கே: மோடியின் ரபேல் ஊழல் குறித்த புத்தகத்தை எடப்பாடி அரசு தடை செய்தது பற்றி தங்கள் கருத்து என்ன?
– மலர், நெய்வேலி
ப: பாரதி பதிப்பகம் எழுதிய ரபேல் ஊழல் பற்றிய புத்தக வெளியீடு மாலை நடைபெறவிருந்தால் காலையில் தடை என்று கூறி, “ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளான அதிகாரிகளால் _ காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரியால் (செயற்பொறியாளர்) பறிமுதல் செய்யப்பட்டன. தலைமைத் தேர்தல் அதிகாரி பறிமுதல் செய்யப்பட்டதை மீண்டும் கொடுக்க உத்தரவிட்டும் எடப்பாடி அரசும் அதன் ஏவலாளர்களும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. பல ஊர்களில் அவர்களது அடாவடித்தனம் தொடருகிறது. தேர்தல் முடியும் வரைத் தொடரும் எனத் தெரிகிறது.’’
கே: அரசு பள்ளியில் மாணவர்கள் சேராமல் மூடும் நிலையில் உள்ளபோது, தனியார் பள்ளிகளில் விண்ணப்பம் வாங்க அதிகாலை முதல் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்களே! காரணம் என்ன?
– பாவேந்தன், கொருக்குப்பேட்டை
ப: இது தவறான நோக்கு; போக்கு. அரசுப் பள்ளிகளின் தரம் மேலும் உயர்த்தப்பட்டால் இந்நிலை எளிதில் மாறும்.
கே: மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம்கூட தர முடியவில்லையே… இது மோடியின் கையாலாகாத்தனமா? அல்லது அம்பானி குடும்பத்திற்கு உழைக்கும் மோடியின் அடிமைத்தனமா?
– மகேஷ், சிவகாசி
ப: இரண்டும் கலந்து கையறு நிலை. கண்டனத்திற்குரியது.
கே: கடந்த தேர்தலில் மதுக்கடை ஒழிப்பு முக்கிய அறிவிப்புகளாக இருந்தது. இந்தத் தேர்தலில் அதைப் பேசாதது ஏன்?
– கண்ணன், மதுரை
ப: சரியாகச் சொன்னீர்கள்; ‘குடிமக்கள்’ வாக்குகள் அதனால் தங்களுக்கு கிடைக்காமற்போய்விடும் என்ற நவீன மூடநம்பிக்கையே காரணம்.
கே: புரட்சிக்கவிஞர் பாரதிதாசனிடம் உங்களுக்-கு ஏற்பட்ட மறக்கமுடியாத நினைவுகள் ஏதேனும் ஒன்று கூறுங்கள் அய்யா?
– அகமது, மாதவரம்
ப: பரமத்தி_வேலூருக்கு (மருமகன் வீட்டிற்கு வந்தார்) (1946_48க்குள் என நினைவு) மாணவர் சுற்றுப் பயணம். ஆற்று மணலில் கோடைக் காற்று இதமாக இருந்தது. அருமையாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பேசுகிறார் புரட்சிக்கவிஞர். இரவு 11 மணி _ கூட்டம் பெரிதும் கலைந்துவிட்டது; ஒரு சீட்டு எழுதி, அவரது மகன் மன்னர்மன்னன் மூலம் அனுப்பினார் பொத்தனூர் அய்யா சண்முகம் போன்றோர். இதை வாங்கிப் படித்துவிட்டு கோபமாய் எறிந்தார். என்ன? மக்கள் கலைந்து வெகுநேரம் ஆகிவிட்டது என்றார் மகன் மன்னர்மன்னன். “அட கேக்கிறவன் கேட்கறான்; போறவன் போறான்? நீ போய் உட்கார்ந்து கேள்’’ என்றார் தோழர்கள் நடுங்கிவிட்டனர்! அதன்பிறகும் மேலும் அரை மணி நேரம் பேசிய பிறகே முடித்தார் கவிஞர்! முரட்டு சுயமரியாதைக்காரர் நம் புரட்சிக்கவிஞர். எதிலும் நிலைகுலையாத நெஞ்சுரத்திற்குச் சொந்தக்காரர்.
கே: தங்களின் தேர்தல் சுற்றுப் பயணத்தின் மூலம் தமிழகத்தின் தேர்தல் முடிவுகளைக் கணிக்க முடிகிறதா?
– மகிழ், புதுச்சேரி
ப: நமது கணிப்பு _கருத்துக் கணிப்பு அல்ல. அது அறையில் உட்கார்ந்து ஒரு 1000, 500 பேரிடம் திரட்டப்பட்ட தகவல் கொண்ட கருத்துத் திணிப்பு _ நம்முடைய மக்கள் கணிப்பு மக்களைக் கவனித்து அவர்களது மனப்போக்கை கூட்டங்களில் பிரச்சாரத்தை அவர்கள் உள்வாங்கி வரவேற்பதிலேயே புரிந்துகொள்ளும் மனோதத்துவ அணுகுமுறை; வெற்றி அலை தி.மு.க. பக்கமே! காரணம் இரண்டு அரசுகளும் வெறுப்பை ஏராளம் சம்பாதித்துவிட்டன. யதேச்சாதிகார மோடி அரசையும், கொத்தடிமை அரசையும் மக்கள் புரிந்துகொண்டார்கள்.
கே: தேர்தல் பரப்புரையின்போது பா.ம.க வேட்பாளர் அன்புமணி, தனது கட்சித் தொண்டர்களிடம் தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிகளை கைப்பற்றுமாறு கூறியதன் மூலம் அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பது வெளிப்பட்டதாக் கொள்ளலாமா?
– மோ.எழிலரசி, காட்டுப்பாக்கம்
ப: “அவர்களை’’ப் புரிந்துகொள்ள அருமையான வாய்ப்பைத் தந்த அவருக்கு நன்றி கூறுங்கள்!
கே: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 2018ஆம் ஆண்டு UPSC தேர்வு முடிவுகளில் வெறும் 35 பேர்கள் மட்டுமே தமிழகத்திலிருந்து வெற்றி பெற்றுள்ளார்கள். இதற்குக் காரணம் என்ன?
– சி.அஸ்வின், கோடம்பாக்கம்
ப: தமிழ்நாடு அரசின் கல்வி அலட்சியமே!
கே: பல ஆண்டுகள் தி.மு.க.வால் வலியுறுத்தப்பட்டு வந்த ‘லோக் ஆயுக்தா’ தற்போது தமிழக அரசால் அமைக்கப்பட்டும் அதில் இடம் பெற்றுள்ள நபர்களில் இருவர் தகுதியற்றவர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருப்பதை பற்றி?
– வெ.ரஞ்சித், சைதாப்பேட்டை
ப: எல்லாவற்றிலும் அ.தி.மு.க.வின் ‘ஜால்ரா’களைப் போட்டு பாதுகாப்புத் தேடிக்கொள்ளும் வித்தை.