அய்யாவின் அடிச்சுவட்டில் ….
கி. வீரமணி
02.09.1986 அன்று சென்னை பெரியார் திடலில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பின், இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை அறிந்திட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை இணைந்து ‘கண்காணிப்புக் குழுக்கள்’ அமைத்திட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் ஏற்பட்டு ஏறத்தாழ 120 ஆண்டுகள் ஆகின்றன. இப்பொழுதுதான் முதன்முறையாக ஒரு பெண் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்கள். இது மகிழ்ச்சிக்குரிய நியமனம் ஆகும். இது தந்தை பெரியாரும், அவர்தம் இயக்கமும் அன்று முதல் போராடிப் பெற்ற வெற்றி இது என்று 03.09.1986 அன்று அறிக்கையில் குறிப்பிட்டோம்.
அதற்கு முன்பும் எத்தனையோ முறை நமது பல மாநாடுகளில் இதை வலியுறுத்தி வந்துள்ளோம். அவற்றின் பலனாக முதன்முறையாக அரசு குற்றவியல் வழக்குரைஞரான திருமதி பத்மினி ஜேசுதுரை அம்மையார் அவர்கள் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நியமனத்தை மிகவும் வரவேற்கத்தக்கது என்று பாராட்டினோம்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினோம்.
தலைநகரமான புதுடெல்லியில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா 17.09.1986 அன்று ‘மாவ்லங்கர்’ அரங்கத்தில் நடைபெற்றது.
தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் ஜெயில்சிங்கிற்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் ஆசிரியர் கி.வீரமணி உடன் பேராசிரியர் ஆனந்த் கவுசல்யாயனை.
உணர்ச்சிமயமாக விளங்கிய இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வந்து கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் அவர்கள் உரையாற்றும்போது, “தந்தை பெரியார் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; உலகம் முழுவதுமுள்ள மனித சமுதாயத்திற்கு சொந்தமானவர்; ஏழை எளிய மக்களின் உற்ற தோழராக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் அடித்தளத்து மக்களை உண்மையோடு நேசித்த மாமனிதராக பெரியார் வாழ்ந்து காட்டியவர். எளிமையான, நாணயமான மாபெரும் மக்கள் தலைவர் அவர்’’ என்று பெருமிதத்தோடு குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் குறிப்பிட்டார்.
வைக்கத்தில் தந்தை பெரியார் தீண்டாமையை எதிர்த்து நடத்திய வீரம் செறிந்த போராட்டம் அவரை ‘வைக்கம் வீரர்’ என்று வரலாற்றில் நிலைபெறச் செய்துவிட்டது. அவர் காண விரும்பிய சுரண்டலற்ற சாதியற்ற சமுதாயத்தைப் படைத்திட உறுதிகொள்வோம் என்று முழங்கினார்.
சந்திரஜித்
(யாதவ்)
சமூகநீதிப் போராளித் தலைவர் சகோதரர் சந்திரஜித் (யாதவ்) அவர்கள் விழாவினை தலைமை தாங்கி நடத்தியும், நன்றி உரையும் ஆற்றினார்கள்.
விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்திரி பிரம்பிரகாஷ், டி.பி.மவுரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.பி.யாதவ், கே.ஆர்.நடராசன், முன்னாள் எம்.பி. அன்பரசு, ஜஸ்டிஸ் திரு.பி.வேணுகோபால், மன்னார்குடி நகராட்சித் தலைவர் சிவானந்தம் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர் பெருமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நான் வரவேற்புரை ஆற்றும்போது, “தேசிய ஒருமைப்பாட்டுக்காக நூறு பேச்சாளர்கள் ஆயிரம் கூட்டங்களில் பேசுவதைவிட குடியரசுத் தலைவராக இருக்கக்கூடிய பெரிய நிலையிலிருந்து, தென்னகத்து மக்களின் சமுதாயப் பெருந்தலைவராகிய _ தந்தையாகிய ‘பெரியார்’ அவர்களின் விழாவில் கலந்துகொள்வதன்மூலம் ஒரு சாதனையை நிகழ்த்திவிட்டார்கள் என்பது பொருத்தமாகும்’’ என்று குறிப்பிட்டேன்.
திரு.சந்திரஜித் யாதவ் அவர்களின் சீரிய முயற்சியால் உருவான இந்த விழாவைத் தடுக்க பார்ப்பனர் செய்த விஷமப் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டது. பெரியார் பார்ப்பன எதிர்ப்புத் தலைவர்.(Anti Brahmin Leader) என்று ஒரு மூத்த மத்திய உள்துறை பார்ப்பன அதிகாரி எழுதி குடியரசுத் தலைவர் ஜெயில்சிங் அவர்களை விழாவிற்கு வராமல் செய்ய முயன்றபோது, மத்திய அரசு, அதுவும் ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் பங்கேற்ற ஜனதா அரசு 1978இல் வெளியிட்ட சிறப்பு அஞ்சல் தலையைக் காட்டி, குடியரசுத் தலைவர் பெரியார் விழாவில் அதுவும் டெல்லித் தலைநகரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்ளாமல் செய்ய பார்ப்பனர் செய்த சதி முறியடிக்கப்பட்டது.
நான் டெல்லி சென்று குடியரசுத் தலைவர் ஜெயில்சிங்கிடம் மத்திய அரசு முன்பு வெளியிட்ட சிறப்பு அஞ்சல் தலையை காட்டியபின் அவர் துணிந்து நிச்சயம் வருகின்றேன் என்றார். அதன்படியே வந்தார்! வெற்றிகரமாக விழா நடைபெற்றது!
புதுடெல்லியில் கடந்த 17.09.1986 அன்று குடியரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்க, வெகு சிறப்புடன் நடந்த அய்யா விழா பற்றி சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் ‘தமிழ்முரசு’ நாளேடு சிறப்புக் கட்டுரை ஒன்றை 20.10.1986 அன்று வெளியிட்டது. ‘சென்னைக் கடிதம்’ என்ற தலைப்பில் சென்னைச் சிறப்புச் செய்தியாளர் எழுதியுள்ளார். அக்கட்டுரையின் சில பகுதிகளை இங்கு தருகிறோம்.
“பெரியாரிசம் எனும் சமுதாயப் புரட்சி – இந்தியா முழுவதும் வீசி வருகிறது
தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து வணங்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங்.
இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்த மூன்று கழகங்களும் _ திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய மூன்றும் ஒரே குரலில் கண்டனத்தை எழுப்பிக் கொண்டுள்ள தருணத்தில் இந்தி மாநிலங்களின் இதயம் போன்ற டில்லி மாநகரில் இந்தி எதிர்ப்பு இயக்கத் தந்தையாகிய பெரியாருக்கு சமுகப் புரட்சித் தலைவர் என்ற முறையில் வடபுலத்துப் பெருத்லைவர்கள் இந்தி மொழியில் புகழுரைகளைப் பொழிந்தார்கள்.
இந்த விழாவில் சிறப்புரை ஆற்றிய குடியரசு அதிபர் ஜெயில்சிங் மிகுந்த அடக்கத்துடன், பெரியாரின் ஒப்பற்ற சமுகநீதிப் பணிகளை வாயாரப் புகழ்ந்ததோடு பொது வாழ்வில்இறுதி வரையில் பெரியார் கடைப்பிடித்து வந்த நாணயத்தையும், எளிமை வாழ்வையும், மனிதாபிமானத்தையும் போற்றிப் பாராட்டினார்.
பெரியாரின் பிறந்த நாள் விழா இந்தியத் தலைநகரில் கொண்டாடப்படுவது இதுவே முதல் தடவையாகும். அதைவிட முக்கியம் என்னவென்றால் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற அதிபர் ஜெயில்சிங் ஒப்புக்கொண்டது. அதோடு வடபுலத்துச் சமுதாயத்தின் பல முகப்புக்களையும் சார்ந்த உச்சத் தலைவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு பெரியாருக்கு இதயபூர்வமான நினைவஞ்சலியை செலுத்தினார். இந்த விழா உணர்ச்சிமயமாகக் காட்சியளித்தது.
இந்த விழாவின் மூலம் தேசியப் பொதுவாழ்வில் பெரியாரிஸம் என்ற சமுதாயப் புரட்சிச் சித்தாந்தம் ஊடுருவிவிட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை வடபுலத்துப் பிற்படுத்தப்பட்ட, வகுப்பு மக்களின் தளபதியும் ஜனவாடி கட்சியின் தோற்றுநருமான சந்திரஜித் (யாதவ்) முன்நின்று செய்த போதிலும் பின்னணியில் இருந்தபடியே எல்லாவிதமான உதவிகளையும் புரிந்து விழாவைப் பெரிய வெற்றியாக ஆக்கிய பெருமை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணிக்கே உரியது.
டில்லி காணாத அரிய விழா
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து திராவிடர் கழகத்தின் அணி ஒன்று டில்லிக்குச் சென்றது. தலைநகருக்கு வந்த பெரியாரின் தொண்டர்களை வருங்கால சமத்துவ சமுதாயத்தின் தூண்களாகப் பாவித்து சிறந்த முறையில் வரவேற்று உள்ளம் குளிர்ந்தார்கள்.
தலைநகரில் பெரியாருக்கு விழா எடுப்பதால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளை தேசிய அரசியலின் மூல விசையை கைக்குள் வைத்திருக்கும் உயர்சாதி வட்டாரங்கள் அனுமானித்துக் கொண்டுவிட்டதால் இந்த விழாவில் குடியரசு அதிபர் பங்கு கொள்வதைத் தடுப்பதற்கு திரைமறைவில் தந்திரமான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. விழாவுக்கு வந்திருந்தவர்களின் முகத்தில்கூட கடைசி நிமிடம் வரை அதிபர் ஜெயில்சிங் வருவாரா? என்ற கேள்விக்குறியே தென்பட்டது.
ஆனால், தடங்கல்களை எல்லாம் புறக்கணித்து ஒதுக்கிவிட்டு குறித்த நேரத்துக்குச் சற்று முன்னதாகவே பீடு நடைபோட்டு விழாவுக்-கு வந்துவிட்டார் அதிபர். இவர் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி உடையவர் அல்ல. எனினும் உருதுவிலும் இந்தியிலும் அற்புதமாக சொற்பொழிவு நிகழ்த்தக்கூடிய வல்லமை உடையவர்.
இந்த விழாவில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து வந்திருக்கும் தமிழர்களுக்கும், தாம் பேசுவது புரிய வேண்டுமே என்ற கவலையினால் ஆழமும் தெளிவும் மிக்க ஆங்கில உரை ஒன்றை தயாரித்துக் கொண்டு வந்திருந்தார். இவர் சமுதாய ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சாதிக் கொடுமையும் அதன் விளைவான அவமானமும் இன்னது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர். எனவே, ஜாதி முறையின் முதுகெலும்பான வருணாசிரம கட்டுக் கோப்பை குறிவைத்துத் தாக்கும் சுயமரியாதை இயக்கத்தைக் கண்ட சமுதாயப் புரட்சி வீரர் என்ற முறையில், பெரியார்_குடியரசு அதிபரின் இதயத்தைத் தொட்டிருக்கிறார்.
அதற்கான அடையாளம் இந்த விழாவில் அவர் நடந்துகொண்ட முறையிலிருந்து பளிச்சிட்டது. மேடை மீது வைக்கப்பட்டிருந்த பெரியாரின் படத்துக்கு மாலை அணிவித்த பிறகு, இரு கரங்களையும் குவித்து தன்னுடைய மரியாதை கலந்த வணக்கத்தைத் தெரிவித்தார். அடுத்து, விழாவில் சிறப்புரையாற்ற எழுந்தபொழுது விழா மண்டபத்தில் நிலவிய உணர்ச்சியோடு ஒன்றிவிட்டதால், தயாரித்து வந்த உரையை ஒதுக்கிவிட்டு, இதய வாசலைத் திறந்து தம்முடைய உணர்ச்சிகளைக் கொட்டிவிட்டார். இவரைப் போலவே விழாவில் பங்குகொண்ட வடபுலத்துத் தலைவர் ஒவ்வொருவரும் சமுதாய இழிவு என்ற நோயைப் போக்கக்கூடிய ‘பெரியாரிசம்’ என்ற மருந்து தங்களுக்குக் கிடைத்துவிட்டது என்ற எக்களிப்புடன் இந்த விழாவில் உரையாற்றினார்கள். இவர்கள் எல்லாம் பெரியாரின் தொண்டினால் நேரடியாக பலனடையாதவர்கள்.
கூச்சப்படுகிறார்கள்
ஆனால், அதே சமயத்தில் பெரியாருடைய உழைப்பினால் நம்ப முடியாத பவிசுகளை அடைந்தவர்கள், தமிழ்நாட்டு தி.மு.க.வினரும், அண்ணா தி.மு.க.வினருமே; அ.தி.மு.க.விலுள்ள அய்ந்தாறு பழைய திராவிடர் கழகத்தினரைதவிர மற்றவர்கள் பெரியாரைப் பற்றியே பெரும்பாலும் தொட்டுப் பேசுவதில்லை. பெரியாரே திராவிடர் இயக்கத்தின் மூலவர், பொதுவாழ்வில் அண்ணாவைப் பெற்றெடுத்துத் தந்தவர் என்பதைப் பகிரங்கமாகப் பெருமிதத்தோடு ஒப்புக்கொள்பவர்கள் தி.மு.க.வினர். செப்டம்பர் மத்தியில் பெரியாரின் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள், தி.மு.க. பிறந்த நாள் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து முப்பெரும் விழாவைக் கொண்டாடி வருபவர்கள். இந்த விழாவையொட்டி கடந்த சில ஆண்டுகளாக தி.மு.க. மேலிடம் தயாரிக்கின்ற சுவரொட்டிகளில் மூன்று முகங்களை வரிசையாக அடுக்கியது போன்ற இலச்சினையைப் பொறித்து வருகிறார்கள். பெரியாரின் முகம், அதோடு ஒட்டியதுபோல அண்ணாவின் முகம், அண்ணாவின் முகத்தோடு ஒட்டியதுபோல கருணாநிதியின் முகம் ஆகிய இந்த மும்முகத்தை ஓர் இலச்சினைபோலவே தி.மு.க. அனுசரித்து வருகிறது. அது மட்டுமன்றி அரசியலில் திராவிடர் இயக்கத்தினர் செலுத்தி வருகிற ஆதிக்கத்துக்-கு பெரியாரின் பணியே மூலகாரணம் என்பதை நன்றாக உணர்ந்தவர் கருணாநிதி. இன்னும் சொல்வதென்றால் திராவிடர் இயக்கத்து அரசியல்வாதிகளில் பெரியாரை நன்கு உணர்ந்தவர்கள் இரண்டு தலைவர்கள் ஒருவர் கருணாநிதி, இன்னொருவர் அன்பழகன், அண்ணா தி.மு.க.விலோ அண்ணாவையே பார்க்காதவர்கள் அதில் பெரிய தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும் கூட இருந்து வருகிறார்கள். எனக்கு அண்ணாவைத் தெரியாது. எம்.ஜி.ஆரை மட்டுமே தெரியும் என்று பெருமையாகவும் கூறிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பெரியாரிசத்தைப் பற்றி என்ன தெரிந்து இருக்க முடியும்? அதோடுகூட அண்ணா தி.மு.க. அரசை உயர்சாதி வட்டாரங்களும், அவர்கள் நடத்துகின்ற பத்திரிகைகளும் ஆதரித்து வருவதால், அந்தக் கழகத்தின் பேச்சாளர்கள் பெரியாரைப் பற்றி மேடையில் பேசவே கூச்சப்படுகிறார்கள்.
ரத்தின சுருக்க உரை
இந்த விழாவில் கருஞ்சட்டைப்படை அணியோடு கலந்துகொண்ட வீரமணி, ரத்தினச் சுருக்கமாக _ கருத்தாழமும் மிக்க அற்புதமான வரவேற்புரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தி _ பெரியாரின் மனநிழலில் வளர்ந்ததால் வைரம் பாய்ந்துவிட்ட தம்முடைய கொள்கை நெஞ்சின் அடையாளத்தை காட்டிவிட்டார்! இந்தக் கட்டத்தில் ஓர் உண்மையை அழுத்தம் திருத்தமாகக் கூற வேண்டிஇருக்கிறது. பெரியாரின் கொள்கைகள், மோழை போகாத _ பதவிச் சபலங்களாகிய ஓட்டை இல்லாத பவித்திரமான நெஞ்சங்களில்தான் தங்கி விளைந்து மணியாக முடியும். பெரியாரோடு உருவமும், நிழலும் போல வளர்ந்து அவருடைய உணர்வில் படிந்து படிந்து, தோய்ந்து தோய்ந்து பரிணாமம் அடைந்த மெருகேறிய உள்ளத்தை வரவேற்புரையின்போது ஆசிரியர் கி.வீரமணி வெளிப்படுத்த, அதைச் செவிமடுத்த வடபுலத்துத் தலைவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். பத்தே நிமிட பேச்சில் _ பத்தே நிமிட வரவேற்புரையில் பெரியாரிசத்தின் சாரத்தை ஆசிரியர் கி.வீரமணி பிழிந்து தந்தார்!
வடமாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் தலைவர்கள் இந்த விழாவை தங்களுடைய சமுகக் குடும்ப விழாவாகக் கருதி திரளாக வந்து கலந்து கொண்டார்கள். குறிப்பாக வடபுலத்து பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பெருந் தலைவர்களான முன்னாள் மத்திய அமைச்சரும் _ நேருவின் நெருங்கிய நண்பருமான சவுத்ரி பிரம் பிரகாஷ்; அம்பேத்கரின் தலைமைச் சீடரும், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவருமான டி.பி.மௌரியா; டி.பி.யாதவ் எம்.பி., தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., அன்பரசு (இந்திரா காங்கிரஸ்); முன்னாள் நீதிபதி வேணுகோபால் போன்றவர்கள் விழா மண்டபத்தின் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்கள். சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற பல நாடுகளிலிருந்து வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்திருந்தன. விழா மேடை அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அரசாங்க வட்டாரத்திற்குள் ஆட்சேபம் இருந்து வருவதால் அதிபர் ஜெயில்சிங் விழாவில் கலந்து கொள்வது அசாத்தியமே என்ற வதந்தி விழா மண்டபத்துக்குள் உலவிக் கொண்டிருந்த போதே – குறித்த நேரத்திற்குச் சற்று முன்னதாகவே – அதிபர் ஜெயில்சிங் தமது மெய்க்காப்பாளருடன் விழா மண்டபத்தில் நுழைந்ததைக் கண்டதும் – விழாவுக்காக கூடியிருந்த அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றார்கள்.
இந்த விழாவின் மூலம் தேசியப் பொதுவாழ்வில் பெரியாரிஸம் என்ற சமுதாயப் புரட்சிச் சித்தாந்தம் ஊடுருவிவிட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை வடபுலத்துப் பிற்படுத்தப்பட்ட, வகுப்பு மக்களின் தளபதியும் ஜனவாடி கட்சியின் தோற்றுநருமான சந்திரஜித் (யாதவ்) முன்நின்று செய்த போதிலும் பின்னணியில் இருந்தபடியே எல்லாவிதமான உதவிகளையும் புரிந்து விழாவைப் பெரிய வெற்றியாக ஆக்கிய பெருமை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணிக்கே உரியது.
அதிபர் ஜெயில்சிங் கம்பீரமான தோற்றத்துடன் மேடை மீது ஏறிச் சென்று முதலில் அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த பெரியாரின் வண்ணப் படத்திற்கு மாலைகளை அணிவித்து இருகரமும் கூப்பி மிகுந்த அடக்கத்துடன் அவருடைய உள்ளத்தில் அவர் பெரியாருக்கு அளித்துள்ள இடம் எத்தகையது என்பது புலனாயிற்று.
அவரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் அல்லவா? அவருடைய நெஞ்சை பெரியார் ஈர்த்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. இதைவிட அதிபரின் தரத்தைத் திட்டமாக அடையாளம் காட்டியது, விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் நிகழ்த்திய அற்புதமான உரை. அறிவாளி என்றால் அவர் ஆங்கிலம் படித்தவராகத்தான் இருக்க வேண்டும். ஆங்கிலம் படிக்காதவர்கள் எப்படி அறிவாளியாய் இருக்க முடியும்? என்ற நவீன மூடநம்பிக்கையைத் தூள் தூளாக்குவதாய் இருந்தது _ ஜெயில்சிங்கின் ஆழமான சட்டம் கூடிய மெருகேறிய சிறப்புரை.
இவர் உருதுவிலும், இந்தியிலும் ஆழ்ந்த புலமையுடையவர். சுயசிந்தனை மிக்கவர். பெரியாருடைய கொள்கைகள் அவருடைய சமுதாயத் தொண்டு போன்றவற்றை அவர் ஆழமாக உணர்ந்திருக்கிறார் என்பதை அவருடைய உரை வெளிப்படுத்தியது. பெரும்பாலும் பிரதமர்களோ, அதிபர்களோ இத்தகைய விழாக்களில் கலந்துகொள்ளும் பொழுது _அவருக்காக செய்தி இலாக்காவினர் அல்லது அவர்களுடைய பத்திரிகைச் செயலாளர்கள் தயாரித்த உரைகளை அப்படியே படிப்பது வழக்கம். எந்த உணர்ச்சியும் இல்லாமல், இந்த சம்பிரதாய உரையை _ இத்தகைய விழாக்களில் படித்துவிட்டு போய்விடுவார்கள். இதற்கு மாறாக மறக்கமுடியாத ஓர் உதாரணம் குடியரசு அதிபரின் அன்றைய உணர்ச்சியுரை!
1980இல் பொதுத் தேர்தல் வந்தபோது, இந்திரா காங்கிரசும், தி.மு.க.வும், நேசக்கூட்டணி அமைத்திருந்தன. அந்த சமயத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜனதா ஆட்சியை எப்படியும் வீழ்த்தும் நோக்கத்தோடு _ கருணாநிதியுடன் கூட்டுச் சேர்ந்த இந்திராகாந்தி தமிழகத்திற்கு வந்திருந்தபோது _ பெரியாரின் நூற்றாண்டு விழாவைத் தமிழினம் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்த நேரம். ஆகவே திராவிடர் இயக்கத்துடன் தேர்தல் கூட்டு வைத்திருந்த இந்திராகாந்தி, பெரியாரைப் பற்றி இரண்டு வார்த்தைகள் கூறவேண்டியது அவசியமாயிற்று. அவர் என்ன கூறினார் தெரியுமா? பெரியார் தமது பொது வாழ்வை காங்கிரசுகாரராகத்தான் துவக்கினார். காங்கிரசைப் பரப்பவும், காங்கிரசின் கொள்கைத் திட்டங்களைச் செயற்படுத்தவும் அயராது பாடுபட்டவர் பெரியார் என்பதற்குமேல் இந்திராகாந்தியால் நினைக்கவே முடியவில்லை!
அதுவா பெரியார்? அவ்வளவுதானா பெரியார்? காங்கிரசுக்குள் அவர் இருந்தது 5 அல்லது 6 ஆண்டுகளே, அதன் பிறகு 50 ஆண்டுகாலம் ஜாதி முறை ஒழிப்பு _ சமுகநீதிப் போராட்டம் _ தமிழினத்துக்கு தன்மானமுள்ள வாழ்வு _ அறிவார்ந்த வாழ்க்கை நெறி _ மனித சமத்துவம் _ மனித மானம் _ மனித கண்யம் _ மனித உரிமை ஆகியவற்றுக்காக ஓயாத போராட்டம் _ இந்த மனிதாபிமான போராட்டத்துக்கே _ காங்கிரசை விட்டு வெளியேறி வந்து அரை நூற்றாண்டுகால வாழ்வை அர்ப்பணித்தவர் பெரியார். இந்தப் பணியே அவரை பெரியார் ஆக்கியது. இந்து சமுதாயத்தின் மேல்தட்டைச் சேர்ந்தவர்களுக்கு இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே வராது என்பதற்கு இந்திராகாந்தி அன்று நடத்திய சம்பிரதாய உரையே சாட்சி. ஆனால், பிறப்பில் பிற்பட்ட வகுப்பைச் சார்ந்தவராகவோ அல்லது தாழ்த்தப்பட்டவராகவோ ஒருவர் இருந்துவிட்டால், அவருடைய நினைவில் சுரீலென தைப்பது பெரியாரின் சமுகப் புரட்சிக் கருத்துகளே. ஒரு தடவை அவருடைய சிந்தனைகளைப் பிற்பட்டவர்கள் _ நெஞ்சகத்தே வாங்கிக் கொண்டால் போதும். அடுத்த கணமே அவர்களுடைய உள்ளத்தில் பெரியாரிசம் கருக்கொண்டுவிடும். அதிபர் ஜெயில்சிங் உட்பட விழாவில் சொற்பொழிவாற்றிய எல்லாத் தலைவர்களும், சமுதாயத்தின் அடித்தளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால். அவர்களுடைய உரைகளில் செயற்கைப் பூச்சு இல்லாமல் _ இயற்கையான எண்ணங்கள் பொங்கி வழிந்து நுங்கு நுரையுடன் வெளியாயிற்று.
இந்த விழாவின் அற்புதமான வண்ணக் கோலமே இதுதான்! அதிலும், அதிபர் ஜெயில்சிங் தேசிய வாழ்வில் உச்ச பீடத்தை அலங்கரித்து வருபவர் அல்லவா? அந்தத் தரத்துக்கு ஏற்ப உரையில் திட்பமான கருத்துகள் மிகுந்த லாவகத்துடனும் _ நுட்பங்களுடனும் _ சூசகமான முறையில் இடம் பெற்றிருந்தன. சின்னஞ் சிறிய கண்ணாடியில் ஒரு மாமலையின் பிரதி பிம்பத்தை காட்டுவதைப் போல, ஒருசில வார்த்தைகளில் பெரியார் என்ற மாமனிதரின் இதயத்தைச் சித்திரம் தீட்டிக் காட்டினார் ஜெயில்சிங். பெரியார் என்ற பெயர் தென்னாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் வீட்டுக்கு வீடு தெரிந்த பெயர், அவர் ஒப்புயர்வற்ற சீர்திருத்தவாதி. நிறம், ஜாதிப் பிரிவுகளுக்கு அப்பால் மனித சமத்துவத்தையும், தனி மனித மரியாதையையும் காப்பாற்றுவதற்காக இறுதிவரை பாடுபட்டவர் என்று கூறிவிட்டு, அடுத்து ஒரு வாக்கியத்தில் தம்முடைய மத உணர்ச்சியோடு கூடிய முத்திரையை பதித்தார். இந்த ஜாதி முறை அதை அடிப்படையாகக் கொண்ட சமுதாய அமைப்பு _ மனிதர்களால் கற்பிக்கப்பட்டது. சமய நெறிக்கும் வேத நெறிக்கும் இந்த ஜாதி முறை அந்நியமானது.
சாத்திரத்தின் பெயராலும், சடங்குகளின் பெயராலும், இந்து மதத்தின் பெயராலும் காலம்காலமாக காப்பாற்றப்பட்டு வருகிற, ஜாதி முறையாகிய வஞ்சக ஏற்பாட்டை, மத நெறிகளில் காலூன்றி நின்று குறிவைத்துத் தாக்கும் அறிவாண்மை வீரத்தை அதிபர் காட்டியிருக்கிறார். இதன் மூலம் அதிபர் தமது சமயப் புலமையையும் தெளிவையும், வெளிப்படுத்தியிருக்கிறார். சிறப்புரையின் இறுதியில் கஞ்சத்தனம் இல்லாத தாராளமான புகழுரையைப் பெரியாருக்கு அவர் சொரிந்தார். பெரியார் ஏழை, எளியவர்களின் தோழராக விளங்கியவர். அடித்தளத்து மக்களை, ஒடுக்கப்பட்ட மக்களை உளமார நேசித்தவர். அவர்கள் உரிமை வாழ்வு பெறுவதற்காக தமது வாழ்நாளில் பெரும் பகுதியை செலவிட்டார். அது மடடுமல்ல விரிந்த இதயமும், மனிதாபிமானமும் செறிந்த சீர்திருத்தவாதி.
எளிமை, நாணயம், சுய சிந்தனை ஆகிய மூன்றும் அவருடைய பொது வாழ்வின் அணிகலன்கள் என்ற புகழாஞ்சலியை அதிபர் தெரிவித்தார். இறுதியில், பெரியார் நடத்தி வந்த இலட்சியப் போராட்டத்தின் தனி அழகை ஒரே வாக்கியத்தில் விளக்கினார்.
10 நிமிட பேச்சில் தமிழர் தளபதி புரிய வைத்த பெரியாரிசம்
பெரியார்_ஜாதி அமைப்புக்களைச் சாடிய பொழுது தனிப்பட்ட முறையில் பிராமணர்கள் எனப்படுவோர் மீது பகைமை பாராட்டியதில்லை. ஆனால், அதே சமயத்தில் பிராமணீயத்தைக் கடுமையாக எதிர்த்தார். பெரியாரின் கொள்கைகளின் சாரத்தை இவ்வளவு நுட்பமாகவும், சூசகமாகவும் இன்னொரு தலைவரால் பேசமுடியுமா என்ற கேள்வியை எழுப்பக்கூடியவிதத்தில் ஜெயில்சிங்கின் சிறப்புரை அமைந்திருந்தது. இந்த விழாவின் துவக்கத்தில், அதிபரை வரவேற்றபொழுது ஆசிரியர் கி.வீரமணி நெகிழ்ச்சியோடு கூறிய உபசரிப்புக்கு, தாம் மிகவும் பொருத்தமே என்பதை நிரூபிக்கத்தக்கதாக அதிபரின் உரை அமைந்துவிட்டது.
பிறப்பில் பிற்பட்ட வகுப்பைச் சார்ந்தவராகவோ அல்லது தாழ்த்தப்பட்டவராகவோ ஒருவர் இருந்துவிட்டால், அவருடைய நினைவில் சுரீலென தைப்பது பெரியாரின் சமுகப் புரட்சிக் கருத்துகளே. ஒரு தடவை அவருடைய சிந்தனைகளைப் பிற்பட்டவர்கள் – நெஞ்சகத்தே வாங்கிக் கொண்டால் போதும். அடுத்த கணமே அவர்களுடைய உள்ளத்தில் பெரியாரிசம் கருக்கொண்டுவிடும். அதிபர் ஜெயில்சிங் உட்பட விழாவில் சொற்பொழிவாற்றிய எல்லாத் தலைவர்களும், சமுதாயத்தின் அடித்தளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால். அவர்களுடைய உரைகளில் செயற்கைப் பூச்சு இல்லாமல் – இயற்கையான எண்ணங்கள் பொங்கி வழிந்து நுங்கு நுரையுடன் வெளியாயிற்று.
வரவேற்புரையின்போது ஆசிரியர் கி.வீரமணி அதிபரை நோக்கி, “இந்தியா முழுவதிலும் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் பெருமைக்குரிய தலைவராக இருந்து வருகிற தங்களுக்குத் தாயகம் வடமாநிலம் மட்டுமல்ல; உங்களின் இரண்டாவது தாய்வீடு தமிழ்நாடு ஆகும்’’ என்று கூறியபோது அதிபர் முறுவல் செய்தார். பின்னர் நிகழ்த்திய உரையின் மூலம் தமிழகத்தை இரண்டாவது தாய் வீடாக கொள்வதற்கு தமக்கு உரிமை இருப்பதாக ஜெயில்சிங் நிரூபித்துக் காட்டினார்.
எழுச்சிமயம்
அதிபர் ஜெயில்சிங் ஒளிவுமறைவு இல்லாமல் சுரந்து பொங்கி வருகின்ற உணர்ச்சியோடு நிகழ்த்திய சிறப்புரை, மேடையில் வீற்றிருந்த எல்லாத் தலைவர்களின் இதயத்தையும் வருடிவிட்டது. விழா மண்டபமே உணர்ச்சிமயமாக காட்சியளித்தது. அந்த உணர்ச்சிக் கனலைஅப்படியே பிரதிபலிக்கக் கூடிய வகையில் அமைந்திருந்தது _ இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பல நாட்களாக நன்கு திட்டமிட்டு அரும்பாடுபட்டு செய்து முடித்த சந்திரஜித் (யாதவ்) நிகழ்த்திய முழக்கம்.
இராமாயணத்திலே இராவணன் மகனான இந்திரஜித் அலாதியான போர் வீரன். சாகசங்களையும், சாதுரியத்தையும் ஆயுதத்தில் இழைத்துப் போரிடத் தெரிந்தவன். இதன்மூலம் ராம_இலக்குவர்களைத் திணறடித்தவன். இந்த சந்திரஜித் யாதவ் அரசியல் களத்தில் தான் ஒரு நவீன இந்திரஜித் என்பதை நிரூபித்தார். இவருடைய உரையில், காரண காரிய அடிப்படையில்அமைந்த அபத்தமான தர்க்க வாதங்கள் துப்பாக்கி ரவை குண்டுகள்போல வெடித்தன.
தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்து வந்ததைப்போல வடபுலத்து சமுதாயம் இப்பொழுதும் இருந்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற கும்பமேளா என்ற மகாமகம் வடநாட்டில் மதத்தின் பெயரால் தலைவிரித்தாடுகிற கண்மூடித்தனமான, மூடநம்பிக்கைகளை படம் பிடித்துக் காட்டியது. ஜாதிக் கொடுமையில் சிக்கித் தவிக்கின்ற வடபுலத்து மக்களுக்கு பெரியார் என்ற நிழலின் அருமை நன்றாக புரிகிறது.
இந்த உண்மை சந்திரஜித் யாதவ் நிகழ்த்திய அனலும், கனலும் அறிவுக்கூரும் இழைந்தோடிய உணர்ச்சிமயமான உரையில் வெளிப்பட்டது. இவர் இளந்தலைமுறையைச் சேர்ந்த பழுத்த அரசியல் உள்ளம் கொண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்.
பண்டித நேருவினால் ஈர்க்கப்பட்டு காங்கிரசில் சேர்ந்தவர். 1969இல் இந்திராகாந்தியால் சிண்டிகேட் என்ற பட்டம் சூட்டப்பட்ட காங்கிரசின் முதுபெருந் தலைவர்களின் அணிக்கும், இந்திரா காந்திக்கும் இடையே நடைபெற்ற பலப்பரீட்சையில் இந்திரா காந்தியின் முன்னோடும் பிள்ளையாக செயல்புரிந்த இளந்துருக்கியர் என்ற பட்டத்தைக் கொண்ட இடதுசாரி வீரர்களில் இந்த சந்திரஜித்தும் ஒருவர். காலப்போக்கில் இந்திராவின் உள்மனதை புரிந்து கொண்டதால் காங்கிரசை விட்டு வெளியேறி வந்தவர். முன்பு இந்திராகாந்தி ஆட்சியின் போது மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். இப்பொழுது ‘ஜனவாடி’ என்ற புதிய கட்சியை நடத்தி வருகிறார்.
ஜாதி ஒழிப்பு _ சமூகநீதி _ சோஷலிசம் ஆகிய மும்முகப்பு கொள்கையைக் கொண்ட இந்தக் கட்சி, வடபுலத்து பிற்படுத்தப்பட்ட, வகுப்புக்களுக்கிடையில் வேர்விட்டு வருகிறது.
இந்திய சமுதாயத்தின் ஜாதிக் கொடுமைகளுக்கு _ வகுப்புவாதப் பிணிகளுக்கு பெரியாரிசமே அருமருந்து என இந்த சந்திரஜித் மனமார கருதுகிறார்.
பெரியாரிசத்தின் மூலம் _ இந்திய நாடு முழுவதிலும் பரவலாக வசித்து வருகிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களையெல்லாம் ஒன்று திரட்டி சமுதாய புரட்சிக்கு பக்குவத்தை உண்டாக்கும் அரசியல் சக்தியாக மாற்ற முடியும் என்றும் _ இந்த சந்திரஜித் திடமாக நம்புகிறார்.
இவருடைய நெஞ்சகத்தை பெரியார் ஆட்கொண்டுவிட்டிருக்கிறார் என்பதை அவருடைய நா வெளிப்படுத்தியது. பெரியாரிசத்தில் தோய்ந்து ஊறிய மனத்தவருக்கு மட்டுமே எழக்கூடிய சில அபூர்வ கருத்துக்களை அற்புதமாக விழா மேடையில் எடுத்து வைத்தார்.
இந்திய _ சமுதாய மறுமலர்ச்சி இயக்கத்தில் பெரியார்இராமசாமியின் பெயர் ஒளிவிட்டு பிரகாசிக்கக் கூடியது. அவா கண்ட சுயமரியாதை இயக்கம் சமுதாய உயர்வு தாழ்வை சாதிமுறைத் தீமைகளை _ தீண்டாமையை எதிர்த்து நடத்திய போராட்டத்தை _ எதிர்கால வரலாறு கையேந்தி ஏற்றுக்கொள்ளும்.
அது மட்டுமல்ல, நிர்வாகத் துறையில்அடிமைப்படுத்தப்பட்ட _ பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் அவர்களுக்கு உரிய உரிமையைப் பெறுவதற்கு அவர் நடத்திய போராட்டம் மிகப் பெரிய வரலாற்று சாதனை என்றார் சந்திரஜித்.
அடுத்து _ பெரியாரைப் பற்றி வடபுலத்தில் இவ்வளவு காலம் செய்யப்பட்டு வந்துள்ள விஷமப் பிரசாரத்தை தவிடுபொடியாக்கினார்.
“பெரியார் சமுக சீர்திருத்த இலட்சியங்களில் காட்டிய தீவிரத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் காட்டவில்லை என்ற கருத்துக்கு அலங்காரம் செய்து உலவவிட்டிருக்கிறார்கள்.
இது உயர்ஜாதி சுயநலக் கும்பலால் இட்டுக்காட்டி உலவ விடப்பட்ட தவறான விஷமப் பிரச்சாரம் ஆகும். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னே பிராமணர்கள் கற்பித்த உயர்வு தாழ்வுகளை, ஜாதி முறையை, சமுக அநீதி அமைப்பை மாற்றி அமைக்காவிட்டால் _ இந்திய மக்கள் மானத்துடனும் கண்ணியத்துடனும் _ சம உரிமையுடனும் வாழக்கூடிய புத்தம் புதிய சமுதாய அமைப்பை உருவாக்க முடியாது என்று பெரியார் கருதினார்.
எனவே, சமுதாயப் புரட்சி இலட்சியத்திற்கு அவர் முதலிடம் அமைத்தார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத மேல்ஜாதியினர் வேண்டுமென்றே இத்தகைய விஷமப் பிரசாரத்தை செய்து வந்திருக்கிறார்கள்’’ என்று சந்திரஜித் கூறியபோது விழா மண்டபமே அதிரும்படியான ஆரவாரம் எழுந்தது. சமுக நீதியை சமுதாய சமத்துவத்தை நிலைநாட்ட எல்லா முனைகளிலும் அறிவார்ந்த போராட்டத்தை ஓய்வு, ஒழிச்சல் இல்லாமல் நடத்திய ஒரே தலைவர் பெரியாரே என்று முழக்கம் செய்தார். இந்தியாவிலேயே தமிழ்நாடு முற்போக்கு மாநிலமாக பல ஆண்டுகளுக்கு முன்பே விளங்க முடிந்தது என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கமே.
ஒரே வரியில் கூறினால்இன்றைய தமிழ்நாடு பெரியார் உழைப்பால் புதிய வடிவம் எடுத்த ஒன்று, தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் _ தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் 68 சதவிகித இடங்கள் ஒதுக்கப்படுகிறதென்றால் அதற்கும் தந்தை பெரியாரின் பெருந்தொண்டே காரணம் என்றும் சந்திரஜித் கோடிட்டுக் காட்டினார்.
முத்தாய்ப்பு
இறுதியில் தம்முடைய தெளிவுரையின் முத்தாய்ப்பு போல் ஓர் அருமையான கருத்தைக் கூறினார். பெரியாருடைய கொள்கைகளின் முக்கியத்துவம் _ இந்தியா முழுவதும் பரவலாக வாழ்கின்ற சமுதாய ரீதியாக பலவீனப்பட்டுக் கிடக்கும் மக்களால் மேன்மேலும் உணரப்பட்டு வருகிறது.
அவருடைய போராட்டங்கள் அனைத்தும் சமுதாய அடிப்படையில் அழுத்தப்பட்டுக் கிடந்து வந்துள்ள 85 சதவிகித இந்திய மக்களுக்கான போராட்டம். காலாகாலமாக உரிமையிழந்து, பிற்பட்டு கிடந்து வந்துள்ள இந்த மக்களுக்கு தன்மானத்தையும், சமுக நீதியையும், சுயகவுரவத்தையும் மீட்டுத் தருகிற போராட்டமாகும். இதன்மூலம் பெரியார் என்றும் வாழ்கிறார் என்று முழக்கமிட்டார் சந்திரஜித் யாதவ்.
ஆனந்த கவுசல்யானை
இதே விழாவில் அறிவார்ந்த ஆய்வுரையை நிகழ்த்திய பெருமை, உலகப் புகழ் பெற்ற பவுத்த சமய பேரறிஞராகிய பேராசிரியர் ஆனந்த கவுசல்யாயனையே சாரும். சாதியின் பெயரால் உயர்வு_தாழ்வுகள் கற்பிக்கப்பட்டுள்ள நாடு இது. உயர்சாதிக்காரர்கள் மட்டுமே ஏகபோக வாழ்க்கை நடத்துவதற்கும் மற்றவர்கள் அனைவரும் உரிமை இழந்து காலத்தை ஓட்டவும் வழிவகை செய்கிற சமுதாய கட்டுக்கோப்பைக் கொண்ட நாடு இது.
இந்த நாட்டின் அரசியல் அமைப்புகள் பலவும் மேல்ஜாதிக்காரர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவை. மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள். ஒரே எடை உடையவர்கள் என்ற மனித நீதியை வலியுறுத்தும் பவுத்த நெறிக் கொள்கைகளுக்கு எதிரானது இந்து சமுதாயக் கட்டுக்கோப்பு. மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு கற்பிக்கும் ஜாதி முறையை எதிர்த்து, காலம் முழுவதும் போராடிய பெரியார், மனித சமுதாய சமத்துவத்துக்கு உழைத்த மாபெருந் தலைவர் எனப் புகழாரம் சூட்டினார்.
இந்த விழா நடந்து முடிந்த பிறகு, வடபுலத்தில் மக்களிடையே புதிய விழிப்புணர்ச்சி ஏற்படத் துவங்கியிருக்கிறது. பிற்பட்ட வகுப்பைச் சார்ந்த தலைவர்களெல்லாம் பெரியாருடைய சிந்தனையைக் கொண்ட நூல்களை வாங்கிப் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அடுத்த ஓராண்டுக்குள் வடபுலத்து இளைஞர்கள் மத்தியில் பெரியாரிஸம் பரவுவதை இனி எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது. இந்த விழா நடைபெறாமல் தடுத்துவிட உயர்ஜாதி வட்டாரங்கள் எவ்வளவோ முயன்று பார்த்தன.
அந்த முயற்சி பலிக்காததால் _ இந்த விழாவுக்கு கனம் கூடிவிடாமல் தடுக்கும் நோக்கத்தோடு, அதிபர் ஜெயில்சிங் விழாவில் பங்கேற்பதை தடுப்பதற்கும் சூசகமான காரியங்கள் நடைபெற்றன.
கடைசியில் இந்த முயற்சியும் வெற்றி பெறாது போயிற்று. இந்த விழாவை கங்கணம் கட்டிக்கொண்டு நடத்திய பெருமை, செயல் வீரரான சந்திரஜித் யாதவையே சாரும் என்ற போதிலும் _ பின்னணியில் சூத்திரதாரியாக நின்று காரியங்களை ஓசைப்படாமல் செய்தவர் ஆசிரியர் கி.வீரமணியே.
இதன்மூலம் பெரியார் வடமாநிலங்களுக்கு, குறிப்பாக வடபுலத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ‘ஓகோ’ என்ற முறையில் அறிமுகம் செய்யப்படுகிறார். இதன் விளைவாக காலக்கிரமத்தில் தேசிய அரசியலின் வண்ணம் புரட்சிகரமாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது.’’ _ என்று சிங்கப்பூர் ‘தமிழ் முரசு’ எழுதியிருந்தது.
(நினைவுகள் நீளும்…)