அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (42) : ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாற முடியுமா?

ஏப்ரல் 16-30 2019

சிகரம்

நாராயணனின் வாகனமான கருடன் புறப்படத் தயாராகப் பறந்து வந்து வணங்கி நின்றது. நாராயணனும், நாரதரும் கருடன் மீதேறிப் புறப்பட்டனர். பூலோகத்தில் ஒரு பகுதிக்குப் போய்ச் சேர்ந்தனர். அங்கே ஒரு தடாகம் இருந்தது. அதன் கரையிலே போய், “நாரதா! நகரத்துக்குள்ளே பிறகு போவோம். இப்போது இந்த தடாகத்திலே காலைக் கடன்களை முடித்துக் கொள்’’ என்றார் பரமாத்மா.

கிருஷ்ணபரமாத்வை அமர்த்திவிட்டு குளத்து நீரில் மூழ்கி நாராயண ஜபம் செய்துகொண்டே குளித்து எழுந்தார் நாரதர். கரையிலேயிருந்த நாராயணனைக் காணவில்லை. அதைவிட அதிசயம் ஒன்று நடந்திருந்தது. நாரதர் பெண்ணாக வேற மாறியிருந்தார். பார்க்க அழகாக பருவ எழில் கொஞ்சும் குமரிப் பெண்ணாக காட்சியளித்தார். இப்போது அந்தப் பெண்ணுக்கு தான் நாரதர் என்றும், அவர் கருடன் வாகனத்தில் நாராயணனோடு வந்ததும், மற்றும் எவ்வித பழைய நினைவும் வரவே இல்லை. அப்போது வேட்டையாடிக் களைத்துப்போன மன்னன் தாலத்துவஜன் தாகம் தீர்க்க வேண்டி தடாகத்துக்கு வந்தவன் தண்ணீருக்குப் பதில் அழகான ஆரணங்கு ஒருத்தி அங்கே நின்றிருந்ததைக் கண்டு அவளது அழகில் மயங்கினான். அவளை நெருங்கி, “பெண்ணே யார் நீ! எங்கே வந்தாய்?’’ “என்னை மணந்து கொள்கிறாயா?’’ என்று கேட்டபடி மன்னன் அவளது கரங்களைப் பற்ற, அவள் ஏதும் பேசாதிருக்கவே மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று கண்ட மன்னன் அவளைக் குதிரை மீதேற்றி நாட்டிற்கு அழைத்துப் போய் மணம்புரிந்து கொண்டான்.

பல பிள்ளைச் செல்வங்களை ஈன்றாள் அந்தப் பெண். அவர்கள் வளர்ந்து அவர்களுக்கும் திருமணம் மற்றும் சடங்குகள் யாவும் செய்தாள். இந்நிலையில்தான் விதி விளையாடத் தொடங்கியது. அடுத்த நாட்டு அரசன் படையெடுத்து வந்தான். பயங்கரமான போரில் மன்னனின் பிள்ளைகளும் பேரர்களும் போர்க்களத்தில் மாண்டனர். நாடு நகரம் இழந்து மன்னனும் இந்த அரசியும்தான் மிஞ்சினர். அரசியோ பிள்ளைகளும் பேரர்களும் வீழ்ந்து கிடந்த போர்க்களத்தில் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.

அப்போது ஒரு முனிவர் அங்கே வந்தார். “பட்டத்து அரசியே! இறப்பதும் பிறப்பதும் உலக இயற்கை. தடாகத்திலே குளித்து தலைமுழுகி செய்ய வேண்டிய கர்ம காரியங்களைச் செய்’’ என அவளையும் மன்னனையும் தடாகத்திற்கு அழைத்துப் போனார்.

மன்னனும் அரசியுமே குளத்தில் இறங்கி மூழ்கி எழுந்தனர். மன்னன் திடுக்கிட்டான், தன்னோடு தண்ணீரில் மூழ்கிய பட்டத்து அரசியை அங்கே காணவில்லை. அவளுக்குப் பதிலாக அங்கே நாரதர் நின்றுகொண்டிருந்தார். மன்னன் அழுது புரண்டு, “எங்கே என் மனைவி?’’ என நாரதரை உசுப்பினான்.

அப்போது கரையிலே நின்று கொண்டிருந்த முனிவர், “மன்னவா! நீ ஏன் அழுது புலம்புகிறாய்? உன் மனைவியை முதன் முதல் இந்த இடத்தில்தானே பார்த்தாய்?’’ என்று கேட்டதும், ‘ஆமாம்’ என்றான் மன்னன். இப்போது அதே இடத்திலே அவளைப் பிரிந்தாய். இதிலே உனக்கு என்ன நஷ்டம்? ஆண்டுக்கணக்கில்தான் அவளோடு வாழ்ந்து விட்டாயே, முதுமையடைந்த நீ அவளைப் பற்றி கவலைப்படுவதை விடுத்து தவம் செய்து நற்கதிக்குப் போக முயற்சி செய்’’ என்று கூறி அனுப்பினார்.

குளத்திலிருந்து நாரதர் எழுந்து கரை ஏறினார். எதிரே முனிவராக இருந்தவர் மறைந்தார். அங்கே பரந்தாமன் வீணையோடு நின்றிருந்தார். “நாரதா! நீ என்னிடம் கொடுத்துவிட்டு சென்றாயே வீணை, இதோ பெற்றக்கொள் என்றார்’’ என இந்து மதம் (நாரதர் புராணம்) கூறுகிறது.

