இரும்புக் கடலை வறுபடுமா ?
நாரதர் ஒருமுறை முப்பெரும் தேவியர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது “பூலோகத்தில் ஒரு கற்புக்கரசி இருக்கிறாள். அவள் ஒரு ரிஷிபத்தினி’’ என்று போற்றிப் புகழ்ந்தார். அதைப் பற்றிய செய்தியைச் சொல்லும்படி நாரதரின் வாயைக் கிளறினார்கள் மும்மூர்த்திகளின் (சிவன், விஷ்ணு, பிரமன்) தேவிமார்கள். நாரதர் அதைக் கண்டுவிட்டு, ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன், “என் கையில் கொஞ்சம் இரும்புக் கடலை இருக்கிறது. இதை உங்களால் வறுத்துத் தர முடியுமா?’’ என்று கேட்டார். அவர்கள் முடியாது என்றனர். நான் குறிப்பிட்ட கற்பரசி சதி அனுசூயா வறுத்துத் தருவாள் என்றார். “அதையும் பார்க்கிறோம். போய் வறுத்து வாங்கி வா நாரதா!’’ என அனுப்பினர்.
நாரதர் பூலோகத்திற்கு வந்து, அத்திரி மகரிஷியின் இல்லத்திற்கு விரைந்தார். முனிவர் கானகத்திற்குப் போயிருந்தார். அனுசூயா நாரதரை வரவேற்று உபசரித்து, “சுவாமி தங்கள் திருவடித் தாமரைகள் என் இல்லத்தில் பட்டதால் என் இல்லமும் நானும் புனிதமடைந்தோம். என்னாலாக வேண்டிய காரியம் ஏதாவது இருக்கிறதா? வேண்டிய காரியம் ஏதாவது இருக்கிறதா? தாங்கள் காரணமில்லாமல் எங்கும் செல்ல மாட்டீர்களே, அதனால்தான் கேட்டேன்’’ என்றாள் மிக வினயமுடன்.
“அனுசூயா, உண்மையிலேயே நான் ஓர் காரணமாகத்தான் வந்தேன். இதோ இந்த இரும்புக் கடலைகளை வறுத்துக் கொடுப்பாயா?’’ எனக் கேட்டவாறே இரும்புக் கடலைகளைத் தட்டிலே கொட்டினார்.
அனுசூயா, அதைப் பணிவுடன் வாங்கிப் பார்த்துவிட்டு இது ஏதோ காரண காரியத்துக்காக நாரதர் கொடுக்கிறார் என எண்ணியவளாய் மலர்ந்த முகத்துடன், “இதோ நொடியில் வறுத்துத் தருகிறேன்’’ என்று கூறிவிட்டு உள்ளே போய் அடுப்பைப் பற்றவைத்து இரும்புக் கடலைகளை வாணலியில் போட்டுவிட்டு தனது கணவனை நினைத்து “என் தெய்வமான நாதரே! நான் தங்கள் உண்மையான பத்தினி என்பது உண்மையானால், நான் கற்பரசி என்பது உண்மையானால், இந்த இரும்புக் கடலைகள் வறுபடட்டும்’’ என்று கண்மூடித் தியானித்தாள்.
“என் தெய்வமான நாதரே! நான் தங்கள் உண்மையான பத்தினி என்பது உண்மையானால், நான் கற்பரசி என்பது உண்மையானால், இந்த இரும்புக் கடலைகள் வறுபடட்டும்’’ என்று கண்மூடித் தியானித்தாள்.
என்ன வியப்பு! கடலைகள் வறுபட்டுவிட்டன. அவற்றைக் கொண்டுவந்து நாரதரிடம் கொடுத்தார். அதிசயத்தோடு வாங்கிப் பார்த்து அவளை வாழ்த்திவிட்டு நேரே சத்தியலோகம் சென்றார். கலைவாணியிடம் காட்டினார். அவளுக்கும் விந்தையாய்த் தெரிந்தது. பின் மற்ற தேவியர்களையும் நினைத்து ஒருசேர வரவழைத்தார். நாமகள், மலைமகளும், திருமகளும் வந்து சேர்ந்தனர் என்கிறது இந்து மதம் (நாரதர் புராணம்). வேர்க்கடலை, கொண்டைக் கடலை போன்றவற்றை வாணலில் வறுத்தால் வறுபடும். இரும்பால் செய்த கடலையை வறுத்தால் அது கடலையாகாது. இதுதான் நடைமுறை உண்மை; அறிவியல் உண்மை. ஆனால், இரும்பு துணுக்குள் கடலை வறுபடுவதுபோல வறுபட்டு வந்தது என்று கூறும் அறிவுக்கொவ்வாத செய்தியைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்? பத்தினிகள் இன்றைக்கு இரும்பை வறுத்தால் கடலையாகுமா?
நீர் தெளித்தால் பெரியவர்கள் குழந்தைகள் ஆவார்களா ?
அனுசூயா வறுத்துக் கொடுத்த இரும்புக் கடலையைக் கண்டு அவர்கள் பெருமையடைவதற்குப் பதிலாக பொறாமை கொண்டார்கள். “அப்படியா செய்தி? கற்புடையவள் என்பதால் அவள் சாதித்த சாதனை இதுவென்றால் அதை உறுதி செய்ய இன்னும் ஒரு சோதனை வைத்துப் பார்ப்போம். பூலோகத்திலுள்ளவர்கள் சதி அனுசூயாவின் பத்தினித் தன்மையைத் தெரிந்துகொள்ள நாம் பயன்படுவோம்’’ என்று கூறி தமது நாயகர்களை மனத்தில் நினைத்தவுடன் மும்மூர்த்திகளும் ஒருசேர அங்கு பரபரப்புடன் வந்தனர்.
நாரதர் இருப்பதைக் கண்டனர். “ஓ… நாரதர் ஏதோ பணியைத் தொடங்கிவிட்டான். அதில் நம் மூவரையும் சிக்கவைக்க முடிவு செய்துவிட்டான்’’ என்று அவர்கள் கருதினர். “என்ன தேவி! எதற்காக மூவரும் கூடி எங்களை இங்கே வரவழைத்தீர்கள் என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?’’ என்று சக்தியிடம் சிவன் வினயமாகக் கேட்க, “பூலோகத்தில் அனுசூயா என்ற ரிஷிபத்தினி இரும்புக் கடலையை வறுத்துக் கொடுத்தாளாம். நாரதர் வெகுவாகப் பாராட்டுகிறார். ஆகவே, நீங்கள் மூவரும் சென்று அவள் கற்புக்கு சோதனை ஏற்படுத்தி வாருங்கள்’’ என்றாள் மலைமகள். அப்படியே செய்கிறோம் என்று கூறிவிட்டு மும்மூர்த்திகளும் புறப்பட்டனர். நாரதனையும் அழைத்துக்கொண்டு மும்மூர்த்திகளும் மூன்று முனிவர்களாய் உருமாறி பூலோகத்தை அடைந்து நாரதனை தனித்திருக்க விட்டுவிட்டு மூவர் மட்டும் அனுசூயா இல்லத்திற்கு விரைந்தார்கள்.
அனுசூயா, தன் இல்லத்திற்கு மூன்று முனிவர்கள் வந்ததையறிந்து மகிழ்ந்து அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்து அமரச் செய்து, “என் இல்லத்திற்கு தாங்கள் வந்ததால் நான் பெரிதும் புனிதமடைந்தேன். என் கணவரோ கானகம் சென்றுள்ளார். இருப்பினும் உங்களுக்கு நான் உணவு படைக்கிறேன். உண்டு களைப்பாறி பிறகு எனக்கும் என் கணவருக்கும் நல்லாசி கூறிப் போக வேண்டும்’’ என்றாள் அனுசூயா.
உணவு தயாரித்துவிட்டு, இலைபோட்டுப் பரிமாறிவிட்டு மூன்று முனிவர்களையும் அழைத்தாள். அதில் விஷ்ணு வடிவினரான முனிவர் தயங்கியபடி, “தாயே! நாங்கள் உணவு உண்ண வேண்டுமானால் ஒரு விரதமிருக்கிறது. அதற்கேற்றாற்போல் நீ உபசரிக்க முடியுமா?’’ எனக் கேட்டார்.
“தவ முனிவர்களே! நீங்கள் உங்கள் விரதம் என்னவென்றும் நான் அப்படி அதைச் செய்ய வேண்டும் என்றும் சொல்லுங்கள். முனிவர்களை திருப்திகொள்ளும்படி உபசரிப்பதுதானே என் போன்ற பத்தினிகள் கடமை? நானும் அவ்வாறே செய்கிறேன்’’ என்றாள் அனுசூயா. உடனே “அனுசூயா! எங்களுக்கு நீ உணவு பரிமாறும்போது ஆடையின்றி இருக்க வேண்டும். இதுவே எங்கள் விரதம்’’ என்றார்.
அதைக் கேட்டுச் சிறிதும் முகம் சுளிக்கவில்லை அனுசூயா. “இது புது விரதமாயிருக்கிறது. ஒருவேளை வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகளோ என்னவோ? இதில் ஏதோ சூது இருக்கிறது’’ என்று மனதிற்குள் எண்ணிய அனுசூயா, இறைவனை மனதில் தியானித்தவளாய் அதற்குச் சம்மதித்து மூன்று பேரையும் வாழை இலை முன்னே அமரச் செய்தாள். உள்ளேபோய் தனது ஆடையைக் களைந்துவிட்டு கால்வரை தொங்கும் தன் தலைமுடியைப் பரப்பி உடல் முழுவதையும் மறைத்தபடி நொடிப் பொழுதில் உணவைப் பரிமாறினாள். உடனே, “என் அன்புக் கணவரே! நான் கற்புடையவள் என்பது உண்மையானால் இவர்களைக் குழந்தைகள் ஆக்குங்கள்’’ என வேண்டிக் கொண்டு சிறிது தண்ணீரை முனிவர்கள் மூவர் மீதும் தெளித்தாள். என்ன விந்தை! அவர்கள் மூவரும் மூன்று குழந்தைகளாக்கிவிட்டனர் என்று இந்து மதம் (நாரதர் புராணம்) கூறுகிறது. ஒரு மனிதன் குழந்தையாய் பிறந்து வாலிப பருவம் அடைந்து இறுதியில் முதுமை அடைந்து விட்டால் மீண்டும் இளைஞனாகவோ, குழந்தையாகவோ மாற முடியாது என்பதே அறிவியல் உண்மை. அப்படியிருக்க, வயதான கிழவர்கள் மீது தண்ணீர் தெளித்ததும் அவர்கள் குழந்தைகளாக மாறினர் என்று கூறும் இந்து மதம் அறிவுக்கு உகந்த மதமே இல்லாத மடமை மதம். அப்படியிருக்க அந்த இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
(சொடுக்குவோம்….)