கவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது ! எங்கெங்கும் எழுச்சி ! எதிரிகள் மிரட்சி !

பிப்ரவரி 16-28 2019

–    மஞ்சை வசந்தன்

இன்றைக்கு ஏன் மனுதர்மத்தைப்பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள், அவர்களுக்காக மிக முக்கியமான செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்திய அரசியல் சட்டம் நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. அதில் சில குறைகள் இருப்பினும், மதச் சார்பின்மை, சமத்துவம், சமூக, பொருளாதார, அரசியல் நீதி, சுதந்திரம், தனிமனித கண்ணிய காப்பு, (JUSTICE, LIBERTY, EQUALITY, FRATERNITY)  உள்ளன.

ஆனால், மனுதர்மம் எப்படிப்பட்டது?    “பிராமணன் சாப்பிட்ட மிச்சம், பழைய துணிகள், ஒதுக்கித் தள்ளும் தானியங்கள், பாத்திரங்கள் இவையே சூத்திரனுக்குரிய கூலி”   (மனு _ 125, அத் _ 10)

“ஆரியர் அல்லாத முரட்டு மனிதர்கள் கறைப்பட்ட கருப்பையில் பிறந்தவர்கள்”

(மனு 58, அத் _ 10)

“பெண்களுக்கு சுயவாழ்வு இல்லை. அவர்கள் பிள்ளைப் பருவத்தில் பெற்றோரையும், அடுத்து கணவனையும், பின் பிள்ளைகளையும் சார்ந்தே வாழவேண்டும்.’’ (மனு 148, அத் _ 5)

“கணவன் தீயகுணம், செயல் உள்ளவனாக விருந்தாலும், பல பெண்களோடு உறவு கொள்பவனாக இருந்தாலும் பெண்ணானவள் அவனை தெய்வமாக எண்ணிப் பூசிக்க வேண்டும். (தொழவேண்டும்)’’ (மனு 5 : 154)

“கொலைத் தொழில்புரிந்த மற்ற ஜாதிக்காரர்களைத் தூக்கில் போடவேண்டும். பிராமணன் கொலை செய்தால் அவன் தலையின் மயிரை அகற்றினால் அதுவே தண்டனையாகும்.’’

“பிராமணன் சூத்திரனிடத்தில் ஏதாவது பொருள் இருந்தால் அதைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் சூத்திரன் பிராமணனுக்கு அடிமையானதால் சூத்திரனுக்கென்று பொருள்கூட உரிமையில்லை’’ (மனு எட்டாவது அத்தியாயம், சுலோகம் 417)

“கூலி கொடுத்தோ அல்லது கூலி கொடுக்காமாலோ சூத்திரனை பிராமணன் வேலை வாங்கலாம். ஏனென்றால், பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே சூத்திரன் பிரம்மாவால் படைக்கப்பட்டிருக்கிறான்.’’ (மனு எட்டாவது அத்தியாயம், சுலோகம் 413)

இப்படிப்பட்ட மனுதர்மம்தான் அரசியல் சட்டம் ஆகவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தப்பித் தவறி மீண்டும் மோடி வித்தைகள் செய்து மத்தியில் ஆட்சிக்கு வந்தால், அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்திற்குப் பதில், மனுதர்மம்தான் அரசியல் சட்டமாகும்… அப்படி மனுதர்மம் வந்தால், மேற்கண்ட அவல நிலைதான் வரும்!

இம்முயற்சி, இந்த ஆபத்து உடனே தவிர்க்கப்படவேண்டும்!

மனுதர்மம் எரிக்கப்பட வேண்டும்! அதனால் இப்போராட்டம்.

மனுதர்மம் எரிப்பு போராட்டத்தில் கழகத்தினர்

தமிழர் தலைவர் அழைப்பு

மனுதர்ம எரிப்புப்போராட்டம் அரசியல் ஆதாயத்துக்கான போராட்டமல்ல. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற உரிமைப் போராட்டம் என்பதை நிரூபிக்கின்ற வகையில், கருப்பு மெழுகுவர்த்திகளாம் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் பங்கேற்றார்கள்.

மனுதர்மத்தை கழகம் கொளுத்திச் சாம்பலாக்குவது முதல் முறையல்ல. மக்களின் தன்மான உணர்வு பொங்க, ஆரிய, சனாதனத்தின் ஆதிக்கத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் கிள்ளி எறிந்திட வேண்டும் என்றால், வருணாசிரமதர்மத்துக்கு அடிப்படையான மனுதர்மம் எரித்து சாம்பலாக்கப்பட வேண்டும் என்று களம் கண்டனர் தோழர்கள்.

தமிழர்தம் மான மீட்பு இயக்கத்தின் தலைவர் வன்முறையை தூண்டவில்லை. சுயமரியாதை உணர்வைத் தட்டி எழுப்பியுள்ளார். அறவழியில் போராட்டத்துக்கான அழைப்பை விடுத்தார். கழகத் தலைவரின் ஆணையின்படி, இராணுவத்தையும் தாண்டிய கட்டுப்பாடு காக்கின்ற கழகத் தோழர்கள் பெருவிருப்புடன் சிறையேகப் புறப்பட்டனர். வில்லிலிருந்து புறப்பட்ட கணைகளாக, சீறிப்பாயும் புலியென வீறு கொண்டு புறப்பட்டது இருபால்

கருஞ்சட்டைப் பட்டாளம்.

தமிழகம் முழுவதுமிருந்து வருணாசிரம மனுதர்மம் சாம்பலான செய்தி குவிந்து கொண்டிருந்தது. ஆரிய சனாதனம் ஆட்டம் கண்டது. கழகத் தோழர்களால் சிறைச்சாலைகள் நிரப்பப்பட்டு வந்தது. கழகத் தலைவரின் கட்டளைக்கிணங்க, தன்னல மறுப்புடன் கருப்பு மெழுகுவர்த்திகள் களத்தில் அணி வகுத்தார்கள். மனுதர்மம் எரிப்பு ஆரிய ஆதிக்கத்தைத் தகர்த்து, சமத்துவம் மற்றும் பெண்ணுரிமை மீட்புக்கான போராட்டம் வெடித்துக் கிளம்பியது.

ஊரெங்கும் இதே பேச்சு. ஆரிய வலையில் சிக்குண்டவர்களுக்கும் சேர்த்து பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சப்பட்டுள்ளது. ஆரிய, ஆர்.எஸ்.எஸ். கூட்டம் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துகொண்டது.

மனு தர்மமா? அது என்ன? என்று கேட்பவர்களுக்கும் கழகத்தின் போராட்டத்தால்  அனலென சுயமரியாதை உணர்வுத் தீயாகப் பற்றிக்கொண்டது.

தமிழர் தலைவர் எரியூட்ட தகதகவென எரிந்த மனுதர்மம்!

சென்னை வேப்பேரி பெரியார்  திடலில் அமைந்துள்ள 21 அடி உயர தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் கழகத் தோழர்கள் மனுதர்மத்தை எதிர்த்து முழக்கமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். ஈ.வெ.கி.சம்பத் சாலை வழியே பெரியார் ஈ.வெ.ரா. சாலையை அடைந்து அன்னை மணியம்மையார் சிலை அருகில் தோழர்கள் குவிந்தனர். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.இ.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், திராவிடர் இயக்க ஆய்வு மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், தலைமைக்கழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மனுதர்ம நூலில் கூறப்பட்டுள்ள  பெண்களை இழிவுபடுத்துகின்ற பகுதிகளையும்,  வருணாசிரம ஜாதி இழிவுகளைக் கொண்டுள்ள பகுதிகளையும் சுட்டிக்காட்டி, மனுதர்ம நூல் எரிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், போராட்ட நோக்கங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். அதன்பின்னர் கழகத் தலைவர் மனுதர்ம நூலை எரித்தார். கழகத் தோழர்கள் எழுச்சி முழக்கங்களுடன் மனுதர்மத்தை தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

சென்னை மண்டல கழக மாவட்டங்களாகிய தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி மாவட்டங்களிலிருந்து போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழர் தலைவர் விளக்கம்

உலகில் எங்கும் இல்லாத கொடுமையான ஜாதிய அமைப்பு, வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றுகின்ற இந்து மதம், அதனுடைய மிக முக்கியமாக சாஸ்திரமாக இருக்கக்கூடிய மனுதர்மம்தான் ஜாதியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது.

மனுதர்ம அடிப்படையில்தான், இந்து லா சட்டங்கள் இருக்கின்றன. அந்த மனுதர்மத்தைப் பொருத்தவரையில், உயர்ந்த ஜாதி _ தாழ்ந்த ஜாதி, தொடக்கூடிய ஜாதி _ தொடக்கூடாத ஜாதி, பார்க்கக்கூடாத ஜாதி _ பார்க்கக்கூடிய ஜாதி என்று பிரித்திருப்பதோடு மட்டுமல்லாமல், பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்து, பிறவியில் ஆண்கள் எஜமானர்கள்; பெண்கள் அடிமைகள்; எந்தக் காலத்திலும் பெண்கள் சுதந்திரமாக இருக்கத் தகுதியற்றவர்கள்; கல்வி அறிவு பெறக் கூடாதவர்கள் என்பதை வலியுறுத்துவதோடு, சூத்திரர்கள் என்று மிக பெரும்பாலான உழைக்கின்ற மக்களை, காலங்காலமாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆக்கி வைத்துள்ளது மனுதர்மமே! அதனுடைய அடிப்படையில்தான் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார்கள்.

மனுதர்மத்தைத்தான் அரசியல் சட்டமாகக் கொண்டு வர முயற்சி!

‘‘நாளைக்கு மீண்டும் பெரும்பான்மையோடு மத்தியில் மோடி அரசு _ பா.ஜ.க. அரசு _- ஆர்.எஸ்.எஸ். அரசு ஆட்சிக்கு வருமேயானால், அவர்கள் ஏற்கெனவே சொன்னபடி, அரசியல் சட்டத்தை எடுத்துவிட்டு, மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோசலிசம் ஆகியவற்றை சொல்லுகின்ற இன்றைய அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இந்த மனுதர்மத்தைத்தான் அரசியல் சட்டமாக்குவார்கள்! இது பற்றி தீர்மானம் போட்டிருக்கிறார்கள்; ஏற்கெனவே எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்களின் குருநாதர் கோல்வால்கரும் அதைத்தான் சொல்லியிருக்கிறார்.

எனவேதான், இந்த ஆபத்தை உணர்த்து வதற்காக, மனு அநீதி, மனுதர்மம் மனித தர்மத்திற்கு விரோதமானது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் தமிழ்நாடு முழுவதும் இந்த மனுதர்ம எரிப்பு நடைபெறுகிறது’’ என்று விளக்கினார்.

இந்த மனுதர்ம எதிர்ப்புப் போராட்டம் மதவாத ஆட்சிக்கு ஓர் எச்சரிக்கை. ஒடுக்கப்பட்டவர்களுக்கு எழுச்சித் தூண்டல் மட்டுமே! பா.ஜ.க. அரசு மனுதர்மத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியைக் கைவிடவில்லையென்றால், இது நாடு தழுவிய அளவில் மாபெரும் மக்கள் எழுச்சியாக, போராட்டமாக மாறும் என்பது உறுதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *