறுவோருக்கு கொடுக்கப்பட்டுள்ள அவகாசம் 30 நாள்கள் – ஒரு மாதம். அதாவது ஜூன் 30 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கால அவகாசத்தை மிகவும் நெருக்கித் தந்திருப்பதன் நோக்கத்தை விவரம் தெரிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.

ஏற்கெனவே வெளிவந்த கமிஷன் அறிக்கைகள்

தலைகீழ் மாற்றங்களை – தொடக்கக் கல்வி முதல் பல்கலைக் கழகக் கல்வி வரை மாற்றங்களைப் புகுத்த ஆயத்தமாகும் இக்கல்விக் கொள்கை முந்தைய பல்வேறு கல்வியாளர்கள் குழு அறிக்கைப் பரிந்துரைகளுக்கு நேர்மாறானதாக பல்வேறு அம்சங்களில் உள்ளது என்பதை நாட்டின் கல்வி அறிஞர்கள், கல்விப் பணியாளர்கள் ஆழ்ந்து படித்தால் தெளிவாகப் புரியும்.

ராதாகிருஷ்ணன் கமிஷன் அறிக்கை

லட்சுமண சாமி முதலியார் கமிஷன் அறிக்கை

கோத்தாரி கமிஷன் அறிக்கை

போன்ற கல்வியாளர்களின் அறிக்கைப் பரிந்துரைகளின் அடித்தளத்தையே புரட்டிப் போட்டு, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை, ஆங்கிலச் சொற்றொடர்களால் ஜோடனை  (ஒப்பனை) செய்யப்பட்டுள்ள அறிக்கை இது.

மூத்த கல்வியாளர்கள் திரு.எஸ்.எஸ்.இராஜகோபாலன் அவர்கள் குறிப்பிட்டதுபோல, 41 பக்கங்களில் தரவேண்டியதை, 484 பக்கங்களில் தரப்பட்டிருப்பதே, படிப்பவர்களைக் குழப்பி மயக்க முறச் செய்யும் ‘குளோரோபாம்‘’ கொடுத்த நிலையாகும்.

இருமொழி கல்வி திட்டத்திற்கு வேட்டு வைப்பதா?

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை – கடந்த 50 ஆண்டுகளாக  இங்கு அமுலில் உள்ள அரசின் கொள்கைத் திட்டத்திற்கு வேட்டு வைத்து, மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் – இந்தி, சமஸ்கிருதம் திணிப்புக்கு வழிவகை செய்வது பளிச்சென்று தெரிகிறது. இதை உடனடியாக அடையாளம் கண்டது தமிழ்நாடு. தமிழ்நாட்டின் பலத்த எதிர்ப்புக் குரல், ‘‘மய்யங்கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலப் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது’’ என்பதை உணர்ந்தவுடன், இரண்டே நாளில் கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கை – சக உறுப்பினர்களைக் கலக்காமலேயே – கமிட்டியைக் கூட்டி ஆலோசிக்காமலேயே – திருத்தம் என்று கூறி, இந்தியைத் திணிப்பதில்லை – மும்மொழி உண்டு என்று ஒரு புதுக்கரடியை விட்டனர்.

இது ஒரு திசை திருப்பும் சூழ்ச்சி, ஏமாற்று வேலை என்பதை நாம் சுட்டியதினால், தமிழ்நாட்டின் மக்கள் விழித்து, மும்மொழித் திட்டமும் தேவையற்ற ஒன்று; மாநில உரிமைப் பறிப்புத் திட்டம் என்று முழங்கினர். அத்துடன் ஏதோ அதுபற்றி கருத்துக் கூறுதல் அடங்கி விட்டது என்பது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது!

ஒரு மாத அவகாசம் போதுமானதல்ல!

484 பக்க அறிக்கையை கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் படித்து, உணர்ந்து 30 நாள்களுக்குள் கருத்துக் கூற முடியாது.

1. மத்திய அரசு இந்த கால அவகாசத்தை மேலும் சில மாதங்களுக்கு – குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் – பொது விவாதங்கள் நாடு தழுவிய அளவில் நடைபெறுவதற்கு வாய்ப்பளித்து, பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்தை அறிதல் அவசியம்.

அனைத்துக் கல்வியாளர்களே, கல்வி நிலையங்களை நடத்துவோர்களே, பெற்றோர்களே இதை வற்புறுத்த வேண்டும் என்பது நமது வேண்டுகோள்!

இன்றேல், ‘‘அவசரக் கோலம்  – அள்ளித் தெளித்த அலங்கோலம்‘’ என்பதாக ஆகிவிடும் ஆபத்து உள்ளது. முழுதும் படித்துவிட்டு எழுதுகிறோம்.

கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமானது

2. இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு என்பதைவிட, அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தையே உடைத்து சுக்கல் நூறாக்கி, ஒற்றை ஆட்சி, ஒற்றை கல்வியே இந்தியா முழுவதும் என்பதைப் பிரகடனப்படுத்துவதும் ஆபத்துடையதாக இது இருக்கிறது.

அரசு சட்டமியற்றும் அதிகாரமுள்ள

1. மத்திய அரசுப் பட்டியல் (Central Government List)

2. மாநில அரசுப்பட்டியல் (State Government List)

3. ஒத்திசைவு பட்டியல் (Concurrent List)

இவற்றில் உள்ளவைகளையே கபளீகரம் செய்துவிட்டதாகவே இந்த வரைவு அறிக்கை முழுவதும் அமைந்துள்ளது. ஆரம்பக் கல்வி தொடங்கி பல்கலைக் கழகம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வரை பலவற்றையும் அடியோடு மாற்றும் சட்ட திட்டங்கள் இடம்பெற்றுள்ளன (மொழித் திணிப்பு ஒரு அம்சம்தான்).

3. அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமான உறுதியளிப்புச் சட்டமான சமுகநீதி – இட ஒதுக்கீடு – கல்வி வேலை வாய்ப்பு 15(4), 16(4), 29 போன்ற பிரிவுகளுக்கும், கலாச்சாரப் பாதுகாப்பு உரிமைகளுக்கும், சிறுபான்மையினர் உரிமைகளுக்கும் இடம் அளிப்பதாக அந்த வரைவு அறிக்கை இல்லை.

தகுதி, திறமை அடிப்படை, பொருளாதார அடிப்படையெல்லாம் புகுத்தப்பட்டுள்ளன.

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையோ, பல்கலைக் கழகம், கல்லூரி நியமனம்  செய்ய சமுகநீதி அடிப்படையான எந்தப் பாதுகாப்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

அனைத்துத் தரப்பினருக்கும் வேண்டுகோள்!

எனவே, கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் ஏனோ தானோவென்றோ, யாருக்கோ வந்தது என்று அலட்சியமாக இருக்கவேண்டாம். பொறியாக உள்ள தீ, பரவுவதற்குமுன் அணைப்பதற்கு ஆயத்தமாவதே அறிவுடைமை என்பதால், வருமுன்னர் காக்க ஆயத்தமாக வேண்டும்.

இதுபற்றி அலசி ஆராயவேண்டும். தொலைக்காட்சி ஊடகங்களில் கூச்சல், குழப்பங்களால் இதைத் திணித்துவிட முடியாது. அறிஞர்கள், சமுகநீதியாளர்கள், மாநில அமைச்சர்கள், பொதுவாழ்வில் உள்ளோர் இதுபற்றிய தங்களுடைய ஆழ்ந்த விவாதத்தினை நடத்திடவேண்டும்!

அதன்மூலம்தான் தள்ளுவன தள்ளி, கொள்வன கொள்ள முடியும்!

கவனம்! கவனம்!! கவனம்!!!

‘‘குதிரை காணாமல் போன பின்பு லாயத்தை இழுத்து மூடுவதால்’’ பயன் ஏதுமில்லை.

கி.வீரமணி,

ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *