அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (41) : மலைகள் பேசுமா? சூரியனை மலை தடுக்குமா?

ஏப்ரல் 1-15 2019

சிகரம்

“விந்திய மலை, மனத்திற்கு இனிய மரங்களைக் கொண்டதாகவும், பலவித மிருகங்கள், பறவைகள் வாழும் இடமாகவும் இருந்தது. அது மலைகளிலேயே மிகுந்த சிறப்பு வாய்ந்ததால் அதன்மீது தேவர்கள் தேவ கன்னியர்களுடன் மகிழ்ந்திருந்தனர்.

ஒரு சமயம் நாரத முனிவர், தன்னை நோக்கி வருவதைச் கண்ட விந்திய மலை எழுந்து அவர் முன் வணங்கி உபசரித்து, “நாரத மகரிஷியே! தாங்கள் வந்தால் ஏதாவது விசித்திரமான செய்திகளைச் சொல்லாமல் செல்ல மாட்டீர்கள்!’’ என்று கேட்டது.

நாரதரும், “விந்தியமே! நான் மேரு மலை மன்னனைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். அவனுக்குத்தான் எவ்வளவு இறுமாப்பு. அவன்மீதுதான் கைலாய மலை இருக்கிறதாம். அவன் மகளான பார்வதி தேவியைத்தான் சிவபெருமான் மணந்து கொண்டிருக்கிறாராம். அவனைச் சுற்றித்தான் சூரியனும் மற்ற நவக்கிரங்களும் உலவுகிறார்களாம். ஆகவே அவன், தான்தான் உலகிலேயே உயர்ந்தவன் என்னும் அகந்தை கொண்டிருக்கிறான்’’ என்று கூறிவிட்டுச் சென்றார்.

அதைக் கேட்டதும் விந்தியமலை, “நானும் மேருமலையைப் போலப் பலசாலிதான். என்னகத்தே பலமலைகளைக் கொண்டிருக்கிறேன். தேவர்களும் கின்னரரும் கிம்புருடர்களும் பல மகரிஷிகளும் என்மீது தவமிருந்திருக்கிறார்கள். அப்படியிருக்க என்னைவிட அவன் எப்படி உயர்ந்தவனாவான்? சூரியன் மற்ற கிரகங்களோடும் நட்சத்திரங்களோடும் அவனை வலம் வருகிறான் என்பதனால்தானே அவன் இறுமாந்திருக்கிறான். இன்று சூரியன் இந்த வழியாக வரட்டும், அவன் மேருவின் பக்கம் செல்லாமல் தடுத்து, அவன் செருக்கை அழிக்கிறேன்!’’ என்று முடிவு கட்டிக்கொண்டு, வானளாவி உயர்ந்து நின்றது.

சூரியதேவன் வழக்கம்போல்தனது ரதத்திலேறி அவ்வழியாக வந்தான். அவன் குதிரைகள் மேலும் விரைந்து செல்லாமல் தத்தளித்தன. அதைக் கண்ட அவன், தனது சாரதியான அருணனிடம் விவரம் கேட்டான். அதற்கு அருணன், “ஐயனே! மேருவோடு பொறாமை கொண்டு இந்த விந்தியமலை உங்களை மேலும் செல்லவிடாமல் உயர்ந்து சென்று தடுக்கிறான்’’ என்று கூறினான்.

சூரியன், “இது என்ன விதியின் செயல்! இராகுவினால் நான் விழுங்கப்பட்டாலுங்கூட என் பயணம் தடைப்படவில்லையே. இப்போது நான் எவ்வாறு தொடர்ந்து எனது பணியைச் செய்வேன்!’’ என்று கூறி மனம் வருந்தினான். அவன் பயணம் தடைப்பட்டதால் மூன்றுலங்களிலும் எல்லாச் செயல்களும் தடைப்பட்டன. உயிர்கள் நலிவுற்றன. சூரிய ஒளி ஒரு பக்கத்திலேயே வீசியதால் அதன் வெப்பத்தைத் தாங்க மாட்டாமல் சிலர் எரிந்துவிட்டார்கள்.

அகஸ்தியர் தமது காசி வாசம் முடிவு பெற்றது, தெய்வ விருப்பத்தின்படிதான் தமக்குப் புண்ணிய இடமான காசி மாநகரை விட்டுச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எற்பட்டது என எண்ணி நொந்தார். பின்பு அவர், தம் மனைவி லோபமுத்திரையை அழைத்துக்கொண்டு தெற்குத் திசையை நோக்கிப் பயணமானார். வழியில் விந்தியமலை வானாளாவி நிற்பதைப் பார்த்து அப்படியே நின்றார். விந்தியமலை அவர் முன்னே வணங்கியது. அகஸ்தியர், “விந்தியனே! நான் தெற்கே செல்ல வேண்டும். நீ இப்படி வழியில் அடைத்து நின்றால், எவ்வாறு நான் செல்ல முடியும்? என் ஒருவனுக்கே இவ்வளவு துன்பமென்றால் உன்னால் மூவுலகங்களுக்கு நேர்ந்திருக்கும் துயரங்களைச் சற்ற எண்ணிப் பார்!’’ என்று கூறினார். அதைக் கேட்டதுமே விந்திய மலையின் மமதை அழிந்தது. முன்பு அது இருந்த உயரத்துக்கு அது நிற்கவே, தடை நீங்கிச் சூரியப் பயணம் நிகழலாயிற்று.’’ (தேவி பாகவதம்)

இந்துமதம் கூறும் இந்தப் புராணக் கதையில் மூன்று செய்திகளை அது கூறுகிறது. 1. மலைகள் பேசும். 2. மலை தான் விரும்பும்போது தன்னை அளவில் பெரியதாக்கி வான்முட்ட உயர்ந்து நிற்க முடியும். 3. தேரில் வரும் சூரியனை மலை தடுத்து நிறுத்தியது.