இந்து மதத்தில் எந்தப் புராணத்தை எடுத்துக் கொண்டாலும் ஆண் பெண்ணாக மாறுவது, மீன் பெண்ணாக மாறுவது , மனிதன் மிருகமாக மாறுவது கூறப்படுகிறது. இப்படி மாறுவதாய்க் கூறுவது அறிவியலுக்கு ஏற்றதா? நடைமுறையில் நடக்கிறதா?

அத்தனையும் கற்பனைகள். அறிவியல் உண்மைக்கு எதிரானவை. அப்படித்தான் இந்தப் புராணத்தில் சொல்லப்படும் ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாறிய கதை. இப்படிப்பட்ட மூடக் கதைகளைக் கூறும் இந்து மதம் அறிவியலுக்கு அடிப்படையானது என்று கூறுவது அடிமுட்டாள்தனமான பிதற்றல் அல்லவா?

சாபம் விட்டால் மனிதன் மரமாவானா?

குபேரனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்கள் சிவபெருமானுக்குச் சேவை செய்து வந்தனர். ஆனால், மதம் பிடித்தவர்கள். ஒரு நாள் அவ்விருவரும் வாவுணீ என்ற பானத்தைப் பருகிப் பெண்களோடு கூடிப் பாடிக்கொண்டு மலர் மிகுந்த மந்தாகினி ஆற்றின் கரையில் களித்துக் கொண்டிருந்தனர். குடியினால் அவர்களுடைய கண்கள் சுழன்று கொண்டிருந்தன. ஆற்றில் இறங்கிப் பிடிகளினிடையே இருக்கும் களிறென மங்கையரோடு விளையாடினர்.

அச்சமயம் நாரதர் அங்கே வர நேர்ந்தது. குடிவெறி கொண்டிருக்கும் இவ்விருவரையும் அவர் கண்டார். முனிவரைக் கண்டு மங்கையர் என்ன சாபம் வருமோ என்று பயந்தனர். பரபரப்புடன் தங்கள் ஆடையை உடுத்திக் கொண்டனர். ஆனால், குபேரன் மைந்தர் இருவரும் நாரதரைச் சிறிதேனும் மதிக்காமல் பிறந்த மேனியாய் ஆடிக் கொண்டிருந்தனர். நாரதருக்கு அவர்களை உடனே சபிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. சாபம் மூலமாக அவர்கள் இறுதியில் கடைத்தேறுவார்கள் என்பது அவருடைய கருத்து. அவர்களை அணுகி நாரதர் பேசலானார்.

கள்ளுண்டு தம்மை அறியாது நிற்கும் இவர்கள் ஓரிடத்திலே நகராது நின்றுகொண்டு, தலை வணங்காது நிமிர்ந்து, ஆடையற்றுப் படைத்த வண்ணம் வளரும் மரங்களாக மாறக் கடவது. ஆனால், தன் நினைவு மட்டும் உங்களுக்கு மாறாது. இவ்வாறு தேவ வருடத்தில் நூறு கழிந்ததும் வாசுதேவனே உங்களுக்கு விடுதலை அளிப்பான்’’ என்றார்.

இவ்வாறு கூறிவிட்டு நாரதர் நாராயண ஆசிரமத்துக்குச் சென்றுவிட்டார். நளகூபரன், மணிக்ரீவன் என்ற பெயர் பூண்ட அவ்விருவரும் உடனே இரண்டு ‘ஆர்ஜுன’ மரங்களாக மாறிவிட்டனர். இரண்டு மரங்களும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருந்தன.

யசோதனை கண்ணனைக் கயிற்றினால் மர உரலோடு சேர்த்துக் கட்டினாள் அன்றோ? மரங்களாக நின்று கொண்டிருந்த குபேரனுடைய குமாரர்களை விடுவிக்க வேண்டி, கண்ணன் உரலை இழுத்துக்கொண்டு ‘அர்ஜுன’ மரங்களை நோக்கிச் சென்றார். இரண்டு மரங்களுக்கு நடுவே கண்ணன் சென்றதும் மர உரல் மரங்களுக்கிடையே அகப்பட்டுக்கொண்டது. கண்ணன் உரலைத் தன்னைக் கட்டுண்ட கயிற்றினால் இழுக்கவே, இரண்டு அர்ஜுன மரங்களும் கீழே சாய்ந்துவிட்டன. உடனே இரண்டு குபேர குமாரர்களும் தங்களுடைய தேவ உருவோடு தோன்றினர். கண்ணனைக் கைகூப்பி வணங்கினர். என இந்து மதம் (பாகவதம்) கூறுகிறது.

மனிதன் என்பவன் விலங்கு வகை. மரம் தாவர வகை. அவற்றின் அடிப்படைக் கூறுகளும் வேறு வேறானவை. மரம் நிலத்தில் வேர்விட்டு வளர்ந்து ஒரே இடத்தில் நிற்கக் கூடியது. மனிதன் நிலத்தின் மேல் இடம் பெயர்ந்து வாழக் கூடியவன். அப்படியிருக்க மனிதன் மரமாக மாறினான். அதுவும் சாபத்தால் மாறினான் என்பது அறிவியலுக்கு ஏற்றதா? இது அறிவியலுக்கு நேர் எதிரான மூடக் கருத்துகளின் களஞ்சியமான இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?

(சொடுக்குவோம்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *