கோவையில் புது சித்தாப்புதூரில் வி.வி.கே.மேனன் சாலையில் 31.-01.-2019 வியாழன் மாலையில் காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருஷ்ணன் தலைமை ஏற்றும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி முன்னிலை வகித்தும் சிறப்பித்தனர். இருவரும் தாய்க்கழகத்தின் தலைவருக்கு இருபக்கமும் அமர்ந்திருந்தது சனாதனத்துக்கு ஒரு முக்கியமான செய்தியை நிச்சயம் சொல்லியிருக்கும். நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ‘தோழர் இங்கர்சால்’ தயாரித்திருந்த பெரியாரின் உருவம் பொறித்த தங்க, வெள்ளி டாலர்களை தமிழர் தலைவர் வெளியிட்டார்.
சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர் தனதுரையில், “மதசார்பற்ற அரசு பற்றி காந்தி பேசிய 53ஆம் நாளில் சனாதன மத வெறியர்களால் காந்தி சுட்டுக் கொல்லப் பட்டார்’’ என்று கூறினார். காந்திக்கும் பெரியாருக்கும் நடைபெற்ற விவாதம், காந்திக்கு தமிழ்நாட்டில் சுயமரியாதையை மீட்டுக் கொடுத்ததே திராவிடர் இயக்கத்தின் அரும்பணிகள், “ஷேடோ ஆர்மி’’ என்ற புத்தகத்திலிருந்து, சங்பரிவாரங்கள்தான் தேசவிரோதிகள் என்பதற்கான பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் ஆகியவற்றைக்கூறி, மதசார்பற்ற அரசு அமைய காந்தியின் நினைவு நாளில் நாம் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முடித்துக்கொண்டார்.
முன்னதாக தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், “இன்னிக்கு பொறக்கிற குழந்தையெல்லாம் கருப்பு சட்டை போட்டுகிட்டு வர ஆரம்பிச்சிருச்சு. நான், தோழர் மணி இருவரும் கடைசி காலத்திலே இயக்கத்துக்கு வந்து அய்யாவைப் பார்த்தவங்க. ஆனால், ஆசிரியர் அய்யா அவர்கள் சின்ன வயதிலிருந்தே பெரியாருடன் இருப்பவர்’’ என்று பேசினார். அவரைத் தொடர்ந்து, திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, “காந்தி கொலைக்கு மதம்தான் காரணம் என்று கொலையைக் கேள்விப்பட்டவுடனேயே பெரியார் அறிக்கை கொடுத்தார். மதநம்பிக்கை என்பது வேறு, மதவெறி என்பது வேறு. ஒவ்வொரு தமிழரும் மதவெறியற்றவர்களாக வாழவேண்டும்’’ என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், “யாரும் பா.ஜ.க.வைத் திட்ட வேண்டாம். நன்றி செலுத்துங்கள். காரணம் அவர்கள்தான் இன்றைய தலைமுறைக்கு பெரியாரைக் கொண்டுபோய் சேர்த்திருக்கின்றனர்.’’ என்று நையாண்டியாகக் குறிப்பிட்டார்.
திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மே 17 இயக்கம், தமிழ்ப்புலிகள், புரட்சிகர இளைஞர் முன்னணி, திராவிடத் தமிழர் கட்சி, தமிழர் விடியல் கட்சி, திராவிட மக்கள் இயக்கம், ஆதித்தமிழர் பேரவை, 8 மணி நேர பணியாளர் கட்சி மற்றும் பல்வேறு முற்போக்குக் கட்சிகளின் தோழர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
தகவல்: உடுமலை வடிவேல்