திராவிடர் திருநாள் மாட்சிகளும் காட்சிகளும்

பிப்ரவரி 01-15 2019

வை.கலையரசன்

திராவிடர் திருநாள் திராவிடர் இயக்க ஆய்வாளர் நெல்லை செ.திவான், கவிஞர் சீனி.பழனி, இயக்குநர் கவிஞர் குட்டி ரேவதி, ஓவியர் எஸ்.எஸ்.கார்த்திக் ஆகியோருக்கு ‘பெரியார் விருது’ வழங்கி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டுகளைத் தெரிவித்தார்.  (சென்னை, பெரியார் திடல், 16.1.2019)

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் ‘திராவிடர் திருநாள் -_ தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா’ சென்னை பெரியார் திடலில் ஜனவரி 16, 17 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கலை விழா நடத்தப்பட்டு தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்வி, சூழலியல், கலை, இலக்கியத் துறையில் புகழ்பெற்று விளங்குவோருக்கு பெரியார் விருதுகள், பல்துறை சான்றோர்களுக்கு பாராட்டு, சான்றோர் படத்திறப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

2012ஆம் ஆண்டுமுதல் அதன் பணி விரிவாக்கப்பட்டு ‘திராவிடர் திருநாள்’ என்னும் பெயரில் ஏதேனும் ஒரு தலைப்பில் முக்கியக் கருப்பொருளைக் கொண்டு, கண்காட்சி, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், தமிழர் வீரவிளையாட்டுகள், வேடிக்கை விளையாட்டுகள், இயற்கை உணவுகள் திருவிழா போன்றவற்றுடன் எழுச்சியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு

குவைத் செல்லப்பெருமாள்                               கார்த்திகேய சிவசேனாபதி      

மலேசியா அன்பழகன்

இந்த ஆண்டு ‘எருமைப் பொங்கலை’ முதன்மைப்படுத்தி, காட்சியும், “இயற்கையைக் காப்போம்! பேரிடர்த் தவிர்ப்போம்’’ என்னும் சூழலியல் விழிப்புணர்வை ஒளிப்படக் காட்சியும் நிகழ்த்தப்பட்டது.

முதல் நாள் நிகழ்வுகள் 16.1.2019 அன்று மாலை 4 மணியளவில் அன்னை மணியம்மையார் சிலை அருகே தொடங்கின. பேராசிரியர் காளீஸ்வரன் அவர்களை நெறியாளராக கொண்டு இயங்கும் ‘மாற்று ஊடக மய்யம்’ கலைக்குழுவினரின் பறை இசையுடன் நிகழ்வுகள் தொடங்கின. திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி தொடங்கி வைத்தார். பெரியார் திடலில் அய்யா சிலைக்கு முன் நிகழ்வுகள் தொடர்ந்தன.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் மொழிப் பெயர்ப்பாளர் ச.சுப்பாராவ் ஆகியோருக்கு பாராட்டுரைகளை வழங்கி பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழர் தலைவர். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்ணிமை ஆகியோருக்கு ‘பெரியார் விருது’ வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் உள்ளனர். (பெரியார் திடல்,17.1.2019).

பெரியார் திடலில் தந்தை பெரியார் சிலைக்கு முன் பொங்கல் வைக்கப்பட்டு, தோழர்களுக்கு வழங்கப்பட்டது.

மாற்று ஊடகக் கலைக் குழுவினரின் பறையாட்டம், மயிலாட்டம், மாடாட்டம், கரகாட்டம் ஆகியவை நடத்தப்பட்டன. தொடர்ந்து பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தினரின் சிலம்பாட்டம் நடைபெற்றது. பெரியார் பிஞ்சுகள் தொடங்கி பெரியவர்கள் வரை பண்பாட்டு வீரக்கலையான சிலம்பாட்டத்தை சிறப்பாக நடத்திக் காட்டினர். தொடர்ந்து தீப்பந்தத்துடன் வீரசாகசங்களை செய்து காட்டினர்.

எழுத்தாளர் பிரபஞ்சன், ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன், பேராசிரியர் க.ப.அறவாணன் ஆகியோர் படங்களை ஆசிரியர் திறந்து வைத்தார். இடதுபுறம் பேராசிரியர் க.ப.அறவாணன் வாழ்விணையர் தாயம்மாள்.

6.30 மணியளவில் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘மாற்று ஊடக மய்யத்தின்’ கலை நிகழ்ச்சியுடன் ‘பெரியார் விருது வழங்கும் விழா’ தொடங்கியது. கரகாட்டம், ஒயிலாட்டம், சாட்டைக் குச்சியாட்டம், பறையாட்டம் என பல்வேறு நிகழ்வுகளை ஒவ்வொன்றிற்குமான தனிப் பாடல்களை பாடி நடத்தினர்.

ஆடி களிக்கும் பெரியார் பிஞ்சுகள்

ஓவியர் கார்த்திக் தாம் வரைந்த பெரியார் படத்தை ஆசிரியரிடம் வழங்குகிறார்.

நிகழ்ச்சிக்கு திராவிடன் நலநிதி தலைவர் த.க.நடராசன் வரவேற்புரையாற்றினார். குவைத் தந்தை பெரியார் நூலகப் பொறுப்பாளர் குவைத் செல்லப்பெருமாள் தலைமை வகித்தார்.  திராவிடர் கழகத்தின் அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மண்டலத் தலைவர் தி.இரா.ரத்தினசாமி, மண்டலச் செயலாளர் தே.செ.-கோபால், மாவட்டத் தலைவர்கள் இரா.வில்வநாதன், தாம்பரம் முத்தையன், ஆர்.டி.வீரபத்திரன், எண்ணூர் வெ.மு.மோகன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், செயலாளர் கி.சத்திய நாராயணன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எருமைப் பொங்கல்

பசுவை முன்னிருத்தி மதவெறியர்கள் கோரத் தாண்டவம் ஆடும் நிலையில் பசு மாட்டைவிட அதிக பால் தந்தாலும் நிறத்தில் ‘கருமை’ என்பதால் எருமை புறக்கணிக்கப்படுவதை சுட்டிக்காட்டி, இந்த ஆண்டு ‘எருமைப் பொங்கல்’ கொண்டாட வேண்டும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள் விடுத்ததையொட்டி தமிழகம் முழுவதும் எருமை ஊர்வலம் நடத்தப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற திராவிடர் திருநாளில் எருமையை மய்யக் கருப்பொருளாகக் கொண்டு எருமைப் பால் தொடர்பான செய்திகள், காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. எருமை தொடர்பான தகவல்கள் திடல் முழுவதும் காட்சிப் படுத்தப்பட்டிருந்ததுடன், அலமாதியைச் சேர்ந்த சீனிவாசன் அவர்கள்  வளர்க்கும் 25 எருமை மாடுகளில் நான்கு எருமைகளை காட்சிக்குக் கொண்டு வந்திருந்தார். அவரை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டினார்.

பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணியின் மாநில செயலாளர், எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்கள் அறிமுக உரையாற்றினார். அவரது அறிமுக உரையில்,  கலையும், விழாவும் மக்களை உயர்த்தப் பயன்பட வேணடும். ஆதிக்கம் வளர்க்கப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற பெரியாரின் சிந்தனைகளை விளக்கினார். தொடர்ந்து தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றிய பெருமக்களான எழுத்தாளர் பிரபஞ்சன், தொல்லியல் ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன், திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் க.ப.அறவாணன் ஆகியோர் படங்களை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களின் துணைவியர் தாயம்மாள் பங்கேற்றார்.

“இயற்கையைக் காப்போம்! பேரிடர்த் தவிர்ப்போம்’’ சூழலியல் விழிப்புணர்வு கண்காட்சி

திராவிடர் திருநாளில் கடந்த ஆண்டுகளில் ‘காணுயிர் கண்காட்சி’ ‘தமிழர் நீர் மேலாண்மை கண்காட்சி’ ‘தமிழர் தொல்லியல் கண்காட்சி’ ‘தமிழிசை வரலாறு கண்காட்சி’ ஆகியவை நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இயற்கை பேரிடர்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “இயற்கையைக் காப்போம்! பேரிடர்த் தவிர்ப்போம்’’ என்னும் தலைப்பில் ஒளிப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில், இயற்கை பேரிடர்கள், மனிதத் தவறுகளால் ஏற்படும் பேரிடர்கள், சங்க இலக்கியங்களில் இயற்கை பேரிடர் தொடர்பான குறிப்புகள், தமிழ்நாட்டில் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்கள், புவி வெப்பமயமாதல், இவற்றைத் தடுக்க மக்களின் கடமைகள் போன்றவை ஒளிப்படக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. மேலும், ஒரு தனி அரங்கு அமைக்கப்பட்டு, அங்கு படம் வரையத் தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டு குழந்தைகள் சூழலியல் விழிப்புணர்வு தொடர்பான ஓவியங்களை வரைந்து உடனுக்குடன் காட்சியாகி அமைக்கப்பட்டிருந்தது.

சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி  மய்யத்தின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் ‘சமத்துவமே திராவிடர் பண்பாடு’ எனும் தலைப்பில் கருத்துரையாற்றினார். அவரது உரையில் ஜாதி ஆணவ மனப்பான்மையை கண்டித்து, ஜாதி ஒழிப்பில் இன்றைய இளைஞர்களின் கடமையை உணர்த்தினார்.

தொடர்ந்து ‘பெரியார் விருது’ வழங்கும் விழா நடைபெற்றது. ஓவியக் கலையில் புதுமையைப் புகுத்தி, விளம்பரத் துறையில் சிறப்பாய் விளங்கும் டிஜிட்டல் ஓவியர் மெர்வின் எஸ்.எஸ்.கார்த்திக்; திராவிட இயக்கத் தோழர்களின் வரலாற்றையும் இயக்க செயல்பாடுகளையும் தொகுத்து ஆவணப்படுத்தும் திராவிட இயக்க ஆய்வாளர் நெல்லை திவான்; குறள் நெறியையும் பெரியாரியத்தையும் மய்யப்படுத்தி படைப்புகளை வழங்கும் பாவலர் சீனி.பழனி; ஜாதி ஒழிப்பு,  பெண்ணுரிமை சிந்தனைகளோடு கவிதை, ஆவணப்படம் உள்ளிட்ட அரிய படைப்புகளை வழங்கும் இயக்குநர், கவிஞர் குட்டி ரேவதி ஆகியோருக்கு 2019க்கான ‘பெரியார் விருது’ வழங்கப்பட்டது.

பெரியார் குத்து” என்ற தனியிசைப் பாடலை உருவாக்கிய குழுவினரான பாடலாசிரியர் மதன் கார்க்கி, இசையமைப்பாளர் ரமேஷ் தமிழ்மணி, பாடலைப் பாடி நடனமாடிய நடிகர் சிலம்பரசன், தயாரிப்பாளர்கள் தீபன் பூபதி, சஞ்சய் ராகவன்  ஆகியோருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து, ‘பெரியார் சிலை’யினை நினைவுப் பரிசாக வழங்கினார்

இவர்களைப் பற்றிய குறிப்புகள் காணொளியாகக் காட்டப்பட்டன.

இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார். தமது உரையில் விருது பெற்றவர்களை பாராட்டி இறுதியாக, இந்தப் பெரியார் திடல், யாரையெல்லாம் அடையாளம் காட்ட முடியுமோ, அவர்களையெல்லாம் அடையாளம் காட்டக் கூடிய பணியை செய்கிறோம். இதையெல்லாவற்றையும்விட, நம்முடைய இளம் கலைஞர்கள், நம்முடைய பிள்ளைகள் எவ்வளவு ஆற்றலோடு பறை இசையை அடித்தார்கள்.  பேராசிரியர் அன்பழகன் அவர்கள் ஒருமுறை இங்கே வந்து உரையாற்றிய பொழுது, இந்தப் பறை இசையை உலகம் முழுவதும் கொண்டு செல்லவேண்டும் என்று சொன்னார். திருமணத்தில்தான்  பறை இசை அடிக்கவேண்டும்.அமெரிக்காவில் பறை இசையை நடத்தி சாதித்து வருகிறார்கள். பெரியார் திடலில் ஒவ்வொரு ஆண்டும் பறை இசைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இறையன் – திருமகள் – முத்துக்கூத்தன் கலைவாணன் இல்லத் திருமணம் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. அங்கே பறை இசை அடிக்கப்பட்டது.ஒருவர் கேட்டார், என்னங்க, திருமணத்தில் பறை இசை அடிக்கிறீர்களே? என்று. திருமணத்தில்தான் பறை இசை அடிக்கவேண்டும். ஏனென்றால், ஒரு நாட்டின் போரையே அறிவிக்கக்கூடியது பறை இசைதான். வெளியில் போர் முரசு வைக்கப்பட்டு இருக்கிறது.’- இவ்வாறு உரையாற்றினார்

சுயமரியாதைக் குடும்ப விழா

திராவிடர் திருநாள் இரண்டாம் நாள் நிகழ்வில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சுயமரியாதைக் குடும்ப விழா நடைபெற்றது. பெரியார் பிஞ்சுகள் தொடங்கி முதியோர் வரை இருபால் தோழர்களும் விளையாட்டுப் போட்டிகளிலும், வேடிக்கை விளையாட்டுகளிலும் பங்கேற்று மகிழ்ந்தனர். உரியடித்தல், டயர் உருட்டுதல், இலக்கை நோக்கி (பகுத்தறிவு பரமபதம்) உள்ளிட்ட வேடிக்கை விளையாட்டுகளில் ஆர்வமாக ஈடுபட்டனர். குழந்தைகளுக்கு தனியே புதுமையான விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் நன்றியுரையாற்றினார். வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி தொகுப்புரையாற்றினார்.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள் விழா 17.1.2019 அன்று மாலை 4 மணிக்கு அலங்காநல்லூர் சமர் கலைக்குழுவின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கலை அறப்பேரவை நெறியாளர் ‘பல்கலைச்செல்வர்’ மு.கலைவாணன் பறை இசையுடன் தொடங்கி வைத்தார். கலை நிகழ்ச்சிகள் பெரியார் திடல்  தந்தை பெரியார் சிலைக்கு முன் தொடர்ந்து நடைபெற்றன. மயிலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், புலியாட்டம் என பல்வேறு தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பெரியார் வீரவிளையாட்டு கழகத்தின் தீ சிலம்பம்

‘பெரியார் விருது’ வழங்கும் நிகழ்வு மாலை 6.30 மணிக்கு, எம்.ஆர்.இராதா மன்றத்தில் தொடங்கியது. நிகழ்விற்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரையாற்றினார். கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அறிமுகவுரையாற்றினார். மகளிரணி தோழர்கள் க.பார்வதி, வீரமர்த்தினி, சே.மெ.மதிவதனி, கு.தங்கமணி, வளர்மதி, நாகவள்ளி, பூவை செல்வி, வனிதா, பொன்னேரி செல்வி, பசும்பொன், சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமை வகித்தார்.

தொடர்ந்து பெரியார்  விருதுகள் வழங்கப்பட்டன. பெரியாரியலில் ஆழ்ந்த பற்றும் மொழி, இன உணர்வில் பிறழாத நெறியும், ஒளிப்பதிவுக் கலையில் தேர்ந்த நுட்பமும் பெற்று திகழும் பெரியார் திரைப்பட ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான கே.வி.மணி, தமிழர் கலை, பண்பாடு ஆகியவற்றை முதன்மைப் படுத்தி திரைப்படங்களை வழங்கிடும் இயக்குநர் மீரா.கதிரவன், தமிழ் பற்றுடன் தமது பேச்சுகளையும், எழுத்துகளையும் பயன் படுத்தும் கவிஞர் நெல்லை ஜெயந்தா, திராவிட இயக்க கொள்கைகளை, பகுத்தறிவு சிந்தனைகளை தமது பாக்களில் வழங்கும் கவிஞர் கண்ணிமை ஆகியோருக்கு பெரியார் விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களைப் பற்றிய காணொளிக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

தமது ‘சஞ்சாரம்’ நாவலுக்காக ‘சாகித்திய அகாதமி விருது’ பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், அறிவுச் செல்வங்களை   உலக மொழிகளில் இருந்து தமிழ்மொழிக்கு மொழியாக்கம் செய்து தரும் மொழிபெயர்ப்பாளர் ச.சுப்பாராவ், “பெரியார் குத்து’’ என்னும் தனியிசைப் பாடலை உருவாக்கிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, இசையமைப்பாளர் ரமேஷ் தமிழ்மணி, இயக்குநர் பார்த்திபன், தயாரிப்பாளர்கள் தீபன் பூபதி, சஞ்சை ராகவன், பாடலை பாடி நடனமாடிய நடிகர் டி.ஆர்.சிலம்பரசன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். தமிழர் தலைவர் ஆசிரியர் பெரியார் விருதுகளை வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றினார். இறுதியாக ‘பெரியார் களம்’ இறைவி தொகுப்புரையும் நன்றியுரையும் ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *