முற்றம்
குளிர்பதனம் செய்யபட்ட ஒரு பெட்டியில் ஒரு பெண் படுக்கவைக்கப் பட்டிருக்கிறாள். சுற்றிலும் சொந்தக்காரர்கள் சோகத்துடன் இருக்கின்றனர். அந்தப் பெட்டியின் பூட்டில் ஜாதி என்று எழுதியிருக்கிறது. செத்துக்கிடக்கும் பெண்ணின் அப்பாவின் இடுப்பில் அந்தப்பூட்டின் சாவி தொங்குகிறது. இப்படியொரு காட்சியை ஆணவப் படுகொலைக்கான காட்சியாக தனது குறும்படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர் டியூடு விக்கி.
கொடூரமான கற்பனையாக இருந்தாலும், இப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்றுதான் எண்ண முடிகிறது. வழக்கமாக இப்படிப்பட்ட படுகொலைகள் திருமணம் செய்து கொண்டபிறகுதான் நடைபெறும். ஆனால் இதில் காதலியை உயிருடன் அய்ஸ் பெட்டியில் வைத்துவிட்டு, அவளுடைய காதலனுக்கு அவள் இறந்துவிட்டதாக தகவல் கொடுக்கிறார்கள். அவன் வந்து பார்க்கும்போது அவள் உயிருடன் இருக்கிறாள். காதலனின் ஆற்றாமையால்தான் அப்படித் தெரிகிறதோ என்ற மயக்கம், பதற்றம் பார்ப்பவர்களுக்கு வருகிறது. என்னதான் ஜாதி ஆணவப் படுகொலைகள் நடைபெற்றாலும் காதலிப்பது தொடரத்தான் செய்கிறது. அதற்காகத்தான் தலைப்பை ‘ஜீவநதி’ என்று வைத்திருக்கிறார்.
கதை 8:22 நிமிடங்களிலேயே முடிந்துவிடுகிறது. அதன்பிறகும் ஆதங்கம் தீராமல் இதுவரை ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஆணவக்கொலைகளை பட்டியலிட்டு, ஜாதிதான் சமூகத்தின் அடையாளம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் என்று கூறி முடிக்கிறார் இயக்குநர். இது போன்ற குறும்படங்களைப் பார்க்கும் போது ஜாதி ஒழிப்பின் தீவிரம் பார்ப்பவர்களையும் பற்றிக்கொள்கிறது. அதற்காகவே இக்குறும்படத்தைப் பார்க்கலாம்.
– உடுமலை