இதில் ஏதாவது அறிவுக்கும் அறிவியலுக்கும் உகந்த கருத்து உள்ளதா?

அத்தனையும் அறிவுக்கும், அறிவியலுக்கும், உண்மைக்கும், நடைமுறைக்கும் எதிரான மூடக் கருத்துகள் அல்லவா?

மலை என்பது கல், மண், பாறை, மரம், செடிகளால் ஆனது. அது எப்படி பேசும்? பேச வேண்டும் என்றால் வாய், நாக்கு, மூளை, மொழி தெரிந்திருத்தல் வேண்டும். இதில் எதுவும் இல்லாத மலை பேசியது என்று கூறும் இந்து மதந்தான் அறிவியலுக்கு அடிப்படையான மதமா?

அடுத்து மலையென்பது மாற்றமடைய முடியாதது. அது எரிமலை வெடிப்பில் உருவாகக் கூடியது. அதன் அளவு தேய்ந்து குறையுமேயன்றி வளராது. உண்மை இப்படியிருக்க, மலை தன் உருவத்தை பல மடங்கு பெரிதாக்கி வான்முட்ட உயர்ந்து நின்று சூரியனையே தடுத்தது என்பது முட்டாள்தனமான உளறல் அல்லவா? அறிவுக்கும் அறிவியலுக்கும் எதிரானது அல்லவா? இப்படி மூடக்கருத்துகளைக் கூறும் இந்து மதம் அறிவியலுக்கு அடிப்படையா?

கிழவன் மீண்டும் இளைஞனாக மாற முடியுமா?

ஸௌபரி என்ற முனிவர் வெகுநாட்கள் யமுனா நதியில் மூழ்கித் தவம் செய்துவந்தார். ஒருசமயம் நீரில் வசிக்கும் ஆண் மீன் ஒன்று பெண்ணுடன் விளையாடிச் சிற்றின்ப லீலைகள் செய்வதை அவர் கண்டார். உடனே அவருக்குத் தாமும் அவ்வாறே இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டது. மாந்தாதா என்ற சூரிய வம்சத்து மன்னனை அணுகித் தமக்கு ஒரு கன்னிகையை மனைவியாக அளிக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு மன்னவன் ‘எனது புதல்விகளுள் எவள் உம்மை வரித்து மணம் செய்துகொள்ள விரும்புகின்றனளோ, அவளை உங்களுக்குத் தருவேன்’ என்றான். அப்பொழுது முனிவருக்குச் சிந்தை மேலிட்டது. ‘அரசன் எனது வேண்டுகோளை மறுத்துவிட்டான் என்றுதான் எண்ணவேண்டும். வயது முதிர்ந்து தோல் சுருங்கி மயிர் வெளுத்துத் தலைஆடும் கிழவனை எந்த மங்கை விரும்புவாள்! ஆகவே எனது தவ மகிமையினால் விண்ணுலக மாதரும்  கண்டு காமுறும் ரூபத்தை எய்துவேன்’ என்று தீர்மானித்தார். உடனே தன்னை கட்டழகு இளைஞனாக மாற்றிக் கொண்டார். அந்தக் கட்டழகனைக் கண்ணுற்ற ஐம்பது அரசிளங்குமரியரும் மயங்கி எல்லோரும் அவரை மணம் செய்துகொள்ள விரும்பினார்கள். ஒருவருக்கொருவர் ‘எனக்கு, உனக்கில்லை’ என்று சண்டை போடவே ஆரம்பித்துவிட்டனர். முனிவர் அனைவரையும் மணந்துகொண்டார்.

தம்முடைய யோகத் திறமையால் எல்லா போக சாதனங்களையும் வரவழைத்தார். சேவகரும் சேடியரும் நிறைந்த மாளிகைகளைச் சேமித்தார். அங்கு கொஞ்சும் கிளிகளும் வட்டமிடும் வண்டுகளும் வந்து கூடின. பூ நிறைந்த பூங்காவும் அலர் மலிந்த தடாகங்களும் எண்ணற்றிருந்தன. ‘உணவும் உடையும் மனத்துக்கு இசைந்திருந்தன. இந்த வைபத்தைப் பார்த்த மாந்தாதா மன்னனே திகைத்துத் தம் செல்வத்தைக் குறைத்துக் கருதினார். ஆனால், இவ்வளவு இன்பங்கள் ஒன்றுகூடி அனுபவித்தும் ஸௌபரி முனிவர் நிம்மதி அடையவில்லை. அவருடைய ஆசை அக்னியில் வார்த்த நெய்யென மூண்டு வளர்ந்தது.’’ என்கிறது இந்து மதம். (பாகவதம்)

இந்து மதம் கூறும் இந்தக் கதையின் கருத்துகளின் சிறிதேனும் அறிவுக்கு உகந்தது உள்ளதா? நரைத்து, தோல் சுருங்கி, நடுக்கமுறும் கிழவன் மீண்டும் தன்னை கட்டழகுக் காளையாக, இளைஞனாக மாற்றிக் கொண்டான் என்பது அறிவுக்கு, அறிவியலுக்கு உகந்ததா?

மேலும், அவன் விரும்பியபடியெல்லாம்  மாடமாளிகை, நவரத்தினங்கள், ஏராளமான பொருட்களெல்லாம் வருமா? நினைத்தாலே எல்லாம் வரும் என்பது அறிவிலுக்கு உகந்த செய்தியா?

இப்படி அறிவுக்கும், அறிவியலுக்கும் எதிரான மூடச் செய்திகளைக் கூறும் மூடமதமான இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையான மதமாக இருக்க முடியும்?

(சொடுக்குவோம்….)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *