கவர் ஸ்டோரி : திராவிடர் கொள்கை [Dravidian Manifesto] அறிக்கையை பிரகடனப்படுத்தி பாசிச பா.ஜ.க ஆட்சியை அகற்றிட வியூகம் வகுத்த திராவிடர் கழக சமுகநீதி மாநாடு!

மார்ச் 1-15 2019

மாநாட்டின் முகப்புத் தோற்றம்

மஞ்சை வசந்தன்

23.02.2019 காலை தஞ்சை திலகர் திடலில், தரணியெங்கும் தமிழ் ஓசை என்னும் பொருளில் திருத்தணி டாக்டர் பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசையுடன் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் மாநாடு தொடங்கியது.

வரவேற்புரை

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

தலைவரை மொழிதல்

மாநாட்டுத் தலைவரை முன்மொழிந்து திராவிடர் கழக  பொதுச்செயலாளர்  ஒரத்தநாடு குணசேகரன், குவைத் செல்லபெருமாள் ஆகியோர் பேச, தஞ்சை மண்டல திராவிடர் கழக தலைவர் வெ.ஜெயராமன், தஞ்சை மண்டல தி.க. செயலாளர் அய்யனார், மும்பை தி.க. தலைவர் பெ.கணேசன், பட்டுக்கோட்டை ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், குடந்தை கு.கவுதமன் ஆகியோர் வழிமொழிந்து பேசினர்.

மாநாட்டு பந்தலுக்குள் கொடியுடன் நுழையும் தமிழர் தலைவர்

கொடி ஏற்றம்

திராவிடர் கழகக் கொடியை திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஏற்றி வைத்து, “திராவிட இனத்தின் மீட்சிக்கான வழியும், செயல் திட்டங்களும் என்ன என்பதற்கான மாநாடு இது. ஆட்சிக்குச் செல்லாத இயக்கம் என்றாலும் ஆட்சியைத் தீர்மானிக்கின்ற, அதன் பொருட்டு மக்களுக்கு வழிகாட்டுகின்ற அதற்கான பிரச்சாரம் செய்கின்ற இயக்கம் திராவிடர் கழகம்.

சமூகநீதியே முதன்மை இலக்கு. சட்டத்திருத்தம் செய்ய வைத்தவர் பெரியார். 69% இடஒதுக்கீட்டை உறுதிசெய்தவர் தமிழர் தலைவர். 10% பொருளாதார இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டுக்கு எதிரானது. இந்தச் சட்டத் திருத்ததினை  இந்தியாவிலேயே முதன்முதலில் எதிர்த்தவர் தமிழர் தலைவர்’’ என்று உரையாற்றினார்.

கண்காட்சித் திறப்பு

சமூகநீதி வரலாற்றுக் கண்காட்சியை டாக்டர் கவுதமன் தொடங்கி வைத்து, “இன்றைக்கு பிற்படுத்தப் பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் கல்வி, வேலைவாய்ப்புகளில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு பெரியாரின் போராட்டங்களும் உழைப்பும்தான் காரணம் என்று கூறினார்.

மாநாட்டுத் திறப்புரை

திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள், “ஜாதி ஒழிப்புக்குப் பாடுபடும் இயக்கம், இன்றைக்கு சாதியால் அரசியல் ஆதாயம் அடையும் அணிகள் கூடிக்கொண்டே வருகின்றது. இந்த கேடு ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்பதாக நாம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

‘நீட்’ தேர்வு _ தீர்மானத்தைக் கம்மென்று போட்டுவிட்டு, பா.ஜ.க.விற்குத் துணை நிற்கின்ற தமிழர் விரோத அரசு அ.தி.மு.க. அரசு. அதனை இயக்குவது பி.ஜே.பி அரசு. இவை ஒழிக்கப்பட வேண்டும்’’ என்று மாநாட்டு திறப்புரையாற்றினார்.

படத்திறப்பு:

தந்தை பெரியார் படத்தை சுப.வீரபாண்டியன் அவர்களும், அன்னை நாகம்மையார், மணியம்மையார் படத்தை பெரியவர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்களும், சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தை பொத்தனூர் க.சண்முகம் அவர்களும் திறந்துவைத்தனர்.

“நாகம்மையார் அவர்கள் பெரியாருடன் இணைந்து போராடியவர். கள்ளுக்கடை மறியல் போராட்டத்திலும், வைக்கம் போராட்டத்திலும் பங்கு கொண்டவர்” என்று இராஜகிரி தங்கராசு அவர்கள் உரையாற்றினார்.

முதல் நாள் திறக்கப்பட்ட தலைவர்களின் படங்கள்

இரண்டாம் நாள் திறக்கப்பட்ட தலைவர்களின் படங்கள்

சுப.வீரபாண்டியன் அவர்களின் உரை: தொண்டர்களின் அன்பையெல்லாம் அள்ளியவாறு மறு கையில் கொடியுடன் மேடையேறியவர் தமிழர் தலைவர்.

தலைமுறைகளின் சங்கமமாய் திராவிடர் கழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. கருஞ்சட்டைக் கடலாய் இங்கு தோழர்கள் பெரியாரின் படத்தை திறந்ததன் மூலம் நான் வரலாற்றில் இடம் பெறுவதை பெருமையாக எண்ணுகிறேன்.

அரசியல் தளத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் எதிரிகள் இன்று இருக்கிறார்கள். நாம் அசைக்க முடியாத அளவிற்கு வளர்ந்திருக்கிறோம். அதே நேரத்தில் நம் எதிரிகளும் வளர்ந்து வருகிறார்கள். எதிரிகள் சூழ்ச்சியாய் வளர்வதோடு, நம்மவர்களை அணைத்து நம்மை வீழ்த்த சூழ்ச்சி செய்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் அணிகள் சரியாகப் பிரிந்து நிற்கின்றன. ஒரு பக்கம் மதவெறி, சாதி வெறி கூட்டணி. மறுபக்கம் அவற்றை வீழ்த்தும் அணி.

தி.மு.க. கூட்டணி அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவது. தலைமுறைக்கு ஏற்பட்ட கேடுகளை போக்கும் கூட்டணி.

‘திராவிடத்தை ஒழிப்போம்’ என்று ஒரு கூட்டம் புறப்பட்டிருக்கிறது.

ஆசிரியர் மாநாட்டு தலைமையுரையாற்றுகிறார்

திராவிடம் என்றால் சமூகநீதி, பார்ப்பன எதிர்ப்பு. சூரியனையும், இருட்டையும் ஒருசேர ஆதரிப்பது சரியாகுமா? இருட்டு என்பது பாசிச அணி.

நாம் ஏந்த வேண்டிய ஆயுதம் திராவிடம். அதை எதிரியே தீர்மானித்து நமக்கு அளித்துள்ளார்கள்.

எதிர்காலத்தில் தமிழ்ப் பெயர்கள் இடப்பட வேண்டும். சங்க இலக்கியத்தில் ‘அம்மா’, ‘அப்பா’ என்ற சொல் இல்லை என்பதால் அது இல்லை என்று ஆகிவிடுமா?

திராவிடம் வரலாற்றில் சாதித்தது என்ன என்பதே முக்கியம். ஆரிய பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பே சமூகநீதி காப்பு. திராவிடர் இயக்கம் உலகளாவிய இயக்கம். பிறர் அடையாளங்களை அழிப்பவர்கள் அல்ல. பிறர் ஆதிக்கத்தை ஏற்பவர்களும் அல்ல.

திராவிட இயக்கத்தின் திட்டங்களைத் தமிழர் தலைவர் தருவார் என்று எதிர்பார்த்து என் உரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்.’’ என்று தந்தை பெரியார் படத்தினைத் திறந்து வைது எழுச்சியுரை ஆற்றினார்.

மாநாட்டு நோக்கங்கள் பற்றி தமிழர் தலைவர் உரை:

இந்திய வரலாற்றில் முக்கியமான காலகட்டம் இது. பெரியாரின் சுயமரியாதை மாமருந்து உலகம் முழுவதும் மனிதப் பிறவியின் ஜாதி, பேத நோய்களுக்கு அருமருந்தாகும்.

கடந்த மாநில மாநாட்டிற்கும் இந்த மாநில மாநாட்டிற்கும் இடையே எத்தனையோ இழப்புகள். அதில் மிக முக்கியமான இழப்பு டாக்டர் கலைஞர் அவர்களின் இழப்பு. ஜாதி ஒழிப்பின் ஒரு பகுதியை அண்ணா செய்தார்; அதன்  மறு பகுதியைச் செய்தவர் மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் அவர்கள். அவர் உடலால் மறைந்தாலும் நம் உள்ளத்தில் நிறைந்து வாழ்ந்து வருகிறார்.

“பாராட்டிப் பேசி வந்த பழைமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்’’ என்று அன்றைக்கே பாடியவர்.

தன் ஆட்சியே போனாலும் தந்தை பெரியாருக்கு அரசு மரியாதையை செய்தே தீருவேன் என்று உறுதியுடன் நின்று செய்தவர்.

கலைஞர், சுயமரியாதைச் சுடர் ஒளிகள், மறைந்த பாதுகாப்பு வீரர்கள் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

ஜனநாயகம் தொடர வேண்டுமா? அல்லது பாசிச ஆட்சி தொடர வேண்டுமா? என்ற பெரிய வினாவிற்கு விடை காணவேண்டிய நேரத்தில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெருகிறது.

சமூகநீதிக்கு சாவு மணி அடிக்கும் மதவாத பா.ஜ.கவின் பாசிச செயல்பாடுகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் கூட நிலையாக சுயமாக செயல்பட முடியாத நிலை.

தமிழகத்தில் அடிமையாட்சி; திராவிடக் கட்சிகளோடு _ உயிர் உள்ளவரையும் கூட்டு சேரமாட்டேன் என்றவர் அ.தி.மு.க.வோடு சேர்ந்துள்ளார்.

“மோடி தலைமையில்தான் கூட்டணி’’ என்று அச்சுறுத்தி கட்டாயப்படுத்தியுள்ளனர் என்ற செய்தி இந்து ஏட்டில் வெளிவந்துள்ளது.

தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி. திராவிடர் கழகம் கைகாட்டும் அணியே தமிழுக்கும்; தமிழருக்கும்; தமிழ்நாட்டிற்கும் நலம் தரும். எனவே, அந்த அணிக்கு மக்கள் ஒட்டுமொத்த ஆதரவையும் தரவேண்டும்.

வருமான வரித்துறை மூலம் அ.தி.மு.க.வை ஆட்டிப் படைக்கிறார்கள்; அடிமைகள் ஆடுகிறார்கள். இன்றைய நிலையை விளக்கி தெளிவூட்டிய தமிழர் தலைவர் இறுதியில் “திராவிடக் கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டார். [முழு அறிக்கை 23, 24 பக்கங்களில் காண்க]

திராவிடர் கழக இளைஞரணியின் சீருடைப் பேரணி

கருத்தரங்கம்

தொடர்ந்து தீர்மான அரங்கம் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் 1:30 மணியளவில் மத்திய “பாசிச ஆட்சி ஒழிய வேண்டும் ஏன்?’’ என்னும் தலைப்பில் எழுச்சிக் கருத்தரங்கம் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையுரையாற்றினார். பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வரவேற்புரையாற்றினார். திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர்ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்கவுரையாற்றினார்.

முனைவர் அதிரடி அன்பழகன் ‘கலாச்சாரம்’ என்னும் தலைப்பிலும், பூ.சி.இளங்கோவன் ‘பார்ப்பன ஆதிக்கம்’ என்னும் தலைப்பிலும் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ‘பொருளாதாரம்‘ என்னும் தலைப்பிலும், தஞ்சை இரா.பெரியார் செல்வன் ‘மதச்சார்பின்மை’ என்னும் தலைப்பிலும், பூசை புலிகேசி ‘மாநில உரிமை’ என்னும் தலைப்பிலும், சே.மெ.மதிவதனி பாசிச என்னும் தலைப்பிலும், அஜிதன் ‘மூடநம்பிக்கை’ என்னும் தலைப்பிலும் உரையாற்றினர்.

கருஞ்சட்டைப் பேரணி

திராவிடர் கழகத்தில் பேரணி _ அதுவும் தஞ்சை என்றாலே தனிச் சிறப்புதான். பேரணி செல்லுவதற்கான நான்கு ராஜ வீதிகள் அதன் தனியழகே. மா மன்னர்கள் பவனி வந்த வீதிகளிலே வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் அவர்களின் “கருஞ்சட்டைக் கொள்கைச் சேனைப் படை பெருத்ததால், பார் சிறுத்ததோ!” என்று சொல்லும் வண்ணம் வீறு கொண்டு வீர நடை போட்டது.

சரியாக மாலை 5 மணிக்கு தஞ்சை இரயில்வே சந்திப்பு நிலையத்திலிருந்து பேரணி புறப்பட்டது. பேரணியை மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் கழகக் கொடி அசைத்து, உரையாற்றி பேரணியைத் தொடங்கி வைத்தார்.

பேரணி தஞ்சை இரயில்வே சந்திப்பில் தொடங்கி ஆற்றுப்பாலம் _ காந்தி சாலை (பெரியார் அண்ணா சிலை வழியாக) கீழவாசல் காமராசர் சிலை, ராஜபாளையம் கீழ ராஜவீதி, வடக்கு ராஜ வீதி, மேல ராஜவீதி வழியாக மாநாடு நடைபெற்ற திலகர் திடலை வந்தடைந்தது.

மாநாடு, பேரணியை ஒட்டி பேரணிப் பாதைகள் மட்டு மல்ல; நகரமெங்கும் கழகக் கொடிகளின் காடாகக் காட்சி அளித்தது. விதவிதமான சுவரொட்டிகள் மாநாட்டுக்குக் கட்டியம் கூறின. பேரணி கீழ்க்கண்ட வரிசைப்படி அணி வகுத்துச் சென்றது.

விளம்பர வண்டி, தப்பாட்டக் குழு, காவடியாட்டக் குழு, தீச்சட்டிக் குழு, பெரியார் பிஞ்சுகள் அணிவகுப்பு, சடையார் கோயில் கோலாட்டக் குழு, மகளிரணி பெரியார் சமூகக் காப்பாளர் அணி வகுப்பு, இளைஞரணி அணி வகுப்பு, திராவிடர் தொழிலாளரணி, வழக்குரைஞரணி பணி, திராவிட இயக்க சாதனை, விளக்க ஊர்திகள், பத்து மாவட்ட வாரியாகக் கழகத் தோழர்கள் அணி வகுப்பு என்று நூல் பிடித்தது போல இராணுவக் கட்டுப்பாடோடு பல்லாயிரக்கணக்கில் அணி வகுத்துச் சென்ற காட்சியைக் காண கண் கோடி வேண்டும்.

அச்சிட்டுக் கொடுக்கப்பட்ட 50 முழக்கங்களை மேற்கண்ட தோழர்கள் ஒலி பெருக்கி மூலம் எடுத்துச் சொல்ல, ஊர்வலத்தில் அணி வகுத்தோர் அவற்றைத் தொடுத்துச் சொன்னதும், தனிச் சிறப்பு.

மாநாட்டுக்கு வராத பொது மக்கள் அந்த முழக்கங்களைக் கேட்பதன் மூலம் திராவிடர் கழகத்தின் கொள்கை விளக்கத்தை அறிய முடிகிறது அல்லவா. சமூகநீதி, மதச் சார்பின்மை, ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு, மதவாத எதிர்ப்பு மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவுத் தொடுப்பு என்று தந்தை பெரியார் கோட்பாடுகள் ஒலி முழக்கங்களாக மக்கள் மத்தியில் போய்ச் சேர்ந்தன.

பேரணியில் பெரியார் பிஞ்சுகள்

மகளிர் தீச்சட்டி

பேரணியில் கழக மகளிரணியினரும், பாசறை அணி யினரும் அனாயாசமாக தீச்சட்டியைக் கைகளில் ஏந்தி “தீச்சட்டி இங்கே  _ மாரியாத்தாள் எங்கே?” என்று முழங்கி வந்த காட் சியைக் கண்ட _ கேட்ட பொது மக்கள், குறிப்பாக பெண்கள் மலைத்துப் போய் நின்றனர். பெண்கள்கூட இப்படியெல்லாம் தீச்சட்டி ஏந்தி, இத்தகைய முழக்கங்களைப் போடுவார்களா என்று அதிசயத்து நின்றனர்.

‘தீச்சட்டி’ ஊர்வலம்

அலகுக் குத்தி

முதுகில் அலகுக் குத்தி மாருதி ஆம்னி காரை இரு இளைஞர்கள் கடவுள் மறுப்பு முழக்கமிட்டு இழுத்து வந்த காட்சி _ இளைஞர் வட்டாரத்தை, மாணவர்களைச் சுண்டி இழுத்தது. சில இடங்களில் இளைஞர்களும் “கடவுள் இல்லை” என்று சத்தம் போட்டது தனிச் சிறப்பாகும்.

திருத்துறைப்பூண்டி நகர திராவிடர் கழகச் செயலாளர் நாகராசன், பாபனாசம் கழகத் தோழர் முத்து ராஜா ஆகிய இந்த இரு தோழர்களும்தான் மாருதிகாரை இழுத்து வந்த அந்த இரு இளைஞர்களுமாவார்கள்.

பெரியார் சமூகக் காப்பணி

பேரணியில் பொது மக்களைப் பெரிதும் கவர்ந்த முக்கிய அணி வகுப்பு _ பெரியார் சமூகக் காப்பணி அணி வகுப்பாகும். தோழர்கள் தஞ்சை இரா.பெரியார் செல்வன், அண்ணா. சரவணன், பொய்யா மொழி, விழுப்புரம் கார்வேந்தன் ஆகியோர் வழிகாட்ட நூறு இளைஞர்கள் தமிழ்க் கட்டளையை ஏற்று இராணுவ மிடுக்குடன் அணி வகுத்த அந்தக் காட்சி அனைத்துத் தரப்பினரையும் பெரிதும் கவர்ந்தது. தஞ்சை பறை முழக்கம், தப்பாட்டக் குழுவினர் மதுக்கூர் ஒன்றியம் சொக்கனூர் குழுவினரின் ‘பறை முழக்கம்’ சும்மா தூள் கிளப்பியது.

கறம்பக்குடி கழகத் தோழர் முத்து, சண்முகம் குழுவினரின் சிலம்பாட்டம் தனிச் சிறப்பே!

கூரிய அரிவாள் மீது ஏறி …..

முக்கூட்டுக்கு முக்கூடு பளபளக்கும் கூரிய அரிவாள்மீது ஏறி நின்று சிறுவர்களும், இளைஞர்களும் ‘கடவுள் இல்லை’, ‘கடவுள் இல்லவேயில்லை’ என்று கர்ச்சனை செய்த காட்சி மெய்ச் சிலிர்க்கக் கூடியதாகும். குறிப்பாக அறந்தாங்கி இரா. யோகராஜா, மா. சக்திவேல் ஆகியோர் இதனை மக்கள் கும்பல் கும்பலாக நிற்கும் இடங்களில் எல்லாம் செய்துகாட்டி அசத்தினர்.

பேரணியில் நடந்து வரும் ஒன்றரை வயது தளிர்

பெரியார் பிஞ்சுகளின் சிலம்பாட்டம்

கறம்பக்குடி முத்து குழுவினர் தாம் சிலம்பாட்டம் செய்ய முடியுமா! இதோ பாருங்கள் நாங்கள் என்று பெரியார் பிஞ்சுகளின் சிலம்பாட்டம் பலே! பலே!! மணப்பாறை பெரியார் பிஞ்சுகளின் இந்த சிலம்பாட்டத்தை வழி நடத்தியவர் ஆர். பாலமுருகன்.

தீர்மான அரங்கம்

கோலோச்சிய கோலாட்டம்

நமது பேரணி என்றாலே சடையார் கோயில் ஆசிரியர் நாராயணசாமி அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெறும் கோலாட்டமும் கொள்கைப் பாடலும் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே!

அது சிறப்பாகவே நடந்தது. அரியலூர் விஷ்ணு, செல்வக்குமார், செல்வராசு, எஸ். செல்லக்குமார் ஆகிய தோழர்கள் அலகுக் காவடி எடுத்து வந்து பகுத்தறிவு முழக்கங்களை முழங்கினர்.

பேரணியில் கழகத் தோழர்கள், குறிப்பாகப் பெண்கள் இருவர் இருவராக கொள்கை முழக்கமிட்டு அணிவகுத்த காட்சி தஞ்சை வாழ் மக்களுக்குப் புதிராகவேயிருந்தது.

பேரணியில் வந்தவர்கள் பல்லாயிரவர் என்றால் பார்த்த பொது மக்களோ பல்லாயிரவர் ஆவார். சனிக்கிழமை கடைகள் உண்டு. ஆதலால்  கடை வீதிகளில் வியாபாரிகளும் பணியாளர்களும், பொது மக்களும் ஆங்காங்கே கழகப் பேரணியின் பேரிகை முழக்கத்தையும், அணி வகுத்துச் சென்ற நேர்த்தியினையும் வெகுவாகக் கண்டு களித்தனர்.

மேலராஜ வீதி, மத்திய கூட்டுறவு வங்கி அருகில் அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் தமிழர் தலைவர் நின்று பேரணியைப் பார்வையிட்டார். பேரணியில் அணி வகுத்த கருஞ்சட்டைக் குடும்பத்தினர் தமிழர் தலைவரைக் கண்ட உற்சாக மிகுதியில் முழக்கமிட்டும், வணக்கம் தெரிவித்தும் வீறு நடை போட்டுச் சென்றனர். கழகத் தலைவர் அணி வகுத்துச் சென்ற தோழர்களின் அன்பு வணக்கத்தை ஏற்று பதிலுக்கு வணக்கம் தெரிவித்த வண்ணமே இருந்தார்.

மாலை 5 மணிக்கு தஞ்சை இரயில்வே நிலையத்திலிருந்து புறப்பட்ட கருஞ்சட்டைப் பேரணி இரவு 7மணிக்கு 5 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து மாநாடு நடைபெறும். அன்னை மணியம்மையார் நினைவு நூற்றாண்டு பந்தலை (திலகர் திடலை) சென்றடைந்தது.

பேரணி முடிந்த நிலையில், அன்னை மணியம்மையார் நூற்றாண்டு முன்னோட்டக் கருத்தரங்கம் தொடங்கியது.

திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அன்னை மணியம்மையார்அவர்களின்  அருங்குணங்கள், சிக்கனம், எளிமை, கொள்கையில் சமரசம் அற்ற தன்மை. நெருக்கடி நிலை என்னும் காட்டாற்றைக் கடந்து வந்த துணிவு, இராவண லீலாவை நடத்திய வீரத்தன்மைகளை வெகுநேர்த்தியாக ஆற்றொ ழுக்காக எடுத்து வைத்தார்.

 

பெரியார் சமுக காப்பு அணியின் இராணுவ அணிவகுப்பு

மாநாட்டுத் தலைமை உரை

திராவிடர் கழக மாநில மாநாட்டுக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

தந்தை பெரியார் மறைவு _ அன்னை மணியம்மையார் மறைவுகளுக்குப் பிறகு கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தலைவர் ஆசிரியர் மானமிகு  கி.வீரமணி அவர்கள் தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை நிலை நிறுத்திய சாதனையையும், மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்த 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றுத் தந்த பெருஞ்சாதனையையும் எடுத்துக் கூறினார்.

அன்னை மணியம்மையார்பற்றிய கலை நிகழ்ச்சிகள்

அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி திராவிடர் கழக மாநில மாநாட்டில் அவர்களைப்பற்றிய கலை நிகழ்ச்சி _ ஒளி _ ஒலிக் காட்சி 35 நிமிடங்கள் வெகுநேர்த்தியாக நடத்திக் காட்டப்பட்டன.

தொடக்கத்தில் சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகம்‘’ பற்றிய ஏற்பாடுகள், காட்சிகள் படம் பிடித்துக் காட்டப்பட்டன.

பெரியார் உலகத்தில் தந்தை பெரியார் சிலையின் உயரம் _ பீடத்தின் உயரம் _ அங்கு அமையவிருக்கும் பல்வேறு அரங்குகள் _ தற்போது அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகள்பற்றி 10 நிமிடங்கள் திரையிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அன்னை மணியம்மையார் _ எப்படியெல்லாம் தந்தை பெரியாரைப் பேணிக் காத்தார் _ கைவிடப்பட்ட பிள்ளைகளைத் தம் தோளில் போட்டு வளர்த்தார். இராவண லீலாவை வீரத்துடன் எப்படியெல்லாம் நடத்திக் காட்டினார் _ இயக்கத்தை எப்படி நடத்தினார் என்பன உள்ளிட்ட காட்சிகள் 35 நிமிடங்கள் நடைபெற்றன.

மாலை நிகழ்வில் கவிஞர் வைரமுத்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிறப்புரைக்குப்பின் தமிழர் தலைவர் சிறப்பான, செறிவான நிறைவரையாற்றினார்.

மறுநாள் காலை 8:30 மணிக்கு புரட்சிக்கவிஞர் கலைக்குழு பாவலர் பொ.இராஜூ, இராம.அன்பழகன், சு.சிங்காரவேலர், இரா.வீரத்தமிழன் குழுவினர் வழங்கும் ‘அறிவை விரிவு செய்’ பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் சமுக நீதி மாநாடு தொடங்கி நடைபெற்றது. காலை 10 மணிக்கு தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் வரவேற்புரையாற்றினார்.

மாநாட்டுத் தலைவராக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை முன்மொழிந்து பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி செயலாளர் எழுத்தாளர் மஞ்சை வசந்தன், புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, தென்மண்டல பிரச்சாரக் குழுத் தலைவா தே.எடிசன்ராஜா ஆகியோரும் வழிமொழிந்து திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், திராவிட விவசாய தொழிலாளர் கழக செயலாளர் இரா.கோபால், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், திராவிடர் தொழிலாளர் கழக பேரவை தலைவர் மோகன், கர்நாடக மாநில தலைவர் மு.ஜானகிராமன், மண்டலத் தலைவர் அரியலூர் காமராஜ், ஈரோடு பிரகலாதன்,கோவை க.கருணாகரன், ஆடிட்டர் சண்முகம் ஆகியோர் வழிமொழிந்தனர்.

சமுக நீதி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள்

தொல்.திருமாவளவன் உரை

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் மாநாட்டைத் திறந்துவைத்து உரையாற்றினார்.

படத்திறப்பு – தலைவர்கள் உரை

‘புரட்சியாளர் அம்பேத்கர்’ படத்தைத் திறந்துவைத்து பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து உரையாற்றினார். ‘அறிஞர் அண்ணா’ படத்தைத் திறந்துவைத்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா.அதியமான் உரையாற்றினார்.

‘கல்வி வள்ளல் காமராசர்’ படத்தைத் திறந்துவைத்து இந்திய சமுகநீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் உரையாற்றினார். ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர்’ படத்தைத் திறந்துவைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் எச்.காந்தராஜா சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில் தளபதி மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்

தீர்மான அரங்கம்

பகல் 12 மணிக்கு திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி தலைமையில் தீர்மான அரங்கில் வரலாறு படைக்கின்ற, சமுகநீதி வலியுறுத்துகின்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிற்பகல் 2 மணிக்கு கோவை நிமிர்வு கலைக்குழு வழங்கும் ‘பாரெங்கும் பறையின் முழக்கம்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பிற்பகல் 3 மணிக்கு ‘புரட்சிப் பூபாளம் படைப்போம்’ மகளிர் கருத்தரங்கம் திராவிடர் கழக மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி வரவேற்புரையாற்றினார்.

மாநில மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி தொடக்க உரையாற்றினார்.

‘திராவிடர் இயக்க மகளிர் தீரம்’ தலைப்பில் புதிய குரல் நிறுவனர் எழுத்தாளர் ஓவியா, ‘மனுதர்மத்தை எரித்தது-_ஏன்?’ தலைப்பில் தகடூர் தமிழ்ச்செல்வி, ‘33 விழுக்காடு இடஒதுக்கீட்டின் நிலை’. வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, ‘பெண்ணடிமைக்குத் தீர்வு பெரியாரியலே!’ தலைப்பில் பேராசிரியர் மு–.சு.கண்மணி ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினார்.

மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள்

மாநாட்டில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

தாய் வீட்டிற்கு வந்திருக்கக்கூடிய உணர்வோடு இந்த மேடையில், இந்த மாநாட்டில் நான் பங்கேற்றிருக் கின்றேன்.

தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் என்பார் கலைஞர்! தலைவர் கலைஞர் அவர்கள், எப்போதுமே திரா விடர் கழகம் என்று சொல்லமாட்டார். தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் என்று அடிக்கடி அல்ல; தொடர்ந்து எடுத்துச் சொல்வார்.

அதனைப் பின்பற்றித்தான் தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் அழைத்தவுடனே, ஆசிரியர் அவர்கள் எந்தச் சூழ்நிலையில் எந்தப் பணிகள் இருந்தாலும் இந்த மாநாட்டிற்கு வந்தே தீர வேண்டும் என்று அன்பு அழைப்பாக அல்ல; அன்புக் கட்டளையாக எனக்கு வழங்கி அந்தக் கட்டளையை நானும் சிரமேல் ஏற்றுக் கொண்டு இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கின்றேன்.

தாய் என்றால் – உயிர் கொடுத்தவள்; உணர்வைக் கொடுத்தவள், தாய் என்றால் நம்மை வளர்த்தவள், ஏன் வழிகாட்டக் கூடியவள். ஆமாம் திராவிடர் கழகம் தான்! திராவிட உணர்வுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

திராவிடர் கழகம்தான் திராவிட இயக்கத்திற்கு உணர்வைக் கொடுத்திருக்கிறது, திராவிட உணர்வை வளர்த்தெடுத்து, வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. நேற்றைக்கும் வழிகாட்டியது, இன்றைக்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது, நாளைக்கும் அது தான் வழிகாட்டப் போகிறது.

சமுக நீதி மாநாடு நிறைவு அரங்கம்

ஆசிரியர் பிறந்த நாளில் நான் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி!

கடந்த டிசம்பர் 2ஆம் நாள் நம்முடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள். அந்த பிறந்த நாளிற்கு வாழ்த்துச் செய்தி சொல்ல, நான் ஒரு அறிக்கையை வெளியிட்டேன். அந்த அறிக்கையில் நான் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் செல்ல வேண்டிய பாதையை பெரியார் திடல் தான் தீர்மானிக்கிறது. கலங்கரை விளக்கமாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய தாய்க் கழகம் தான் திராவிடர் கழகம் என்பதை நான் அதில் சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.

தமிழர் தலைவரின் மாநாட்டு நிறைவுரை:

24.2.2019 ஞாயிறு முற்பகலில் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர், கல்வி வள்ளல் காமராசர், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் படங்கள் திறக்கப்பட்டன. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டு நிறைவரங்கத்தில் நிறைவுரையாற்றுகையில், முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களை நினைவு கூர்ந்து தன் உரையைத் தொடங்கினார்.

முதலமைச்சர் கலைஞர் என்ன செய்தார்? அதுதான் கலைஞர். மாமன்னன் சிலையைக் கோவிலுக்குள்ளேதானே வைக்க அனுமதியில்லை. இதோ அந்தக் கோவில் வளாகத்தில், கோவிலின் முகப்பிலேயே திறக்கிறேன் என்று கூறித் திறந்து வைத்தார் அல்லவா! இதனை, கலைஞருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் நினைவூட்டிப் பேசிய நான் ஒரு கருத்தைச் சொன்னேன். கோவில் கட்டிய தமிழனெல்லாம் வீதியில்தான் நிற்பான் – கோவில் கட்டுவதற்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாதவன், உழைக்காதவன் எல்லாம் கோவிலுக்குள்தான் இருப்பான்’’ என்று நான் அந்த விழா மேடையில் சொன்னதை கலைஞர் அவர்கள் வெகுவாக ரசித்தார் என்பதை மாநாட்டு மேடையில் ஆசிரியர் சொன்னபோது ஒரே கலகலப்பு! சமுகநீதி மாநாட்டின் தலைவர் என்ற முறையில் திராவிடர் கழகத் தலைவர் அது தொடர்பான கருத்துகளையும், தகவல்களையும் எடுத்து வைத்தார்.

கருநாடக மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஹாவானூர் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையில் மிக முக்கியமாக இடம்பெற்றிருந்த கருத்தைக் குறிப்பிட்டார். இந்தியாவில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோருக்கான உரிமைகளும், நலன்களும் பாதுகாக்கப்படும் என்று ஜவகர்லால் நேரு அவர்கள் குறிப்பிட்டிருந்ததை (1946) அந்த அறிக்கையிலிருந்து எடுத்துக்காட்டினார்.

இன்றைக்கு மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம் வேக வேகமாக தனியார்த் துறைகளாக ஆக்கப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கக் கைகள் ஓங்கிக் சொண்டுள்ளன. தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு இல்லாத காரணத் தாலும், அதேநேரத்தில் பொதுத் துறைகளில் இட ஒதுக்கீடு இருப்பதாலுமே இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட இன்னொரு வகையில் இந்த வேலை நடக்கிறது என்ற ஒன்றை நுட்பமாகச் சுட்டிக்காட்டினார்.

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு முன்னோட்டமான கலைநிகழ்ச்சிகள்

பெண்களுக்கான சொத்துரிமைபற்றிக் கூறும் போது, 1929 ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் இதே மாதத்தில் கூட்டப் பெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டில் பெண் களுக்கான சொத்துரிமை குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அண்ணல் அம்பேத்கர் மத்திய சட்ட அமைச்சராக இருந்த நிலையில், அதற்கானதோர் சட்டத்தைக் கொண்டு வர முயற்சித்தபோது அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதுபோன்ற அடிப்படையான சட்டத்தைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில், சட்ட அமைச்சராக இருந்து என்ன பயன் என்று பதவியைத் தூக்கியெறிந்து விட்டு வெளியேறியவர் அண்ணல் அம்பேத்கர் ஆவார்.

பி.ஜே.பி. மறுபடியும் ஆட்சிக்கு வருமேயானால், இந்த மனுதர்மம்தான் அரசமைப்புச் சட்டமாக மாற்றப்படும் – பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் என்பது வாபசாகும்.

இவர்களுக்கு வாக்களிக்கலாமா? என்று பெண்கள் சிந்திக்கவேண்டும்.

பெண்கள் வாக்களிக்காமல் இருப்பதோடு, அவர்களின் கடமை முடிந்துவிடாது. இந்தப் பாசிச இந்துத்துவா ஆட்சி மீண்டும் வராமல் தடுக்கும் வேலையிலும் பெண்கள் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றும் மாநாட்டுத் தலைவர் கேட்டுக்கொண்டார். சமூகநீதி மாநாட்டின் தலைமை உரை – நிறைவுரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கவலையளிக்கக்கூடிய ஓர் உணர்வை சுட்டிக்காட்டினார். அது மிகவும் முக்கியமானது.

வாக்குரிமையை விலைக்கு விற்காதீர்!

தங்கள் வாக்குரிமையை விலைக்கு விற்கும் அந்த மனப்பான்மைதான் – கேவலம் பணத்துக்காக வாக்களிக்கும் புத்தி கூடவே கூடாது – உங்கள் உரிமையை விலைக்கு விற்கலாமா? என்று கேட்ட ஆசிரியர் வாக்குரிமையை விற்றால் நல்லாட்சி வளருமா? சமூகநீதியின் நிலை என்னாகும்? விலைக்கு வாங்கியவனிடம் உரிமையோடு கேட்க நம் கையில் எதுவும் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடாதா?

ரூபாய் 50-க்கும், ரூ.500-க்கும், ரூ.5000-த்திற்கும் வாக்குரிமையை விற்றால் சொத்துரிமை மட்டுமில்லாமல் எல்லா உரிமைகளும் செத்தே போகும் என்று எச்சரித்தார் தமிழர் தலைவர்

குறிப்பு: மற்ற தலைவர்களின் உரை மற்றும் தீர்மானங்கள், கருத்தரங்க உரைகள் பற்றிய செய்திகள் அடுத்த இதழில் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *