எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (33) : அண்ணல் அம்பேத்கரை ஏற்றிப் போற்றி பெரியார் எழுதியவை!

ஏப்ரல் 1-15 2019

நேயன்

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சிறந்த கல்விமான். இந்த இந்திய உபகண்டத்திலேயே சிறந்த ஆராய்ச்சிக்காரர். இவர் எழுதிய நூல்களுக்கு உலகெங்கிலும் செல்வாக்கு இருந்து வருகின்றது…. நம்மவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அம்பேத்கர் என்று பெயர் வைத்து நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். (‘விடுதலை’ 4.5.1963)

இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆகட்டும், பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு ஆகட்டும். ஒரு நல்ல வாழ்வு ஏற்பட்டு இருக்கின்றது என்றால், காங்கிரஸினால்அல்ல. நமது இயக்கத் தொண்டும் அம்பேத்கர் செய்த தொண்டின் காரணமாகவுமே ஆகும். (‘விடுதலை’ 4.5.1963)

தங்கள் நலனுக்கு மாறாக நடக்க முற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் பார்ப்பனர்கள் ஒழித்துக்கட்டி இருப்பார்கள். புராண காலந்தொட்டு, சரித்திர காலம் தொட்டு இதே நிலை ஆகும். நம் கண்ணெதிரே ஒழிக்கப்பட்டவர்கள் காந்தியாரும், அம்பேத்கரும் ஆவர். நாங்கள்தான் துணிந்து இன்று பாடுபட்டுக் கொண்டு உயிருடனும் இருக்கின்றோம். (‘விடுதலை’ 4.5.1966)

நாம் இன்று நேற்றல்ல, ‘ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தாழ்ந்த நிலையில் கடை நிலையில் இருக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டும் என்ற எவருமே பாடுபடவில்லை. டாக்டர் அம்பேத்கர் ஒருவர்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மிகவும் வாதாடி அரசாங்கத்தால் சில உரிமைகள் பெற்றுத் தந்தார். இதன் காரணமாகத்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமை பெற்றனர்.

டாக்டர் அம்பேத்கர் பேரறிஞர். செயற்கரிய செய்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய தொண்டு யாரும் செய்யமுடியாத தொண்டு ஆகும். தாழ்த்தப்பட்ட மக்களுடைய எண்ணிக்கை எவ்வளவோ அத்துணை விகிதத்தில் கல்வி, உத்தியோகம் பதவிகளை பெற்றுத் தந்தவர் ஆவார். உண்மையை உண்மையாக எடுத்துச் சொல்வதில் அவருக்கு ஈடு யாரும் இல்லை. சிறந்த படிப்பாளி. தம் மனதில் பட்ட கருத்துக்களைத் துணிந்து கூறிவந்தவர். எதிர்ப்புக்காகத் தம் கொள்கையில் இருந்து பின்வாங்காதவர். (‘விடுதலை’ 3.7.1972)

ஒப்பில்லாத அறிவாளி டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைக்கும் பெருமைக்கு உரிய பணியை அளித்து உள்ளார்கள். இந்தியா முழுவதிலும் அம்பேத்கர் போல படித்தவர், அறிவாளி, துணிவுள்ளவர், சாதிக்க முடியாத காரியத்தை சாதித்தவர் யாருமே இல்லை. சமுதாய முன்னேற்றத்திற்-கு அவர் முயற்சி எடுத்துக்கொண்டு ஆற்றிய பணியும் சாதனையும் யாரும் செய்யாத சாதனையாகும். அவர் ஜாதி ஒழிப்புக்காக வடநாட்டில் உண்மையாகப் பாடுபட்டவர்…. அம்பேத்கர் மந்திரியாக இருப்பதனாலேயே தனது கருத்துக்களைக் கூறக்கூடாது என்றால் எனக்கு அந்தப் பதவி பெரிதல்ல என்று கூறியவர். (‘விடுதலை’ 14.6.1973)

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுகத்திற்கு மரியாதையைத் தேடித் தந்தவர். இருந்தபோதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது இலட்சியத்தைப் பின்பற்றினார்கள் என்ற சொல்ல முடியாது. அவருடைய கருத்தைப் பின்பற்றி இருந்தால் நாட்டில் ஒருவன்கூட மூடநம்பிக்கையாளனாக இருக்க முடியாது. (‘விடுதலை’ 13.10.1973)

ஆதிதிராவிடர்களுக்குத் திடீர் என்று வந்த யோகம் டாக்டர் அம்பேத்கர், ‘நான் இந்து அல்ல, பஞ்சமன் அல்ல, இந்து மதத்தின் எந்தப் பாடுபட்டுக்கும் சம்பந்தப்பட்டவன் அல்ல’ என்று சொன்னதால்தான் கோவில் திறக்கப்பட்டதும், லிஸ்ட் கொடுங்கள் உத்தியோகம் கொடுக்கிறேன் என்று மந்திரி கேட்பதும், ‘உங்களுக்கு நீதிக்கு மேல் அளவுக்கு மேல் நன்மை செய்கிறேன் என்ன வேண்டும் கேள்’ என்று படேல் சொல்வதும், ‘நானும் ஆதிதிராவிடன் பங்கு’ என்று காந்தியார் சொல்வதும்,  ஆன காரியங்களுக்குக் காரணம். அதாவது, ‘நான் இந்துவல்ல’ என்று அஷ்டாஷ்க்ர மந்திரமேயாகும். (‘குடிஅரசு’ 23.1.1947)

“டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவிலேயே தலைசிறந்த அறிவாளிகள் என்று கருதப்படும் சிலரில் ஒருவர் ஆவார். சித்தார்த்தர் எப்படி ஒரு சாதாரண மனிதராக இருந்து மனிதச் சமுதாயத்துக்கு எப்படிப்பட்ட தொண்டு ஆற்ற முடியுமோ, அப்படிப்பட்ட தொண்டாற்றி வந்தார்.

இப்போது தென்னாட்டில் நாங்களும் வடநாட்டில் டாக்டர் அம்பேத்கரும்தான் ஜாதியை ஒழிக்கப் பாடுபடுகிறோம். (‘விடுதலை’ 5.3.1956)

இப்படி அம்பேத்கரை தலைமேல் தூக்கிக் கொண்டாடியவர் தந்தை பெரியார். அம்பேத்கர் மறைந்தபோது ‘விடுதலை’ வடித்த கண்ணீரை அதன் பக்கங்களைப் புரட்டினால் மட்டுமே புரியும். ‘உலக மேதை’ மறைந்தார் என்றது விடுதலை. பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருவரும் ஒருவர் என்றது ‘விடுதலை’.

பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த லாகூரில் (அன்று பஞ்சாப்பில் இருந்தது) ஜாத்பத் தோரக் மண்டல் என்ற சங்கம் இருந்துள்ளது. ஜாதியை ஒழிக்கும் சங்கம் அது. பெரியாரின் பணிகளைக் கேள்விப்பட்ட அந்தச் சங்கத்தினர், பெரியாரை அச்சங்கத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கிறார்கள். இச் செய்தி பத்திரிகைகளில் வெளியானதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பார்ப்பனர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “ஈ.வெ.ரா. நாஸ்திகர், அவர் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்பவர், முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பவர்’’ என்று புகார் கூறினார்கள்.

உடனே ஜாத்பத் தோரக் மண்டல் பொறுப்பாளர்கள், “நீங்கள் இந்து மதத்தை வெறுக்கிறவர்களா?’’ என்று கேட்டார்கள்.

“ஜாதி பேதத்தையும் உயர்வு தாழ்வையும் ஒழிக்க வேண்டுமானால் இந்து மதம் மாத்திரமல்ல இந்து மத சாஸ்திர புராண இதிகாசங்கள் யாவும் ஒழிக்கப்பட்டால் தவிர ஒழிய முடியாது’’ என்று நீண்ட பதிலை ஈ.வெ.ரா. எழுதினார். இந்தப் பதிலை ஏற்காத இந்த அமைப்பினர் அடுத்த ஆண்டு பெரியார் பெயரை துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து எடுத்து விட்டார்கள்…

இந்த ஜாத்பத் தோரக் மண்டல் நடத்திய மாநாட்டுக்கு டாக்டர் அம்பேத்கரை தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். டாக்டர்  அம்பேத்கர் பற்றியும் பார்ப்பனர்கள் புகார் அனுப்பி அவரிடமும் விளக்கம் கேட்டார்கள்.

“ஆமாம்! இந்து மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழிய முடியும். ஆதலால், எனது தலைமை உரையில் இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்றுதான் எழுதி இருக்கிறேன்’’ என்றார் டாக்டர் அம்பேத்கர். இதை ஏற்காமல் மாநாட்டையே ரத்து செய்துவிட்டார்கள்.

அந்த மாநாட்டுக்கு தலைமைச் சொற்பொழிவாக எழுதியதுதான் ‘சாதியை ஒழிக்கும் வழி’ என்ற புத்தகம். இந்தத் தகவலை பெரியாருக்கு டாக்டர் அம்பேத்கர் சொல்ல, அவரிடம் அந்த உரையை தனக்கு அனுப்பச் சொன்னார் பெரியார். அம்பேத்கர் அனுப்பி வைத்த உரை மொழிபெயர்க்கப்பட்டு புத்தகம் ஆனது. இந்த அடிப்படையில் பார்த்தால் அம்பேத்கருக்கும் பெரியாருக்குமான நட்பு கொள்கைப்பூர்வமானதாகவும் தொடர்ச்சியானதாகவும் இருந்துள்ளது. அம்பேத்கருடன் இந்த நட்பு முடியவில்லை. அம்பேத்கர் மறைவுக்குப் பிறகும் வடஇந்திய அம்பேத்கரிஸ்ட்கள் இந்த நட்பை தொடர்ந்துள்ளனர்.

1959ஆம் ஆண்டு டெல்லி சென்ற பெரியாருக்கு டாக்டர் அம்பேத்கர் பவன் சார்பில் வரவேற்பு தரப்பட்டது. அங்கு அம்பேத்கரின் சாம்பல் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு 15.2.1959 அன்று பெரியார் மரியாதை செலுத்தினார். டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் அமைக்கப்பட்ட மேடையில் பெரியார் பேசினார். விழாவுக்கு தலைமை வகித்த சங்கர் நாராயண சாஸ்திரி என்பவர், “டாக்டர் அம்பேத்கருடைய நெடுநாளைய நண்பர் நமது பெரியார் அவர்கள். அவர் டாக்டர் அம்பேத்கர் எழுதிய பல நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்கள். 1954இல் ஈரோட்டில் புத்தர் கொள்கை பிரசார மாநாட்டை நடத்தி அதன்மூலம் புத்தருடைய கொள்கைகளை தமிழ்நாடெங்கும் பரவும்படிச் செய்தார்’’ என்று பேசினார். பதில் அளித்துப் பேசிய பெரியார், “தனக்கும் அம்பேத்கருக்கும் எந்தக் கொள்கையிலும் மாறுபாடு இல்லை’’ என்றார். (‘விடுதலை’ 22.09.1959)

டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட மக்கள் கல்விக் கழகத்தின் சார்பில் பெரியாருக்கு 25.2.1959 அன்று வரவேற்பு தரப்பட்டது. வரவேற்றுப் பேசிய சித்தார்த்தா கல்லூரி பதிவாளர் தால்வாட்கர், “பெரியார் அவர்கள் ஒரு மாபெரும் விடுதலை இயக்கத்தின் தலைவராவார். நம் கல்லூரிகளை நிறுவிய டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு உற்ற நண்பரும் சமுதாயச் சீர்திருத்தத்தில் ஒத்த கருத்துடையவர்கள்’’ என்றார். அம்பேத்கரின் கடைசி நூலாக புத்தரும் அவரது கொள்கையும்’ என்ற நூல் பெரியாருக்கு தரப்பட்டது. அப்போது பேசிய பெரியார், அம்பேத்கரை புத்தர் என்றே சொன்னார்.

“டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவிலேயே தலைசிறந்த அறிவாளிகள் என்று கருதப்படும் சிலரில் ஒருவர் ஆவார். சித்தார்த்தர் எப்படி ஒரு சாதாரண மனிதராக இருந்து மனிதச் சமுதாயத்துக்கு எப்படிப்பட்ட தொண்டு ஆற்ற முடியுமோ, அப்படிப்பட்ட தொண்டாற்றி வந்தார்.

புத்தர், அரச குடும்பத்தினராகப் பிறந்தார். ஆனால், அம்பேத்கர் அவர்களோ அந்த மாதிரி பிறக்கும்போதே வசதியோடு பிறந்தவர் அல்ல. டாக்டர் மிகவும் வசதியில்லாத நிலையிலிருந்து தன்னுடைய உழைப்பாலும் சுயஅறிவாலும் முயற்சியாலும் உயர்ந்த நிலைக்கு வந்து மக்களுக்குப் பயன்படத்தக்க வகையில் தொண்டாற்றினார்.

இந்த நாட்டில் மக்களைப் பார்த்து நீங்கள் உங்கள் அறிவுக்கு வேலை கொடுங்கள். அறிவின்படியே நடவுங்கள் என்று சொன்னவர்கள் 2,500 வருஷங்களுக்கு முன் புத்தரும் அவருக்குப் பிறகு டாக்டர் அம்பேத்கரும்தான் காணப்படுகிறார்கள். வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம்’’ என்று  பேசினார்.          

       -‘விடுதலை’ 4.3.1959

                                                                   (தொடரும்)

 

   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *